Jul 28, 2015

அப்துல்கலாம்

அப்துல்கலாம் இறந்த பிறகு அவரைப் புகழ்ந்தும் பாராட்டியும் திரும்பிய பக்கமெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே பாராட்டுகிறார்கள் என்று சொல்ல முடியாது. விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன. படு மோசமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுகின்றன. அவரை தேசியவாதிகளின் போலி முகம் என்றும் அவரைப் பயன்படுத்தி பார்ப்பனீய ஆதிக்க சக்திகள் இந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டன என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

ஏசுகிறவர்கள் எல்லாக் காலத்திலும் இருப்பார்கள். எல்லோரையும்தான் ஏசுவார்கள். 

இனம், மொழி, மதம் போன்ற வேறுபாடுகள் நிறைந்த இந்தியா போன்ற பெருந்தேசத்தில் டாக்டர். அப்துல்கலாம் மாதிரியான மகத்தான மனிதர்களின் வருகை மிக அவசியமானது மட்டுமில்லை- இன்றியமையாததும் கூட. 'இந்த உலகம் மோசமானது, வாழ்வதற்கே தகுதியில்லாதது, இங்கு எந்தத் தலைவனும் யோக்கியனில்லை' என்பது போன்ற அவநம்பிக்கைகள் சூழ்ந்திருந்த சமயத்தில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மாணவர்களுக்குள் பாஸிடிவ் எனெர்ஜியை விதைத்தவர் அப்துல்கலாம். தனது எளிய குடும்பப் பின்னணியைச் சுட்டிக் காட்டி அடுத்த தலைமுறைக்கான விதையைத் தூவியவர் அவர். தான் செல்லுகிற இடங்களிலெல்லாம் இந்த தேசத்தால் சாதிக்க முடியும் என்று அதற்கு நீங்கள் தோள் கொடுக்க வேண்டும் என்றும் இளம் சமுதாயத்திற்கு திரும்பத் திரும்ப நினைவூட்டியவர் கலாம். தன்னை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ளச் சொன்னதோடு மட்டுமில்லாமல் அதற்கு ஏற்றபடி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். 

சுதந்திரப் போராட்ட காலத்தில் பிராந்திய வேறுபாடுகளை மறந்து பெரும்பாலான மக்கள் காந்தியடிகள் என்ற ஒரு புள்ளியை நோக்கி நகர்ந்தார்கள் என்றால் கி.பி.2000த்தின் காலகட்டத்தில் இந்த தேச மக்கள் அப்துல்கலாமை நோக்கி குவிந்தார்கள் என்றால் மிகையில்லை. ஆனால் பதறிய சில அரசியல்வாதிகள் குவிதலை உடைத்துவிட பெரும் பிரயத்தனப்பட்டு வெற்றியடைந்தார்கள் என்பதை வரலாறு பதிவு செய்யக் கூடும். ஆனால் அதற்காகவெல்லாம் அவர் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பறந்து கொண்டேதான் இருந்தார். தொடர்ந்து அடுத்த தலைமுறையிடம் பேசிக் கொண்டேதான் இருந்தார்.

கலாமின் இந்திய வல்லரசுக் கனவும் அவரது அறிவியல் காதலும் இந்தியாவோடு ஒட்டிக் கொள்ள விரும்பாத சிலருக்கு உவப்பானதாக இல்லாதிருக்கலாம். ஆனால் அதை விமர்சிக்கக் கூடிய நேரம் இதுவன்று. தனது எழுபதாவது வயது வரைக்கும் அவர் மக்கள் மன்றத்தில் அறிமுகமே ஆகியிருக்கவில்லை. அடுத்த பதினந்து வருடங்களில் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். எப்படி சாத்தியமானது? அவர் இருந்த பதவியின் காரணமாக மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்வீர்களா? அப்படியென்றால் பிரதீபா பாட்டிலைத்தான் நாம் கொண்டாட வேண்டியிருக்கும். கலாம் குடியரசுத் தலைவராக இல்லாமலிருந்திருந்தாலும் கூட இதே செல்வாக்கோடுதான் இறந்திருப்பார் என்பதுதான் நிதர்சனம். இவ்வளவு செல்வாக்கை அப்துல்கலாம் பெறுவதற்கான காரணம் மிக எளிமையானது. அவர் நேர்மையானவராக இருந்தார். one of the rarest quality in these days!

அப்துல்கலாமின் கருத்துக்களில் நமக்கு முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் தனக்குத் தோன்றியதை தனது மனசாட்சிக்கு ஒப்ப மிக நேர்மையாக முன் வைத்தார். இங்கு எத்தனை தலைவர்கள் தங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் கருத்துக்கும் உண்மையாக இருக்கிறார்கள்? அப்துல்கலாம் இருந்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். அந்த நேர்மைதான் அவரை மக்கள் இதயங்களை வென்றெடுத்தவராக மாற்றியிருக்கிறது. அவர் நினைத்திருந்தால் கடைசி காலம் வரைக்கும் ஓய்வு என்ற பெயரில் காலை நீட்டிக் கொண்டு படுத்திருக்க முடியும். அவர் அதைச் செய்யவில்லை. எண்பத்து மூன்று வயதிலும் கூட கல்லூரியில் உரை நிகழ்த்துவதற்காகத்தான் சென்றிருக்கிறார். இந்த பயணங்களினாலும் மேடைகளில் அவர் நிகழ்த்திக் கொண்டிருந்த உரைகளினாலும் அவருக்குத் தனிப்பட்ட எந்தப் பலனுமில்லை. இருந்தாலும் அவரது அயராத இந்த உழைப்பைத்தான் இப்பொழுது மக்கள் கொண்டாடுகிறார்கள்.

சொத்து சேர்த்தாரில்லை; தன் குடும்பம் பிள்ளை பெண்டு என்று மேடேற்றினாரில்லை; அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று கூட்டம் சேர்த்துக் கொண்டாடினாரில்லை- அவர் மீண்டும் மீண்டும் பதவி சுகம் தேடத் தெரியாத மனிதராக இருந்திருக்கலாம். அரசியல் சாணக்கியத்தனமில்லாத தலைவராக இருந்திருக்கலாம். ஆனால் அவரது நேர்மைக்காவும் இந்த தேசம் குறித்தான அவரது கனவுகளுக்காகவும் இளைஞர்களிடமும் குழந்தைகளிடமும் அவர் ஏற்படுத்திய உத்வேகத்திற்காகவும் காலம் அவரை மறக்கடிக்காமல் வைத்திருக்கும்.

கலாமிடமிருந்து குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டுமானால் அவரது நேர்மையையும் உழைப்பையும் நம்பிக்கையையும் எளிமையையும் மாறாத புன்னகையையும் சொல்லித் தரலாம். எதிர்மறை எண்ணங்களைத் துளைத்து மேலெழும்பும் வெளிச்சம் என அவரைக் காட்டலாம். அதுதான் இன்றைய காலகட்டத்தின் அவசியம். அதைத்தான் டாக்டர் கலாம் விட்டுச் சென்றிருக்கிறார்.

தனக்கு முழுமையாக ஒத்துவரும் கருத்தியல்வாதம் கொண்ட மனிதர்களின் இறப்புக்கு மட்டும்தான் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைத்தால் அவரவர் மறைவுக்கு அவரவர் மட்டும்தான் அஞ்சலி செலுத்த வேண்டியிருக்கும். Emotional Fools என்று யாரோ சொல்லிவிட்டு போகட்டும். ஆனால் அதைப் பற்றிய கவலை இல்லை. கலாம் இளைஞர்களை நோக்கி பேசத் தொடங்கிய போது நான் வாழ்க்கையை தேடத் தொடங்கியிருந்தேன். அவரது பேச்சும் எழுத்தும் நோக்கமும் என்னவிதமான மாறுதல்களை எனக்குள் உருவாக்கின என்று யோசித்துப் பார்க்கிறேன். என்னைப் போலவே லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளிலும் கற்பனைகளிலும் டாக்டர் அப்துல்கலாம் ஊற்றிவிட்டுச் சென்றிருக்கும் வண்ணக்கலவை மின்னிக் கொண்டிருக்கக் கூடும். அவர்களின் சார்பாக அப்துல்கலாமை நினைத்துக் கொள்கிறேன். இந்த தேசத்தின் அடுத்த தலைமுறையின் கண்களில் வெளிச்சத்தை வரவழைத்தவர் என்ற முறையில் கலாம் அவர்களுக்கு மனப்பூர்வமான அஞ்சலி. 

12 எதிர் சப்தங்கள்:

பாலு said...

அருமை மணி சார் ! கலாம் அவர்களைப் பாராட்டி எழுதக் கூட இன்று மனமில்லை. சில ஓட்டுப்பொறுக்கிகள் பண்ணும் அதே வேலையை முகநூல் போராளிகளான கிஷோர் மாமா மற்றும் அவரது கூட்டாளிகள் செய்து வருகின்றனர். யாகூப் மேமனுக்காக வரிந்து கட்டி எழுதுகிறார்கள். அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு இரங்கல் கூட இல்லை. நீங்கள் நேர்மையாக மனதில் பட்டதை எழுதியதில் மட்டற்ற மகிழ்ச்சி.

”தளிர் சுரேஷ்” said...

இலட்சக்கணக்கான இளைஞர்களின் உந்துசக்தியாக விளங்கியவரை காலன் பறித்துக்கொண்டான்! ஆழ்ந்த இரங்கல்கள்!

Avargal Unmaigal said...

ஆழ்ந்த இரங்கல்கள்! அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம்...

திண்டுக்கல் தனபாலன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

Unknown said...

Dear Manikandan. I am reading your blogs regularly. This port is absolutely reflecting most of the persons feelings, you have written very clearly.

Everyone have positives & negatives. The different is what % it's mixed.

Hats off to you !!

Regards
Sasikumar
Dubai

Paramasivam said...

உங்கள் பதிவுகளை thavaraathu படித்து வருபவன் நான். சில பதிவுகள் என் எண்ண ஓட்டத்தோடு 10% ஒத்துப் போகும். சில 30%, 40% கூட ஒத்து போகும். சில 80% வரை. ஆயின், இந்த உங்கள் பதிவு மறைந்த மாமனிதர் கலாம் அவர்கள் பற்றி நான் கொண்டிருக்கும் எண்ணங்களுடன் முழுக்க முழுக்க 100% ஒத்து உள்ளது. நாம் அனைவரும் நேர்மையாக இருக்க முயற்சித்தாலே அது நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி ஆகும்.

ilavalhariharan said...

எதிர்மறை எண்ணங்களைத் துளைத்து மேலெழும்பும் வெளிச்சம்.....சரியாகச் சொன்னீர்கள்...உண்மையும் கூட.

sornamithran said...

இந்த தேசத்தின் அடுத்த தலைமுறையின் கண்களில் வெளிச்சத்தை வரவழைத்தவர்
உண்மையான அஞ்சலி

மா. பிரகாஷ் குமார் said...

அப்துல் கலாம் ஐயா அவர்களின் செயல்பாடுகளின் மூலம் இந்தியாவின், தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர்களை கண்ட திருப்தி கிடைத்துள்ளது.

மா. பிரகாஷ் குமார் said...

அப்துல் கலாம் ஐயா அவர்களின் செயல்பாடுகளின் மூலம் இந்தியாவின், தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர்களை கண்ட திருப்தி கிடைத்துள்ளது.

MV SEETARAMAN said...

Your matured writting on sri Kalam is worthy of reading and refered to regularly by all please give a permanent link in your blog

Bagath said...

அப்துல் கலாம் பற்றிய உங்களது கணிப்பில் முரண்படுகிறேன். 1. அவர் நேர்மையான மனிதர் அல்ல. ஏனெனில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆதரிப்பதற்காக அறிவியல் பூர்வமாக பொய் ஒன்றை சொன்னவர். (டிவி நேர்காணல் ஒன்றில் அந்தப் பகுதி உருவான புவியில் வரலாற்றை நேர் எதிராகவே சொல்லி ஆபத்தில்லை என்று சொன்னார்) 2. இளைஞர்களுடன் பேசியதால் ஆளுபவர்கள், தனியார் பொறியியல் கல்லூரி முதலாளிகளுக்கு ஆதாயம் கிடைத்த்தே தவிர அதனால் வல்லரசு கனவுக்கு எந்த பயனும் இல்லாமல் இருந்த்து. அவரை சில ஆளும் சக்திகள் புரமோட் செய்தார்கள் என்பதுவும் உண்மை. 3. நம் நாட்டில் எதை சொன்னாலும் எளிமையின் பெயரால் நேர்மையை அடக்கி விடுகிறார்கள். எதாவது கேட்டால் காமராஜ், கக்கன் என்று போய் விடுவார்கள். அவர்களது எளிமை காரணமாய் அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டவே இந்த அறிவு சமூகம் நம்மை அனுமதிப்பதில்லை. 4. அப்துல் கலாமும், அண்ணா ஹசாரேவும் மக்களை அரசியல் நீக்கம் செய்து காயடிப்பதற்காக அரசே உருவாக்கிய ஆளுமைகள் தான். 5. அறிவியலை நேசிப்பது என்பதற்கும் அப்துல் கலாமுக்கும் உள்ள தொடர்பு அமாவசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள தொடர்பு. இந்திய அறிவியல்புலத்தில் இவர் ஒரு டெக்னொகிராட் தான். அதிலும் கூட சாராபாய், சாகா, பாபா, ராமன், சந்திரசேகர், போஸ் என பல ஆளுமைகள் இவரை விட அறிவியல் புலத்திலும், டெக்னோ புலத்திலும் சிறப்பானவர்கள். நாம் கண்ணைத் திறந்த போது நமக்கு கிடைத்த பொம்மை தான் இவர். 6. குஜராத் படுகொலை போன்ற விசயத்தில் உலக அளவில் இசுலாமியர்களைப் போல தனிமைப்படக் கூடாது என்பதற்காக அப்போதைய பாஜக தெரிவு பசெய்த நபர் இவர்