Jun 18, 2015

ஒரு ராத்தல் இறைச்சி

சமீபத்தில் இன்மை இதழில் நகுலனுக்கான சிறப்பிதழைக் கொண்டு வந்திருந்தார்கள். இன்மை சற்று கனமான இணையப் பத்திரிக்கை. எழுத்தாளர்கள் அபிலாஷூம், சர்வோத்தமனும் நடத்துகிறார்கள். சிறப்பிதழில் நகுலன் பற்றிய கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களை சில படைப்பாளிகளிடமிருந்து வாங்கி பதிவு செய்திருந்தார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்த ஒரு வரி எனக்கு மிகப் பிடித்திருந்தது. நகுலனின் கவிதையைக் காட்டிலும் உரைநடை தனித்துவமானது என்று சொல்லியிருந்தார். அதை நிறையப் பேர் ஒத்துக் கொள்ளக் கூடும். உரைநடையில் பரீட்சார்த்த முயற்சிகளை நகுலன் மேற்கொண்டிருந்தார் என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமானால் ‘ஒரு ராத்தல் இறைச்சி’ என்ற சிறுகதையைச் சொல்லலாம். சிறிய கதைதான். பத்து நிமிடங்களில் வாசித்துவிடலாம். ஆனால் சிறுகதையில் நாம் யோசிப்பதற்கான நிறைய இடங்களை விட்டு வைத்திருக்கிறார்.

ஒரு எழுத்தாளனுக்கும் அவனது வளர்ப்பு நாய்க்குமான பந்தம்தான் கதை. கதை சொல்கிறவன் தன்னை அறிமுகப்படுத்துவாகத்தான் கதை ஆரம்பமாகிறது. இதுவரை தான் எழுதிய படைப்புகளின் வழியாக வெறும் நான்கு ரூபாய் இருபத்தைந்து பைசா மட்டுமே சம்பாதித்திருக்கும் எழுத்தாளன். அடுத்த வரியில் தான் காதலித்த பெண்ணைப் பற்றியக் குறிப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து வரும் பத்தியில் தனது உத்தியோகம், சம்பள உயர்வு பற்றிய குறிப்பு. அதற்குப் பிறகு தான் ஐந்து வருடங்களாக வளர்க்கும் நாய் என கதை நீள்கிறது. இவையெல்லாம்  ஒன்றுக்கொன்று சம்பந்தமேயில்லாத குறிப்புகளாக இருக்கின்றன என்று ஆரம்பத்திலேயே ஒரு யோசனை வந்துவிடும்.

கால்களை நக்கியே கடுப்பேற்றிக் கொண்டிருக்கும் அந்த நாய்க்கு வெள்ளிக்கிழமையானால் கறி போட்டுவிட வேண்டும். அறிவார்ந்த நாய்தான். ஆனாலும் அது கறியை எதிர்பார்த்து இவ்வளவு தீவிரமாகச் சேட்டைகளைச் செய்வதைத்தான் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இருந்தாலும் ஐந்து வருடங்களைத் தாண்டிவிட்டார்கள். இடையில் எழுத்தாளனைப் பார்க்க இன்னொரு எழுத்தாளர் பாம்பேயிலிருந்து வருகிறார். அவரோடு பேசியபடி அந்த வாரம் நாய்க்கு கறி போடாமல் விட்டுவிடுகிறார் எழுத்தாளர். பொறுத்துப் பொறுத்து பார்த்த நாய் எஜமானனின் ஆடு சதையை எட்டிப்பிடித்துவிடுகிறது. 

துண்டித்த சித்திரங்களை ஒரு மெல்லிய சரடால் இணைக்கிற கதை இது. இந்தச் சித்திரங்கள் ஒவ்வொன்றும் தொடர்புடையவை போலவும் இருக்கும். இல்லாதது போலவும் தெரியும். இந்த ஊசல்தான் கதைக்கான பலமாகத் தெரிகிறது. இன்னொரு பலம்- நாய் மீது வாசகனுக்கு உருவாகும் அன்பு. ‘தனக்கு எரிச்சலாக இருக்கிறது’ என்று உணர்த்தியபடியே நாய் பற்றிய வர்ணிப்புகளைத் தந்து அதன் மீது நமக்கொரு பிரியத்தை உருவாக்கிவிடுகிறார். கதையின் இறுதியில் நாய்க்கு இவருடைய வேலைக்காரன் கொடுக்கும் தண்டனை நம்மைச் சலனமுறச் செய்துவிடுகிறது. அதுவரை கதையில் பிரதானமாகத் தெரிந்த எழுத்தாளன் மறைந்து அந்த நாயின் பிம்பம் வந்து நம் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறது.

நடை, உள்ளடக்கம் என இரண்டிலும் செய்யப்பட்ட இத்தகைய பரிசோதனைகள் கதையை இன்றைக்கு புத்தம் புதியதாகக் காட்டுகின்றன. நகுலனின் மொழி விளையாட்டு பிரமாதமானது.

இதுவரை வாசித்திராதவர்கள் வாசித்துவிடுங்கள். இணைப்பு

கதையில் இடம்பெறும் துண்டிக்கப்பட்ட சித்திரங்கள் எதைக் குறிப்பிடுகின்றன? சன்மானமே வராத தனது எழுத்து குறித்தான குறிப்பின் வழியாக வாசகனிடம் எதைச் சொல்கிறார்? தனது காதல் தோல்விக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்? சம்பள உயர்வு பற்றிய குறிப்பு எழுத்தாளன் பற்றிய எந்தவிதமான அபிப்பிராயத்தை உருவாக்குகிறது? இந்த மூன்றையும் இணைத்து கதையின் கடைசியில் நாய்க்கு அளிக்கப்படும் தண்டனையை எப்படி புரிந்து கொள்கிறோம்? இந்த பதிலைக் கண்டுபிடிப்பதைத்தான் நாம் யோசிப்பதற்கான இடம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 

‘இதுதான் முடிவு’ என்பதோடு சிறுகதை நிறைவு பெற்றுவிடுவதில்லை. வாசிக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கதையின் வீச்சை உணர்கிறார்கள். வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள் என்பது இரண்டாம்பட்சம். ஒருவரே  கூட இன்று ஒரு மாதிரி புரிந்து கொள்ளலாம் ஆறு மாதங்களுக்கு பிறகு வேறொரு மாதிரி புரிந்து கொள்ளலாம். அப்படியானதொரு சிறுகதை இது. அந்த வகையில்தான் இந்தச் சிறுகதை சிறந்த சிறுகதைளின் வரிசையில் தனக்கான இடத்தைப் பெறுகிறது என்று நம்புகிறேன்.

இன்றைய மற்றொரு பதிவு: அன்பார்ந்த களவாணிகள்

4 எதிர் சப்தங்கள்:

Ram said...

எனக்கென்னவோ, இது ரொம்ப ரொம்ப சுமார் கதை என்று தோன்றுகிறது. கவிதை நேர்க்கோடாய் இருக்கவேண்டும் என்ற உங்கள் எண்ணமே எனக்கு சரியெனப்படவில்லை. கதைக்கும் அதே அளவீடு, கண்ணோட்டம் வைத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். என்ன கதையோ - ஒர் plot இன்றி! கதையின் ஆரம்பத்தில் ஏதோ வரிகளை நிரப்பவேண்டும் போல் எண்ணி, கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஆசிரியர் கூறியிருப்பனவற்றை நீங்கள் புகழ்ந்திருப்பது எனக்கு எதை நினைவூட்டியது தெரியுமா? ஏதோ போற போக்கில் இளையராஜா போட்டுத் தட்டியவற்றை, 'இதனால்தான் இப்படி செய்தார், என்ன ஒரு ஜீனியஸ் தெரியுமா அவர்' என்று அவரது இசை வெறியர்கள் குருட்டுத்தனமாக காரணம் தேடிக்கொள்வதையே. பழைய கதை, பழைய எழுத்தாளர் என்பதாலேயே ஒரு கதை சிறந்துவிடாது, அதை ஏற்றி சொல்லக்கூடாது என்பது என் கருத்து.

No offense to you, மனதில் பட்டதைச் சொன்னேன்.

Vaa.Manikandan said...

ராம்,

சில விளக்கங்கள்.

1) கவிதை நேர்கோடாய் இருக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் நான் சொன்னதில்லை.

2) கவிதைக்கும், கதைக்குமான வேறுபாடுகளை ஓரளவு தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறேன். இரண்டையும் ஒரேவிதமான கண்ணோட்டத்தில் பார்க்க விழைவதில்லை.

3)உண்மையிலேயே இந்தச் சிறுகதையின் உத்திகள் எனக்கு மிகப் பிடித்திருந்தன. நகுலன் என்பதற்காக பாராட்டி என்ன பலனை அடையப் போகிறேன்? மூத்த எழுத்தாளர் என்பதற்காகவெல்லாம் பாராட்டவில்லை.

4) சிறுகதையின் இந்தத் தெறிப்புகள் சில dots. இந்த dotsகளை இணைப்பதன் வழியாக கதை சொல்கிறவனின் மனநிலை பற்றிய ஒரு முடிவுக்கு வாசகனால் வர முடிகிறது. இப்படியான psychological studies ஒருவிதமான புதிர்த்தன்மையை உருவாக்குவதாக நம்புகிறேன். வெறும் சிறுகதையாக வாசிப்பதோடு நில்லாமல் வாசகனுக்கான இடம். அந்த ஒரு அம்சத்தில் இந்தச் சிறுகதையின் கவிதைத்தன்மையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

5) offense எதுவும் இல்லை. இப்படியான உரையாடல்கள் மகிழ்ச்சியைத்தான் தருகின்றன. வெளிப்படையான விமர்சனங்கள் அவசியமானவை. ஒருவேளை என்னுடைய புரிதல் தவறாக இருந்தால் சரி செய்து கொள்ளவும் அல்லது அந்தக் கதை ஏன் எனக்கு பிடிக்கிறது என்பதை விளக்குவதற்கான வாய்ப்பாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

நன்றி.

AV Sendhilkumar said...

உதவி செய்ததற்காக தன் வேலையாளோ அல்லது நண்பனோ ரொம்ப குழைவது சகிக்கவில்லை..அதற்கு பதிலாக அவர்கள் கடித்தாலே பரவாயில்லை ----> இதுதான் கதையில் எழுத்தாளர் சொல்ல வருவதா மணி ???

inmmai said...

சரியாக வராத கதை என்று தான் நினைக்கிறேன். பக்கத்தில் அமர்ந்திருக்கும் நாய், பூனை பொதுவாக நகுலனின் எழுத்தில் அவரது பிளவுற்ற மனதின் குறியீடு தான். அதாவது பேசிக் கொண்டிருக்கையில் நகுலனின் மனம் வேறொன்றை யோசித்தபடி இருக்கும். யோசித்துக் கொண்டிருக்கையில் அவர் மனம் மற்றொன்றை பேசியபடி இருக்கும். ஒரு காரியம் செய்கையில் அவர் மனம் அவரை வேடிக்கை பார்க்கும். இக்கதையிலும் நாயின் செய்கையை, அது நக்கி எரிச்சலூட்டுவதை, சதையை கவ்வுவதை அப்படிப் பார்க்கலாம். ஆனால் அதைத் தாண்டி கதை வளரவில்லை. - ஆர்.அபிலாஷ்