Jun 30, 2015

ஆன்மிகச் சுற்றுலா

கோவாவில் கடந்த சில வருடங்களாக Publishing Next என்றவொரு கருத்தரங்கை நடத்துகிறார்கள். தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கும் பதிப்புத்துறை சார்ந்த கருத்தரங்கு இது. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் என ஆரம்பித்து ஆசிரியர்கள், மாணவர்கள் வரை ஏகப்பட்ட பேர்கள் கலந்து கொள்கிறார்கள். 

இந்திய அளவில் புத்தக விற்பனை சந்திக்கக் கூடிய சவால்கள், பதிப்பகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்றவற்றையும் எதிர்காலத்தில் இத்தகைய சவால்களையும் பிரச்சினைகளையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியெல்லாம் முழுமையான விவாதங்களை நடத்துகிறார்கள். கொஞ்சம் காஸ்ட்லியான கருத்தரங்குதான், ஒரு ஆளுக்கு மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாய் டிக்கெட் நிர்ணயித்திருக்கிறார்கள் என்றால் முடிவு செய்து கொள்ளலாம்.

ஏன் இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறேன் என்று புரிந்திருக்குமே. உங்கள் யூகம் சரிதான்.  

இந்த வருடக் கருத்தரங்கில் என்னையும் அழைத்திருக்கிறார்கள். இரண்டு நாள் நிகழ்வில் சில குழு விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. self publishing பற்றிய குழு விவாதத்தில்தான் கர்ச்சீப்பை போட்டு வைத்திருக்கிறார்கள். வலைப்பதிவு வழியாக எழுத்தை பரவலாக்குவது, பெரிய பதிப்பகங்களின் உதவியில்லாமல் புத்தகங்களை வெளியிடுவது, எந்தப் பின்புலமும் இல்லாதவர்கள் எழுத்து வழியாக எப்படி இணையத்தின் மூலமாகத் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசச் சொல்லியிருக்கிறார்கள். 

இணையத்தில் எழுதுவது பற்றி எனக்கு சில புரிதல்கள் உண்டு. சில ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பதால் உருவாகியிருக்கும் புரிதல் அது. அதைப் பற்றிச் சரியாக பேச வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

எழுத்தில் இரண்டு வகையான போக்குகள் இருக்கின்றன. ‘எனக்கு எல்லாம் தெரியும்....நான் மேலே நிற்கிறேன்..நீங்க கீழே நில்லுங்க’ என்கிற வகையிலான எழுத்து முதல் வகை. அது எல்லோருக்கும் சாத்தியமில்லை- குறிப்பாக எனக்கு. வயதும் இல்லை; அனுபவமும் இல்லை. மீறி அப்படியொரு பிம்பத்தை உருவாக்கிவிட்டால் ‘எனக்கு இது தெரியாது’ என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்வதில் கூட ஒரு சங்கடம் இருக்கும். நமக்கு எல்லாம் தெரியும் என்கிற மிதப்பிலேயே எந்நேரமும் இருக்க வேண்டும்.

கஷ்டம். 

கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டிருந்த போது மனதுக்குள் அப்படியொரு நினைப்பு இருந்தது. நமக்கு எவ்வளவு தெரியும் என்று நம் உள்மனதுக்குத் தெரியும் அல்லவா? ஆனால் வெளியில் பொய் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்படி போலியாக இருப்பது சாத்தியமில்லாத காரியம் என்று புரிந்து கொள்ள வெகு காலம் பிடிக்கவில்லை.  ‘இவன் புருடா விடுகிறான்’ என்று மற்றவர்கள் கண்டுபிடித்தால் ‘நீலச்சாயம் வெளுத்துப் போச்சு...ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு’ என்கிற கதையாகிவிடும். அதற்கு முன்பாக நம் எழுத்தை நாமே மாற்றிக் கொள்வது நல்லது. 

முதல் வழி அடைபட்டுவிட்டது. இரண்டாவது வழி? எழுத்தில் நம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் வாசிப்பவர்களை வேறு வகையில் அணுக வேண்டும். அத்தகையை முயற்சியில் பிடிபட்டதுதான் இரண்டாவது வகையிலான போக்கு. அது மிக எளிமையானது. ‘நானும் உங்களை மாதிரிதான்’ என்ற நினைப்பிலேயே எழுதுவது. உங்களுக்குத் தெரிந்ததைவிட துளி கூட அதிகமாகத் தெரியாது என்பதை வாசிப்பவர்களிடம் சொல்லாமல் சொல்லிவிட வேண்டும். நீங்கள் பார்ப்பதையும் பேசுவதையும் மனதில் நினைப்பதையும்தான் எழுத்தாக்குகிறேன் என்று உணர்த்திவிடுவது. அது செளகரியமானதும் கூட.

எழுத்து பிடிபட்ட பிறகு செய்யக் கூடிய இன்னொரு முக்கியமான காரியம்- உழைப்பு. இணையத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். பத்து நாட்கள் எழுதாமல் விட்டால் யாருமே கண்டு கொள்ளமாட்டார்கள். ஆறு மாதம் எழுதாமல் விட்டால் மறந்துவிடுவார்கள். ஒரு வருடம் எழுதாமல் விட்டால் அவ்வளவுதான். தொடர்ந்து எழுதுவதற்கு நிறைய வாசிக்க வேண்டியிருக்கும். வாசிப்பு என்றால் இலக்கியப் புத்தகங்கள் மட்டும்தான் என்றில்லை. தினத்தந்தி செய்தி கூட வாசிப்புதான். ஆனால் வெறும் தினத்தந்தி மட்டும் நம்முடைய மொழியறிவை செறிவூட்டுவதில்லை. தேங்கிவிடுவோம். அதற்காக வாசிப்பை பரவலாக்கிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. வெவ்வேறு தளங்களில் வாசிக்க வேண்டியிருக்கிறது. இப்படி நாம் உள்வாங்கிக் கொள்கிற செய்திகளை சுவாரஸியமாக எழுத ஆரம்பிக்கும் போது நம்மை பின் தொடர்கிறார்கள்.

இணையத்தைப் பொறுத்தவரையில் வாசிப்பவர்களை கவனிப்பது அத்தியாவசியமானது. நேற்று நமது எழுத்தை வாசித்த அத்தனை பேரும் இன்றும் வாசிப்பார்கள் என்று சொல்ல முடியாது. நேற்று வாசித்தவர்கள் ஏன் இன்று வாசிக்கவில்லை என்பதை புரிந்து கொள்வதும் அவசியம். இந்தப் புரிதலின் காரணமாக முரட்டுத்தனமாக நம் எழுத்தின் உள்ளடக்கடத்தையும், எழுத்து வடிவத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மனதில் ஏற்றிக் கொண்டால் எழுத்து தானாக உருமாறிக் கொண்டேயிருக்கும். 

இவை போன்ற சில விஷயங்கள் அச்சு ஊடகத்திலும் உண்டு என்றாலும் வாசிப்பவர்களின் நாடியைப் பிடித்துப் பார்ப்பது அங்கு சாத்தியமில்லை. இங்கு அது மிகச் சுலபம். 

கோவாவில் இதையெல்லாம் கலந்து கட்டி அடித்துவிடலாம் என்றிருக்கிறேன். 

ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் - இப்படி இணையத்தில் எழுதுவது, அதன் வழியாக உருவாக்கி வைத்திருக்கும் நம்பகத்தன்மை, எடுத்துக் கொண்டிருக்கும் பொறுப்புகள் போன்றவற்றால் சாமியார் ஆகிவிடுவேனோ என்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறேன். சாமியார் என்றால் நல்ல சாமியார். சைட் அடிக்கலாம் என்று நினைத்தால் கூட ‘நீ இந்தப் பொண்ணை சைட் அடிச்சுட்டு அதைப் போய் ப்லாக்ல எழுதுவே...அதைப் படிச்சுட்டு நீ சைட் அடிக்கலாமா? என்று யாராவது கேட்பார்கள்...அதற்கு என்ன பதில் சொல்லுவ?’ என்று அசிரீரி கேட்கிறது. என்ன பதில் சொல்வது என்று யோசித்துவிட்டு அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்குள் அவள் அந்த இடத்தைக் காலி செய்துவிடுகிறாள். 

சைட் அடிப்பதற்கே பட்டிமன்றம் என்றால் இத்யாதி இத்யாதிகளுக்கெல்லாம் நினைத்துப் பாருங்கள். டூ மச். இப்படியே போய்க் கொண்டிருந்தால் நித்யானந்தா பிடதியைக் காலி செய்தவுடன் அங்கே ஒரு ஆசிரமம் அமைத்துவிட வேண்டியதுதான்.

‘கோவா வர முடியுமா?’ என்று அமைப்பாளர்கள் கேட்டதிலிருந்து ஒரே பாடல் வரிதான் திரும்பத் திரும்ப மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன பாடல் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா? அதேதான்.

விமான டிக்கெட், தங்குமிடம் என அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்துவிடுகிறார்களாம். இரண்டு நாட்கள் யோசித்துச் சொல்கிறேன் என்று ஒரு கெத்து காட்டிவிட்டு அமைதியாக இருந்திருக்கலாம். அமைப்பாளர்களிடம் அப்படித்தான் பந்தாவாகச் சொல்லியிருந்தேன். ஆனால் அதோடு நிறுத்தவில்லை. எனக்குத்தான் நவகிரகங்களும் நாக்கில் நர்த்தனம் ஆடுகிறார்களே- வீட்டிற்குச் சென்றவுடன் ‘கோவா கூப்பிட்டிருக்காங்க’ என்று சொல்லிவிட்டேன். வீட்டில் இருப்பவர்கள் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்? என்ன வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம்தான். ஆனால் ‘எங்களையும் கூட்டிட்டு போறதுக்கு தேங்க்ஸ்’ என்கிறார்கள். சென்னை, மதுரை, தஞ்சாவூர் என்றால் குடும்பத்தோடு செல்லலாம். கோவாவுக்கெல்லாம் குடும்பத்தோடு செல்ல முடியுமா? ஆனால் இத்தகைய சூழல்களில் தப்பிப்பதற்கு வழியே தெரிவதில்லை.

பயணச்சீட்டுக்கள் பதிவு செய்தாகிவிட்டது. மனைவி, மகன், தம்பியின் மகன் ஆகியவர்களோடு ஆன்மிகச் சுற்றுலாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். 

8 எதிர் சப்தங்கள்:

kaniB said...

வாழ்த்துக்கள் அண்ணா.. ஆன்மீக சுற்றுலா அமைதியாக நடக்கவும் வாழ்த்துக்கள் ... ஹி ஹி ஹி ....

இந்த பாட்டு தானே அந்த பாட்டு :

" ஒரு நாயகன் உதயமாகிறான்... டண்டண்டண்டன்"

Saravanan Sekar said...

வாழ்த்துக்கள் அண்ணா ... கருத்தரகில் கலக்குங்க ...
கோவா ஆன்மிக சுற்றுலாவில் அம்மன் அருள் உங்களுக்கு தவறாமல் கிடைக்கட்டும்...

சேக்காளி said...

கோவாவுக்கு ஆன்மிக சுற்றுலா. கேக்குறதுக்கே எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா.

Pandiaraj Jebarathinam said...

இணையத்தில் எழுதுவது சரியான விமர்சனத்தை பெற்றுத் தரிவதில்லை என்று நினைக்கிறேன். பொத்தாம் பொதுவாக எல்லோரும் விட்டுச்செல்லும் கருத்து " அருமை, நல்ல அலசல், சிறப்பு " என்ற வகையிலேயே இருக்கிறது.சரியான விமர்சனங்கள் கிடைப்பதற்கு வழியில்லாமல் சுயமாக விமர்சனம் செய்துகொண்டு ஒருவாரு தெளிவு பெற்றால்தான் உண்டு.

இங்கேயே பாருங்கள் நிங்கள் மேலே கூறியதில், ஆன்மீக சுற்றுலாவையும், சினிமா பாடலையும் நோக்கிதான் கருத்து கூறியிருக்கிறார்கள். எழுத்திலுத்திலும் கவர்ச்சியான எழுத்துதான் சுவாரஸ்யம் சேர்க்கிறது என்று இதை புரிந்து கொள்ளலாமா?

Venkatesan said...

கோவாவிற்கு அருகில் திருஞானசம்பந்தர் பாடிய திருகோகர்ணம் திருத்தலம் உள்ளது. அதையும் தரிசித்து வாருங்கள். நிஜ ஆன்மீக சுற்றுலா ஆகிவிடும்!

நெறைய நாளா போய் பாக்கணும்னு ஆசை. நீங்க போய் பாத்துட்டு ஒரு பதிவு எழுதினீங்கன்னா நல்லா இருக்கும். நேயர் விருப்பம்!

Mahesh said...

muthalil ungal blog 1200 Followers
thottatharkku vazthukkal sir.
600 Followers aa aka irukkumpothu nisaptham follow panna aarampichen.
ippothu ennikkai rettippaaka iruppathai paarkkumpothu makilchiyaa irukku.

***
gova payanam nalla padiyaaka amaiya vazthukkal sir.

Vaa.Manikandan said...

பாண்டியராஜ்,

இணையத்தில் தொடர்ந்து எழுதினால் சரியான விமர்சனங்கள் கிடைக்கும். ஆரம்பத்தில் ஒரு சிறு வட்டத்திலிருப்பவர்கள் மட்டும் வாசிப்பார்கள். அப்பொழுது முகஸ்துதிகாக அல்லது வேறு காரணங்களுக்காக பாராட்டுகள்தான் அதிகம் கிடைக்கும். பிறகு மற்றவர்களும் வாசிக்கத் தொடங்கும் போது விமர்சனங்களை எதிர்பார்க்கலாம்.

ilavalhariharan said...

அப்போ பீச்சுக்கே போமாட்டீங்களா..... வெறும் ஆன்மிகச்சுற்றுலா தானா....கண்டதையும் எழுதி காணாததையும் எழுதுவீங்கள்ளே...பாப்போம்.