May 8, 2015

சான்றிதழ்

பதில் எதிர்பாராத கடிதம் தான் அனுப்பினேன். சில நேரங்களில் மனது நம்மை அறியாமல் , நமது கட்டுபாட்டுக்குள் வராமல்,  மிகவும் சோர்ந்து போய் விடுகிறதல்லவா, பல பிரச்சனைகளின் அழுத்தத்தின் காரணமாக. அப்படி இருந்த ஒரு சந்தர்பத்தில், யாரிடமாவது பேசி விடமாட்டோமா என்று ஒரு ஏக்கம் வந்து விடும். அப்படி ஒரு மன நிலையில் தான் கடிதம் எழுதினேன் உங்களுக்கு. அதுவும் என்னை சுட்டிக்காட்டி சிரிப்பது போல் இருந்த தலைப்பால். அறிவுரையோ, அல்லது முட்டாள்தனமாக உதவியோ எதிர்பார்த்து எதுவும் எழுதவில்லை. அதனால் தான் பெயர் கூட குறிப்பிடாமல், என்னவோ தனியாக பேசும் ஒரு மனநிலைதான் எழுதிய பொழுது.

ஆனால்,  ஒரு பதில் கடிதம் வந்தது எதிர்பாராதது. சொன்ன விஷயம் நல்லெண்ணத்தில் கூறிய சம்பிரதாயமான அறிவுரையோ, அல்லது நாகரீகம் கருதி எழுதப்பட்ட பதிலோ - எதுவாக இருந்தாலும் மிக்க நன்றி உங்கள் பண்பிற்கு. என்னை விட சுமார் 17 -18 வயது சிறியவராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். (எனக்கு 52). என்னைப்பற்றிய ஒரு விவரமும் கூறாமல் மொட்டைக்கடிதம் போல் எழுதினேனே என்று உங்கள் அஞ்சல் பார்த்த பின் சற்று அவமானமாக இருந்தது. மற்றொருபுறம், என்னைப்பற்றி ஒன்றுமே அறியாத நபரிடம் பேசும் ஒரு சுதந்திரம்,  புதுச்சாரல்  போல் சில்லென்று ஒரு சந்தோஷக்காற்று. நண்பர்களிடம் தான் மனது விட்டு பேச முடியும் என்பார்கள். எனக்கென்னவோ, யாரிடமும் பேச முடியாத நம்முடைய சில ரகசியங்களும், தப்புகளும், திருட்டுத்தனங்களும் கடைசி வரை  நமக்குள் இருக்கவே செய்யும் என்று தோன்றுகிறது. ஆனால் எதிர்பாராமல், முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம், பட்டென்று வேறு யாரிடமும் கூறாத ஒரு விஷயத்தை சிக்கலில்லாமல், பயமில்லாமல் பேசி விட முடிகிறது. நமக்கு தெரிந்த எந்த வட்டதிற்குள்ளும் இவர் வரவே மாட்டார், தென்பட வாய்ப்பே இல்லை என்கிற யதார்த்தம் கொடுக்கும் தைரியம் என்று நினைக்கிறேன். 

என்னைச்  சுற்றியுள்ளவர்கள், என் நண்பர்கள் வட்டம் அல்லது என் வியாபாரத்தில் இருந்து வந்த வட்டத்தில் உள்ளவர்கள் எல்லோருமே என்னை பல வருடங்களாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அல்லது கூடவே இருப்பவர்கள். அவர்களிடம் பேசிப் பயனில்லை, ஏனெனில், முன்முடிவுகளை என் மேல் திணிப்பதிலேயே அவர்கள் குறி. 

Anyway, என் சோகக்கதையை, தொடர்கதையாக தினமும் எழுதி உங்கள் கழுத்தை பதம் பார்க்கும் உத்தேசமெல்லாம் இல்லை. 

உங்கள் எழுத்துப்பணி நன்றாக தொடரட்டும். படிப்பதற்கு கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லாமல், படிப்பவரை  சந்தோஷப்படுத்தும், படிக்கத்தூண்டும், நிறைவான மனதை கொடுக்கும் ஒரு எழுத்து நடை உங்களுடையது. அது இலக்கியமா அல்லது ஏன் இலக்கியமில்லை என்பதையெல்லாம் ஜெயமோகன் பார்த்துக்கொள்வார்.  இன்னும் கொஞ்சம் பிரபலமும், வெளிச்சமும் உங்களுக்கு வரும்பொழுது, எப்படி உங்கள் எழுத்து இலக்கியமே  இல்லை என்பதை ஒரு முழு நீள கட்டுரையாக எழுதி எல்லோருக்கும் புரியவைப்பார். அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். விடாமல் எழுதுங்கள். எழுத்திற்கு பின்னால் இருக்கும் மூலதனமே, நிறைய  படிப்பும், சமூக பார்வையும் என்று நம்புகிறேன். இரண்டும் உள்ளவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். அந்த வகையில் மனமார்ந்த என் பாராட்டுகளும், வாழ்த்துக்களும். எழுதுவதை விட்டு விடாதீர்கள்.

சாரு நிவேதிதா போல், 'நான் ஜப்பான் போக வேண்டும், ஹங்கேரி போகவேண்டும், போய் இலக்கியம் வளர்க்க வேண்டும், தமிழ் இலக்கியத்திற்காக தவம் செய்ய வேண்டும், அதனால் என் அக்கௌண்டில் பணம் அடையுங்கள் (ரெமி மார்டினுக்கும் சேர்த்து) என்று கேட்காமல், ஒரு அறக்கட்டளை அமைத்து, உண்மையாக, ஆத்மார்த்தமாக, இயன்றதைச் செய்து வரும் உங்கள் சமூக பணியும், கம்பீர நடை போட, என்னைக் கைவிட்ட, நான் திரும்பிப் பார்க்காத அந்த திருப்பதிக்காரன் உங்களை அனுக்ரஹிக்கட்டும். என்ன புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ, மனதிற்கு கிடைக்கும் இதமான சந்தோஷம் இருக்கிறதே, அதற்காகவே செய்து கொண்டே இருங்கள். அதற்கும் நல்வாழ்த்துக்கள்.அதில் பங்கு கொண்டு  ஏதாவது செய்யும் யோக்யதை இப்பொழுது என்னிடம் இல்லை. 

மிக்க நன்றி. உங்கள் பதிலுக்கு மீண்டுமொரு நன்றி. 

நண்பரின் பதில் கடிதத்தை பொதுவெளியில் பிரசுரம் செய்ய வேண்டுமா என்று கொஞ்ச நேரம் யோசனையாக இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தி விடுவதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் மூத்த எழுத்தாளர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்கிற ஆசை உள்ளூர வளர்ந்து கொண்டிருந்தது. யாராவது பாராட்டினால் புளகாங்கிதம் அடைவேன். துள்ளிக் குதித்திருக்கிறேன். இதையெல்லாம் ஒத்துக் கொள்வதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் அத்தகைய புகழுரைகள் எதுவும் தேவையில்லை என்று தோன்றுகிறது. இதைத் தற்பெருமையாகவோ அல்லது வேறு எப்படியும் பறைசாற்றிக் கொள்ளவில்லை. பாராட்டுகளையும் புகழுரைகளையும் தாண்டி நாம் செய்வதற்கான வேலைகள் நிறைய இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறேன் என்பதுதான் அடிப்படையான காரணம்.  

‘நான் எழுதுவது என்னவாக இருக்கிறது’ என்கிற எந்தச் சான்றிதழையும் யாரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கவில்லை. அது என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.

நமக்குத் தோன்றுவதை மற்றவர்களுக்கு புரியும்படி எழுதுவதற்கு வாய்த்திருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அடுத்தவர்களிடம் அறிவாளியாக உருவகப்படுத்திக் காட்டியும், எனக்கு இலக்கியம் எழுத வரும் என்று நிரூபித்தும் எதைச் சாதிக்கப் போகிறேன்? இலக்கியவாதி என்பதைவிடவும் சாமானியன் என்று அறியப்படுவதைத்தான் மனம் விரும்புகிறது. அறிவாளி என்பதைவிடவும் சராசரி என்கிற பிம்பம்தான் பிடித்திருக்கிறது. எளிய மனிதனாக, நேர்மையானவனாக, எந்தவிதமான அலட்டலும் இல்லாத பக்கத்து வீட்டுப் பையனாக இருந்தாலே போதும். மெத்தப் படித்த மேதாவியென்றும், உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவன் என்றெல்லாம் கட்டமைத்தால் பத்து பைசாவுக்கு பலன் உண்டா? 

கஷ்டப்படுகிறேன்தான். நாம் அடையும் ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு விலையிருக்கிறது. எந்த உழைப்புமில்லாமல் நெட்டி முறித்துக் கொண்டிருந்தாலும் நாம் எழுதுவதை பல்லாயிரக்கணக்கானவர்கள் வாசிக்க வேண்டும் என்று விரும்புவது அயோக்கியத்தனம் இல்லையா? அதனால் என்னால் முடிந்த அளவுக்கு புத்தகங்களை வாசிக்கிறேன். சினிமாக்களைப் பார்க்கிறேன். மனிதர்களோடு பழகுகிறேன். இயன்ற வழிகளிலெல்லாம் தகவல்களைச் சேகரிக்கிறேன். அவற்றிலிருந்து புரிந்து கொள்வதைப் புரட்டலும் மிரட்டலும் கலவாமல் சுவாரஸியமான நடையில் எழுதிக் கொண்டிருந்தால் போதும். அதற்கு மேல் எதுவும் இல்லை. எழுதுவதன் வழியாக வாசிப்பவர்களுக்கு சிறு தகவலைச் சொல்ல முடியுமா, வாசிப்பவர்களின் மனதைக் கொஞ்சம் இலகுவாக்க முடியுமா, அவ்வப்போது கனத்துப் போகச் செய்ய முடியுமா என்பதையெல்லாம்தான் முயற்சிக்கிறேன். அப்படித்தான் புதிய வாசகர்களை உருவாக்க முடியும். இதுவரை வாசிப்புப் பழக்கமில்லாதவர்களை வாசிப்புப் பக்கமாக திரும்பிப் பார்க்கச் செய்வதோடு திருப்திப் பட்டுக் கொள்கிறேன்.

நாம் எழுதுவதால் இந்த உலகம் உய்யும் என்றோ அல்லது இந்தச் சமூகத்தின் மீதாகப் படிந்திருக்கும் மொத்த இருளையும் நீக்கிவிட முடியும் என்றெல்லாம் நம்புவதில்லை. இயலும் போது ஒரு தீக்குச்சியை உரசி வீசுவதோடு நிறுத்திக் கொள்ளலாம். காட்டை எரிக்க வேறு நிறையப் பேர்கள் இருக்கிறார்கள்.


இதோ இந்த மனிதர். குமரேசன் என்று பெயர்.  ஆசிரியராக பணியாற்றியவர். தனியார் பள்ளி ஆசிரியர் போலிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் கீழே விழ கால்களின் மீது பேருந்து ஏறிவிட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்திருக்கிறார்கள். முழுமையாக குணமடையவில்லை. வசதி இல்லாத குடும்பம். வீட்டிலேயே போட்டுவிட்டார்கள். பெரும்பாலும் அரை நிர்வாணமாகக் கிடக்கும் குமரேசன் கால்களை நீட்டியபடியே கைகளின் உதவியோடு வீட்டிற்குள் நகர்ந்து கொண்டிருக்கிறார். திருமுல்லைவாயிலில்தான் கிடக்கிறார். இப்பொழுதுதான் செயற்கைக் கால்களைப் பொருத்துவதற்கான முயற்சிகளில் இருக்கிறார்கள். அரசு தரும் காப்பீட்டுத் தொகை போக இன்னும் கொஞ்சம் தொகை தேவைப்படும் போலிருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்பாக குமரேசனே ஃபோனில் அழைத்துப் பேசினார். அறக்கட்டளை குறித்து அவரிடம் யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. வெறும் தொலைபேசி அழைப்புகளை வைத்து யாரையும் நம்பமுடிவதில்லை என்பதால் உடனடியாக எந்த உறுதியும் அளிக்கவில்லை. இரண்டு நாட்கள் முன்பாக குமரேசனின் இந்தப் படத்தை வேறொரு அனுப்பி வைத்திருக்கிறார். பார்த்த சில நொடிகள் விக்கித்துப் போய்விட்டேன். எவ்வளவு சிரமமான வாழ்க்கை இது? சிரிப்பு உறைந்து போன இந்த மனிதர்களின் முகத்தில் குறுநகையைக் கொண்டுவருவதைவிடவுமா ‘இவன் இலக்கியவாதி’ என்கிற சான்றிதழ் சந்தோஷத்தைக் கொடுத்துவிடும்? அற்பமான சந்தோஷங்களில் சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை. உலகம் மிக மிகப் பெரியது.