May 26, 2015

பால் ஊற்றிவிடலாம்

கடந்த வாரத்தில் சொந்தக்காரர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய வேலை இருந்தது. பொள்ளாச்சி பக்கத்தில் இருக்கிறார்கள். இந்த வருடம் மழை பரவாயில்லை. சென்ற வருடம் போல் இல்லை. இப்பொழுது கோடையிலும் கூட பச்சை துளிர்த்திருக்கிறது. நாங்கள் சென்றிருந்த போது தென்னை மரங்களுக்கு தயிரை ஊற்றிக் கொண்டிருந்தார். ‘ரொம்பவுமே மிகுந்து கிடக்கிறது’ என்று நினைத்துக் கொண்டேன். சுள்ளென்று கேட்டும் விட்டேன். ரஜினி, அஜீத் கட் அவுட்டுகளுக்கு ஊற்றினால் கூட அர்த்தமிருக்கிறது. தென்னை மரங்களுக்குத் தயிரை ஊற்றினால்? தவறாக நினைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை. நினைத்தால் நினைத்துவிட்டு போகட்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் பிரச்சினை அவரிடமில்லை.

ஆவின்காரர்கள் சில நாட்களாக சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள். பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதில்லை. ஏதாவது நொட்டை நொள்ளைக் காரணங்களை அடுக்கி பல பால்காரர்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம். டெஸ்ட் வரவில்லை, பால் சரியில்லை என்று ஆளாளுக்கு ஒரு காரணம். இடையில் ஒரு நாள் மொத்தமாக விடுமுறை விட்டுவிட்டார்கள். யாரிடமிருந்தும் பால் வாங்கவில்லை. கறந்து வைத்த பாலை என்னதான் செய்வார்கள்? அதுதான் தயிராக மாற்றி தென்னை மரங்களுக்கு ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சகவ்யம் மாதிரி. மண்ணில் உரமேறும் என்று நம்புகிறார்கள். ‘நான் பரவாயில்லைங்க தம்பி...நம்ம பங்காளி ஒருத்தரு ரோட்டுல ஊத்திட்டு வந்திருக்காப்டி’ என்றார் அந்தச் சொந்தக்காரர்.

ஆவின்காரர்களிடம் கேட்டால் சமீபகாலத்தில் பால் வரத்து அதிகமாகிவிட்டது என்கிறார்கள். அதனால் சமாளிக்க முடிவதில்லையாம். கொள்முதலுக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு எப்படியெல்லாம் பிரச்சினை வருகிறது பாருங்கள். கடந்த ஆண்டு வறட்சி தாண்டவமாடிய போது மேய்ச்சலுக்கு பச்சை இல்லாமல் இருக்கிற கால்நடைகளையெல்லாம் கால்காசுக்கும் அரைக்காசுக்கும் விற்றார்கள். யார் வாங்குவார்கள்? இருக்கிற ஆடு மாடுகளுக்கே தீவனம் இல்லை. விற்கலாம் என நினைத்தவர்கள் கூட கொள்வாரில்லாமல் பதறிப் போனார்கள். ஆனால் அந்தச் சமயத்தில் பால் பற்றாக்குறையின் காரணமாக பாலின் விலை ஏறியது. நம் ஊர் விவசாயிகளைப் போல பாவப்பட்ட ஜென்மங்களைப் பார்க்கவே முடியாது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்கள். ஒரு தோட்டத்தில் செவ்வந்தி விளைவித்து நல்ல விலை வந்தால் அடுத்த போகத்தில் அக்கம்பக்கத்தில் அத்தனை பேரும் செவ்வந்தியை நடுவார்கள். விலை அதலபாதாளத்தில் விழுந்துவிடும். இந்த வருடம் மஞ்சளுக்கு விலை இல்லை என்றால் யாருமே மஞ்சளை நாட மாட்டார்கள். அடுத்த வருடம் மஞ்சளின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறும்.

பாலும் அப்படித்தான். இந்த வருடம் மழை பெய்து பச்சை தெரியத் துவங்கியதும் ஆளாளுக்கு ஆடு மாடுகளை வாங்கினார்கள். பால் உற்பத்தி பெருகிப் போனது. ஆவின்காரர்களிடம் உற்பத்தியைச் சமாளிக்கும் திறன் இல்லை. கையை விரித்துவிட்டார்கள்.  சாலையிலும் தென்னைமரத்தின் வேரடியிலும் ஊற்றுகிறார்கள். புரட்சித்தலைவி அவர்களின் பார்போற்றும் ஆட்சி இன்றுடன் நான்காம் ஆண்டை நிறைவு செய்கிறது. தினத்தந்தியில் நான்கு பக்கங்களுக்கு முழுப் பக்க விளம்பரங்கள். மற்ற செய்தித்தாள்களிலும் விளம்பரங்கள் வந்திருக்கும். எப்படியும் பல கோடி ரூபாயை இந்த விளம்பரச் செலவுகளுக்காகக் கொட்டியிருப்பார்கள். கொட்டினால் கொட்டிவிட்டுப் போகட்டும். கால்நடைகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். நான்காண்டுகளில் நாற்பத்தெட்டாயிரம் கறவை மாடுகளை விவசாயிகளுக்கு வழங்கியிருக்கிறார்களாம். வள்ளலின் ஆட்சி. வழங்கட்டும்.  கால்நடைகளை இலவசமாக வழங்கினால் மட்டும் போதுமா? இதனால் பெருகப் போகும் பால் உற்பத்தியைச் சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டாமா? அது குறித்தான ஒரு துப்பும் விளம்பரத்தில் இல்லை.

சமீபகாலத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இப்பொழுது மழையும் பெய்திருக்கிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைப்பதால் பால் உற்பத்தி பெருகியிருக்கிறது - இது போன்ற காரணங்களை அரசாங்கம் கவனத்தில் எடுத்திருக்க வேண்டும். ம்ஹூம். இவ்வளவுதான் லட்சணம். வெட்டி விளம்பரங்கள், வாக்கு வாங்கும் சலுகைகள், எதிர்கால நோக்கம் எதுவும் இல்லாத திட்டங்கள் என்று கந்தரகோலம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்

தமிழக ஆவினிடம் சமாளிக்கும் திறன் இல்லாதது மட்டும்தான் பிரச்சினையா என்று விசாரித்தால் விவசாயிகள் வெவ்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். பால் பவுடரின் விலை குறைந்துவிட்டதால் தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் பால் வாங்குவதை குறைத்துக் கொண்டதாகவும் இதுவரை தனியார் நிறுவனங்களிடம் பால் ஊற்றிக் கொண்டிருந்தவர்களும் அரசாங்கத்தின் ஆவின் நிலையங்களை நாடுகிறார்கள் என்பது ஒரு காரணம் என்கிறார்கள். தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களும் உற்பத்திப் பெருக்கத்தின் காரணமாக பால் வாங்குவதைக் குறைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். உற்பத்தி செய்யப்படும் பால் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதும் இல்லை. இப்படி ஏகப்பட்ட காரணங்கள். இவையெல்லாம் வெளிப்படையான காரணங்கள். தில்லுமுல்லுகள் நடக்கின்றனவா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 

ஏற்கனவே எந்த விளைபொருளுக்கும் சரியான விலை கிடைப்பதில்லை. தோட்டங்காடுகளில் பாடுபடுவதற்கு ஆட்கள் இல்லை. பருவம் தப்பிப் போகும் காலநிலை மாற்றங்கள் என்று ஏகப்பட்ட பிரச்சினைகளால் விவசாயி நாஸ்தியாகிக் கொண்டிருக்கிறான். எனக்குத் தெரிந்து அவனைக் கைவிடாத வாழ்வாதாரமாக கால்நடைகள் இருந்தன. ஒரு நாளைக்கு ஏழெட்டு லிட்டர் பால் கறந்து ஊற்றினால் அன்றாடச் செலவுகளுக்கான வருமானம் வந்து கொண்டிருந்தது. இப்பொழுது அதன் மீது சம்மட்டியை இறக்கிவிடுவார்கள் போலிருக்கிறது. ஆவின் பால் நிலையத்தில் இயந்திரம் பழுது, பால்வண்டியின் சக்கரத்தில் வைப்பதற்கு எலுமிச்சம் பழம் கிடைக்கவில்லை என்று ஏதாவது பொக்கைக் காரணங்கள் எல்லாம் வேடிக்கையாக இருக்கின்றன. 

விவசாயி இந்நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிச் சொல்லியே அவன் கழுத்தில் கதுமையான கத்தியை இறக்கிக் கொண்டேயிருக்கிறோம். இல்லையா? மிகைப்படுத்திச் சொல்லவில்லை. ஒரு விவசாயியிடம் பேசிப் பார்க்கலாம். கண்ணீர் வந்துவிடும் நமக்கு. அத்தனை சிரமங்கள் அவனுக்கு மலிந்து கிடக்கின்றன. எவ்வளவு நாட்களுக்குத்தான் அவன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டேயிருப்பான்? ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அவன் மூச்சை நிறுத்தப் போகிறான். அதன் பிறகு மொத்தமாக பால் ஊற்ற வேண்டியதுதான்.

3 எதிர் சப்தங்கள்:

கந்தசாமி நம்பியூர் said...

விவசாயம் மட்டுமா எல்லாத்துக்கும் இவங்களே பால் ஊத்திடுவாங்க

Unknown said...

ITS MOSTLY SAME IN MY COUNTRY SRI LANKA ALSO-SORRY I CAN READ TAMIL-BUT CAN'T WRITE.

Anonymous said...

Pathetic farmers