May 11, 2015

இந்தியா பாகிஸ்தான்

சனிக்கிழமையன்று சென்னை சென்றிருந்தேன். ஏன்? எதற்கு? எப்படி என்பதையெல்லாம் அப்புறம் சொல்கிறேன். அதிகாலையில் கோயம்பேட்டில் இறங்கி வடபழனியில் ஒரு அறையில் குளித்து இரண்டு இட்லிகளை விழுங்கித் தயாரான பிறகு ‘ஒரு இடத்துக்குச் செல்லலாம்’ என்று நண்பர் அழைத்துச் சென்ற இடம் கமலா தியேட்டர். சென்னையில் சினிமா பார்த்து பத்து வருடங்களாவது இருக்கும். இன்றைக்கு நல்லதொரு வாய்ப்பு என்று சந்தோஷமாக இருந்தது. டிக்கெட் கூட ஏற்கனவே வாங்கி வைத்திருந்தார்கள். ஒன்பதே முக்காலுக்கெல்லாம் படம் ஆரம்பித்துவிட்டது. விஜய் ஆண்டனி நடித்த இந்தியா-பாகிஸ்தான். திரையரங்கின் பாதி இருக்கைகள் காலியாக இருந்தன. சனிக்கிழமையும் அதுவுமாக பத்து மணிக்கு படம் ஓட்டினால் யார் வருவார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

நாயகனும் நாயகியும் வழக்கறிஞர்கள். இருவரும் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து ஆளுக்கு ஒரு அறையில் தங்களது அலுவலகத்தை அமைக்கிறார்கள். ஒரு வழக்கும் வருவதில்லை. ஈ ஓட்டுகிறார்கள்- அதைக் கூட ஒரு ஸீனாகக் காட்டியிருந்தார் இயக்குநர். எனக்குப் புல்லரித்தது. முக்கால்வாசிப் படம் வரைக்கும் நாயகனும் நாயகியும் இந்தியா பாகிஸ்தானைப் போல சண்டைப் பிடித்துக் கொள்கிறார்கள் என்பதால்தான் இந்த டைட்டில். இந்த இருவரிடமும் குருட்டாம்போக்கில் ஒரு வழக்கு வந்து சிக்குகிறது. இரண்டு கிராமத்துப் பண்ணையார்கள் ஒரே இடத்துக்காக சண்டைப் போட்டுக் கொண்டு சென்னை நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். அதில் ஒருவர் நாயகனிடம் செல்கிறார். இன்னொருவர் நாயகியிடம். 

இப்படித்தான் ப்ளஸ் டூ முடித்தவுடன் சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞர் ஆகிவிடலாம் என்று கனாக் கண்டு கொண்டிருந்தேன். அப்பொழுது மேடையில் நன்றாகப் பேசுவேன் என்பதாலும் டி.ராஜேந்தரின் ‘ஒரு தாயின் சபதம்’ பார்த்து அவருடைய வெறியேறிய ரசிகனாக சில நாட்கள் சுற்றிக் கொண்டிருந்ததாலும் வழக்கறிஞர் கோட்டின் மீது அப்படியொரு அலாதிப் பிரியம். கருப்புக் கோட்டை அணிந்து நீதிமன்றத்தில் ‘கணம் கோர்ட்டார் அவர்களே’ என்று பேச்சை ஆரம்பித்தால் கரட்டடிபாளையம் வரைக்கும் அதிர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வீட்டில்தான் மிரட்டி உருட்டி பொறியியல் குட்டையில் தள்ளிவிட்டார்கள். 

சினிமாவில் காட்டப்படும் நீதித்துறைக்கும் உண்மையான நீதித்துறைக்குமிடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும். அம்மா கிராம நிர்வாக அலுவலராக இருந்ததால் அவ்வப்போது ஏதாவதொரு வழக்குக்கு சாட்சி சொல்லச் செல்வார். அது பத்து வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவமாக இருக்கும். அம்மாவுக்கு மறந்து போயிருக்கும். நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு முன்பாகவே வழக்கறிஞரோ அல்லது காவல்துறை அதிகாரியோ அழைத்துப் பேசிவிடுவார்கள். பெரும்பாலும் அவர்கள் சொல்லும் வாக்கியம் ‘ஜட்ஜய்யா கிட்ட பேசியாச்சுங்க’. என்ன பேசினார்கள் என்பதெல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 

பெங்களூரில் வீடு கட்டுவதற்காக இடம் வாங்க முயற்சித்த போது அந்த இடத்தின் மீது ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள ஒரு வழக்கறிஞரிடம் ஆவணங்களை எடுத்துச் சென்றேன். வீடு முழுக்கவும் முள்வேலிக்குள் இருந்தது. ஒரு நாய் கூட உள்ளே நுழைய முடியாது. எப்படியோ நான் நுழைந்துவிட்டேன். திரும்பிய பக்கமெல்லாம் கண்காணிப்புக் கேமிராக்கள்தான். திகில் நிறைந்த வாழ்க்கை போலிருக்கிறது எனத் தோன்றியது. வழக்கறிஞர் என்னிடம் பேசுவதற்கு முன்பாக அவருடைய உதவியாளர்கள் மூன்று பேர்கள் ஒரே கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுவிட்டுச் சென்றார்கள். அந்தச் சூழலே வித்தியாசமாக இருந்தது. தமிழ் சினிமாவில் மட்டும்தான் ஒன்று டி.ராஜேந்தர் போல வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் இல்லையென்றால் விஜய் ஆண்டனி போல இருக்கிறார்கள்.

இந்தியா பாகிஸ்தான் படத்தில் வேலையில்லாத வழக்கறிஞர்களுக்கிடையேயான சச்சரவுகள், கிராமத்து பண்ணையார்களின் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கிடையே இடையில் ஒரு என்கவுண்ட்டர் விவகாரமும் இருக்கிறது. காவல்துறை ஆய்வாளர் ஒரு ரவுடியைச் சுட்டுக் கொல்கிறார். அதை ஒருவன் வீடியோ எடுத்துவிடுகிறான். அந்த சிடி நாயகியிடம் வந்து சேர்கிறது. அதைத் தேடி நாயகியை இன்ஸ்பெக்டர் துரத்துகிறான். இதெல்லாம் சேர்ந்து கடைசியில் என்ன ஆகிறது என்பதை ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தைப் போல ஒரு பெரும் பட்டாளத்தை வைத்து க்ளைமேக்ஸ் முடித்து சிரிக்க வைக்கிறார்கள்.

கடைசியில் காமெடிதான். ஆனால் முதல் பாதியில் இழுவையென்றால் இழுவை அப்படியொரு இழுவை. கோடை காலத்தில் குழந்தைகளையெல்லாம் சிரிக்க வைத்துவிடலாம் என்பதை மனதில் வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. விஜய் ஆண்டனியின் சலீம் படத்தைப் பார்த்த போது வெகு சந்தோஷமாக இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத ஒரு அழகான நடிகர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தின் இசையும் அவர்தான். சலீம் படத்தின் பாடல்களும் பிடித்திருந்தன. ஆனால் இந்தப் படத்தில் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கியிருக்கிறார். பாட்ஷாவில் ரஜினி பேசுவதைப் போலவே தானும் வசனம் பேச முயற்சித்திருக்கிறார். ‘நம்ம ரேஞ்சுக்கு இதெல்லாம் நமக்குத் தேவையா சார்’ என்று நினைத்துக் கொண்டு அவ்வப்பொழுது தூங்கியதுதான் கண்டபலன்.

வழக்கறிஞர் ஆகாதது குறித்து இப்பொழுதுதான் வருந்துகிறேன். வீட்டில் சண்டைப்பிடித்தாவது வழக்கறிஞர் ஆகியிருக்க வேண்டும். நீதிபதிக்கான தேர்வு எதையாவது எழுதி ஏதாவது செஸன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாகியிருக்கலாம். மச்சம் பெரிதாக இருந்திருந்தால் பெரிய நீதிமன்றம் கூட சென்றிருக்கலாம். இப்பொழுது யோசித்து என்ன பயன்? பெருமூச்சு விட வேண்டியதுதான்.

சரி விடுங்கள். 

சினிமாவுக்கு விமர்சனம் எழுதுவதெல்லாம் நமக்கு ஒத்து வராத காரியம். அப்புறம் எதற்கு எழுத வேண்டும் என்கிறீர்களா? சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? இன்று தமிழக முதல்வர் ராஜினாமா செய்கிறாராம். புது முதலமைச்சர் வந்தவுடன் இதுவரைக்கும் எசகுபிசகாக எழுதியவர்களையெல்லாம் கணக்கெடுக்கச் சொல்வார் என்று நண்பர் ஒருவர் மெஸேஜ் அனுப்பியிருந்தார். அவர் எடுக்கச் சொல்கிறாரோ இல்லையோ- இவர்கள் எடுத்து அனுப்பி வைப்பார்கள் போலிருக்கிறது. எதுக்கு வம்பு? தடா பொடா மாதிரி எதாச்சும் போண்டா சட்டத்தைக் கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள். கொஞ்ச நாட்களுக்கு தமிழ்நாடு எங்கேயிருக்கிறது என்று யாராவது கேட்டால் துபாய் பக்கமோ தாய்லாந்து பக்கமோ இருக்கிறது என்று சொல்லிவிடலாம் என்றிருக்கிறேன். அதற்கான முன்னோட்டம்தான் இந்தியா-பாகிஸ்தான்.