May 15, 2015

கேடில் விழுச்செல்வம்

அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கைகள் ஆரம்பித்திருப்பதால் நிறையப் பேர் கல்வி உதவித் தொகை கேட்டு தொடர்பு கொள்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். பெற்றோர்கள் இல்லை, வறுமை சூழ் வாழ்க்கை, வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை- இப்படிச் சொல்கிறார்கள். பெரும்பாலானவர்கள் சொல்லும் தகவல்கள் உண்மைதான். ஆனால் எல்லோருக்கும் சரி என்று சொல்ல முடிவதில்லை. இப்போதைக்கு ஐந்து லட்ச ரூபாய் கைவசம் இருக்கிறது. சரியாகச் சொன்னால் ரூ.5,11,756. எப்படியும் பத்து மாணவர்களின் சேர்க்கைக்கு உதவ முடியும். ஆனால் லட்சக்கணக்கான மாணவர்கள் ப்ளஸ் டூ முடிக்கிறார்கள் அதில் ஏகப்பட்ட பேர்கள் உதவி கோருகிறார்கள் என்பதால் யாருக்கு உதவப் போகிறோம் என்பதில் வெகு கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

உதவி கேட்பவர்களில் பெரும்பாலானவர்கள் நிசப்தம் வாசிப்பவர்களின் வழியாகத்தான் அணுகுகிறார்கள் என்பதால் இது குறித்து எழுதிவிடலாம் என்று தோன்றுகிறது. நிசப்தம் ஒன்றும் பெரிய அறக்கட்டளை இல்லையென்பதால் வெகு சொற்பமான மாணவர்களை மட்டும்தான் தேர்ந்தெடுக்க முடியும். அதனால் முடிந்தவரையில் நீங்களே வடிகட்டிவிடுங்கள். எந்த அடிப்படையில் வடிகட்டுவது என்பதற்கான சில விவரங்கள்தான் கீழே இருப்பவை. 

1) மிகச் சிரமமான குடும்பச் சூழல், வறுமை, வெளியுலகம் பற்றிய எந்தவிதப் புரிதலும் இல்லாத வாழ்க்கை முறை உள்ளிட்ட பின்னணிகளை உடைய மாணவர்களைத்தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உதவவில்லையென்றால் படிப்பையே கூட கைவிட்டுவிடுவார்கள் என்கிற சூழலில் இருப்பவர்களாகப் பார்த்து பாலம் அமைத்துக் கொடுக்கலாம்.

2) பரிந்துரை செய்பவர்களுக்கு அந்த மாணவன்/மாணவியை நேரடியாகத் தெரிந்திருப்பது நல்லது. நேற்று ஒருவர் பத்திரிக்கையில் வெளியான செய்தியின் இணைப்பை மட்டும் அனுப்பியிருந்தார். நன்றாகப் படிக்கும் மாணவனைப் பற்றிய குறிப்பு அது. அதைப் படித்துவிட்டு அவரிடம் ‘உங்களுக்கு இந்த மாணவனைத் தெரியுமா?’ என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பினால் ‘தெரியாது..நீங்களே விசாரித்து உதவுங்கள்’ என்று பதில் அனுப்புகிறார். நம்மிடம் கோடிக்கணக்கான ரூபாய் நிதி இருந்தால் அப்படிச் செய்ய முடியும். ஆனால் இப்போது சாத்தியம் இல்லை. இப்படி ஊடகங்களின் மூலமாக சிறு வெளிச்சம் விழுந்த மாணவர்களுக்கு உதவுவதற்கு யாராவது முன் வரக் கூடும். எந்த வழிவகையும் இல்லாமல் பெரிய கேள்விக்குறியுடன் இருக்கும் மாணவர்களுக்கு நாம் உதவலாம். 

3) அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு எல்லாவிதமான முன்னுரிமையும் அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களை நிராகரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் எப்படியும் சமாளித்துவிடுவார்கள். சில விதிவிலக்குகள் இருக்கலாம். சமீபத்தில் ஒரு மாணவி குறித்து ஒருவர் பேசினார். அந்த மாணவியை பெற்றோர்கள் தனியார் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். ஓரளவு வசதியான குடும்பம். ஆனால் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அம்மாவும் அப்பாவும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்கள். நோய்மையின் சிகிச்சைக்காக சொத்துக்கள் கரைந்திருக்கின்றன. இன்னமும் ஒரு வருடம் மட்டும் அதே பள்ளியில் படித்துவிட்டு பத்தாம் வகுப்புக்குப் பிறகு அரசுப் பள்ளியில் சேர்ந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறாள்.  சில நண்பர்கள் அந்தப் பள்ளியில் விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை பள்ளியே செலவை ஏற்றுக் கொண்டால் நாம் பணம் தர வேண்டியதில்லை. இல்லையென்றால் அந்தப் பெண்ணின் ஒரு வருட கல்விச் செலவை நாம் ஏற்றுக் கொள்ளலாம். இது மாதிரியானவற்றை விதிவிலக்காக எடுத்துக் கொள்ளலாம்.

4) ‘கடன் வாங்கி ஏன் பாரத்தைச் சுமக்க வேண்டும்’ என்று நினைத்து யாராவது உதவி கேட்டால் தவிர்த்துவிடலாம். கல்விக்கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பின் அதுதான் நல்லது. பெரும்பாலான வங்கிகள் கடன் தருகின்றன. விசாரிக்கச் சொல்லலாம். வங்கிக்கடன் வாங்கவே முடியாத சூழல் சிலருக்கு இருக்கும். மதுரையிலிருந்து ஒரு மாணவன் தொடர்பு கொண்டான். அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. ப்ளஸ் டூவில் அவன் பள்ளியில் முதலிடம். எப்படியும் அரசு பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கிவிடுவான் என்று தோன்றுகிறது. அரசுக் கல்லூரியில் சேர்வதாக இருந்தால் சேர்க்கைக்கான செலவை ஏற்றுக் கொள்ளலாம். அவனுக்கு வங்கிக் கடன் வாங்குவது சாத்தியமில்லாத காரியம் என்பதால் கை தூக்கிவிட்டுவிடலாம்.

5) கல்லூரிகளைப் பொறுத்தவரையிலும் அரசுக் கல்லூரிகள் என்றால் மட்டும்தான் உதவ முடியும் என்பதையும் உறுதியாகச் சொல்லிவிடலாம். வடிகட்டுவதற்கு இது ஒன்றுதான் வழி. அது எந்தப் படிப்பாக வேண்டுமானாலும் இருக்கட்டும்- தனியார் கல்லூரிகள் இனிப்பொழுக பேசி அழைக்கிறார்கள் என்று சேர்ந்துவிட்டு பிறகு சிரமப்படுபவர்களுக்கு உதவ ஆரம்பித்தால் அது அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டேயிருக்கும். ஆளாளுக்கு ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று சிறுகச் சிறுகக் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு போய் லட்சக்கணக்கில் பறிக்கும் கல்வித்தந்தைகளின் கையில் கொடுப்பது அநியாயமான காரியம்.

அவ்வளவுதான்.

மேற்சொன்னவற்றையெல்லாம் கணித்துவிட்டு அந்த மாணவன்/மாணவி உதவி பெறுவதற்கு தகுதியானவர்கள்தான் என்று தெரிந்தால் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள். தகுதியில்லை என்றால் எந்தவித தயக்கமும் இல்லாமல் நீங்களே நிராகரித்துவிடுங்கள். ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டுத்தான் பணத்தை அனுப்பி வைக்கிறார்கள். ஒற்றை ரூபாய் கூட வீணாகிவிடக் கூடாது. தகுதியானவர்கள் என்றால் எப்படியும் உதவிவிடலாம். இருக்கிற பணத்தைப் பகிர்ந்தளிக்கலாம். பணம் போதவில்லையென்றால் உதவி கேட்டு கோரிக்கை வைக்கலாம். சமாளித்துவிட முடியும்.

நன்றாகப் படிக்கும் ஏழை மாணவனுக்கான பாதையை தெளிவாக்கிக் கொடுப்பது என்பது ஒரு தலைமுறைக்கான வெளிச்சத்தை உருவாக்கிக் கொடுக்கும் செயல். அதைத் துணிந்து செய்யலாம். எல்லோருமாகச் சேர்ந்து!

நன்றி.

vaamanikandan@gmail.com