May 18, 2015

கணையாழி போட்டி - முடிவு ஒன்று

வழக்கமாக புத்தகங்கள் குறித்து எழுதி அனுப்பச் சொன்னால் குவிந்துவிடும். இந்த முறை வித்தியாசமாக இருக்கட்டும் என்று சிற்றிதழ்கள் அல்லது இலக்கிய இதழ்கள் பற்றி எழுதச் சொல்லியதற்கு போட்டியே இல்லை. வெறும் ஏழு பேர்கள்தான் அனுப்பியிருக்கிறார்கள். ஏழில் மூன்று குறிப்புகள் இரண்டு அல்லது மூன்று வரிகளில் மட்டும் எழுதப்பட்டிருந்ததால் விரிவாக எழுதித் தரச் சொல்லியிருக்கிறேன். இந்த நான்கு பேருக்கு சந்தா கட்டுவதற்கு கணையாழி கொடுக்கும் ஆயிரம் ரூபாயே போதுமானதாக இருக்கும். எனக்கு செலவு வைக்கக் கூடாது என்கிற நல்லெண்ணம் போலிருக்கிறது. கரிகாலனிடம்- அவர்தான் கணையாழி உதவி ஆசிரியர்- ஐந்து பேருக்கு மட்டும் கணையாழி சந்தாவைக் கட்டிவிடுங்கள் என்று சொன்னால் ‘இது போங்காட்டம்’ என்கிறார். 

ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதிகமானவர்களுக்குத் தகவல் சேர்ந்திருக்காமல் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றேன். ‘அதெல்லாம் இல்லைங்க...சிற்றிதழ்கள்/ இலக்கியப்பத்திரிக்கைகள் குறித்து நிறையப் பேருக்குத் தெரியாது’ என்கிறார். எது எப்படியோ- பதினைந்து பேருக்கு என்று அறிவித்தால் பதினைந்து பேருக்குக் கட்டியே தீர வேண்டும் என்கிறார். கட்டிவிடலாம். இன்று மாலை வரை காத்திருக்கலாம். யாரும் அனுப்பவில்லையென்றால் அனுப்பியவர்களுக்கு மட்டும் கணையாழி அனுப்பிவிடலாம். 

                                                                          (1) 

காடு  - சூழலியல் இதழ்

தமிழில் சுற்றுசூழல் , காட்டுயிர்கள் குறித்து அறிவியல் பூர்வமாகவும் பகுத்தறிவு பார்வையில் பேசக்கூடிய ‘காடு’ இதழின் ( சூழலியல் இருமாத இதழ்) அறிமுக நிகழ்வும், பெரு நகரமான சென்னையில் வாழும் காட்டுயிர்கள் குறித்த கலந்துரையாடலும் கடந்த நவம்பர் 15, 2014ல் நடைபெற்றது. மூத்த சூழலியல் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன், சூழலியல் எழுத்தாளர் பேராசிரியர் த.முருகவேள், சூழலியல் எழுத்தாளர் திரு நக்கீரன், பூவுலகின் நண்பர்கள் திரு கோ. சுந்தர்ராஜன்,  தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்-திரு ஐ. சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கி நடராசன் அவர்களின் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் அங்கு காணும் காட்டுயிர்கள் குறித்த கட்டுரையும் படங்களும் அறிவுக்கு விருந்தாகும் ஒன்றாகும்.

ஜனவரி பெப்ரவரி இதழில் இந்திய பொன்னிறக் காட்டுப்பல்லி குறித்து ஆ கலைமணி மற்றும் சற்றே பெரிய மந்திரக்கோல் என்று பனைமரத்தைக் குறித்து வெய்யில் அவர்களும் எழுதியிருந்தார்கள். மார்ச்-ஏப்ரல் இதழில் ‘யானைகள் ஆதியில் இருந்தன’ என்று கோவை சதாசிவமும், முள்ளெலிகள் குறித்து அறியவேண்டிய உண்மைகளாக பிரவீன் குமாரும் சிறப்புக் கட்டுரைகளை எழுதியிருந்தார்கள். வரும் மே-ஜீன் இதழில் பஞ்சகாலத் தாவரங்கள் குறித்து பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தியும் வேட்டையாடிப்பூச்சிகள்குறித்து ஏ சண்முகானந்தமும் சிறப்புக் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். இவை தலைப்புக் கட்டுரைகள் மட்டுமே. இதழைத் திறந்தால் ஒவ்வொரு பக்கமும் தேன்துளிதான். சுவைத்தாலன்றித் தெரிவதில்லை இனிப்பு. தேனீக்களாய் மாறித் தயாராகுங்கள். காட்டுயிர் என்றால் வெறும் விலங்குகள் மட்டும்தானா? இல்லை. ஓரறிவுத் தாவரங்கள், ஈரறிவு பூச்சிகள் முதலாய ஆறறிவு  விலங்குகள் வரை நம் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் அனைத்துமேதான். நாம் அறியத் தவறியவற்றை, அறியவேண்டியவற்றை, சிறந்தவகையில் வெளிக்கொண்டுவருகிறது ‘காடு’.

வெளியிடுவோர்:
தடாகம்

விலை:
60 ரூபாய்கள்.

கிடைக்கும் இடம்
பனுவல்
112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-600041.
தொலைபேசி 044 43100442

 மேலதிக விவரங்களுக்கு : பனுவல் இணையதளம்

குறிப்பை அனுப்பியவர்: திருமதி.  ஃபெய்ரி லாஸ் மனோஜ்


                                                                 (2)

சின்ன நதி- சிறார் சஞ்சிகை

குழந்தைகளுக்கான மாத இதழ்.உங்கள் வீட்டு சீறார்களின் கற்பனைத் திறனை மேம்படுத்த நிச்சயம் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதழ்.

சிறுவர் கவிதைகள், கதைகளுடன் சேர்த்து விலங்குகள், பறவைகள் குறித்த தகவல்கள், சிறந்த தலைவர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் என சுவாரசியமிக்க எழுத்துக்கள் பல வண்ணப் படங்களுடன் வெளிவருகின்றன. இவற்றுடன் கல்வி சமந்தப்பட்ட கட்டுரைகளும் உண்டு. பிரம்மிக்கவைக்கும் ஓவியம், தகவல்கள் ,குழந்தைகள் கற்க வேண்டிய அறிவியல் என மொத்த புத்தகமும் அறிவுப் புதையலாக உள்ளது. உங்கள் உறவினர் குழந்தைகளுக்குக்கூட சந்தா செலுத்தலாம். இதன் ஆசிரியர் பல குழந்தைகளுக்கான கவிதை, கதைகள் எழுதியும் மொழிபெயர்த்தும் உள்ள யூமா வாசுகி என்று அறியப்படும் மாரியப்பன்.

விலை: 
தனி இதழ் - 15
ஆண்டுச்சந்தா - 165

தொடர்புக்கு:
"சின்ன நதி"
முதல் தளம்
புதிய எண்-5
முதல் தெரு,போயஸ் சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-18

மின்னஞ்சல்
info@chinnanathi.com
தொலைபேசி
044-24352050

குறிப்பை அனுப்பியவர்: மணி பிரபு

                                                                     (3)

தீராநதி- சச்சரவுகளற்ற இலக்கிய இதழ்

நான் குறிப்பு எழுதப் போகும் பத்திரிக்கை குமுதம் நிறுவனத்தாரின் சார்பு இதழான தீராநதி பற்றி.

தீராநதி சம கால இலக்கியப் பத்திரிக்கைகளுள் ஒரு குறிப்பிடத் தகுந்த சஞ்சிகை. ஈழ நிகழ்வுகளின் போது ஒப்பீட்டளவில் ஈழத்தை பற்றி தரமான கட்டுரைகளும் நல்ல நுண்ணுணர்வுள்ள வாசகர்களுக்கான கவிதைகளும் இதில் அங்கம் வகித்ததை கூறலாம். தமிழகத்தில் பா.செயப்பிரகாசம் உள்ளிட்ட எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக பங்கெடுக்கும் பத்திரிக்கை எனவும் கூறலாம்.

கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள் எனத் தரமான உள்ளாக்கங்களுடன் மொத்தத்தில் மொன்னையான இலக்கியச் சண்டைகளுக்கும் இன்ன பிற பீற்றல்களுக்கும் பெரிதும் இடம் கொடாமல் தரமான இலக்கிய சஞ்சிகையாக அடையாளம் காட்டலாம்.

மேலதிக விவரங்களுக்கு: குமுதம் இணையதளம்

குறிப்பை எழுதியவர்: திலீபன் ராமசாமி

                                                                          (4)

கதைசொல்லி- கத்தாய இதழ்

கதை சொல்லி ஒரு கத்தாய இதழ். கரிசல் மண்ணில் மூன்று மாதங்களுக்கொருமுறை செய்யும் வேளாண்மைப் பயிருக்கு கத்தாயப் பயிர் என்று பெயர். 

இந்த இதழானது 1997ல் கரிசல்காட்டு இலக்கியப் பிதாமகன் கி.ரா என்றழைக்கப்படும் கி.ராஜநாராணன் அவர்களால் தொடங்கப்பட்டு, தற்போது திரு. கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களை இணை- ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியராகவும், திரு கழனியூரன் அவர்களை பொறுப்பாசிரியராகவும் கொண்டு 2015 ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

கதை சொல்லி இதழின் ஆலோசனைக்குழுவில், 

தோப்பில் முகமது மீரான்,
தீப.நடராஜன்,
மணா,
க.பஞ்சாங்கம்,
அப்பணசாமி,
கவிஞர் .அ.வெண்ணிலா,
கவிஞர். மதுமிதா,
வேங்கட பிரகாஷ்,
புது எழுத்து மனோன்மணி,
கோவை நவீந்திரன்,
பாரத தேவி, 
விஜய இராஜேஸ்வரி,
கனவுப் பிரியன்,
ஸ்ரீதேவி செல்வராஜன்,
கார்த்திக் புகழேந்தி,
காயத்ரிதேவி
இராதா இராமச்சந்திரன் 

ஆகியோர் இயங்குகின்றனர்.

கதை சொல்லி இதழ்  ‘பொதிகை-பொருநை-கரிசல்’ அமைப்பின் சார்பாக பொருநை-கரிசல் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுகின்றது. பதிப்பகப் பணிகள் மற்றும் பொறுப்புகளை இளம்படைப்பாளி கார்த்திக் புகழேந்தி மேற்கொள்கிறார்.

தொடர்புக்கு :
கதைசொல்லி 
#4/359, ஸ்ரீ சைதன்யா அவென்யூ,
அண்ணாசாலை, பாலவாக்கம்,
சென்னை -600 041 . +91 9994220250

Mail : rkkurunji@gmail.com. / porunaiweb@gmail.com

குறிப்பை எழுதியவர்: ஸ்ரீதேவி செல்வராஜன்