May 13, 2015

சிவப்புப் பட்டைக் கோடு

பெங்களூரின் குளிரிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கர்நாடக அரசுப் பேருந்து சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் கர்நாடகாவில் பந்த் என்பதால் பேருந்தில் கூட்டமில்லை. தோராயமாக இருபது பேர்கள்தான் இருந்திருப்போம். நள்ளிரவு தாண்டிய நேரம். சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆம்பூர் தாண்டிய ஓரிடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. நாங்கள் பயணித்த பேருந்தும் நிறுத்தப்பட்டு விளக்குகள் எரியத் துவங்கின. சாலையோர தேனீரகத்தில் நிறுத்துகிறார்கள் போலிருக்கிறது என கொட்டாவி விட்டபடியே ஒன்றிரண்டு பேர் இறங்கினார்கள். நானும் சேர்ந்து கொண்டன. முன்பாகவும் வரிசையாக பேருந்துகள் நின்றிருந்தன. நிச்சயமாக தேனீரகம் இல்லை என்பதை முடிவு செய்ய வெகுநேரம் பிடிக்கவில்லை. அவசர அவசரமாக முன்னால் சென்று பார்த்தபோது தூக்கிவாரிப் போட்டது. எங்களுக்கு முன்பாக வந்திருந்த பேருந்து ஒன்று குழந்தை மீது ஏறியிருந்தது. ஆறு வயதுக் குழந்தை. அம்மாவும் அப்பாவும் குழந்தைகளை நடுவில் படுக்க வைத்து ப்ளாட்பாரத்தில் படுத்துத் தூங்கியிருக்கிறார்கள். குழந்தை எப்படியோ உருண்டு வந்துவிட்டது. பேருந்து ஓட்டுநர் பார்க்கவில்லை போலிருக்கிறது. அவரையும் குறை சொல்ல முடியாது. நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருக்கும் போது வாகனத்தை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லைதான். நசுக்கப்பட்டிருந்த குழந்தையைக் பார்க்க முடியவில்லை. கோரமாக இருந்தது. நசுங்கிக் கிடப்பது ஒரு குழந்தை மட்டும் இல்லை. ஒரு கனவு. இல்லையா? எவ்வளவோ ஆசைகளுடனும் கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் மாலை வரை விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அது. சாலையின் இருண்ட பக்கங்களில் வைத்து நசுக்கித் தேய்க்கப்பட்டுவிட்டது.

ஓட்டுநரும் நடத்துநரும் பேருந்தை அதே இடத்தில் நிறுத்திவிட்டு தப்பித்துவிட்டார்கள். குழந்தையின் அப்பாவும் அம்மாவும் கதறிக் கொண்டிருந்தார்கள். மற்ற இரண்டு குழந்தைகளும் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். பயணிகளில் யாரோ ஒருவர் பிஸ்கெட் பொட்டலம் ஒன்றை குழந்தைகளின் கையில் கொடுத்தார். அதை எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கி வைத்துக் கொண்டார்கள். போலீஸ் வரும் வரை பேருந்தை நகர்த்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். கிடைத்த இடைவெளியில் மகிழ்வுந்துகளால் விலகிச் செல்ல முடிந்தது. பேருந்துகளுக்கும் சரக்குந்துகளுக்கும் வழியில்லை. அப்படியே நின்று கொண்டிருந்தன. வாகனங்களின் வரிசை மெதுவாக நீண்டு கொண்டேயிருந்தது. யாரோ ஒருவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருந்தார். சிலர் கீழே இறங்கிப் பார்த்துவிட்டு மீண்டும் தங்களது பேருந்துக்குள் ஏறிக் கொண்டார்கள். சிலர் சிகரெட்டைப் பற்ற வைத்தார்கள். சிலர் சிறுநீர் கழிப்பதற்கான இடங்களைத் தேடத் தொடங்கியிருந்தார்கள்.

பெருநகரங்களின் ப்ளாட்பாரங்களில் மனிதர்கள் படுத்து உறங்குகிறார்கள் என்பது அதிர்ச்சியான விஷயமே இல்லை. ஆனால் தமிழகத்தின் உட்புறங்களிலும் இப்படியான குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் கணக்கெடுத்தால் இலட்சக் கணக்கான குடும்பங்களுக்கு வீடு கிடையாது. பெங்களூரில் இன்னமும் குழாய்களுக்குள் குடும்பம் நடத்துபவர்கள் இருக்கிறார்கள். பத்து மணியைத் தாண்டிய பிறகு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தால் பல நூறு பேருக்கு அந்த இடம்தான் வீடாக இருக்கிறது- அரசாங்கத்தால் ஏக்கர் கணக்கில் கட்டப்பட்டிருக்கும் விஸ்தாரமான பங்களா. அவ்வப்போது போலீஸார் வந்து தடியால் அடித்து விரட்டுவார்கள். அப்படி விரட்டினால் அன்றைய தினத்தின் தூக்கம் பறி போய்விட்டதாக அர்த்தம். இல்லையென்றால் அதிர்ஷ்டம்தான். கொசுக்களோடு போராடினாலும் நிம்மதியாகத் தூங்கிக் கொள்ளலாம்.

அடையாறு, கோடம்பாக்கம், கிண்டி என அத்தனை இடங்களிலும் ப்ளாட்பாரவாசிகள் நிறைந்திருக்கிறார்கள். இத்தகைய ப்ளாட்பாரக் குடும்பங்களுக்கு எந்த அடையாளமும் கிடையாது. ரேஷன் அட்டையிலிருந்து வாக்காளர் பட்டியல் வரைக்கும் எதிலும் இடம் இல்லை. அரசாங்கத்தின் எந்த ஆவணத்திலும் இருக்கமாட்டார்கள். எந்த காப்பீட்டுத் திட்டமும் கிடையாது. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் அவ்வப்போது யாராவது வாகனத்தை ஏற்றிக் கொன்றுவிட்டு பறந்துவிடுகிறார்கள். பெரும்பாலான மரணங்கள் ‘அடையாளம் தெரியாத வாகனங்களால்’ ஏற்படுத்தப்பட்ட மரணமாக முடித்து வைக்கப்படுகின்றன. 

உணவு, உடை, உறவிடம் என்பதைத்தான் ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பார்கள். தேசத்தின் அத்தனை பேருக்கும் இந்த மூன்று வசதிகளைச் செய்து கொடுப்பதுதானே அரசாங்கத்தின் முக்கியமான கடமையாக இருக்க வேண்டும்? வளர்ச்சி, முன்னேற்றம் என்று அறைகூவல் விடுக்கும் எந்த அரசாங்கமும் இத்தகைய விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி ஏதாவது யோசித்துப் பார்க்கிறதா என்று தெரியவில்லை. இந்த மக்கள் உணவையும் உடையையும் எப்படியாவது சமாளித்துவிடுகிறார்கள். ஆனால் அத்தனை பேருக்கும் உறைவிடம் என்பதுதான் மிகப்பெரிய சவால். ஆனால் சாதிக்கவே முடியாத சவால் இல்லை. சரியான அணுகுமுறையுடன் கூடிய அரசாங்கம் அமையுமெனில் இதைச் சாதித்துவிட முடியும். ஆனால் விளிம்பு நிலைகளின் நிலையை ஆராய்வதைவிடவும் ஆலைகளின் வளர்ச்சியும் பெருமுதலாளிகளின் முன்னேற்றமும்தான் தேசத்தின் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களை இந்த நாட்டுக்குள் கொண்டு வருவதைத்தான் மிகப்பெரிய சவாலாகக் கருதுகிறார்களே தவிர முழுமையாக வறுமையை விரட்டுவதில் இருக்கும் சவால் பற்றி யோசிப்பதில்லை. 

இதையெல்லாம் அந்த நேரத்தில் யோசித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. குழந்தையின் அப்பாவிடம் ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அந்தச் சூழலில் அவரிடம் எதைப் பேசுவது என்று தெரியவில்லை. போலீஸ் வாகனம் வருவதற்குள் அவருக்கு ஏதாவது சிறுதொகையை ஏற்பாடு செய்து கொடுத்துவிடலாம் என்று அருகில் இருந்த ஒருவர் சொன்னார். அது சரியானதாகப்பட்டது. அந்த இடத்தில் கூட்டமாக நின்றவர்களிடம் பேசினோம். எவ்வளவு உறுதியான ஆளாக இருந்தாலும் அந்தக் குடும்பத்தின் நிலைமையைப் பார்த்தால் குலைந்துவிடுவார்கள். நூறும் இருநூறுமாகக் கொடுத்தார்கள். அரை மணி நேரத்தில் ஐந்தாயிரத்து சொச்சம் சேர்ந்தது. குழந்தையின் அப்பாவிடம் கொடுத்த போது அவர் எதுவும் பேசாமல் வாங்கி கொண்டு பணத்தைக் கொடுத்தவரின் கால்களைப் பற்றினார். பணம் வசூலித்துக் கொடுத்தவர் தன்மையான மனிதராகத் தெரிந்தார். குடும்பத்தின் அருகிலேயே அமர்ந்து அந்தக் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். அது அவர்களுக்கு சற்றேனும் ஆறுதலாக இருந்திருக்கக் கூடும்.

அந்தக் குடும்பம் ஆந்திராவைச் சார்ந்தது. வெகு காலமாக தமிழ்நாட்டுக்குள்தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே ஊர் ஊராகச் சென்று ஏதாவது வேலைகளைச் செய்கிறார்கள். கட்டிட வேலையிலிருந்து கல் உடைக்கும் வேலை வரை. இந்த ஊருக்கு வந்து சில வருடங்களாகிவிட்டன. ப்ளாட்பாரத்திலேயேதான் தங்கியிருக்கிறார்கள். மூன்று கற்களைக் கூட்டி வைத்து விறகை முறித்து அடுப்பில் வைத்து சோறாக்கிக் கொள்கிறார்கள். கரிப்பிடித்த ஈயப்பாத்திரம் அந்த இடத்திலேயேதான் இருந்தது. அந்தத் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். அதில் ஒன்றைத்தான் இப்பொழுது பறிகொடுத்துவிட்டார்கள். இன்று கூட கணவனும் மனைவியும் சாலை செப்பனிடும் வேலைக்குச் சென்றிருந்தார்களாம். அசதியாக இருந்ததால் வந்து படுத்தவர்கள் அப்படியே தூங்கிவிட்டார்கள். குழந்தை உருண்டது தெரியாமல் போய்விட்டது. பேருந்துச் சக்கரத்தின் வழியாக விதி வந்து ஏறிவிட்டது.  ‘நாளைக்கு புரோட்டா வாங்கிக் கொடு நைனா’ என்று சொல்லிவிட்டு அந்தக் குழந்தை உறங்கியதாக அவர் சொன்ன போது உடைந்து போய்விட்டார். கசங்கிய அந்தக் குழந்தையின் உடலை பார்த்துக் கொண்டிருப்பது சாதாரணக்காரியமில்லை. யாரோ ஒரு மனிதர் வெள்ளைத் துணியொன்றைப் போட்டு மூடி வைத்தார். குழந்தையின் அம்மா மார்போடு அறைந்து அழுது கொண்டிருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்லத்தான் யாருமே இல்லை. 

ப்ளாட்பாரக் குழந்தைகளுக்கு படிப்பு எதுவும் இல்லை. கொஞ்ச நாட்களுக்கு பெற்றவர்கள் தங்களோடு கூட்டிக் கொண்டு அலைகிறார்கள். பிறகு கிரானைட் குவாரியிலேயோ அல்லது தொழிற்சாலையிலேயோ வேலைக்குச் சேர்த்துவிட்டு இடம் பெயர்கிறார்கள். அதன்பிறகு அவர்களுக்கு குடும்பத்தாருடன் தொடர்பு இருக்குமா என்று தெரியவில்லை. இப்படியான குடும்பங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். நாம் கோருகிற அத்தனை உரிமைகளும் அவர்களுக்கும் தரப்பட வேண்டும். நமக்கு கிடைக்கிற அத்தனை சலுகைகளும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் எந்த உரிமையும் தரப்படுவதில்லை. எந்தச் சலுகையும் கிடைப்பதில்லை. பிறப்பும் இறப்பும் கூட பதிவு செய்யப்படுமா என்று தெரியவில்லை.

சில நிமிடங்களிலேயே போலீஸ் ரோந்து வாகனம் வந்துவிட்டது. வந்தவுடனேயே விபத்தை நிகழ்த்திய பேருந்தை ஓரமாக நிறுத்தி மற்ற வாகனங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவரவர் தங்களது பேருந்துகளில் ஏறுவதற்கு எத்தனித்தார்கள். பணம் வசூலித்துக் கொடுத்தவரிடம் இன்னொருவர் வந்து ‘பணத்தை போலீஸ்காரங்க வாங்கினாலும் வாங்கிக்குவாங்க’ என்றார். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவரிடம் சென்று எதையும் சொல்லவும் முடியாது. போலீஸ்காரர் ஒருவர் குழந்தையின் அப்பாவிடம் விசாரணையை ஆரம்பித்திருந்தார். தங்களிடம் பணம் இருப்பதை அவர்களுக்கு மறைக்கத் தெரியுமா என்று தெரியவில்லை. பேருந்தில் அமர்ந்து மணியைப் பார்த்தேன். இரண்டைத் தாண்டியிருந்தது. ஓட்டுநர் விளக்குளை அணைத்துவிட்டு வேகமெடுத்தார். அதன் பிறகு தூக்கமே வரவில்லை. கண்களை மூடினால் சிவப்புப்பட்டையாக ஓடியிருந்த ரத்தமும் அந்தக் குழந்தையின் பச்சைப் பாவாடையுமே நினைவில் வந்து போய்க் கொண்டிருந்தன. அந்த நினைவுகளின் சுமையுடனேயே கோயம்பேட்டில் இறங்கி ஷேர் ஆட்டோ எடுத்துக் கொண்டேன். கொஞ்ச தூரத்திலேயே பூனையொன்று நசுங்கிக் கிடந்தது. பூனைக்கும் குழந்தைக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்று நினைத்தபடியே வெளியில் வானத்தைப் பார்த்த போது வெளிச்சம் படுவேகமாக இருளைத் தின்று கொண்டிருந்தது.

(மே’ 2015 கணையாழி இதழில் வெளியான கட்டுரை)