Apr 9, 2015

கரண்டியைக் கழுவுவீங்களா?

இதுவரை மூன்று முறைதான் பல் மருத்துவரிடம் சென்றிருக்கிறேன். முதல் முறையாகச் சென்ற போது ஏழு வயது. கீழ் வரிசை பற்களுக்குப் பின்னால் ஒரு பல் முட்டிக் கொண்டு வந்தது. ஆயா பார்த்துவிட்டு ‘இது ராசியான பல்....மந்திரி யோகம் இருக்குது’ என்றார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும்தான் பிடிக்கவில்லை. பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். அப்பொழுதே வீதிக்கு வீதி பல் மருத்துவர்கள் பெருகியிருந்தார்கள். கேஸ் வந்தால் விடுவாரா? ஊசியைப் போட்டு பிடுங்கி கையில் கொடுத்துவிட்டார். அப்பொழுது வலிக்கவில்லை. ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு வீங்கிப் போய் அவருக்கு சாபம் எல்லாம் விட்டேன். நான் என்ன கண்ணகியா? சாபம் பலிப்பதற்கு. மாடி மேல் மாடி கட்டி கோடி மேல் கோடியாகச் சேர்த்துவிட்டார்.

அதற்கப்புறம் இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு- சமீபத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பாக வாயில் ஒரு புண் வந்தது என்பதற்காகச் சென்றேன். அதுவும் கூட சென்றிருக்க மாட்டேன். மருத்துவரின் பெயர் காஜல் திரிவேதி. பெயரைப் பார்த்து ஏமாந்துவிட்டேன். யாருமே இல்லாத க்ளினிக்கில் ஈ ஒட்டிக் கொண்டிருந்தவர் வாயெல்லாம் பற்களுடன் வரவேற்று அமரச் சொல்லி ‘ஸ்கேலிங் செய்யணும்’ என்றார். பற்கள் சுத்தமாகி வெள்ளை வெளேரென்று ஆகிவிடும் என்பது அவரது உத்தரவாதம். பதினைந்து நாட்களுக்கு பல் துலக்கும் வேலை இருக்காது என்கிற நம்பிக்கையில் வாயைத் திறந்துவிட்டேன். ரம்பம் போல எதையோ வைத்து ராவு ராவென்று ராவி விட்டார். வெள்ளை வெளேரென்றாகி சிநேகாவுக்கு போட்டி கொடுக்கலாம் என்று நம்பினேன். ம்ஹும்.

மூன்றாவது முறையாக கடந்த வாரம் சனிக்கிழமை. மேல்பக்க கடவாயில் ஈறு வீங்கியிருந்தது. இதற்கெல்லாம் பல் மருத்துவரிடம் சென்றால் குறைந்தது ஐந்நூறு ரூபாயாவது தீட்டிவிடுவார்கள். நல்லவேளையாக சென்னை செல்ல வேண்டியிருந்தது. மருத்துவர் அருணா அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர். அவரை வைத்து செலவில்லாமல் காரியத்தை முடித்துக் கொள்ளலாம் என்று குறுக்குப்புத்தி வேலை செய்தது. அதிகாலையிலேயே அவருக்கு ஃபோன் செய்து ‘டாக்டர் உங்களைப் பார்க்க வரணுமே’ என்று பிட் ஒன்றைப் போட்டு வைத்தேன்.

‘வாங்க...என்ன விஷயம்?’ என்றார். 

‘சும்மாதாங்க....உங்களைப் பார்க்கலாம்ன்னுதான்’ என்று சொல்லி நம்ப வைத்துவிட்டேன். அரை மணி நேரம் கழித்து எதுவுமே தெரியாதவன் போல ‘டாக்டர்...ஈறு லைட்டா வீங்கியிருக்கு...அங்கேயே செக் செஞ்சுக்கலாமா?’ என்றேன். 

‘அதுக்கென்ன..தாராளமா வாங்க’ என்றார். அப்பாடா. ஐந்நூறு ரூபாய் மிச்சம் பிடித்தாகிவிட்டது. பதினோரு மணி வரை சில நண்பர்களைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது ஃபோன் வந்தது. டாக்டர்தான். ‘இன்னும் வரலையா? சனிக்கிழமை பன்னிரெண்டு மணி வரைக்கும்தான்.....சீக்கிரம் வாங்க’ என்றார். தூக்கிவாரிப் போட்டது. ஆட்டோவைத் தவிர வேறு வழியில்லை. ஆட்டோக்காரர் நூற்றைம்பது ரூபாய் கேட்டார். ஐந்நூறில் நூற்றைம்பது காலி. பரவாயில்லை. ஏறிக் கொண்டேன்.

ராஜீவ்காந்தி மருத்துவமனை என்றுதான் ஆட்டோக்காரரிடம் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் அதிலிருந்து கொஞ்சம் தூரம் சென்றால்தான் கோட்டை பல் மருத்துவமனை. இறங்கும் போது கூடுதல் தூரத்துக்காக இன்னுமொரு ஐம்பது ரூபாய் சேர்த்துக் கேட்டார். இந்த மனிதர்கள் அடுத்தவனின் பணக்கணக்கை புரிந்து கொள்ளவே மாட்டார்களா? 

‘அடுத்த தடவை பார்த்துக்கலாங்கண்ணா’ என்றேன். 

‘இன்னாது அடுத்த தடவையா?’ என்று ஷாக் ஆகிவிட்டார். சென்னை போன்ற மாநகரங்களில் ஆட்டோக்காரரிடம் அடுத்த தடவை தருவதாகச் சொன்ன முதல் ஆள் நானாகத்தான் இருக்க வேண்டும். அவர் சொன்னதைக் கண்டுகொள்ளாமல் மருத்துவமனை நோக்கித் திரும்பிய போது ‘ஓத்...’ என்றார். காதிலேயே விழாதது போல நகர்ந்துவிட்டேன். மருத்துவர் வாயிலில்- மருத்துவமனை வாயிலில்- நின்றிருந்தார். 

‘என்ன பிரச்சினை?’ என்று திரும்பவும் கேட்டார். வெயிலில் தொப்பலாகிக் கிடந்தேன். அப்போதைக்கு அதுதான் பெரிய பிரச்சினையாகத் தெரிந்தது. 

உங்களைத்தான் பார்க்க வந்தேன் என்று இனியும் அளக்க முடியாது என்பதால் ஈறு பற்றிச் சொன்னேன். வேறொரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். 

‘ஏன் நீங்க பார்க்க மாட்டீங்களா?’ - அவசரப்பட்டு கேட்டுவிட்டேன்.

‘அது வேற டிபார்ட்மெண்ட்’

‘என்ன டிபார்ட்மெண்ட்டோ...வாயைத் திறந்தா எல்லாமே ஒண்ணுதானே’ என்று முனகியது காதில் விழுந்திருக்கக் கூடும்.

அங்கு வரிசையாக பல் நோயாளிகளைப் படுக்க வைத்து எல்லோருடைய வாயையும் திறந்து வைத்திருந்தார்கள். எனக்கும் ஒரு நாற்காலி ஒதுக்கப்பட்டது. கால் நீட்டி அமரும்படியான நாற்காலி. ஒரு மருத்துவர் வாயைத் திறக்கச் சொல்லி இரண்டு மூன்று கரண்டிகளை உள்ளே விட்டு துழாவிப் பார்த்தார். எனக்கு சந்தேகமெல்லாம் இந்தக் கரண்டிகளை கழுவியிருப்பார்களா என்பதிலேயே இருந்தது. 

கிடைத்த இடைவெளியில் அருணாவிடம் ‘இதையெல்லாம் கழுவி வைப்பீங்களா?’ என்று கேட்டுவிட்டேன்.

‘எங்க டிபார்ட்மெண்ட்ல கழுவி வைப்போம்’ என்றார். இதற்கு என்ன அர்த்தம்? அப்படியென்றால் இந்த டிபார்ட்மெண்ட்டில் கழுவமாட்டார்கள் என்றுதானே? வகை தெரியாமல் மாட்டிக் கொண்டேனோ என்று நொந்து கொண்டிருந்தேன்.

‘எக்ஸ்ரே எடுக்கணும்’ என்றார். ஏற்கனவே சென்னையில் வெயிலில் பொரியல் ஆகிக் கொண்டிருக்கிறேன். அதோடு சேர்த்து ‘கழுவினார்களா இல்லையா’ என்கிற இந்த டென்ஷன் வேறு வியர்வையை அதிகமாக்கி விட்டிருந்தது. அருணா பேசாமலாவது விட்டிருக்கலாம். மீண்டும் ஒரு முறை ‘எங்க டிபார்ட்மெண்டில் பீரியாடிகக்லா கழுவிடுவோம்’ என்றார். உண்மையைச் சொல்கிறாரா கலாய்க்கிறாரா என்று புரியவில்லை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்பதும் பீரியாடிக்கல்தான். வருடம் ஒரு முறை என்பதும் பீரியாடிக்கல்தான். இடையில் எத்தனை பேர் வாய்க்குள் விட்டு எடுப்பார்களோ என்று மண்டைக்குள் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கின.

ஆனால் தப்பிக்க வழி இருப்பதாகத் தெரியவில்லை. எக்ஸ்ரே எடுக்குமிடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். எக்ஸ்ரே எடுப்பதும் சாதாரணக் காரியமில்லை. எதையோ வாய்க்குள் வைத்து கையில் பிடிக்கச் சொன்னார்கள். ‘உங்களுக்கு சரியா பிடிக்கத் தெரியலை..ஹோல்டர் மாட்டி விடுகிறேன்’ என்று இன்னொரு ஆயுதத்தை உள்ளே நுழைத்தார்கள். இதற்குத்தான் பல் மருத்துவரிடம் வரவே கூடாது. கிடைப்பதையெல்லாம் உள்ளே செருகிக் கொண்டிருக்கிறார்கள். இன்று காலையில் யார் முகத்தில் விழித்தேன் என்று யோசனை ஓடிக் கொண்டிருந்தது. எழுந்தவுடன் கண்ணாடியில் என் முகத்தைத் தான் பார்த்தேன் என்று ஞாபகம் வந்து தொலைத்தது. 

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு பிரச்சினை எதுவும் இல்லை என்றார்கள். இருந்தாலும் இன்னொரு மருத்துவரிடம் விசாரித்துவிடலாம் என்று அழைத்துச் சென்றார். அவர் ஊசியை வைத்து ஒரு குத்து குத்திவிட்டார். ‘வலிக்குதா?’ என்றார். ஊசியைக் குத்திவிட்டு வலிக்குதா என்று யாராவது கேட்பார்களா என்று நினைத்தபடியே ‘இல்லை சார்’ என்றேன். அப்பொழுதாவது அருணா அமைதியாக இருந்திருக்கலாம். ‘இவர் கவிஞர்’ என்றார். கவனிக்க வேண்டும்- அவர் ஊசியை இன்னமும் வெளியில் எடுத்திருக்கவில்லை. இது போன்ற அதிபயங்கரமான அறிமுகங்களைச் செய்வதற்கும் நேரம் காலம் பார்க்க வேண்டியது அவசியம். வேண்டுமென்றே போட்டுக் கொடுத்தாரா என்றும் தெரியவில்லை. அநேகமாக அந்த மருத்துவர் கடுப்பாகியிருக்க வேண்டும். ‘வெரிகுட்’ என்று சொல்லியபடியே ஊசியில் இன்னொரு குத்து விட்டார். ஆட்டோக்காரன் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

கணக்குப் பார்த்தால் அந்த அரை மணி நேரத்தில் பத்து பதினைந்து கரண்டிகளும் கம்பிகளும் ஊசிகளுமாக வாய்க்குள் போய் வந்திருந்தன. வீட்டில் கூட நான் பயங்கரமாக சுத்தம் பார்ப்பேன். எல்லாவற்றுக்கு மொத்தமாகச் சேர்த்து வைத்து பாடம் கற்பிப்பது போல இருந்தது. ஆனது ஆகிவிட்டது வாயையாவது கொப்புளித்துக் கொள்ளலாம் என்று வாஷ் பேஷினைத் தேடி நீரை வாய்க்குள் ஊற்றியிருந்தேன். அருணா அருகில் வந்து ‘அது நல்ல தண்ணியான்னு பார்த்துக்குங்க’ என்றார். இதற்கு மேல் ஒரு மனிதன் எப்படித் தாங்குவான்? நொறுங்கிப் போய்விட்டேன்.

‘டாக்டர்..இதெல்லாம் நல்ல தண்ணியா கெட்ட தண்ணியான்னு பார்க்க வேண்டியதில்லை...வாய்க்குள் ஊற்றிக் கொப்புளித்தால் மனச்சாந்தி. எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போய்விட்டதான ஒரு நம்பிக்கை...அது பொறுக்கலையா?’ என்றேன்.

சிரித்தார். எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார். என்னுடைய கவனமெல்லாம் கரண்டிகளையே சுற்றிச் சுற்றி வந்தன. கடைசியாகக் கிளம்பும் போது ‘அதெல்லாம் சுத்தம் செஞ்சுடுவோம். டென்ஷன் ஆகாதீங்க’. உண்மையைச் சொன்னாரா பொய்யைச் சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால் சற்று ஆறுதலாக இருந்தது.

ஊருக்கு வந்த பிறகு அழைத்து ‘ஈறு எப்படி இருக்கு?’ என்றார்.

‘அப்பவே சரியாகிடுச்சு டாக்டர்..உங்க டாக்டர்களின் மகிமையே மகிமை’ என்றேன்.

‘ஏன் அந்தக் கரண்டிகளின் மகிமைன்னு சொன்னா ஒத்துக்க மாட்டீங்களா?’ என்கிறார். ஃபோனை துண்டித்துவிட்டு இரண்டு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தேன். உடைந்த இதயம் அவ்வளவு சீக்கிரம் ஒட்டிவிடுமா என்ன?