Apr 7, 2015

உன் லட்சியம் என்ன?

எங்கள் ஊரில் ஒரு சட்டைக்காரி இருந்தார். கணவன், குழந்தைகள் என்று யாரும் இல்லை. எழுபது வயது இருக்கும். தனியார் பள்ளியொன்றில் ஆங்கில ஆசிரியையாக சொற்பமான பணத்தை வாங்கிக் கொண்டிருந்தவரிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது Spoken English பழகுவதற்காக அனுப்பி வைத்திருந்தார்கள். சட்டைக்காரி என்கிற வார்த்தை அப்பொழுதுதான் அறிமுகம். ஆங்கிலோ இந்தியர்களை அப்படித்தான் நம்மவர்கள் அழைத்தார்கள். அந்த டீச்சர் சட்டை அணிந்திருக்கவில்லை. புடவைதான். ஆனாலும் சட்டைக்காரி என்றுதான் விளித்தார்கள். தனது இளம்பிராயத்திலேயே கணவனை இழந்துவிட்டவர். கடைசி காலத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். மாதம் முப்பத்தைந்து ரூபாய் கொடுத்தோம். மூன்று மாணவர்கள். அது போக ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியும் வகுப்பிற்கு வந்து கொண்டிருந்தாள். அக்கா என்றுதான் அழைக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் அவளது அருகாமையும், மல்லிகைப்பூ மணமும் இன்னமும் ஞாபகத்தின் ஓரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த டீச்சர் குறித்த நினைவுகள் காலப்போக்கில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

இன்னமும் சட்டைக்காரிகள் இருக்கிறார்களா? கண்களில் படுவதேயில்லை. ஒருவேளை மற்றவர்களோடு கலந்து போயிருக்கக் கூடும். இப்பொழுது அந்த டீச்சரைப் பற்றிய ஞாபகங்களைக் கிளறும்படியான புதினம் ஒன்றை வாசித்து முடித்திருக்கிறேன். காலவெளி. விட்டல்ராவ் எழுதிய நாவல். 1988 ஆம் ஆண்டிலேயே நாவலின் முதல் பதிப்பு வெளிவந்துவிட்டது. கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாதரசம் பதிப்பகத்தில் இரண்டாம் பதிப்பைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

நவீன ஓவியம் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடிந்ததில்லை. கண்களை மூடிக் கொண்டு வண்ணக்கலவையை இஷ்டத்துக்கு பூசினால் ஓவியம் கிடைத்துவிடுகிறது என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படி இல்லை. கணையாழி அலுவலகத்தில் ஓவியர் ஸ்ரீனிவாசனின் ஓவியங்களை மிக நெருக்கமாக பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. முற்றுப்பெறாத ஓவியங்கள், பாதியோடு நின்று போனவை, வெறும் கோடுகளால் ஆனவை என விதவிதமான ஓவியங்கள். நவீன ஓவியம் என்பது வெறும் குழப்படி வேலைகளைத் தாண்டிய ஒரு விஷயம் என்று புரியத் தொடங்கியது அங்குதான். ஓவியர்கள் பயன்படுத்தும் நிறங்கள், இழுக்கும் கோடுகள் என எல்லாவற்றிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட போது இன்னும் சற்று விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது.

இணையத்தில் நிறையக் கட்டுரைகள் கிடைக்கின்றன. ஆனால் தமிழில் எழுதப்பட்ட புத்தகம் எதையாவது வாசிக்க வேண்டும் என விரும்பினேன். அப்படி கையில் எடுத்ததுதான் காலவெளி. நவீன ஓவியங்களைப் பற்றிய முழுமையான புரிதலை உருவாக்கக் கூடிய நாவல் என்று சொல்ல முடியாது. அப்படியொரு முயற்சியைச் செய்திருந்தால் இந்த நாவல் சிதைந்து வெறும் விரிவுரையாக போயிருக்கக் கூடும். ஆனால் விட்டல்ராவ் மிக நைச்சியமாக ஓவியங்களைப் பற்றிய தகவல்களைக் குறைத்து ஓவியர்களைப் பற்றிய நாவலாக எழுதியிருக்கிறார். அந்த ஓவியர்களின் வழியாக ஓவியங்களைப் பற்றிய ஒரு தொடக்கத்தை உருவாக்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

நான்கு இளம் ஓவியர்கள் சேர்ந்து ‘The four' என்ற ஓவியக் குழுவை ஆரம்பிக்கிறார்கள். அடுத்தடுத்து சில கண்காட்சிகளை நடத்துகிறார்கள். அதற்காக ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து அதை ஸ்டுடியோவாக மாற்றி படங்களை வரையத் துவங்குகிறார்கள். நான்கு பேரும் வெவ்வேறு மனநிலை கொண்ட ஓவியர்கள். அதற்கேற்றபடி அவர்களது ஓவியங்கள் அமைகின்றன. அந்தக் கண்காட்சிகளை நடத்துவதற்காக அவர்களின் அலைச்சல்கள், திட்டமிடல்கள், அதற்காக உதவக் கூடியவர்கள், பெண்களுடனான சகவாசம்- அசிங்கமான சகவாசம் இல்லை- காதல் மாதிரி, ஓவியங்களுக்கு நம் ஊரில் இருக்கும் வரவேற்பு என்பனதானவற்றை களமாக எடுத்துக் கொண்ட நாவல். நாவலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் உண்மையான மனிதர்கள்தானாம். நாவலாசிரியர் சிலருடைய பெயரை மாற்றியிருக்கிறார். சிலருடைய பெயர்கள் அப்படியே வருகின்றன. நாவலை முடித்துவிட்டு முன்னுரையை வாசித்த போதுதான் இந்தச் செய்தி தெரியும். ஓவியர் சந்துரு முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 

நாவலில் வரும் நடிகர் நிரஞ்சன் பழைய சந்திரலேகா படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ரஞ்சன்தானாம். மற்ற ஓவியர்கள் யாரென்று தெரிந்து கொள்வதில் முனைப்பாக இருக்கிறேன். இதைத் தெரிந்து கொள்வதிலும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்கிறது.

ஜோடிப்புகளும், சிரமப்படுத்தும் நடையும் இல்லாத இயல்பான நாவல் இது. அது பாட்டுக்கு நகர்கிறது.

நான்கு ஓவியர்களில் ஒருவரான சக்ரவர்த்திக்கு சில்வியா என்னும் ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண்ணுடன் காதல் வருகிறது. ஆனால் அவளுக்கு இவன் மீது உருகிப் பெருகும் காதல் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆளை மாற்றிவிடுகிறாள். ஆங்கிலோ இந்தியர்களே இப்படித்தான் என்கிற மாதிரியான சித்திரத்தை உருவாக்குவது நாவலின் குறை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்தச் சமூகத்தைப் பற்றிய துல்லியமான வர்ணிப்புகள் தமிழில் வேறு ஏதேனும் படைப்புகளில் உள்ளனவா என்று தெரியவில்லை. 

மூன்று கண்காட்சிகளுக்குப் பிறகும் மற்ற ஓவியர்கள் இந்தியாவிலேயேதான் வசிக்கிறார்கள். ஆனால் சக்ரவர்த்தி தனது உறவுக்காரர் ஒருவரின் வழியாக கனடா சென்றுவிடுகிறான். ஆரம்பத்தில் நான்குபேரில் அவன்தான் ideology உள்ள இளைஞன். வயது கூடக் கூட பொறுப்புகள் அதிகமாகி அவனது லட்சியங்கள் சிதைந்து கொண்டே வருகின்றன. கனடா சென்ற பிறகு ஓவியங்களைப் பற்றிய வியாபார நுணுக்கங்களைப் பேசத் தொடங்கும் வியாபாரியாகிறான்.

நாவலின் தொனியே அப்படித்தான். லட்சியங்களும் கொள்கைகளுமாக உக்கிரமாக வாழ்க்கையைத் தொடங்கும் இளைஞர்கள் போகப் போக சாமானியர்களாக எப்படி உருமாறுகிறார்கள் என்று நகர்கிறது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் லட்சியங்கள் சிதைக்கப்பட்டு யதார்த்தம் எப்படி வென்றது என்பதைத்தான் இந்த நாவலின் அடிநாதமாக பார்க்க முடிகிறது. எனக்குத் தெரிந்த ஓர் இளைஞர் தனது லட்சியங்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார். பணம் சம்பாதிப்பதற்கான சில வழிமுறைகள் அவருக்குத் தெரியும். ஆனால் சம்பாதிப்பதில்லை. சிரமப்படுகிறார். கேட்டால் ‘இந்த ஊரில் எப்படியாவது பணம் சம்பாதித்துவிடலாம். பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டால் மனம் சுகம் தேடத் தொடங்கிவிடும். இதுவே நல்லாருக்கே என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம். வாழ்க்கை சலனமில்லாமல் செல்லத் தொடங்கும் போது லட்சியங்கள் மூழ்கடிக்கப்பட்டுவிடும். பிறகு குடும்பம், கார், மனைவி, குழந்தை என்று நம்முடைய எதிர்பார்ப்புகளும் கனவுகளும் உருமாறிவிடும்’ என்பார். அவர் சொல்வது துல்லியமான உண்மை. லட்சியங்களை சிதறடிப்பதற்கு லெளகீக வாழ்க்கையின் சாதாரணத் தேடல்கள் போதுமானது. அப்படித்தான் குடும்பங்களும் சமூகமூம் ஒரு லட்சியவாதியைச் சாதாரண மனிதனாக்கி ஓடச் செய்கின்றன. 

இதைத்தான் விட்டல்ராவும் நாவலில் பேசுகிறார் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஓவியனையும் இந்த உலகம் பணத்தைத் தேடி நகரச் செய்கிறது. அவர்கள் இயல்பாக நகர்கிறார்கள். கலைப்படைப்பைவிடவும் அன்றாட வாழ்க்கை முக்கியமானதாக மாறிப் போகிறது. இதையெல்லாம் எந்தவிதமான துருத்தலும் திணித்தலும் இல்லாமல் சொல்லிக் கொண்டு போகிறது இந்நாவல். 

நாவலில் முக்கியமான இடங்கள் என்று நிறைய இடங்களைச் சுட்டிக் காட்ட முடியும். ஓவியங்கள் பற்றிய குறிப்புகள், நிறங்களின் தன்மைகள், படைப்புகளைப் பற்றிய அவதானிப்புகள், மனிதர்களின் விசித்திரமான மனக்குகைகள் என நிறைய இருக்கின்றன. உன்னிகிருஷ்ணன் என்னும் மலையாளி ஓவியனை இன்னொரு மலையாளி விமர்சகன் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறான். தமிழில் நவீன ஓவியங்களுக்கான இடம் என்பது பத்திரிக்கைகளில் காமெடியாகப் பார்க்கப்படுகிறது, இலக்கிய இதழ்களை முந்நூறு பேர்கள்தான் வாசிக்கிறார்கள் அது எப்பொழுது வேண்டுமானாலும் நின்று போகக் கூடிய வாய்ப்பிருக்கிறது உள்ளிட்ட விவகாரங்கள் கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. 

அதியற்புதமான நாவல் என்று சொல்ல முடியாது. ஆனால் தவிர்க்க முடியாத ஒரு நல்ல நாவல். இருநூறு பக்கங்கள் கூட இல்லை. புத்தகத்தை ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்.

விட்டல்ராவ் பெங்களூரில்தான் வசிக்கிறார். இதுவரை சந்தித்ததில்லை. ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன். இந்த நாவலைப் பற்றி விட்டல் ராவிடம் யாராவது பேச விரும்பினால் இணைந்து கொள்ளலாம்.