Mar 23, 2015

ஒரு மாலைப் பொழுது

கலாப்ரியா தம்பதி சமேதகராக காசி சென்று திரும்பியிருந்தார். பெங்களூரிலிருந்துதான் விமானம். திரும்பி வந்து பெங்களூரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போதுதான் அழைத்திருந்தார். அவருக்குக் கை கொடுத்தால் பாதி புண்ணியத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள். கப்பன் பூங்கா என் அலுவலகத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர்தான் இருக்கும். வெக்குடு வெக்குடு என நடந்தால் இருபது நிமிடங்கள்தான். நான்கரை மணிக்கெல்லாம் மேலாளரிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். ஒரு குழாமே இருந்தது. 

எழுத்தாளர் பாவண்ணன் வந்திருந்தார். அவரைப் பார்க்கும் போதே உற்சாகம் ஒட்டிக் கொள்ளும். அவரைப் போன்ற எளிமையான மனிதர்கள் வேறு யாரையாவது சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. தமிழின் சிறுகதைகளில் எந்தச் சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம். கன்னட இலக்கிய உலகம் பற்றி விரல் நுனியில் வைத்திருப்பார். தனது படைப்பாக்கத்தின் வழியாகவும் மொழியாக்கத்தின் வழியாகவும் தமிழில் அவரது  பங்களிப்பு பற்றி வாசிப்புப் பழக்கம் உள்ள அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கக் கூடும். சாதாரணமாகப் பேசுவார். முளைத்து மூன்று இலைவிடாத குளுவான்கள் எல்லாம் இந்த ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க இந்த மனிதர் மட்டும் ஏன் தளும்புவதே இல்லை என்று சந்தேகமாகவே இருக்கும். 

வழக்கமாக அவரோடு இருக்கும் திருஞான சம்பந்தமும் வந்திருந்தார். சம்பந்தமும் லேசுப்பட்ட ஆள் இல்லை. மத்திய அரசின் பாதுகாப்புத்துறையில் விஞ்ஞானி. விமான வடிவமைப்பில் இருக்கிறார். ஏரோ டயனமிக்ஸ் தவிர பிற எல்லாவற்றையும் பற்றி பேசக் கூடிய மனிதர். பயணம் செய்வதிலும் வாசிப்பிலும் மிகுந்த ஆர்வமுடையவர். காசியில் தனது பாதைகளைப் பற்றி கலாப்ரியா பேசிக் கொண்டிருந்த போது சம்பந்தம் தனது காசி, பீஹார் பயணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். காசியைப் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் தீராது என்பார்கள். அப்படித்தான் இருந்தது. அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்திலும் நான்கு கேள்விகளாவது கேட்பதற்கு மிச்சமிருந்தன.

மகாலிங்கமும் காசி சென்று திரும்பியிருந்தார். பெங்களூர்வாசி. மிகத் தீவிரமான வாசிப்பாளர். ஆனால் அவராக பேசவே மாட்டார். ஆனால் ஆரம்பித்துவிட்டால் அவரது ஆழம் தெரியும். மிகத் தெளிவாகப் பேசுவார். இப்படியான மனிதர்களுடன் ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் சந்திப்பு நிகழ்த்தினாலும் மிகுந்த நிறைவுடையதாக இருக்கிறது. காதுகளைத் திறந்து வைத்து அமர்ந்து கொண்டால் போதும்.  சில சொற்கள் உள்ளே விழும். அவை உள்ளுக்குள் நொதித்துக் கொண்டேயிருக்கின்றன. அவைதான் பெரும்பாலான சமயங்களில் சந்தோஷ வினையூக்கிகளாக இருக்கின்றன.

பரிதி பதிப்பகத்தின் இளம்பரிதியும் அவரது நண்பரும் சேலம் ஸ்ரீனிவாசனுடன் வந்திருந்தார்கள். பரிதி வகுப்பறை என்றவொரு சிற்றிதழ் நடத்துகிறார். அதைச் சிற்றிதழ் என்று சொல்ல முடியாது. பேரிதழ். ஒரு இதழின் விலை நூறு ரூபாய். ஒரு வருடச் சந்தா ஆயிரத்து இருநூறு ரூபாய். இவ்வளவு பெரிய விலையில் ஒரு இதழைக் கொண்டு வர வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பரிதி நிறையப் பேசிக் கொண்டிருந்தார்.

கிர்த்திகா தரனும், கவிஞர் ராமலஷ்மியும் வந்திருந்தார்கள். இப்படியாக ஒரு கூட்டம்.


இது எந்தவிதத்திலும் ஒருங்கிணைக்கப்படாத உரையாடல். கப்பன் பூங்காவின் மொட்டைப்பாறை வாகானதாக இருந்தது. செளகரியப்பட்ட இடங்களில் அமர்ந்து கொண்டு கண்டது கடியதை வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இப்படியான உரையாடல்கள் மனதுக்கு நிறைவு தருவனவாக இருக்கின்றன. பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு கிளி மரத்தின் கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று பேச்சை அதை நோக்கித் திருப்ப முடிந்தது. முறைப்படுத்தப்பட்ட உரையாடல்களில் அதெல்லாம் சாத்தியமில்லை. பேச்சாளர் எதைப் பற்றிப் பேசுகிறாரோ அதைத்தான் கவனிக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படியில்லை. எதை வேண்டுமானாலும் பேச முடிகிறது.

மிகப்பெரிய இந்த நகரத்தில் கப்பன் பூங்காவைத் தேர்ந்தெடுத்த அந்தக் கிளி உண்மையிலேயே அறிவாளியாகத்தான் இருக்க வேண்டும். அவ்வளவு பாதுகாப்பான இடம் அது. இந்த நகரத்தின் இரைச்சலிலிருந்தும் மனிதர்களின் குரூர கைகளிலிருந்தும் மிக எளிதாக தப்பித்து வாழ்வதற்கு தோதான இடம். எங்கள் வீட்டுக்கு முன்பாக நட்டு வைத்திருந்த செடியொன்று பூப்பெய்து இளம்பருவத்தில் நிற்கிறது. அந்த மரத்தில் குருவி கூடு கட்டியிருக்கிறது. அவ்வளவு அழகான வண்ணத்துடன் கூடிய குருவி இணை. முட்டையிட்டு குஞ்சும் பொறித்தாகிவிட்டது. தினமும் அதைப் பார்த்துவிட்டு அலுவலகத்துக்குக் கிளம்பும் போது ஏதோ இனம்புரியாத சந்தோஷம் கைகளைப் பற்றிக் கொள்ளும். இயந்திர நகரத்தில் ஒரு குருவிக்கான வாழ்விடத்தை உருவாக்கித் தருவதற்கான மரத்தை நட்டு வைத்திருக்கிறோம் என்பதான மகிழ்ச்சி அது. ஆனால் இன்னமும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. வீட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கான இடம் பார்த்தாகிவிட்டது. வந்தவர் குறித்துக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கும் இடம் அந்த மரத்துக்கு மிக அருகிலேயே இருக்கிறது. போர்வெல் எந்திரத்தைக் கொண்டு வந்து நிறுத்தி ஓட்டினால் சப்தத்திற்கு பயந்து குருவி ஓடிவிடும் என்கிறார்கள். குருவி முக்கியமா? தண்ணீர் முக்கியமா? - மிகப் பெரிய கேள்வி. ஆனால் மிகச் சாதாரணமாக முடிவெடுத்துவிடுவோம். இப்படியே துளித் துளியாக எல்லாவற்றையும் வேட்டையாடிவிட்டு ‘அவன் உலகத்தை அழிக்கிறான் இவன் உலகத்தை அழிக்கிறான்’ என்று அடுத்தவனை நோக்கி விரல் நீட்ட வேண்டியது. உனக்கு எப்படித் தேவையிருக்கிறதோ அப்படித்தான் எனக்கும் தேவையிருக்கிறது என்பான். அவனவனுக்கு அவனவன் பிரச்சினை முக்கியம்.

அந்தக் கிளி நினைவுகளை எங்கேயோ புரட்டிக் கொண்டு போய்விட்டது. ‘ஒரு படம் எடுங்க’என்று ராமலஷ்மியிடம் கேட்டுக் கொண்டேன். அவர் காமிரா கவிதாயினி. லென்ஸ் இல்லை என்றார். கிளியை மனதுக்குள் பதித்துக் கொண்டு வெளியே வரும் போது கிருஷ்ணகுமார் தான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் ஒரு மலையாள நாவல் பற்றி பேசிக் கொண்டிருந்தார். கிருஷ்ணகுமாரை வெகு காலமாகத் தெரியும். இதற்கு முன்பாக பெங்களூரில்தான் இருந்தார். சம்பளம் போதவில்லை என்று சவூதி அரேபியாவிற்குச் சென்றுவிட்டார். அங்கே காய்ந்து போய்விட்டார் போலிருக்கிறது. பெங்களூர் மாதிரி கண்கள் குளிர்வதேயில்லை என்று வாபஸ் ஆகிவிட்டார். எல்லோரும் கலைந்துவிட்ட பிறகு கிருஷ்ணகுமாரும் நானும் விக்டோரியா சிலையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். 1900களில் அமைக்கப்பட்ட சிலை. சிலையின் பக்கவாட்டில் தமிழ் கல்வெட்டு இருக்கும். அப்பொழுதெல்லாம் தமிழ்தான் கோலோச்சியிருக்கிறது. இப்பொழுதுதான் தமிழை அடித்து விரட்டுகிறார்கள்.

பேசிக் கொண்டு நடக்கத் துவங்கியிருந்தோம். பாவண்ணனும் சம்பந்தமும் எதிர்ப்பட்ட தேனீர்க்கடையில் நின்றிருந்தார்கள். மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் கசகசப்பை ஊட்டத் துவங்கியது. இனி யாராவது இந்த ஊருக்கு வருவதற்காகக் காத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். அப்பொழுது ஆட்டோக்காரன் பின்னாலிருந்து ஏதோ கெட்டவார்த்தையில் திட்டினான். அந்த வினாடியிலிருந்து நகரம் வழக்கம் போல தனது பற்சக்கரத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டது.

(இந்தப் படம் பார்ப்பதற்கு பந்தாவாக இருக்கிறது என்ற நினைப்பில் பயன்படுத்திக் கொண்டேன்)