Mar 25, 2015

சினிமாக்காரன் சகவாசம்

விவேகானந்தன் கிட்டத்தட்ட விவேகாவாக மாறுவதற்குள்ளாகவே சந்தித்துவிட்டேன்.

2000களின் தொடக்கத்தில் சென்னை வந்திருந்த போது ஒரு மிதப்பு இருந்தது. ‘நமது கவிதைகளைக் காட்டினால் போதும் பட வாய்ப்புகள் கொட்டத் துவங்கிவிடும்’ என்கிற அபத்தமான நம்பிக்கை. யாரை அணுக வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என சகட்டுமேனிக்குச் சந்தித்துக் கொண்டிருந்தேன். எங்கே சந்தித்தேன்? - வாசலில் போய் நிற்க வேண்டியது. வெகுநேரம் கழித்து ‘இப்போ பார்க்க முடியாது’ என்று யாராவது சொல்வார்கள். ‘என்னையே அவமானப்படுத்திட்டீங்களா? இவன் இல்லைன்னா இன்னொருத்தன்..போங்கடா டேய்’ என்று மனதுக்குள் கறுவியபடி அடுத்த அலுவலகத்துக்குச் சென்றுவிடுவதுதான் வாடிக்கை. இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. 

சென்னையில் எனது அறைத் தோழர்களுக்கு சினிமா வாசனையே கிடையாது. தாறுமாறாக உசுப்பேற்றியிருந்தார்கள். ரணகளம் ஆனதுதான் மிச்சம். ஆனால் அவர்களது உசுப்பேற்றலுக்கு தீனி போடும் விதமாக நானும் அவர்களை சொறிந்து விட்டிருந்தேன். அப்பொழுது சினிமாக்காரர்களின் முகவரிகள் நிரம்பிய புத்தகங்கள் நான்கைந்து கைவசம் இருந்தது. தி.நகர் கிளம்பினால் சிவக்குமார் வீட்டிலிருந்து இளையராஜா வீடு வரை. மாம்பலம் சென்றால் பா.விஜய் உள்ளிட்ட ஒரு பட்டியல். கோடம்பாக்கம் என்றால் சேரன் வீடு. மாலையில் அறைக்குத் திரும்பி நண்பர்களிடம் இன்று இன்னாரைப் பார்த்தேன் என்று பெருமையாகப் பீற்றிக் கொள்வேன். உண்மையில் இன்னாரது அலுவலகத்தையும் யாராவது ஒரு அல்லக்கையையும்தான் பார்த்திருப்பேன். ஆனால் பொய்யைக் கேட்டவுடன் அவர்களுக்கு உச்சி குளிர்ந்துவிடும். என்ன பேசினார் ஏது பேசினார் என்று விலாவாரியாகக் கேட்பார்கள். பொய் சொல்லவா தெரியாது? அடித்துவிட வேண்டியதுதான்.

இப்படி சகட்டுமேனிக்கு பட்டியல் போட்டு அலைந்து கொண்டிருந்த போதுதான் விவேகா அறிமுகம். அப்பொழுது அவரது பெயர் எந்த முகவரி புத்தகத்திலும் வந்திருக்கவில்லை. பிரபலமும் இல்லை. சுந்தர்.சியைப் பார்ப்பதற்காக வடபழனி சென்றிருந்தேன். ‘சார் வெளியூர்ல இருக்காரு’ என்றார். ‘அப்படின்னா மேடம் இருக்காங்களா?’என்று கேட்டிருக்க வேண்டும். திராணி இல்லை. ‘இந்த ஏரியாவில் வேற யார் இருக்காங்க?’என்றேன். அவருக்கு விவேகாவைத் தெரிந்திருந்தது. அவரது வீட்டுக்குச் செல்லும் வழியைச் சொல்லி அனுப்பி வைத்தார். விவேகாவும் அவருடைய நண்பரும் வடபழனியில் ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தார்கள். அவர்களே சமையல் செய்து கொண்டிருந்தார்கள். கதவைத் தட்டிய சப்தம் கேட்டு வந்து திறந்தவர்கள் என்னையும் நேராக சமையலறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். அடுப்புக் கரி படிந்திருந்த ஈயப்பாத்திரத்தில் ரஸம் கொதித்துக் கொண்டிருந்தது. ‘என்னடா இது...இவங்க இப்படி இருக்காங்க?’ என்று நினைத்துக் கொண்டேன். 

அந்தக் காலகட்டத்தில் பாடலாசிரியர்களுக்கிடையே மிகக் கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருந்தது. பா.விஜய் கொடி கட்டிக் கொண்டிருந்தார். அவரை எங்கள் கல்லூரியின் தமிழ் விழாவிற்காக அழைத்துப் பார்த்தோம். போய்வர மகிழ்வுந்து வேண்டும். அங்கே தங்கி இளைப்பாற ஒரு நட்சத்திர அறை வேண்டும் அவை போக ஐந்தாயிரம் பணம் வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கிற அளவுக்கு பிரபலமாகியிருந்தார். முத்துக்குமாரும் ஓரளவுக்கு இடம் பிடிக்க ஆரம்பித்திருந்தார். யுகபாரதி, சிநேகன், விவேகா போன்றவர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் அத்தனை பேரையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன். ஆனால் விவேகாவிடம் உரிமை எடுத்துக் கொள்ள முடிந்தது. மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியாது- ஆனால் விவேகா குடும்பப் பின்னணி மிக மிகச் சுமாரானது. கிராமத்துக் குடும்பம். பட்டப்படிப்பு முடிந்தவுடன் பாடல் எழுதுகிறேன் என்று சினிமாவுக்கு கிளம்பிவிட்டார். வந்தவுடனே வாய்ப்பு எதுவும் கிடைத்துவிடவில்லை. சென்னையில் வெறித்தனமாகத் திரிந்துதான் முதல் வாய்ப்பை வாங்கியிருக்கிறார். அப்பொழுதும் கூட ஆரம்பத்தில் பெரிய வருமானம் இருக்காது அல்லவா? அதனால்தான் அந்தக் கரிப்பிடித்த ஈயப்பாத்திரம்.

இதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அதில் அவருக்கு சங்கடம் எதுவும் இல்லை. தான் பெரிய ஆள் ஆன பிறகு  ‘நான் அப்படி கஷ்டப்பட்டேன் இப்படி கஷ்டப்பட்டேன்’ என்று சொல்வதில் சிலாகிக்க ஒன்றுமில்லை. ஆனால் தான் கஷ்டப்பட்டிருக்கும் காலத்திலேயே தனது கஷ்டங்களை புதியவர்களிடம் சங்கடமில்லாமல் பகிர்ந்து கொள்வதுதான் பெரிய விஷயம். அதற்கு ஒருவித மனோதைரியம் வேண்டும். விவேகாவிடம் அது இருந்தது. அதனாலேயே என்னவோ அவரோடு நெருங்கிக் கொண்டிருந்தேன். மிஸ்டு கால் கொடுத்தால் திரும்பவும் அழைக்கிற ஒரே சினிமாக்கார ஜீவனாக அவர் இருந்தார். அப்பொழுது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். கையில் பணம் வைத்திருக்க மாட்டேன். அதனால் கஞ்சப்பயலாக நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன். இப்பொழுது மட்டும் கஞ்சப்பயல் இல்லையா என்று கேட்கக் கூடாது. அந்தச் சமயத்தில் வறக்கஞ்சன். 

திடீரென்று விவேகா பற்றி எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. நேற்று ஒரு வேலை காரணமாக ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. பகல் நேர அரசுப் பேருந்து. ஈ, காக்கா இல்லை. வெறும் ஏழு பேரை ஏற்றிக் கொண்டு ஓசூரிலிருந்து வண்டி கிளம்பியது. இப்பொழுதெல்லாம் அரசுப் பேருந்துகளில் பாடல்கள் கேட்பதேயில்லை. வெறும் தகர டப்பாவாகத்தான் இருக்கின்றன. நல்லவேளையாக இந்தப் பேருந்து விதிவிலக்கு. ஓட்டுநருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தேன். நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். அவரது குடும்பம் குழந்தைகளைப் பற்றியெல்லாம் சொல்லிவிட்டு பாடல் சி.டியை மாற்றச் சொன்னார். பத்திருபது குறுந்தகடுகளை ஒரு பைக்குள் போட்டு வைத்திருந்தார். அதில் ஒன்று ‘விவேகா கலெக்‌ஷன்ஸ்’. ஆச்சரியமாக இருந்தது. பாடலாசிரியருக்கென்று தனிக் கலெக்‌ஷன்ஸ் தயாரிக்குமளவுக்கு பாடல்வரிகளை கவனிப்பவர்கள் இருக்கிறார்களா? அவராகவே பாடல்களைத் தேர்ந்தெடுத்து கடையில் பட்டியல் கொடுத்து பதிப்பித்துத் தரச் சொன்னாராம்.

நமக்குத் தெரிந்தவர்களைப் பற்றி இப்படி யாரோ ஒரு முகம் தெரியாதவர் பேசினால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? அப்படித்தான் இருந்தது. விவேகாவிடம் இதைச் சொன்னால் நிச்சயம் சந்தோஷப்படுவார். ஆனால் சொல்லவில்லை. ‘இதைச் சொல்வதால் என்ன குறைந்துவிடப் போகிறேன்?’ தெரியவில்லை.  பத்து வருடங்களுக்கு மேலாக அவரைத் தெரியும். அவரது அலைபேசி எண் கூட மனப்பாடமாகத் தெரியும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே உச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் அவரை வெளிப்படையாக பாராட்டியதாகவே நினைவில் இல்லை. நம்மிடம் நெருங்கிப் பழகுபவர்களை அவ்வப்போது நாம் பாராட்டிவிட வேண்டும். இப்பொழுதெல்லாம் பாராட்டுவது என்றால் காரண காரியத்திற்காக மட்டும்தானே செய்கிறோம்? அப்படி நாம் நினைக்கவில்லையென்றாலும் அடுத்தவன் சொல்வான். ‘ஏதோ காரியத்துக்கு அடி போடுகிறான்’ என்று.

பதினைந்து வருட காலத்தில் சினிமாவில் அவரது graph படு வேகமாக எகிறிவிட்டது. சிங்கம், உத்தமவில்லன் போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் கூட தனி ஆவர்த்தனம் செய்கிறார். சினிமா எத்தனையோ பேரை சுருட்டி எடுத்துச் சென்று கடலில் கலந்துவிடுகிறது. மீறித் தப்பிக்கும் சிலர்தான் ரோல்மாடலாக இருக்கிறார்கள். ‘பாரதிராஜா மாதிரி ஆகணும்’‘பாலச்சந்தர் மாதிரி ஆகணும்’ என்றுதான் வருகிறார்கள். எத்தனை பாரதிராஜாக்களும், பாலச்சந்தர்களும் இன்னமும் க்ளாப் அடித்துக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த சினிமா உலகத்துக்குத்தான் வெளிச்சம்.

விவேகாவைப் பார்த்து பயப்பட்டிருக்கிறேன். ஒருவேளை இந்தச் சினிமா உலகம் காலை வாரிவிட்டால் என்ன செய்வார் என்கிற பயம் அது. ஆனால் அவர் தெளிவாகத்தான் இருந்தார். மிகச் சாதாரண குடும்பச் சூழலிலிருந்து வந்து மிகத் தீவிரமான உழைப்பின் மூலமாகவே தனக்கான இடத்தை விவேகா பிடித்துவிட்டார். ஓரிரு மாதங்களுக்கு முன்பாகப் பேசிய போது கூட ‘ஒரு இடம் வாங்கி வீடு கட்டியிருக்கிறேன்...சம்பளம் மாதிரி வாடகை வந்துடுது மணி’ என்றார். அதில் அவருக்கு அப்படியொரு சந்தோஷம். இன்னமும் அதே மனிதராகத்தான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். ‘சினிமாவில் என்ன கியாரண்டி?’ என்று அவரிடம் கேட்டிருக்கிறேன். இந்தக் கேள்விக்கான பதில் எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் உழைப்பும் திறமையும் இருந்தால் எப்படியும் தம் கட்டிவிடலாம் என்பதற்கு விவேகா மாதிரியானவர்கள் உதாரணமாகத் தெரிகிறார்கள்.  சினிமா ஒரு மாய உலகம்தானே? தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். திறக்கவில்லையென்றாலும் தட்ட வேண்டும். ‘போங்கடா டேய்’ என்றால் அதுவும் ‘போடா டேய்’ என்று சொல்லிவிடும்.