Mar 21, 2015

எண்ணிக்கையில் அடங்காத வஸ்து

அன்புள்ள மணிகண்டன்,

2015 சென்னை  புத்தகக் காட்சியில் பயணி (பயணத்திற்கான முதல் தமிழ் மாத இதழ்) மற்றும் சின்ன நதி (சிறுவர்களுக்கான மாத இதழ்) ஆகிய இரண்டு இதழ்களோடும், நல்ல நிலம் பதிப்பகத்தின் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களோடும் நம்ம நிலம் பதிப்பகத்தின் சார்பாக முன்னெடுத்தோம். 

நிசப்தம் வலைதளத்தில் சின்ன நதி குறித்து நீங்கள் எழுதிய முன்வரைவை முன்வைத்து ஏராளமானவர்கள் எங்களோடு தொடர்புகொண்டார்கள். குறிப்பாக, தங்கள் குழந்தைகளின் மீதான அவர்களின் அக்கறையைப் புரிந்துகொள்ள முடிந்தது. மிக அமைதியாக இந்தச் செயலை செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி சொல்வது சம்பிரதாயமாக இருந்தாலும்....உங்களுக்கும் அவர்களுக்குமான பரஸ்பர நம்பிக்கையை உணரமுடிந்தது. உங்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பாக நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மிகுந்த வரவேற்பைப் பெற்ற பயணியும், சின்ன நதியும் தொடர்ந்து வெளி வந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில் வெகுதொலைவிலிருந்தும், பெருநகரங்களிலிருந்தும் சின்ன நதியின் சந்தாராராக இணைய விருப்பம் தெரிவித்து மின்னஞ்சலும், தொலைபேசி அழைப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. தங்களின் குழந்தைகளின் மேல் எப்பொழுதும் கவனமுள்ள பெற்றோர்களின் குரலைத் தொடர்ந்து கேட்க முடிந்தது.  “இது சின்ன நதி அலுவலகமா? உங்கள் புத்தகம் குறித்த நிசப்தம் வலைதளத்தில் அறிந்தோம்....” என்ற அவர்களின் பேராவல் எங்களை வியக்க வைத்தது. உடனே நிசப்தம் வலைதளத்தில் சங்கமித்தபோது, அன்புக்குரிய தோழர் வா.மணிகண்டன் சின்ன நதி சிறார் மாத இதழ் குறித்து ஒரு முன்வரைவை அளித்திருந்தார். 

சென்னை புத்தகக் காட்சியில் எங்கள் அரங்கிற்கு வருகை தந்தவர் அவர். தன்னுடைய குழந்தைக்காக இரண்டு பிரதிகளும், சந்தாவும் அளித்திருந்தார். அவருடைய சிபாரிசு அர்த்தமுள்ளதாகவே அமைந்திருந்ததால்தான் சின்ன நதிக்கான வரவேற்பு நிகழ்ந்திருக்கிறது.  

குழந்தைகளின் உலகம் அபூர்வமானது. அவர்களுக்கான சொல்லாடல்களை சாத்தியப்படுத்தி, வாசிப்பு நோக்கியும், வண்ணங்கள் தீட்டுதல் குறித்தும், விசாலமான அறிவுலகை உணரவைக்கும் பொருட்டு சின்ன நதியின் பயணம் பெருவுவகையோடு நீள்கிறது. யான் பெற்ற இன்பம் இவ்வையமெலாம் பெருக என்ற வாசகத்திற்கேற்ப வா.மணிகண்டனின் பெருந்தன்மையைப் பாராட்டுவது எங்கள் கடமை. அது வெறும் பாராட்டு நல்கும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல், குழந்தைகளின் மீதான பெற்றோர்களின் பொறுப்பைவிடவும், அக்கறையைத் தாண்டியும் அவர்கள் மீதான அன்பும் பரிவும், எல்லையற்று விரியும் அறிவுசார் மனப்பெருவெளியை நோக்கி நகரும் சின்ன நதி.

உங்களுக்கு இதழ் சரியாக வந்து சேர்கிறதா? அதில் ஏதேனும் இடர்பாடுகள் உள்ளனவா? உங்களை புத்தகத் திருவிழாவில் சந்தித்தேன். மெலிதான உடல்வாகுடன், சிகப்பாக இருந்தீர்கள். கண்ணாடி அணிந்திருந்ததாக ஞாபகம். கையில் சின்ன நதியை ஏந்தியபடி நம்பிக்கையோடு விடைபெற்றீர்கள். யார் அந்த மணிகண்டன் என்று எங்கள் நிறுவனமே உங்களை மனம்குவிந்து நன்றிப் பாராட்டுகிறது.

நன்றியுடன்,
சின்ன நதி, பயணி மாத இதழ் வெளியீடு
சென்னை.

எவ்வளவு மகிழ்ச்சியளிக்கும் கடிதம் இது!

அந்தக் குறிப்பினை எழுதும் போது சாதாரண மனநிலையில் இருந்தேன். ஓரளவுக்கு கவனம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படியான வரவேற்பைப் பெறும் என்றெல்லாம் நினைக்கவில்லை. சந்தோஷமாக இருக்கிறது. சின்னநதியின் இந்த மின்னஞ்சலைத் தவிர ஃபோனிலும் அழைத்துப் பேசினார்கள். கிட்டத்த்தட்ட அறுபது அல்லது எழுபது பேராவது சந்தா செலுத்தியிருப்பதாக பேசியவர் சொன்னார்.

சென்றவாரத்தில் இந்த இதழைப் பற்றி எழுதிய குறிப்பைப் பற்றி ஒரேயொருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கட்டுரையில் ஏதோ குறை இருப்பதாகவும் அதனால்தான் யாரும் அது குறித்துப் பேசவில்லை என்றும் நினைத்துக் கொண்டேன். ஆனால் இவ்வளவு பேர் விசாரித்து சந்தா கட்டியிருக்கிறார்கள். அத்தனையும் வெகு அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. அறக்கட்டளைக்கு பணம் அனுப்புகிறவர்களும் இப்படித்தான். அனுப்புவார்கள். ஆனால் யார் அனுப்பியது என்று தெரிவிப்பதில்லை. நேற்று கூட ஐந்தாயிரம் ரூபாய் வந்திருந்தது. ஒரு நல்ல மனிதர் அனுப்பியிருக்கிறார் என்று தெரியும். அதற்கு மேல் விவரங்கள் இல்லை.

இதையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. இந்த அமைதியை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் தெரியவில்லை.

ஆனால் இது போன்ற நிகழ்வுகள்தான் பக்குவத்தைக் கொண்டு வந்து சேர்க்கின்றன என்று நினைத்துக் கொள்வேன். நிசப்தம் தளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை இன்னமும் கணிசமாக உயர்த்துவதற்கு ஏதேனும் செய்யச் சொல்லி அவ்வப்போது சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். மனித மனம்தானே? எனக்கும் ஆசை துளிர்க்கத்தான் செய்யும். அவர்கள் சொல்வதும் சரிதான் என்று தோன்றும். யாரையாவது வம்பிழுத்தால் அல்லது சர்ச்சைக்குரியதாகவே எழுதிக் கொண்டிருந்தால் கவனம் பெற்றுவிடலாம்தான். ஆனால் அப்படி கிடைக்கும் கவனத்தினால் பெயரைப் பரவலாக்க முடியுமே தவிர எந்தக் காலத்திலும் மரியாதைக்குரிய நம்பிக்கையை பெற முடியாது என்பதை இதைப் போன்ற செயல்கள்தான் உணர்த்துகின்றன. இதை முழுமையாக உணர்ந்துதான் சொல்கிறேன்.

எல்லாவற்றையும் எண்களாகப் பார்த்துப் பார்த்து மனம் பழகிக் கொண்டது. சம்பளம் எவ்வளவு என்பதில் ஆரம்பித்து எவ்வளவு இட்லி சாப்பிட்டேன் என்பது வரை அத்தனையிலும் எண்களைத்தான் பார்க்கிறோம். ஆனால் எண்ணிக்கை தாண்டிய சிலவற்றினால்தான் இந்த உலகத்தோடு நாம் இறுகக் கட்டப்பட்டிருக்கிறோம். அன்பு, நம்பிக்கை என்பதெல்லாம் அப்படியான விஷயங்கள்தான். இங்கு உருவாகியிருக்கும் பரஸ்பர நம்பிக்கையை எந்த எண்ணிக்கையில் அளவிட முடியும்?  ‘இவன் சொன்னால் ஓரளவு சரியாக இருக்கும்’ என்கிற நம்பிக்கை அது. இல்லையா? வேறு எதைக்காட்டிலும் இந்த நம்பிக்கையை உருவாக்குவதுதான் மிக முக்கியமான காரியம். அதைத்தான் இந்த மின்னஞ்சலும் சுட்டிக்காட்டுகிறது.

சின்னநதியிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கும் நன்றி எனக்கு உரித்தானதன்று. ‘இது சரியான பாதைதான். இப்படியே போய்க் கொண்டிருக்கட்டும். எந்த ஆரவாரமுமில்லாமல் வாசிக்கிறோம். இவன் எந்த ஆரவாரமுமில்லாமலேயே எழுதிக் கொண்டிருக்கட்டும்’ என்று திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்குமான நன்றி.