Feb 2, 2015

என்ன வியர்த்து வடிகிறது?

கிருஷ்ணகிரி அருகில் சின்னக் கொத்தூர் என்ற கிராமம் இருக்கிறது. அந்த ஊரிலிருந்து ஐந்தாறு கிலோமீட்டர்கள் தாண்டிச் சென்றால் தீர்த்தம். இரண்டுமே குக்கிராமங்கள். இந்தப் பக்கம் நடந்து சென்றால் ஆந்திராவுக்குள் நுழைந்துவிடலாம். அந்தப் பக்கமாக நடந்து சென்றால் கர்நாடகாவுக்குள் நுழைந்துவிடலாம். எந்தப் பொடியனை அழைத்துப் பேசினாலும் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் வெளுத்து வாங்குகிறார்கள். ஆனால் செல்போனுக்கு சிக்னல் கிடைக்காத ஊர். அங்கிருக்கும் இரண்டு அரசு பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

ஒய்யல் என்ற அமைப்பினரோடு சென்றிருந்தேன். ஒய்யல் பெரிய அமைப்பெல்லாம் இல்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஜெயக்குமார், அரவிந்த், மூர்த்தி உள்ளிட்ட சிலர் சேர்ந்து ஆரம்பித்திருக்கிறார்கள். பெங்களூரில் சாப்ட்வேர் துறையில் இருக்கும் இளைஞர்கள். ஆரம்பத்தில் பேருந்து பிடித்து இந்த கிராமங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். பேருந்து என்றால் நேரடியாக சின்னக் கொத்தூருக்குச் செல்லாது. குருபரபள்ளி என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவோ- ஆட்டோக்காரன் வந்தால் அதிர்ஷ்டம்- அல்லது வேறு எப்படியாகிலும் சென்று வருவார்களாம். பிறகு பெங்களூரிலிருந்தே பைக்கில் சென்று வந்திருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத ஊர் அது. காலையில் பெங்களூரில் சாப்பிட்டுவிட்டுச் சென்றால் திரும்ப வந்து பெங்களூரில்தான் சாப்பாடு.

எதற்காகச் சென்று வருகிறார்கள் என்று சொல்லவில்லை பாருங்கள்- அந்தப் பள்ளிகளின் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள். குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலான வகுப்புகள் அவை. மாணவர்களோடு நிறுத்திக் கொள்வதில்லை பெற்றோர்களைச் சந்தித்து கல்வியின் அவசியம் பற்றி பேசுகிறார்கள். பெற்றோர்களைத் தேடி அவர்களின் இடங்களுக்கே சென்றுவிடுவார்களாம். இந்த வாரம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வது குறித்தான பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். அதில்தான் நானும் ஒட்டிக் கொண்டேன்.

ஒய்யல் அமைப்பினர் சற்று ஃபார்மலாக இருக்கிறார்களோ என்று தோன்றியது. முந்தின நாள் இரவே dress code பற்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். வேஷ்டி கட்டிச் செல்லலாம் என்றிருந்தேன். மின்னஞ்சலகைப் பார்த்துவிட்டு எதற்கு வம்பு என்று பேண்ட் சர்ட்டிலேயே வண்டி ஏறிக் கொண்டேன்.

இரண்டு பள்ளியிலும் தலா ஐம்பது பத்தாம் வகுப்பு மாணவர்கள் படிக்கிறார்கள். பொதுத் தேர்வுக்கு இன்னும் நாற்பது நாட்கள்தான் இருக்கின்றன என்பதால் எப்படி தயாராவது? தேர்வின் போது செய்ய வேண்டிய செயல்கள் என்ன? எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்தார்கள்.

இப்பொழுது ஒய்யல் குழு சற்று வளர்ந்திருக்கிறது. சுமார் பத்து பேர்கள் இருக்கிறார்கள் போலிருக்கிறது. இரண்டு குழுவாக பிரிந்துவிட்டார்கள். ஒரு குழுவினர் சின்னக் கொத்தூரிலும் இன்னொரு குழுவினர் தீர்த்தம் என்ற ஊரிலும் ஒரே சமயத்தில் வகுப்பை நடத்தினார்கள். நான் தீர்த்தம் குழுவினரோடு கலந்து கொண்டேன். அந்தப் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை எப்பொழுதோ வந்துவிட்டது. ஆனால் எந்தத் தேதியில் பரீட்சை ஆரம்பிக்கிறது என்பது கூடத் தெரியவில்லை. ஆனால் ‘கண்டாங்கி கண்டாங்கி’ பாடலை முழுமையாக பாடுகிறார்கள். என்ன இருந்தாலும் விஜய், காஜல் அகர்வால் அல்லவா? 

காஜல் இருக்கட்டும்.

ஒய்யல் அமைப்பினருக்கு என்ன வியர்த்து வடிகிறது? சனி, ஞாயிறுகளில் ஃபோரம் மாலில் ஏதாவது படம் பார்க்க வேண்டியதுதானே? அச்சுப்பிரதிகள், பவர்பாய்ண்ட் என்று மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆறு மணிக்கெல்லாம் பெங்களூரிலிருந்து ப்ரொஜக்டரும் கையுமாக கிளம்பிவிட்டார்கள். வாகனம் பள்ளி வளாகத்தை அடையும் வரையிலும் கூட ‘எப்படி வகுப்பெடுக்க வேண்டும், எதையெல்லாம் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்’ என்றும் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் ஒரு பெண் இடம் பெற்றிருந்தார். அந்தப் பெண்கள்தான் வகுப்பெடுத்தார்கள். இரண்டு மணி நேரம் அந்தக் குழந்தைகளிடம் தொடர்ந்து பேசுவது என்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. 

ஒய்யல் உண்மையிலேயே கவனிக்கத்தக்க அமைப்பு. ஐடி இளைஞர்கள் என்றால் ஒரு பிம்பம் இருக்கிறது அல்லவா? ஜீன்ஸ் பேண்ட்டும், டீ ஷர்ட்டுமாக காபி டேவில் அமர்ந்து கடலை போடுவார்கள், பைக்கில் பறப்பார்கள், நிறைய செலவு செய்வார்கள், சமூகம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாதவர்கள்- இப்படியெல்லாம் யாருமே இல்லை என்று சொல்லவில்லை. அப்படியும் இருக்கிறார்கள்தான். ஆனால அதற்கு முற்றும் எதிர்நிலையில் இந்தச் சமூகத்தில் இருந்து தாம் எடுத்துக் கொண்ட அல்லது எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களை ஏதாவதொருவிதத்தில் இந்தச் சமூகத்துக்கே திருப்பிச் செலுத்துபவர்களும் இருக்கிறார்கள். இதுதான் ஐடிவாலாக்கள் என்ற பிம்பத்தை அடித்து நொறுக்குபவர்கள் இவர்கள்தான்.

ஒய்யல் அப்படியானவர்களால் ஆனது. எந்த பிரதியுபகாரமும் பார்க்காமல் அவ்வப்போது அந்த கிராமங்களுக்குச் சென்று எதையாவது அந்த மாணவர்களிடம் பேசி வருகிறார்கள். ஆரம்பத்தில் பள்ளியில் இவர்களுக்கு மரியாதை எதுவும் இல்லையாம். தலைமையாசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் ஒருவிதமான ஒவ்வாமை. ‘இவர்கள் வந்து என்ன கிழிக்கப் போகிறார்கள்’ என்ற நினைப்பு. இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கிறது. பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் அதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. மாவட்ட கல்வி அதிகாரியிடம் நேரடியாகப் பேசி அனுமதி வாங்கி வைத்திருக்கிறார்கள். சென்ற ஆண்டு அந்தப் பள்ளி மாணவர்கள் நானூற்றைம்பது மதிப்பெண் வாங்கியதில் ஒய்யலின் பங்களிப்பை எந்தவிதத்திலும் மறுக்க முடியாது என நினைக்கிறேன்.

இப்படி மாணவர்களுக்கு வெறும் வகுப்பு எடுப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. அந்தப் பள்ளியில் வகுப்பறை அமைத்துத் தந்திருக்கிறார்கள். கழிவறை ஒன்று கட்டியிருக்கிறார்கள். ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் கொடுத்து வருகிறார்கள். அ,ஆ,இ,ஈ கூடத் தெரியாமல் பத்தாம் வகுப்பு வந்திருந்த மாணவருக்கு இந்த சிறப்பு ஆசிரியர்தான் தனிக்கவனம் எடுத்திருக்கிறார். இவை பள்ளி சார்ந்த செயல்பாடுகள்.

அதைத்தவிர சுற்றுவட்டாரத்தில் யுரேகா ட்யூஷன் செண்டர்கள் பத்து நடக்கின்றன. அதை ஒய்யல்தான் நடத்துகிறது. ஒவ்வொரு தனிப்பயிற்சி மையத்திலும் இரண்டு ஆசிரியர்கள். இந்த பத்து மையத்தையும் ஒருங்கிணைப்பதற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர். இவர்கள் அத்தனை பேருக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள். தவிர அவ்வப்போது இந்த வகுப்புகள் எப்படி நடக்கின்றன என்று சோதனை செய்கிறார்கள். தனிப்பயிற்சி வகுப்புக்கான பாடத்திட்டங்களை வேறொரு அமைப்பிடமிருந்து வாங்கிக் கொள்கிறார்கள். பாடம் என்றால் வழக்கமாக வகுப்பில் படிக்கும் பாடங்கள் இல்லை. பாடத்திற்கு முற்றிலும் வேறான,  ‘ஆளுமை உருவாக்க’ பாடங்கள். கணிதம், ஆங்கிலம், அறிவியல் போன்ற பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். ஒய்யல் போன்ற அமைப்பு இல்லையென்றால் இந்த ஊர் மாணவர்களுக்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ள சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.