Jan 29, 2015

பத்தோடு பதினொன்று

யாராவது ‘ரொம்ப எளிமையான எழுத்து’ என்று குறையாகச் சொன்னால் மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். அப்படி இருக்கத்தான் மனம் விரும்புகிறது. எளிமையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே. குறையொன்றுமில்லை.

எல்லா இடங்களிலுமே கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கிறது என்ற நம்பிக்கையிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஏதோவொருவிதத்தில் unique என்று தாராளமாகச் சொல்லலாம். அந்த தனித்தன்மையை, கற்றுக் கொள்வதற்கான செய்தியை, எளிய விஷயங்களில் நிறைந்திருக்கும் செறிவுத் தன்மையை சாதாரண  மொழியில் எழுதுகிற வரம் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்றுதான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்-

மற்றபடி, இவன் எழுதுவதுதான் இலக்கியம் என்று சொல்லிக் கொள்வதில் விருப்பமேயில்லை. 

இவனுக்கு மட்டும்தான் எல்லாமும் தெரியும் என்றோ அல்லது இவன் சொல்வதுதான் இறுதி என்றோ சொல்லிக் கொள்ளப் போவதில்லை. பத்தோடு பதினொன்று. அத்தோடு இவனும் ஒன்று.

நமது பாதையை முடிவு செய்ய வேண்டியது நாம்தான். முடிவு செய்த பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறோமா என்பதுதான் பிரச்சினை. சமீபமாக உரையாடுபவர்களின் வார்த்தைகளிலிருந்து சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. 

                                                          ***   
                                                              (1)
இன்றைய நிசப்தம் கட்டுரையைப் படித்ததும், நேற்று மசால் தோசை வீட்டுக்கு வந்ததுமே இந்தக் கடிதத்தை எழுதக் காரணம். 

மசால் தோசை புத்தகத்தின் முதல் கட்டுரையின் முதல் பத்தி படித்ததிலிருந்தே சிறுகதையா? இல்லை கட்டுரையா? என்ற சந்தேகத்துடனேயே ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்தேன். அவ்வப்போது பின்னட்டையைத் திருப்பிப் பார்த்து "இல்லையே, கட்டுரை தொகுப்புன்னு தானே போட்ருக்கு" என்று எனக்கு நானே உறுதிபடுத்திக்கொண்டேன். சுவாரசியமான சிறுகதையைப் போலிருந்தது ஒவ்வொரு கட்டுரையும். ஒன்றை படித்துவிட்டு உடனடியாக அடுத்ததுக்குச் செல்லவிடாமல் செய்கின்றனர் கட்டுரையில் வாழும் மனிதர்கள். "ஏன் இப்படிச் சுடுத்தண்ணிய கையில ஊத்திக்கிட்ட மாதிரி அவசர அவசரமா ஒவ்வொரு கட்டுரையையும் முடிச்சிருக்காரு" என்றும் தோன்றியது. "தீபாவளி தாத்தாவும், அனுமந்தாவும்" இன்னும் கொஞ்ச நேரம் கட்டுரையில் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்ல என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

முகநூல் வாயிலாகவே நிறைய எழுத்தாளர்களைத் தெரிந்துகொண்டேன், அதன் ஊடாகவே இலக்கியத்தையும் அறிமுகம் செய்துக்கொண்டேன். நிசப்த்தத்தைத் தொடர்ந்து ஒரு வருடமாக வாசித்து வருகிறேன். அது எனக்கு நிறைய ஆளுமைகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. "கவிதையை வாசித்தல்" மூலம் கவிதை படைப்புகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். "வாழை" அமைப்பில் என்னை இணைத்துக்கொண்டிருக்கிறேன்.

கல்வி குறித்து நீங்கள் தொடர்ந்து எழுதி வருவது, முன்னாள் வாத்தியார் என்ற வகையில் எனக்கு நிறையவே நம்பிக்கை தருகிறது. தனியொரு ஆளா எல்லாத்தையும் மாத்திரலாம் என்ற அற்ப நம்பிக்கையில் தான் கல்லூரி மாணவர்களுக்கு வாத்தியாராக வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதில்லை எனபது சீக்கிரமே புரிந்தது. "மது அருந்துதல்" என்பது ஆண்மையின் ஓர் அடையாளமாகவே மாணவர்களால் பார்க்கப்படுகிறது. மது அருந்துதல் தவறில்லை என்பதும் ஆணித்தரமாக அவர்கள் நெஞ்சில் பதிந்துள்ளது. நிறையப் பணம் கட்டி சேர்வதாலோ என்னவோ, இயல்பிலேயே கல்லூரியின் மீதும், ஆசிரியர்களின் மீதும் அவர்களுக்கு விளங்க முடியாத ஒரு வெறுப்பு முதல் நாளிலிருந்தே வேர்விட்டு விடுகிறது. ஆகையால் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வோ , அல்லது சமூகப் பிரச்சனை தொடர்பான விவாதமோ எல்லாமுமே தேவையில்லாத பாடமாகவே பார்க்கப்படுகிறது. வாத்தியார்களுக்கு வகுப்பறை சுதந்திரம் என்பது மிகவும் குறைந்து வருகிறது. வகுப்பில் எடுக்க வேண்டிய பாடங்களைத் தாண்டி என்ன பேச வேண்டுமென்பதையும் வாத்தியார்களுக்குச் சம்பளம் கொடுப்பவர்களே தீர்மானிக்கின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் வாத்தியார்களுக்குச் சம்பளம் கொடுக்கும் நிலையிலிருப்பவர் கல்விகென்று ஒரு இலக்கணம் மற்றும் “Teaching Template” வைத்திருப்பர். அதைத் தாண்டின புது முயற்சிகள் எதுவும் இன்றைய சூழலில் எடுபடாது. பசங்க பாவம் சார், அது மட்டும் தான் ultimate.

கணிதம்தான் கணினி அறிவியலின் அடிப்படை என்று சொல்ல வேண்டியது யாருடைய கடமை? கணக்கு உனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது என்ற நிலையில் நீ ஒரு சிறந்த மென்பொருளையும் உருவாக்க முடியாது என்ற அடிப்படை புரியும்போது பெரும்பாலான மாணவர்கள் இறுதியாண்டில் கை நிறைய அரியர்களுடன் விழித்துக்கொண்டிருக்கின்றனர்.

நிறைய எழுத்தாளர்களுடைய படைப்புகளை வாசித்து வருகிறேன். ஒருவேளை அவர்கள் இருக்கும் ஓர் இடத்தில் நானும் இருக்க நேர்ந்தால், அவர்களிடம் சென்று பேச நிறையவே தயக்கம் இருக்கும். ஆனால் அந்தத் தயக்கம் உங்களிடத்தில் எனக்குத் துளியும் கிடையாது. ஓடிவந்து உங்கள் தோள் தட்டுவேன், கை குலுக்குவேன், என்னை அறிமுகம் செய்து கொள்வேன். "நம்மள மாதிரி ஒருத்தரு" என்று உணர வைக்கின்றன உங்கள் எழுத்துக்கள். 

அத்தனைக்கும் வாழ்த்துகள்.

ரிஷிகேஷ் ராகவேந்திரன்,
ராசிபுரம் 
                                                                           ***
                                                                           (2)


வணக்கம் மணிகண்டன்..

நிசப்தம் வாசகி நான். உங்கள் மசால்தோசைக்கு என்னுடைய  வாழ்த்துக்கள்.

நாம் கடந்து செல்பவர்களும், நம்மை கடந்து செல்பவர்களும் கவனத்துக்கு உரியவர்கள் அல்லர் என்கிற இந்த காலக்கட்டத்தில் சின்னச் சின்ன நிகழ்வுகளையும், சந்தித்த மனிதர்களையும் தனக்கான சரித்திர நினைவுகளாக்கி இருக்கியிருக்கிறீர்கள். அடுத்த கணங்கள் நடப்பது தெரியாதவரைக்கும் வாழ்வில் சுவராசியங்களுக்கு குறைவிருப்பதில்லை.

சிந்தனையின் அழுத்தத்தில் ஒரு பதிவு, மன நெகிழ்வுக்கு ஒன்று, சிரிப்புடன்  ஒன்று  மாறி மாறி வரும் கட்டுரை தொடர்ச்சிகள் இது.

சல்மான்கான் என்ற கட்டுரை- பொறுப்பற்ற தந்தை, விவேகமற்ற தாய், விதி விளையாடிய குழந்தை. இதைப்போல எத்தனை, எத்தனை குழந்தைகள்? அவர்களுக்கான  தீர்வாக எதை வைப்பது?

கூர் நகங்கள் சூழ் உலகு- தொலைந்த குழந்தைப் பற்றி விவரம் தெரிந்த பிறகு எழுதி இருக்கக் கூடாதா என்று மனம் வதை பட்டது...அந்தக் குழந்தைக்கு என்னவாயிற்று?

பச்சைக் காதலன்- .ஒரு ஏழு வருடங்கள் பெங்களுருவில்  வாழும்  வாய்ப்பு கிடைத்தது. ஊர் முழுவதும் குளிரரூட்டம் செய்யப்பட்டதைப்போல ஒரு சூழல் நிலவும். இன்று கான்கிரீட்  காடுகளாகக்  காட்சி அளிக்கிறது. அனுபவித்தவர்களுக்கு இக்கட்டுரையின் தாக்கம் புரியும்...

தர்ம அடி,பூனைப் பூட்டான் ஆகிய கட்டுரைகளில் நிறையச் சிரித்தேன்(சிரித்தோம்- குடும்பத்துடன்) எத்தனை எத்தனங்கள்? 

சலனம், ஈரம் தேடும் நாவுகள், சதை தேடும் விரல்கள், வப்புஸ், மசால்தோசை, எம்.ஜி.ஆர் பாடிக்கொண்டு இருந்தார் ஆகிய கட்டுரைகள் மனிதர்களுக்குள் மனிதம் தேடும் சின்ன அலைப்புறுதல்.

கார்த்திக்கால் ஆன உலகம்- சில பேரின் நினைவுகள்/ மறைவு பல பேரின் வாழ்க்கையை பணயமாகக் கேட்கிறது. மனிதனை விட்டு மனிதன் என்றும் வெளி வருவதில்லை.மீண்டவர்கள் மட்டும்  வாழ்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு கட்டுரையும், ஒவ்வொரு மனிதனை, ஆசிரியரை, அவர்களை நோக்கும் நம் பார்வையை என சிந்தனையை அகலப் படுத்துகிறது....

இதைத்தான் சொல்லப் போகிறேன்,  இதுதான்  நான் சொல்ல நினைத்தது, இதற்கான தீர்வு இது  என்கிற எந்த விதமான நகாசுகளும் இல்லாத தெளிவான எழுத்து, உணர்வுகள் மட்டும் என்னுடையது; மற்றவை படிப்பவர்களின் சிந்தனைக்கு என்பதை சொல்லாத பதிவுகள்.

இன்னும்  நீங்கள் கடக்க நினைக்கும் தூரங்களுக்கு வாழ்த்துக்கள் மணி.
                                                         
சித்ரா.
                                                                         ***
                                                                           (3)

நட்பின் மணிகண்டனுக்கு,

வணக்கம்,வாழ்த்துக்கள்.

பொங்கலுக்கு பிறகே தங்களின் மசால் தோசையை சுவைக்க முடிந்தது.

பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பொறியாளர் தலைமையாசிரியரையும், தமிழாசிரியரையும் நினைவு கூர்ந்து நன்றி சொல்லும் இடத்திலேயே நீங்கள் நின்று விடுகிறீர்கள்

எங்காவது, யாருக்காவது ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்து விட முடியாதா என்கிற மனத் தேடல் உங்களது படைப்புகளில் வெளிப்படுகிறது. அதுதான் நிசப்தம் அறக்கட்டளையின் விதையாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

பெங்களூர்வாசிகள், சிறுபான்மையினர், பால்யகாலத் தோழர்கள் என சாமான்ய மக்களை உங்கள் எழுத்துக் கேமரா படம் பிடிக்கிறது. இன்னமும் மொட்டைத் தாத்தாக்களும், வெளியில் தெரியாத மூங்கில்  விதை நம்மாழ்வார்களும், சிமெண்ட் மூட்டை அனுமந்தாக்களும், வெளிநாட்டு வாழ் வெங்கிடு அண்ணாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சில இடங்களில், அட நம்மை போலவே யோசிக்கிறாரே என்ற எண்ண ஒற்றுமையும் ஏற்படுகிறது. அது அதிகமான இணக்கத்தை தங்களுடன் ஏற்படுத்தி விடுகிறது.

அமத்தா மூலம் ஒவ்வொருவரின் அப்பாயிகளையும், ஆத்தாக்களையும் கண்முன் நிற்க வைத்து விடுகிறீர்கள். ரொம்ப கெட்ட பையன் சார் இந்த மணி என்பதை பூனை பூட்டான் உணர்த்தியது. தண்ணீர் இல்லா உலகை நினைக்கும் போது நா வறண்டு போனது.

எல்லாவற்றையும் படித்தேன். சில இடங்களில் சிரிப்பையும், பல இடங்களில் சோகத்தையும் அப்பிக்கொண்டு நின்றேன். ஓரிரு அச்சுப்பிழையை தவிர்த்து இருக்கலாம்.

எல்லாமும் அருமை. வாழ்த்துக்கள்.

அடுத்த படைப்பின் எதிர் பார்ப்புகளோடு...
கருணாநிதி கண்ணையன்.