Jan 28, 2015

மேட்ச் வெச்சுக்கலாமா?

எட்டாம் வகுப்பு படிக்கும் போது வேட்டைகாரன்புதூர் பையன்களோடு கிரிக்கெட் பந்தயம் வைத்துக் கொண்டோம். அந்தக் குழுவில் தனசேகர் என்பவன் எனக்கு வகுப்புத் தோழன். அவனிடம் ‘மேட்ச் வெச்சுக்கலாமா?’ என்று நான்தான் வாயைக் கொடுத்தேன். அவர்கள் ஊர் ஊராகச் சென்று பணம் கட்டி ஆடுவார்கள். அநேகமாக நூறு ரூபாய் இருக்கும். வெல்லும் அணிக்கு நூறு ரூபாய் கிடைக்கும்.

பந்தயம் பற்றி பேசியவுடன் ‘எங்க ஊருக்கு வர்றீங்களா?’ என்றான். 

‘ஹோம் பிட்ச்தான் சரிப்பட்டு வரும்...எங்க ஊருக்கு வந்துடுங்க’ என்று சொல்லியிருந்தேன். பேச்சுவார்த்தைதான் நான். மற்றபடி அணி சேர்ப்பது, பேட்டிங் வரிசை, பந்துவீச்சாளர் தேர்வு போன்றவற்றையெல்லாம் கேப்டன் பார்த்துக் கொள்வார். எல்லோருக்கும் சமமான பங்களிப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால் தனியாகப் பிரிந்து போய் புது அணியை உருவாக்கிவிடுவார்கள். ஆனால் தலையே போனாலும் கேப்டன் தான் முதலாக களமிறங்குவார். அவர்தான் நிறைய ஓவர்கள்கள் பந்துவீசுவார் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே. 

அப்படித்தான் நடக்கும். 

தனசேகர் முரட்டு ஆள். முயல், காடை என்று இஷ்டத்துக்கு வேட்டையாடுவான். ஒரு முறை முயல் வேட்டைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். பொட்டல் காடு அது. தனசேகரின் நாய் ஒன்று மோப்பம் பிடித்துக் கொடுத்துவிடும். மோப்பம் பிடிப்பதோடு சரி. ஒதுங்கிக் கொள்ளும். பெரிய வங்காக பறித்து அமுக்குவான். அவன் ஓட்டத்திற்கு என்னால் பக்கத்தில் கூடச் செல்ல முடியாது. பனைமர நிழல் பார்த்து ஒதுங்கிக் கொள்வேன். பிடித்து வந்த முயலை அந்த காட்டிலேயே அரிந்து, கழுவி, மிளகுபடி தூவி தீயில் வாட்டி நல்ல சதைப்பகுதியாகத் தருவான். விருந்தாளிக்கான உபசரிப்பு அது. கால்வாசி முயலைத்தான் என்னால் சாப்பிட முடியும். அதுவே அதீத காரமாக இருக்கும். ஆனால் முக்கால் முயலையும் மூக்கில் நீரொழுக முடித்துவிட்டு ஏப்பம் விடுவான். அதே பொட்டல்காட்டில் தெளுவும் கிடைக்கும். வாங்கிக் குடித்துவிட்டு மணிக்கணக்கில் கதை அடித்துக் கொண்டிருப்போம். அவனுக்கு எப்படி அத்தனை கதைகள் தெரியும் என்று தெரியாது. வாத்தியார்- டீச்சர் கதையிலிருந்து கொங்குவேளாளக்கவுண்டர்- வேட்டுவக்கவுண்டருக்குமிடையிலான சண்டை வரைக்கும் சொல்லிக் கொண்டிருப்பான். 

இப்பொழுது கிரிக்கெட் பந்தயத்திற்கு வந்துவிடுகிறேன்.

வேட்டைகாரன்புதூர் அணி வருகிறது என்பதால் கேப்டன் சதீஷ் எங்களையெல்லாம் சாமி கும்பிட்டுவிட்டு வரச் சொல்லியிருந்தார் அதேசமயம் ஆளுக்கு பத்து ரூபாய் வீட்டிலிருந்து வாங்கி வர வேண்டும். வென்றால் வேட்டைகாரன்புதூர்க்காரர்கள் கொடுக்கும் நூறு ரூபாயும் சேர்த்து இருநூறு ரூபாய்க்கு நல்லதாக மட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம். எங்களிடம் நல்ல மட்டை எதுவும் இல்லை. தோற்றால் நாமம்தான்.

ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வேட்டைகாரன்புதூர் பையன்கள் வந்து இறங்கியிருந்தார்கள். எப்படியும் ஏழெட்டு கிலோமீட்டர் இருக்கும். சைக்கிள் மிதித்து வந்த களைப்பிலேயே தோற்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையிருந்தது. அதெல்லாம் எங்கள் நினைப்புதான். குத்துக்கல் மாதிரி நின்றார்கள். அவர்கள் நின்ற நிலையைப் பார்த்த போது ஊரின் பெயருக்கு ஏற்றமாதிரியே வேட்டையாடிவிடுவார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால் என்ன இருந்தாலும் ‘ஹோம்பிட்ச்’ அல்லவா? அவர்களுக்கு நெளிவு சுளிவு தெரியாது என்ற நம்பிக்கையிருந்தது. 

டாஸ் சுண்டினார்கள். நினைத்தபடியே நடந்தது. எங்கள் கேப்டன் வென்றார். நாங்கள்தான் முதல் பேட்டிங். என்னைத்தான் முதலில் இறக்குவான் என்றுதான் நினைத்திருந்தேன். என்ன இருந்தாலும் இந்த அணியை அழைத்து வந்தவன் என்கிற மரியாதைக்காக அதைச் செய்வான் என்று நினைத்தேன். கிராதகன். தானே முதலில் இறங்கினான். ஆனால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. ஒவ்வொரு ஓவரிலும் இரண்டு மூன்று பேராக விழுந்தார்கள். வெறித்தனமாக பந்து வீசினார்கள். கரட்டடிபாளையத்தின் மானத்தை கொஞ்சம் கொஞ்சமாக வேட்டைகாரன்புதூர்க்காரர்களின் மிதிவண்டி கேரியரில் ஏற்றிக் கொண்டிருந்தோம்.

எட்டாவதாக இறங்கி இரண்டு ஓட்டங்கள் எடுத்தேன். அவர்கள் வீசிய வீச்சுக்கு அதுவே பெரிய விஷயம். Guard வாங்கவெல்லாம் வசதியில்லாத காலம் அது. கொஞ்சம் பிசகினாலும் குந்த வைத்து அமர வைத்திருப்பார்கள். சட்டைப்பைக்குள் இருந்த பத்து ரூபாய் கதறிக் கொண்டிருந்தது. ஏழாவது ஓவரில் இருபத்தி சொச்சம் ஓட்டங்களுக்கு மொத்தமாகக் காலியாகிவிட்டோம். தனசேகருக்கு பெருமை தாங்க முடியவில்லை. 

‘இந்த பிட்ச்சுக்கு ஸ்பின் தான் எடுபடும்’ என்று கேப்டனிடம் பேசினேன். நம்பிக் கொண்டான். என்னையே முதலில் பந்து வீச அழைத்தான். தலையைச் சுற்றி வீசுவேன். என்னிடமிருக்கும் கெட்ட கிரகமெல்லாம் பந்து வழியாகச் சென்று மட்டையாளரை முடித்துவிடும் என்கிற நம்பிக்கை அது. முதல் இரண்டு பந்தும் ஆறு அடித்தார்கள். ரிட்டையர்ட் ஹர்ட் வாங்கச் சொல்லி கேப்டன் கதறுகிறான். வேறு வழியே இல்லை. வாங்கிக் கொண்டு பவுண்டரி கோட்டில் நின்று கொண்டேன். அதன் பிறகும் அந்த மட்டையாளனுக்கு என்ன கடுப்போ தெரியவில்லை. இரண்டு பந்துகளை என் பக்கமாகவே அடித்தான். கால்களுக்கிடையில் கோட்டைவிட்டேன். அவ்வளவுதான். ஒன்றரை ஓவரில் முடித்துவிட்டு நூறு ரூபாயை வாங்கிக் கொண்டார்கள். அவர்களிடம் நல்ல பேட் எல்லாம் இருந்தது. போகும் போது ராஜா பிஸ்கட் பேக்கரியில் கேக்கும், சோடாவும் குடித்துவிட்டுப் போவதாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

எங்களுக்கு வயிறெரிந்தது.

அதன் பிறகு ஜீவா பட நாயகனைப் போல என்னை கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்க ஆரம்பித்தார்கள். வெளியூருக்குச் செல்வதையெல்லாம் ரகசியமாக வைத்துக் கொண்டார்கள். தெரிந்தால் ஒட்டிக் கொள்வேனாம். படுபாவிகள்.  நானும் விலகிவிட்டேன். பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு என்று காரணங்களால் படிக்கச் சொல்லி வீட்டில் டார்ச்சர் கொடுத்தார்கள். இப்படியே விளையாட்டுக்கும் எனக்கும் காததூரம் ஆகிவிட்டது. இடையில் ஒரு சமயம் பங்காளி சச்சு எனக்கு கை கொடுப்பதாக நினைத்து தனது ஹாக்கி அணியில் சேர்த்துக் கொண்டான். குனிந்து கொண்டே ஓடியதில் இடுப்பு வலி வந்ததுதான் மிச்சம். இடையில் சிபி என்றொருவன் காலிலேயே ஒரு கொத்து கொத்தினான். ‘போங்கடா நீங்களும் உங்க ஹாக்கியும்’ என்று ஒதுங்கிக் கொண்டேன். வெகுநாட்கள் கழித்து தெரியாத்தனமாக கல்லூரியின் கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக்குச் சென்று மானம் கெட்டது ஞாபகமிருக்கிறது. அதை தனியொரு கதையாக எழுதலாம். 

இப்பொழுது எதற்கு இந்த விளையாட்டுக் கதை?

அறக்கட்டளை வழியாக பள்ளிகளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுப்பதாகச் யோசித்திருந்தோம் அல்லவா? முதல் பள்ளியாக திரேசாள் முதனிலைப்பள்ளிக்கு கொடுத்தாகிவிட்டது. அரசு உதவி பெறும் பள்ளி இது. இருநூற்றி சொச்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். மிகச் சிறப்பான நிர்வாகம் என்று அக்கம்பக்கத்தில் சொல்கிறார்கள். பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து முதன் முதலாக இந்திய அணிக்கு ஒரு கபடி வீராங்கனை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் இந்தப் பள்ளியில் படித்தவர்தான். சரியான பள்ளிக்குத்தான் கொடுக்கிறோம். பத்தாயிரம் ரூபாய்க்கான சாதனங்கள். இனி அடுத்தடுத்து பத்து பள்ளிகளுக்குக் கொடுத்துவிட வேண்டும். 

பள்ளி நிர்வாகத்தினருக்கு மிகுந்த சந்தோஷம். பள்ளிகளில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பது மிக அவசியமான செயல் என்று நினைக்கிறேன். நூற்றியிருபது கோடி மக்கள் இருக்கும் இங்கிருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்காவிட்டாலும் கிடக்கிறது. குறைந்தபட்சம் எல்லோருக்குமே விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது என்ற நிலையாவது உருவாக்கப்பட வேண்டும். நாற்பது வயதில் சர்க்கரையும், ரத்த அழுத்தம் வருவதற்கு விளையாட்டில்லாத வாழ்க்கை முறையும் மிக முக்கியமான காரணம். கிராமப்புற பள்ளிகளில் விளையாட்டு மீதான ஆர்வத்ததைத் தூண்டுவதற்காக சிறு துரும்பைக் கிள்ளிப் போடுகிறோம். அவ்வளவுதான்.கரும்பலகையின் வலது பக்கத்தில் எழுதியிருப்பதைப் பார்க்காமல் இடது பக்கத்தில் இருக்கும் பட்டியலை மட்டும் பார்க்கவும். மீறி வலது பக்கம் பார்த்தால் உங்கள் தலைக்கேறும் கடுப்புக்கு கம்பெனி நிர்வாகம் பொறுப்பேற்காது. 

As a serious note- நன்கொடையாளர் என்ற சொல் நிசப்தம்.காம் என்ற தளத்தின் வாசகர்களுக்குத்தான் பொருந்தும். தெரியாத்தனமாக என் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம். இந்த புல் வெள்ளையும் சுள்ளையுமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. அனைத்து நெற்பயிர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி.