Jan 4, 2015

பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா?

தேனியில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். சவரியப்ப உடையார் மேல்நிலைப்பள்ளி. தமிழ் மீடியம்தான். அரசு உதவி பெறும் பள்ளி. தேனி மாவட்டத்தில் உள்ள முக்கியமான பள்ளிகளில் அதுவும் ஒன்று. ப்ளஸ் டூ மட்டுமே கிட்டத்தட்ட எந்நூறு பேர் எழுதுகிறார்களாம். அவ்வளவு பெரிய மாணவக் கூட்டத்தினரிடம் பொதுவான தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை ஒரு தனியார் பொறியியல் கல்லூரி நடத்தியது. அந்தக் கல்லூரி சார்பில் அழைத்திருந்தார்கள். பொதுவான தலைப்பில் என்னைப் பேசச் சொல்லிவிட்டு அதன் பிறகு ஒவ்வொரு பாடம் குறித்தும் வெவ்வேறு ஆசிரியர்கள் பேசினார்கள்.

மாணவர்களிடம் - அதுவும் தமிழ் மாணவர்களிடம் பேசுவது கையைப் பிடித்து நாடி பார்ப்பது போல. கல்வியின் தரத்திலிருந்து மாணவர்களின் மனநிலை வரை நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும். 

ஒரு மணி நேரம் பேசினேன். ‘நீங்கள் ஒரு மணி நேரம் பேசுங்கள்’ என்று ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் வரை மேடைத்தமிழில் நன்றாக புழங்கிக் கொண்டிருந்தேன். கோவை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் மாநில அளவிலான பரிசு பெற்ற அனுபவம் உண்டு. சேலத்தில் நடந்த விசுவின் அரட்டை அரங்கத்தில் பேசி கடைசியில் வட்டத்திற்குள் எல்லாம் வந்தேன். ஆனால் அதன்பிறகு ஹைதராபாத்திலும், பெங்களூரிலும் இருந்த பத்தாண்டு காலம் மேடை ஏறுவதற்கான வாய்ப்பே வரவில்லை. மேடையில் பேசுவதும் கூட எழுதுவதைப் போலத்தான். இரண்டிலுமே தொடர்ச்சியின் கண்ணி விட்டுப் போனால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்குவது போலத்தான். கடந்த ஆறேழு மாதங்களாகத்தான் யாராவது தொடர்ந்து பேச அழைக்கிறார்கள். வெகுகாலத்திற்கு பிறகு மேடையில் பேசிய போது நடுக்கத்தை உணர்ந்தேன், இன்னமும் பழைய ஃபார்முக்கு வரவில்லையென்றாலும் திருப்தியாக இருக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நிறையக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். 

தேனி மாணவன் ஒருவன் அவரது கல்லூரியில் படிக்கிறானாம். ஓரிரு மாதத்திற்கு முன்பாக சக மாணவனொருவனை அடித்து நொறுக்கிவிட்டான். ‘என்ன பிரச்சினை?’ என்றால் அது ‘மயிர் பெறாத பிரச்சினை’ என்றார். உண்மையில் அதுதான் பிரச்சினை. அடி வாங்கிய மாணவனுக்கு தலைமுடி மிக நன்றாக இருக்குமாம். அதில் இவனுக்கு வயிற்றெரிச்சல். ‘வெட்டிவிட்டு வா’ என்றிருக்கிறான். அவன் கண்டுகொள்ளவில்லை. தூள் கிளப்பிவிட்டான். 

‘என்ன செஞ்சீங்க?’ என்றேன். இப்பொழுதெல்லாம் பொறியியல் கல்லூரிகளிலேயே மாணவர்களை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது. அதை வெளிப்படையாகச் சொல்லாமல் நாசூக்காகச் சொன்னார். புரிந்து கொண்டேன். பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட பொறியியல் கல்லூரிகளில் அடிக்கமாட்டார்கள். அதன் பெயரே Professional colleges. ஆனால் இங்கு எத்தனை பொறியியல் கல்லூரிகள் கல்லூரி ப்ரொபஷனலாக இருக்கின்றன?  திருப்பூர் பனியன் கம்பெனிகளில் வேலைக்கு ஆள் பிடித்துக் கொடுப்பதற்கு முகவர்கள் இருப்பார்கள். புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தர்மபுரி ஆகிய இடங்களிலிருந்து வலைவிரித்து பிடித்து வருவார்கள். இப்பொழுது அதற்கு சிறிதும் குறைவில்லாத வேலையை பொறியியல் கல்லூரிகள் செய்து வருகின்றன. அக்டோபர், நவம்பரிலிருந்து மாணவர்களைப் பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இந்த ஆள்பிடித்தல் ஒரு மிகப்பெரிய கறுப்புச் சந்தை. வெளியுலகுக்கு அவ்வளவாக பரிச்சயமில்லாத சந்தை. உள்ளூர் அரசியல்வாதியை தாஜா செய்வதிலிருந்து தலைமையாசிரியர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதிலிருந்து எல்லா வேலையையும் செய்கிறார்கள். ப்ளஸ் டூவில் தேர்ச்சியடைந்திருந்தால் போதும். ஆசிரியர்களின் வழியாகவோ அல்லது வேறு ஆட்களின் வழியாகவோ வளைத்துப் பிடித்து அமுக்கிவிடுகிறார்கள். தென் தமிழ்நாட்டில் ஊறிக் கிடக்கும் சாதிவெறியும் இந்தச் சந்தைக்கு எண்ணெய் ஊற்றுகிறது. ‘உள்ளூர் சாதிக்காரனுகளோடு சேர்ந்து எம்பையன் படிக்க வேண்டாம்’ என்று நினைக்கும் பெற்றோர்கள் மலிந்து கிடக்கிறார்கள். அதனால் அந்த மாதிரியான பெற்றோர்களை எளிதில் சமரசம் செய்துவிடுகிறார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு ஆசிரியரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ‘கூட்டல் கணக்கு பெருக்கல் வகுத்தல் தெரியாலே ப்ளஸ் டூ வந்துடுறானுக....பத்தாம் வகுப்பிலும் எப்படியோ பாஸாக்கி விட்டுடுறாங்க’ என்றார். அது உண்மைதான். அடிப்படையான கணக்கு கூடத் தெரியாமல் ப்ளஸ் டூ முடித்துவிடுகிறார்கள். அவர்களை பொறியியல் கல்லூரிகள் ஆள் கிடைத்தால் போதும் என்று சேர்த்துக் கொள்கிறார்கள். நான்கு வருடங்கள் கழித்து ‘பி.ஈ முடிச்சுட்டு வேலையே இல்லாமல் இருக்கிறான்’ என்று புலம்புகிறார்கள். ஏதாவதொரு நிறுவனத்தில் ஹெச்.ஆரிடம் பேசிப் பார்க்க வேண்டுமே. அந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. ‘தமிழ்நாட்டில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி’ என்று பேச ஆரம்பித்தாலே தலை தெறிக்க ஓடிவிடுகிறார்கள். அந்த லட்சணத்தில்தான் நம் பொறியியல் கல்லூரிகள், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள் என்று தரமிருக்கிறது.

ஏன் அப்படியிருக்கிறது என்றால் இதுதான் காரணம். தொழிலதிபர்கள் கல்லூரி ஆரம்பித்து கல்வித்தந்தை ஆகிவிடுகிறார்கள். இந்தவருடம் முதலீடு செய்தால் அடுத்த வருடம் எவ்வளவு கோடி வருமானம் என்றுதான் கணக்குப் போடுகிறார்கள். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்ருக்கு நாற்பதாயிரம் சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக எம்.ஈ முடித்து வரும் ஒருவருக்கு பதினைந்தாயிரம் கொடுத்தால் போதும் என்று யோசிக்கிறார்கள். தகுதியிருக்கிறதோ இல்லையோ மாணவர்களைப் பிடித்து வாருங்கள் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடுகிறார்கள். கல்லூரி ஆசிரியர்கள் வளர்ச்சியடையாத மாவட்டங்களை நோக்கி ஓடுகிறார்கள். 

முன்பெல்லாம் மலையாள மாணவர்களைத்தான் குறி வைப்பார்கள். இப்பொழுது அங்கும் பொறியியல் கல்லூரிகளைத் திறந்துவிட்டார்கள். அதனால் தமிழ்நாட்டுக் கல்வித் தந்தைகளுக்கு வேறு வழியே இல்லை. தமிழ்நாட்டு மாணவர்களைத்தான் பிடித்தாக வேண்டிய நிலைமை.

பின் தங்கிய மாவட்டங்களின் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் சமரசம் செய்வதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்குகிறார்கள். எல்லாவிதமான செயல்களையும் செய்து மாணவர்களைப் பிடித்து வருகிறார்கள். அவனுக்கு அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை என்பதுதான் நிலைமையாக இருக்கிறது. தமிழகத்தில் மூன்றரை லட்சம் பொறியாளர்கள் படித்தால் அறுபத்தைந்து சதவீதத்திற்கும் மேலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்த நாறோடு சேரும் பூக்களுக்கும் வேலை கிடைப்பதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். அதனால் வீட்டுக்கு ஒரு பொறியாளர் வேலை இல்லாமல் இருக்கும் நிலைமை வேகமாகிக் கொண்டு வருகிறது. இதையெல்லாம் கவனிக்காமல் விட்டுவிட்டு ‘பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது’ என்று பேசுவது மடத்தனம்.