Jan 2, 2015

துளி அசைத்துப் பார்க்கலாம்

அரவிந்தனுக்கு ஐந்து முடிந்து ஆறு வயதாகிறது. 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தவன். எல்லாவிதத்திலும் பிற குழந்தைகளைப் போலவேதான் இருக்கிறான். ஆனால் வலது கையை அசைப்பதில்லை. பிறந்ததிலிருந்தே அப்படித்தான். அந்தக் கையின் மூட்டில் ஏதோ ஒரு பிரச்சினை. கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்திருக்கிறார்கள். இதுவரைக்கும் நான்கு அறுவை சிகிச்சைகளை முடித்திருக்கிறார்கள். அது எலும்புகளுக்கான சிறப்பு மருத்துவமனை. கை கால் முறிந்தாலும் விபத்து என்றாலும் அங்கேதான் தூக்கிச் செல்வார்கள். இன்னமும் மூன்று அறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டு போலிருக்கிறது. ஒன்று கட்டை விரலை அசைப்பதற்கு, மற்றொன்று மற்ற விரல்களை அசைப்பதற்கு. இவை தவிர இன்னொரு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அரவிந்தன் யு.கே.ஜி படித்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது இடது கையினால் எழுதுகிறான்.

உதவி கேட்டிருந்தார்கள். 

அரவிந்தனின் குடும்பத்தை அழைத்துப் பேசினேன். அவனது அப்பா போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியாளராக இருக்கிறார். Apprentice.பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பெரிய வருமானம் எதுவும் இல்லை. ஏற்கனவே இரண்டு மூன்று லட்சங்கள் செலவாகியிருக்கிறது. இனி அடுத்ததடுத்த சிகிச்சைகளுக்கு வழியில்லை என்றார்கள். கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் வரைக்கும் ஆகும் போலிருக்கிறது. அரவிந்தனின் அம்மாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் உள்ளிட்ட சிலர் உதவுததாகச் சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று சரியாகத் தெரியவில்லை என்றார்.

‘வேறு யாராவது உதவுகிறார்களா?’ என்றேன். நான்கைந்து பேர் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். எல்லோருமே இரண்டாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் வரை தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றார். எப்படியும் தேவையான பணத்தை புரட்ட முடியாது. இருந்த நகையெல்லாம் ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது. 

அரவிந்தன் வீட்டிற்கு ஒரே குழந்தை. ஆறு வயதுக் குழந்தை. இன்னமும் எவ்வளவோ காலம் வாழ்க்கை இருக்கிறது. கொஞ்சம் உதவினால் அவனது வலது கை செயல்பட்டுவிடும் என்றால் உதவுவதில் தப்பொன்றும் இல்லை.

பரசுராமன் என்பவர்தான் அரவிந்தன் மற்றும் அவனது குடும்பம் பற்றிய விவரங்களை அனுப்பியிருந்தார். ஈரோட்டில் வசிக்கிறார். பரசுராமனை இதுவரை நேரில் பார்த்ததில்லை. அவர் மீது நம்பிக்கை இல்லையென்று அர்த்தமில்லை- இருந்தாலும் முழுமையாகத் தெளிவடைவதற்காக ஈரோட்டு நண்பர் தாமோதர் சந்துருவை அழைத்து ‘அண்ணா ஒரு ஹெல்ப் கேட்டிருக்காங்க...நீங்க ஒரு தடவை நேரில் போய்விட்டு வர முடியுமா?’ என்று முகவரியை அனுப்பி வைத்திருந்தேன். அவர் தகவல்களை சரிபார்த்துவிட்டு உறுதிப்படுத்தினார். 
                                                         

      (இரண்டாவது படம் சந்துரு எடுத்து அனுப்பி வைத்தது)

இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் கழித்துத்தான் அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. பணமாகக் கொடுப்பதைவிடவும் கங்கா மருத்துவமனையில் அரவிந்தனின் கணக்கில் நேரடியாக செலுத்திவிடலாம் என்றிருக்கிறேன். மீதம் தேவைப்படும் தொகையை மட்டும் அவர்கள் கட்டினால் போதும். புத்தகக் கண்காட்சி முடிந்தவுடன் இதைச் செய்துவிடலாம்.

சில நாட்களுக்கு முன்பு பேசிய ஒருவர் ‘முகம் தெரியாத யாரோ ஒருவருக்கு உதவுவதற்கு பதிலாக முகம் தெரிந்தவர்களுக்கு உதவலாம் அல்லவா?’ என்றார். எனக்கு அதில் சம்மதமில்லை. முகம் தெரிந்தவர்களுக்கு உதவக் கூடாது என்று அர்த்தமில்லை. ஆனால் இப்படி யாரென்றே தெரியாத- தகுதியானவர்களுக்கு உதவுவதுதான் சரியான செயலாக இருக்க முடியும். இந்த உலகத்தின் மீது அவர்களுக்கு ஒரு பிடிப்பு வரும். யோசித்துப் பாருங்கள். ‘இந்த நாட்டுல பத்து பைசா தர்றதுக்கு ஆளில்லை’ என்றுதானே பெரும்பாலானவர்களின் எண்ணம் இருக்கிறது. அது எவ்வளவு எதிர்மறையான எண்ணம்? அதைத் துளியாவது அசைத்துப் பார்க்கலாம்.

அதுமட்டுமில்லை- இப்படி லட்சக்கணக்கில் தருபவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா? ஃபோனில் கூட பேசியிராதவர்கள்தான் அதிகம். முகம் தெரிந்தவர்களுக்கு கொடுத்துவிடலாம் என்று நினைத்தால் கேத்தரினும், ராஜேஷூம் இன்னும் பலரும் இவ்வளவு பெரிய தொகையை தத்தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்துவிடலாம் அல்லவா? யாரென்றே தெரியாதவர்களுக்கு உதவுவதற்குத்தானே நிசப்தம் அறக்கட்டளைக்குக் கொடுக்கிறார்கள்? அதை வாங்கி எனக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுப்பது எவ்வளவு பெரிய மோசடி?

நேற்றுதான் முகேஷூம் அவரது மனைவியும் அழைத்திருந்தார்கள். அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று வருகிறார்களாம். மெதுவாக நடக்கிறாரார். இன்னமும் கொஞ்சம் வலி இருக்கிறது என்றார். முகேஷின் மனைவி தைரியமானவர் என்பதை அவர் பேச்சிலேயே உணர்ந்து கொள்ள முடியும். தைரியமானவராக இல்லையென்றால் ஒற்றை மனுஷியாக இவ்வளவு பெரிய சுமையைத் தாங்குவது கஷ்டம். இன்றிலிருந்து திரும்பவும் வேலைக்குச் செல்கிறார். முகேஷ்தான் உடைந்து போனார். ‘வேற ஏதாவது உதவி வேண்டுமா?’ என்றேன். ‘இதுவே போதும்...எங்கிருந்து வர்றீங்கன்னே தெரியாம.......’என்று சொல்லும் போது அவருக்கு அழுகை வந்துவிட்டது. அழுகையின் வழியாகவே ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லிவிட்டு தனது மனைவியிடம் ஃபோனைக் கொடுத்துவிட்டார். மிகுந்த சந்தோஷமாக உணர்ந்தேன். கடவுள்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். அந்தக் கடவுள்களின் அன்பையும் கருணையையும் தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லும் தபால்காரனாக இருக்கவே விரும்புகிறேன்- கடைசி வரைக்கும்.

அரவிந்தனுக்கு யாராவது உதவ விரும்பினால் தெரியப்படுத்தவும். இப்போதைக்கு அறக்கட்டளையின் கணக்கில் பணம் இருக்கிறது. அதிலிருந்து கொடுத்துவிடலாம். அரவிந்தனுக்கு என்று அனுப்பப்படும் பணம் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படும். அவனைப் போன்ற வேறு யாருக்காவது தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். முகேஷூக்கென்று வந்த தொகையில் ஒரு லட்சத்தைத்தான் அவருக்குக் கொடுத்தோம். மீதமான தொகை இப்பொழுது அரவிந்தனுக்குப் பயன்படுகிறது. அரவிந்தனுக்கென்று கொடுக்கும் பணம் வேறு யாருக்கேனும் பயன்படும். அன்பின் சங்கிலித் தொடர் இது. 

வங்கிக் கணக்கு விவரம்:
Account Number: 05520200007042
Account Holder Name: Nisaptham Trust
Account Type: Current
Bank : Bank Of Baroda
State : Tamil Nadu
District : Erode
Branch : Nambiyur 
IFSC Code : BARB0NAMBIY (5th character is zero)
Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code)
City : Nambiyur