Jan 19, 2015

என்ன சொல்லித் தருவது?

‘நர்சரி பள்ளிகள் ஏன் இவ்வளவு பணம் கறக்கிறார்கள்?’ இப்படி ஒரு கேள்வியோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதில்லை. குழந்தைகளைக் காட்டினால் நம்மிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கறக்க முடியும். குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் நம்மிடம் ஒரு பயம் கலந்த அவநம்பிக்கை உண்டு. ‘ஒருவேளை நம் பையன் மட்டும் பின் தங்கிவிட்டால் என்ன ஆகும்?’ என்ற நினைப்பு வரும் போது தலையை அடமானம் வைத்தாவது கேட்கிற பணத்தைக் கொடுத்துவிடுவோம். நமக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் கண்டுகொள்ளாமல் விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் குழந்தைகளுக்கு என்றால் விடமாட்டோம். இது ஒரு பொதுவான சைக்காலஜி. பயன்படுத்தத் தெரிந்தவர்கள் நம்மிடமிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக மகனுக்கு ஒரு பொம்மை லேப்டாப் வாங்கிக் கொடுத்திருந்தோம். ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் அது. ஒரு நெம்பரை அழுத்தினால் ஒரு எழுத்தும் அதற்கான உச்சரிப்பும் வரும். அதே போல எண்களும் திரையில் தோன்றி அந்த எண்ணை எப்படி உச்சரிப்பது என்று சொல்லித் தரும். இரண்டரை வயது பையனுக்கு அது அவசியமே இல்லை. ஆனாலும் ஒரு ஆசை. அதை ஊருக்குத் தூக்கிச் சென்றிருந்தான். வீட்டிற்கு அருகில் குடியிருப்பவர்கள் பெரிய வசதியெல்லாம் இல்லை. அவர் மட்டும்தான் சம்பாதிக்கிறார். மாதம் ஏழாயிரம் ரூபாய் என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார். இதே போன்ற லேப்டாப்பை தனது மகனுக்கு வாங்கி வந்திருந்தார். அவருக்கு இது மிகப்பெரிய செலவு. ஆனால் தன் மகனும் கற்றுக் கொள்ளட்டும் என்கிற ஆசைதான்.

இதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? 

மகி ஐந்தாம் வகுப்பு வந்தவுடன் எப்படியாவது சரளா பிர்லா அகாடமி மாதிரியான பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்று வெகு நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை அந்தப் பள்ளிக்கு ஃபோன் செய்து கூட விசாரித்திருக்கிறேன். ஐந்தாம் வகுப்புக்கு கிட்டத்தட்ட எட்டேகால் லட்சம் ரூபாய் ஃபீஸ் வரும் என்றார்கள். ‘சரியாக சிக்னல் கிடைக்கவில்லை’ என்று துண்டித்துவிட்டு அதன் பிறகு அதைப் பற்றி நினைக்கவேயில்லை. நமக்கு என்ன சாத்தியமோ அதைத்தானே செய்ய முடியும்? ஆனால் குழந்தைகளுக்காக முயற்சித்துப் பார்ப்போம்.

புத்தகக் கண்காட்சியில் ‘குழந்தைகளுக்கான புத்தகம் என்ன இருக்கிறது?’ என்ற கேள்வியை கேட்டவர்கள் நிறையப் பேர். குழந்தைகளுக்கான புத்தகங்களை விற்கும் பல நிறுவனங்கள் அரங்குகளை அமைத்திருந்தார்கள். ஒன்றிரண்டு நிறுவனங்களின் அரங்குகளில் இருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். புத்தகத்தை திறந்து வைத்து Demo காட்டத் தொடங்கிவிட்டார்கள்.  

‘சாப்பாடு சாப்பிடுகிறேன்’ என்பதை எப்படிச் சொல்வீர்கள் என்றார். இது தெரியாதா எனக்கு! 

'I am eating rice'. தெனாவெட்டாகச் சொன்னேன்.

அட்டகாசம் என்று பாராட்டினார். 

‘பிஸ்கட் சாப்பிடுகிறேன்’ என்பதை எப்படிச் சொல்வீர்கள் என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். கோபம் வராமல் இருக்குமா? 

பற்களைக் கடித்துக் கொண்டு ‘I am eating biscuit' என்று சொல்லிவிட்டு அட்டகாசம் என்று சொல்வார் என்பதற்காகக் காத்திருந்தேன். ஆனால் அது சரியான சொல் இல்லையாம்.

பிஸ்கட்டுக்கு nibble என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றார்- கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துத் தின்பது. பிஸ்கெட்டுக்கு nibble என்ற வார்த்தைதான் சரி என்று தெரிந்திருந்தால் silence.com என்ற தளத்தைத் திறந்து ஆங்கிலத்தில் எழுதியிருக்கமாட்டேனா? என் ஆங்கில அறிவில் கொள்ளிக்கட்டையைத்தான் செருக வேண்டும்.

இப்படியே நிறையச் சொற்களைக் கேட்டார். தொண்ணூற்றொன்பது சதவீதம் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. ஆங்கிலம் மட்டுமில்லை- கணக்கு, தர்க்க அறிவு, வரலாறு என நிறையக் கேள்விகளில் திணறினேன். 

‘பார்த்தீங்களா உங்களுக்குத் தெரியல...ஆனா இதையெல்லாம் எங்க புத்தகம் வழியா உங்க குழந்தைக்கு இதையெல்லாம் சொல்லித் தரலாம்’ என்று கொக்கி போட்டுவிட்டார். மனம் அலைபாயத் தொடங்கிவிட்டது. வாங்கிவிடுவேன் போலிருந்தது.

‘என்ன விலை சார் இது?’ என்று பம்மினேன்.

‘முப்பத்தெட்டாயிரம் ரூபாய்...’ என்று குண்டைப் போட்டார். முப்பத்தெட்டாயிரமா? ‘ஆனால் EMI வசதி இருக்கிறது சார்’ என்றார்.

பெங்களூர் எண்ணைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். எப்படியாவது அந்தச் சமயத்தில் தப்பித்தாக வேண்டியிருந்தது.

பொறியியல் படித்துக் கொண்டிருந்த போது எம்.பி.ஏ தேர்வுக்கு நுழைவுத் தேர்வு எழுதச் சொன்னார்கள். GRE, TOEFL போன்ற தேர்வுகளுக்கு தயார் செய்து அமெரிக்காவில் படிக்கச் சொன்னார்கள். என் பூலவாக்குத் தெரியாதா? பயிற்சி வகுப்புக்குச் சேர்கிறேன் என்ற பெயரில் சேலம் ஜெயப்பிரகாஷ் காந்திக்கு இரண்டாயிரம் ரூபாய் தண்டம் அழுததுதான் மிச்சம். அவர் அப்பொழுதுதான் வளர்ந்து கொண்டிருந்தார். சிறு நூலகம் ஒன்றை வைத்திருந்தார். பணத்தைக் கட்டிவிட்டு அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான நேரம் ஈயோட்டிக் கொண்டுதான் இருப்பார். இப்பொழுதுதான் பெரிய ஆளாகிவிட்டார். கல்லூரிகளின் கூட்டங்களில் கலந்து கொள்ள ஐம்பதாயிரம் ரூபாய் கேட்கிறாராம். அவரது நூலகத்தில் இருந்து புத்தகத்தை எடுத்து ஒரு நாளைக்கு மூன்று வார்த்தைகள் எழுதி மனனம் செய்வேன். ‘அய்யோ இங்கிலீஷ் இவ்வளவு கஷ்டமா?’ என்று ஒரே ஓட்டம்தான்.

இதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் பையனுக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று தோன்றும். அவனுக்கு ஆங்கிலம், கணக்கு அறிவு முக்கியம். பொது அறிவின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். கவனிக்கும் திறனை வளர்க்க வேண்டும். இரண்டு மூன்று விளையாட்டுக்களைப் பழக்க வேண்டும். இன்னும் என்னென்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன்.

வழக்கமாக சென்னை வரும் போதெல்லாம் அபிராமபுரத்தில் இருக்கும் பெரியவரைச் சந்திப்பது வழக்கம். ஓய்வு பெற்ற மருத்துவர் அவர். இந்த முறை சந்திக்க முடியவில்லை. பெங்களூர் வந்த பிறகு ஃபோனில் அழைத்துப் பேசினேன். பையனுக்கு சொல்லித் தர விரும்பும் பாடங்களைப் பற்றி பேசினேன். பேசி முடித்த பிறகு அரை மணி நேரம் கழித்து திரும்பவும் அழைத்தார். யோசித்திருப்பார் போலிருக்கிறது. 

‘குழந்தைகளுக்கு என்னென்ன பாடங்களை சொல்லித் தருவது என்று குழம்ப வேண்டியதில்லை. ஆரம்பத்தில் குழந்தைகளை கவனிக்க வைக்கிறது மட்டும்தான் ரொம்ப முக்கியம். கதைகளைச் சொல்வதன் வழியாக இந்தப் பழக்கத்தை வளர்த்துவிட முடியும். அதன் பிறகு அவர்கள் கற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை மட்டும் நாம் உருவாக்கிக் கொடுத்தால் போதும். அவர்களாகவே நிறையக் கற்றுக் கொள்வார்கள். பெற்றோராக இருந்து நாம் சொல்லித் தர வேண்டியது பாடங்களைத் தவிர நிறைய இருக்கின்றன. பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது, சக மனிதர்களுடன் பழகுவது- இந்தக் காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் தனித்த தீவுகளாக இருக்கிறார்கள், சமூக மற்றும் தனிமனித ஒழுக்கங்கள்- இப்படி எவ்வளவோ இருக்கின்றன. நாம்தான் இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு படிப்பை மட்டும் கட்டிக் கொண்டு மாரடிக்கிறோம். இதையெல்லாம் சொல்லித் தருவதற்கு தனியாக எதையும் செய்ய வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் போதும். செல்போன், லேப்டாப் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தையை அழைத்துக் கொண்டு மொட்டைமாடிக்கோ அல்லது வாசலுக்கோ சென்றுவிடுங்கள். அவர்களுக்கு என்ன சொல்லித் தர வேண்டியிருக்கிறது என்பது தானாக புலப்படும்’ என்றார். 

வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. மகனுக்கு தினமும் கதை சொல்கிறேன். அவனோடு பேசுகிறேன். ஆனால் இதையெல்லாம் கவனச் சிதறல் இல்லாமல் செய்கிறேன் என்று சொல்ல முடியாது. இடையில் ஃபோன் வரும். வீட்டில் இருப்பவர்களுடன் பேசுவேன். ஏதாவது சிதறல் இருக்கும். இனி அதை மாற்றிக் கொள்ள வேண்டும். நமக்காக இருபத்து மூன்றரை மணி நேரங்களை எடுத்துக் கொள்ளலாம். நம்மை நம்பிப் பிறந்த ஜீவனுக்காக வெறும் அரை மணி நேரம் ஒதுக்கலாம். பையனுக்கு குளித்துவிடுகிறேன், சாப்பாடு ஊட்டுகிறேன் என்பதையெல்லாம் இந்த அரை மணி நேரத்தின் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. வெறும் பேச்சு மட்டும்தான் இருக்க வேண்டும். நாம் பேசலாம் அல்லது குழந்தை பேசலாம். அதுதான் கணக்கு.