Jan 16, 2015

அமைச்சர்கள் கனிவானவர்கள்

ராஜாஜியின் மனைவி தனது இறுதி விநாடிகளை எதிர் நோக்கியிருக்கியிருந்த சமயம் அது. கணவரின் மடியில்தான் உயிர் பிரிய வேண்டும் என விரும்புகிறார். ராஜாஜிக்கும் மனைவியின் மீது மிகுந்த பிரியம். மனைவியை மடியில் கிடத்தி அமர்ந்திருக்கிறார். அவருக்கும் வயதாகிவிட்டதல்லவா? வெகுநேரம் அசையாமல் இருந்ததால் கால் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. காலை மாற்றி வைக்கலாம் என நினைத்து மனைவியின் தலையை கீழே வைத்துவிட்டு எழுகிறார். அந்த விநாடியே உயிர் பிரிந்துவிட்டது. ராஜாஜிக்கு தாங்க முடியாத துக்கம். சற்று நேரம் பொறுத்திருக்காமல் எழுந்துவிட்டோமே எனக் கதறினாராம். 

பத்திரிக்கையாளர் ராவ் எழுதிய காங்கிரஸ் முதல் கழங்கள் வரை என்ற புத்தகத்தில் இந்தச் செய்தி இருக்கிறது. எழுபத்தைந்து ரூபாய்தான். ஆனால் முக்கியமான புத்தகம். ராஜாஜிக்கும் காமராஜருக்கும் என்ன லடாய் என்பதில் ஆரம்பித்து கருணாநிதி ஜெயலலிதாவின் அக்கப்போர் வரை சுவாரஸியமாக எழுதியிருக்கிறார். ஆதித்தனார் நாம் தமிழர் என்ற கட்சியை நடத்தியது, அண்ணா தேர்தலில் தோற்றுப் போய் பெங்களூரில் ஓய்வெடுத்தது, பாராளுமன்றத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து டெல்லி வரைக்கும் காரிலேயே சென்றது, பிரதமரான பிறகு காமராஜரை இந்திராகாந்தி ஒதுக்கியது என ஏகப்பட்ட செய்திகள். அவருக்கு கருணாநிதியைப் பிடிக்காது போலிருக்கிறது. கருணாநிதியைத் தவிர மிக அத்தனை பேரையும் சகித்துக் கொள்கிறார். எல்லாம் சரிதான். 1991 ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதாவின் அமைச்சர்கள் கனிவானவர்களாக இருந்தார்கள் என்று எழுதியிருந்தார். அதுதான் தூக்கிவாரிப் போட்டது.

ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில்தான் அப்பாவுக்கு ஒரு பதவி உயர்வு வந்தது. மின்சார வாரியத்தில் இருந்தார். பதவி உயர்வின் காரணமாக ஒரு தென் மாவட்டத்திற்கு மாறுதலும் செய்திருந்தார்கள். அப்பாவுக்கு ஆஸ்துமா தொந்தரவு இருந்தது. ஆஸ்துமா என்றால் சாதாரணமாக இல்லை- பயங்கரம். அப்பொழுது இத்தனை மருத்துவ வசதிகளும் இல்லை, எங்களிடம் பண வசதியும் இல்லை. மல்ட்டிமிக்ஸ் என்றொரு மருந்து இருக்கும். அதை வெந்நீரில் கலந்து அம்மா கொடுப்பார். வாந்தியில் ரத்தம் வந்து நிறைய முறை பார்த்திருக்கிறேன். உடல் வெப்பம் உயர்ந்து ஜன்னி வந்து பார்த்திருக்கிறேன். ஹைதராபாத் வரைக்கும் சென்று மீன் விழுங்கி வருவார். கோட்டக்கல் வைத்தியசாலையின் மருந்துகளைக் குடிப்பார். நிறைய பத்தியங்கள். எதுவுமே சரிப்பட்டு வரவில்லை. அந்த நாட்களையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் கண்ணீர் வந்துவிடும். அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கொஞ்சம் பரவாயில்லை. அம்மாவுக்கும் வேலை கிடைத்து கோயமுத்தூர் சென்று வைத்தியம் பார்க்கும் வாய்ப்புகள் உருவாகின. அப்பொழுதும் கூட தேவைக்கு அதிகமான பணம் இருந்தது என்று அர்த்தமில்லை. 

ஒரு முறை அப்பாவின் உடல்நிலை படு மோசமாகியிருந்தது. இரவு முழுவதும் இருமல். அம்மா எங்களுக்கு முன்பாக அழ மாட்டார். நாங்களும் பயந்துவிடுவோம் என்பது காரணமாக இருந்திருக்கும். ஆனால் அன்று உடைந்து போனார். தம்பி தூங்கிக் கொண்டிருந்தான். நான் எழுந்து அமர்ந்து கொண்டேன். ‘தூங்கு சாமி’ என்று அழுகையினூடாகவே சொல்லிப்பார்த்தார். தூங்காமல் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னமும் அந்த இருண்ட இரவு ஞாபகமிருக்கிறது. 

அடுத்த நாள் காலையில் அம்மாவும் அப்பாவும் கோயமுத்தூருக்கு பேருந்து பிடித்துவிட்டார்கள். மாலையில் வந்துவிடுவதாகத்தான் சொன்னார்கள். ஆனால் மருத்துவமனையிலேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். தொலைபேசி வசதி எதுவும் இல்லை. வந்து சேர்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் விளையாடிக் கொண்டிருந்தோம். எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வருகிறது. சாமியிடம் வேண்டிக் கொண்டால் சீக்கிரம் வந்துவிடுவார்கள் என்று ‘அம்மாவும் அப்பாவும் சீக்கிரம் வந்துவிட்டால் ஒரு கற்பூரம் பற்ற வைக்கிறேன்’ என்று வேண்டிக் கொண்டு வாசலுக்குச் சென்றுவிடுவேன். ஆனால் அவர்கள் வருவதான சுவடே இருக்காது. மீண்டும் ஓடிச் சென்று ‘இரண்டு கற்பூரம் தருகிறேன்’ என்று வேண்டி விட்டு வாசலுக்கு ஓடுவேன். இப்படியே கற்பூரத்தின் எண்ணிக்கைதான் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அவர்கள் வந்தபாடில்லை.

எட்டு மணிக்கு மேலாகியிருக்கும். ஒரு சொந்தக்காரத் தம்பதியினர் வந்திருந்தார்கள். எனக்கு ஏழு வயதிருக்கும். தம்பிக்கு ஐந்தரை வயது. வாசலில் அமர்ந்திருந்தோம். வந்தவர்கள் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு ‘காலாண்டு பரிட்சை வருதுல்ல...ரெண்டு பேரும் படிச்சுட்டு இருங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். நெருங்கிய உறவுதான். இரண்டு குழந்தைகளும் என்ன செய்வார்கள், இரவுச் சாப்பாட்டுக்கு என்ன வழி என்றெல்லாம் எதுவுமே யோசிக்கவில்லை. ‘வீட்டுக்கு வாங்க..நாளைக்கு கொண்டு வந்து விடுகிறோம்’ என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம். இப்பொழுது நாங்கள் சற்று வசதியான பிறகு வந்து ஒட்டிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான் மனிதர்கள்.

அன்றைய இரவு எதுவுமே சாப்பிடவில்லை. கதவைப் பூட்டிக் கொண்டு படுத்துவிட்டோம். தம்பி நடு ராத்திரியில் எழுந்து அழுகிறான். பசிக்காகத்தான் இருக்கும் என்று தெரியவில்லை. நானும் அழுது கொண்டிருந்தேன். அது ஒரு கொடூரமான இரவு. 

இந்த பதவி உயர்வு வந்த போது கொஞ்சம் தேறியிருந்தார் என்றாலும் முழுமையாக பூரணம் அடைந்திருந்தார் என்று சொல்ல முடியாது. பிரச்சினையைப் பற்றி விண்ணபத்தில் எழுதி அமைச்சரைப் பார்த்து கொடுத்து வரச் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. சென்னை செல்வதற்குத் தயாராகியிருந்தார். அப்பொழுது மின்சாரத் துறை அமைச்சராக கண்ணப்பன் இருந்தார். அவரது முகவரியை குறித்து வைத்திருந்தார். அமைச்சரிடம் பேசுவது என்பதெல்லாம் அப்பாவுக்கு பழக்கமில்லை. காலையிலேயே அமைச்சரின் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். நான்கைந்து பேர் வரிசையாக நின்றிருக்கிறார்கள். யாரையும் அமரச் சொல்வதெல்லாம் இல்லை. அமைச்சர் மட்டும் சோபாவில் அமர்ந்திருப்பார். 

அப்பாவின் முறை வந்ததும் ‘ம் எங்கிருந்து வர்ற?’ என்றாராம். அப்பாவுக்கு அப்பொழுது நாற்பத்தைந்து வயதாவது இருக்கும். எடுத்த உடனே அமைச்சர் தன்னை ஒருமையில் அழைக்கவும் சங்கடமாகியிருக்கிறது. விவரங்களைச் சொல்லியிருக்கிறார். ‘அவனவன் சொந்த மாவட்டத்திலேயே இருந்துக்கிறதுன்னா எப்படிய்யா டிபர்ட்மெண்ட் நடக்கும்?...போய்யா’ என்று விண்ணப்பத்தை பி.ஏவின் திசை நோக்கி வீசினாராம். அமைச்சருக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருந்திருக்கக் கூடும். ஆனால் வீடு தேடிச் சென்ற தன்னை இப்படி நடத்திவிட்டாரே என்று அப்பாவுக்கு தாங்க முடியாத வருத்தம். இவ்வளவு மோசமாகவா நடத்துவார்கள் என்று புலம்பியபடியே வந்து சேர்ந்தார். 

மேலதிகாரிகளிடம் இதைச் சொன்ன போது ‘அவர் மின்வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளர்களையே அப்படித்தான் நடத்துவார்’ என்று சமாதானம் சொன்னார்களாம். பிறகு வேறு வழியாக அந்த இடமாறுதலை ரத்து செய்தார்கள் என்றாலும் அந்தக் கண்ணப்பனும் ஜெயலலிதாவின் அமைச்சர்தான். ஜெயலலிதாவின் அமைச்சர்கள் கனிவாக இருந்தார்கள் என்று ராவ் எப்படி எழுதினார் என்று தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு கண்ணப்பனைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். இத்தகைய வரலாறுகளைப் பதிவு செய்யும் போது ‘கருணாநிதியின் அமைச்சர்கள் எல்லோருமே தோளில் துண்டுக்கு பதிலாக வேஷ்டியை தழையவிட்டு பந்தாவாகத் திரிந்தார்கள்’ என்றோ ‘ஜெயலலிதாவின் அமைச்சர்கள் கனிவானவர்கள்’ என்றோ பொதுமைப்படுத்தாமல் இருப்பது நல்லது. எல்லாவற்றிலுமே விதிவிலக்குகள் உண்டுதானே? 

ராவின் அனுபவத்தோடு ஒப்பிட்டால் நானொரு சுண்டைக்காய். அவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?