Dec 11, 2014

ரகசியப் பயணம்

பதினைந்து நாட்களுக்கு முன்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பெங்களூரு வந்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதமாக இங்கேயேதான் இருந்திருக்கிறார். ஆனால் யாருக்கும் தகவல் சொல்லவில்லை. கமுக்கமாக இருந்துவிட்டார். தனது அலைபேசியைக் கொண்டு வந்தால் யாராவது அழைக்கக் கூடும் என்பதால் வேறொரு எண்ணை எடுத்து வந்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

அப்படியென்ன ரகசியப் பயணம்? 

குண்டக்க மண்டக்க யோசிப்பதற்குள் நானே சொல்லிவிடுகிறேன். இங்கு சங்கம் என்றொரு அமைப்பு இருக்கிறது. அவர்கள் ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்துக் கொள்கிறார்கள். சங்கம் அமைப்பு தேர்ந்தெடுக்கும் எழுத்தாளர்கள் இங்கு வந்து மாதக் கணக்கில் தங்கி எழுதிச் செல்லலாம். அந்த இடம் பெங்களூரிலிருந்து முப்பது அல்லது நாற்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. முன்பு ஜே.பி.சாணக்யா வந்த போது ஒரு முறை சென்றிருக்கிறேன். சுற்றிலும் பெரிய காடு. அவ்வளவு அமைதி. ஒரு தொந்தரவு இருக்காது. தனி அறை தந்துவிடுவார்கள். நான்கைந்து வேற்று மொழி எழுத்தாளர்களும் இருப்பார்கள். அதில் சில வெளிநாட்டு எழுத்தாளர்களும் உண்டு. மாலை நேரங்களில் அவர்களோடு உரையாடலாம். அதை விடுத்தால் எழுதுவதையும் வாசிப்பதையும் தவிர வேறு வேலை இருக்காது.

எனக்கு ஒரு ராசி உண்டு. இங்கு வரும் தமிழ் எழுத்தாளர்களை எப்படியும் சந்தித்துவிட முடிகிறது. சுகுமாரன், பழ. அதியமான், ஜே.பி.சாணக்யா என்று வரிசையாக இவர்களோடு ஒரு நாளாவது சுற்றிவிடுகிறேன். எழுத்தாளர்களுடன் பழகுவது ஒரு வரம். சிலர் சொல்வார்கள் ‘எழுத்தை மட்டும் பாரு...எழுத்தாளன் கூட என்ன பேச்சு?’ என்று. அப்படியில்லை. நல்ல எழுத்தாளர்கள் ஏதாவது ஒரு தீக்குச்சியை உரசிப் போட்டுவிடுவார்கள். அதை அணையாமல் பார்த்துக் கொள்கிறோமா என்பது இரண்டாம்பட்சம். ஆனால் அந்த நெருப்புப் பொறியை அவர்களால் உருவாக்கிவிட முடியும் என்பதால் கிடைக்கும் வாய்ப்பைத் தவற விடுவதில்லை.

பெருமாள் முருகன் தனது மாதொருபாகன்  நாவலின் அடுத்த பகுதியை எழுதுவதற்காக வந்திருந்தார். 12 B படம் மாதிரி. காளி அந்த முடிவை எடுத்திருந்தால் என்னவாகியிருக்கும்? இந்த முடிவை எடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்கிற வகையில் இரண்டு புத்தகங்கள். ‘எந்த’ முடிவு என்பதைத் தெரிந்து கொள்ள மாதொருபாகனை வாசித்துவிடவும். அட்டகாசமான நாவல் அது. ஆன்லைனில் கிடைக்கிறது. One Part Woman என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது.

தனது நாவல் வேலையெல்லாம் முடித்துவிட்டு ஒரு நாள் அழைத்து ‘நாளைக்கு பெங்களூரில் சில பொருட்கள் வாங்க வேண்டும்’ என்றார். வெட்டியாகத்தான் இருக்கிறேன். அடுத்த மாதம் புதிய வேலையை ஆரம்பிக்கும் வரைக்கும் ஒரு வேலையும் இல்லை.  பைக்கிலேயேதான் சுற்றினோம். சில மாதங்களுக்கு முன்பாக இரண்டொரு முறை கீழே விழுந்ததிலிருந்து பைக்கின் வேகம் நாற்பதைத் தாண்டுவதில்லை என்பதால் பெருமாள் முருகன் ரத்தம் பார்க்காமல் வீடு திரும்பிவிட்டார். 

பொருட்கள் வாங்குவது ஒரு கலை. மனைவியோடு கடைக்கு போகும் போது சங்கடப்படாமல் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் நமக்கும் ஒரு ஐடியா கிடைக்கும். ‘நீ புடிச்சத வாங்கு..நான் அங்க நிக்குறேன்’ என்று சாலையில் போகிற வருகிறவர்களை பராக்கு பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி அறிவு வளரும்? இது நாள் வரையிலும் அப்படித்தான் இருந்தேன். பெருமாள் முருகன் அதைவிட இருக்கிறார். ‘எனக்கு இதெல்லாம் எப்படி வாங்குறதுன்னு தெரியாது...நீங்க பாருங்க’ என்று குண்டை போட்டுவிட்டார்.

ஒருமுறை சிங்கப்பூரிலிருந்து இரண்டாயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்து வந்திருந்தாராம். ‘இத நாமக்கல்லுல எழுநூறு ரூபாய்க்கு வாங்கலாமே?’ என்று பல்ப் கொடுத்தார்களாம். ‘இதெல்லாம் நமக்கு எப்படிங்க தெரியும்?’ என்று பரிதாபமாகக் கேட்டார்.  அவருக்கு இதெல்லாம் தெரியாது என்பது எனக்கு வசதியாகப் போய்விட்டது. அவரிடம் கெத்து காட்டுவதற்காக ‘இது நல்லா இருக்குது பாருங்க...அது சரியில்லை’ என்று புருடா விட்டிருந்தேன். கைகாட்டியதையெல்லாம் நம்பி வாங்கிக் கொண்டார். பாவம். வீட்டில் என்ன வாங்கிக் கட்டிக் கொண்டாரோ தெரியவில்லை.

பைக்கில் போகும் போது பேசுவதற்கு நிறைய வாய்ப்புக் கிடைத்தது. நாவலை எப்படித் தொடங்குவது? நாவல் வளரும் போது உருவாகும் சிக்கல்கள் என்ன? நாவலின் கதாபாத்திரங்களை உருவாக்கும் நுட்பங்கள் பற்றியெல்லாம் சில டிப்ஸ்களைக் கொடுத்தார். ஏழு நாவல்கள், ஒரு அகராதி, எட்டு கட்டுரைத் தொகுப்புகள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஏழெட்டு தொகுப்பு நூல்கள் என எழுதிக் குவித்திருக்கும் பெருமாள் முருகனின் டிப்ஸ்கள் எல்லாம் என்னைப் போன்ற பொடியன்களுக்கு நிச்சயமாகப் பயன்படும். 

நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. தன்னைச் சந்திப்பதற்காக சில நண்பர்கள் ஜெயநகரில் காத்திருப்பதாகச் சொன்னார். பெங்களூரிலேயே இருந்து கூட்டம் கூட்டினால் கூட பதினைந்து பேரைத் தாண்டுவதில்லை. ஆனால் இவர் வந்திருப்பதையே கூட யாருக்கும் சொல்லவில்லை. எத்தனை பேர் வந்திருப்பார்கள்? எங்கள் இரண்டு பேரோடு சேர்த்து இன்னுமொருவர் வந்திருக்கக் கூடும். அந்த ஒருவரைப் பார்க்க அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அங்கு போனால் பாவண்ணன், க.சீ.சிவக்குமார், மகாலிங்கம், ‘படிகள்’ ராமசாமி, மகாலிங்கம், ஜி.சிவராமகிருஷ்ணன், திருஞான சம்பந்தம், சண்முக சுந்தரம் என்று நிறையப் பேர் வந்திருந்தார்கள். எல்லோரும் பெரிய ஆட்கள். வாயைப் பொத்தி கேட்டுக் கொண்டிருந்தேன். மேன்மக்கள் பேசும் போது காது கொடுப்பதுதான் உசிதம். வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.


இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ‘பெரிய மனிதர்கள் முன்னால் கால் மீது கால் போட்டு அமர்ந்திருக்கிறானே...மரியாதை கெட்டவன்’ என்றெல்லாம் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அந்தப் பலகையில் மூன்று பேர்தான் அமர முடியும். நிழற்படத்துக்காக உட்கார வைத்துவிட்டார்கள். க.சீ.சிவக்குமாரும் கூட அதே ஸ்டைலில் அமர்ந்திருக்கிறார் பாருங்கள். படம் எடுக்கும் போது கேமிராவை பார்க்கக் கூடாது என்று சிறுவனாக இருக்கும் போது யாரோ சொல்லித் தந்தார்கள். இன்னமும் அதையே பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.