Nov 3, 2014

உலகம் எங்கே போய்விடும்?

ஒரு பையன் தூக்கில் தொங்கிவிட்டான். பக்கத்து ஊர்க்காரன். வயது முப்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எம்.சி.ஏ முடித்துவிட்டு வேலையில் இருந்திருக்கிறான். பெற்றவர்களுக்கு ஒரே பையன். வாழ்க்கை புளிப்பேறிவிட்டது. கதையை முடித்துக் கொண்டான். நல்லவேளையாக திருமணம் ஆகியிருக்கவில்லை. ஊரிலிருந்து நாங்கள் பெங்களூர் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது அழைத்துச் சொன்னார்கள். என்ன காரணம் என்று உடனடியாகத் தெரியவில்லை. வீடு திரும்பிய பிறகு விசாரித்தால் நிறுவனத்தில் தனது வேலையை யாருமே அங்கீகரிப்பதில்லை என்று அடிக்கடி புலம்புவானாம். இதற்காகவெல்லாம் சாவார்களா?

அடுத்தவர்களின் அங்கீகாரத்திற்காக மனம் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராகிவிடுகிறது. சமீபத்தில் கேரளாவில் ஒருவன் சிக்கினான் அல்லவா? பி.வி.அருண். சிறு வயதிலிருந்தே அவன் அறிவாளியாம். அப்படித்தான் அவனுடைய ஆசிரியர்கள் சொல்கிறார்கள். பொறியியல் முடித்தவுடன் நாஸாவில் வேலை செய்கிறேன் என்று கிளப்பிவிட்டிருக்கிறான். அமெரிக்காவின் MIT யில் ஆராய்ச்சி செய்வதாக அடித்துவிட்டிருக்கிறான். என்னை ஜப்பானில் ஜாக்கிசான் பாராட்டினார், அமெரிக்காவில் ஒபாமா பாராட்டினார் என்கிற ரீதியில் இந்தியாவில் மோடி பாராட்டினார். அவருடைய பாட்டி பாராட்டினார் என்றெல்லாம் அவ்வப்போது செய்தியைப் பரப்பியிருக்கிறான். நம் ஊடகங்களைப் பற்றித்தான் தெரியுமே? ஒருவன் செய்தி போட்டால் அதை அப்படியே இம்மிபிசகாமல் தங்கள் பத்திரிக்கையிலும் காப்பியடித்துவிடுவார்கள். 

கேரளாவில் ஆங்கிலம், மலையாளம் என்ற பாகுபாடில்லாமல் அருணைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டேயிருந்திருக்கின்றன. பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என ஓவ்வொருவரும் இவனை அழைத்து பேசச் சொல்லியிருக்கிறார்கள். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மேடையேறியிருக்கிறான். இப்பொழுது குட்டு வெளிப்பட்டுவிட்டது. நாஸாவுக்கு இவனுக்கும் சம்பந்தமேயில்லை. எம்.ஐ.டியின் வாசலைக் கூட மிதித்ததில்லை. மோடிக்கு இவனைப் பற்றி எதுவுமே தெரியாது. வருடக்கணக்கில் சுற்றிய ரீல் அறுந்துவிட்டது. இப்பொழுது அதே ஊடகங்கள் அருணை கிழித்துத் தொங்கவிடுகின்றன. இதுவரை இவன் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறான் என பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்காதா? அடக்கியிருக்கலாம். அவர்களுக்கும் ஆசைதான் போலிருக்கிறது. விட்டுவிட்டார்கள். இப்பொழுது கிழிபடும் போது மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்களாம். 

வெள்ளம் தலைக்கு மேல் போகிறது. இப்பொழுது என்ன செய்ய முடியும்?

எல்லாம் அங்கீகாரத்திற்குத்தான். எப்படியாவது நான்கு பேருக்கு நம்மைப் பற்றி நல்ல விதமாகத் தெரிய வேண்டும். நம்மிடம் சரக்கு எதுவும் இல்லையென்றாலும் கூட பரவாயில்லை. ஆனால் நம்மை பற்றி உயர்ந்தவிதமாக பேச வேண்டும். ‘எம்பையன் அப்படி’ ‘எம்பேரன் இப்படி’‘நாங்கெல்லாம் அப்பவே அப்படி...தெரியுமா?’ என்கிற அலட்டல்களின் நீட்சிதான். அதுவும் இந்த சமூக வலைத்தளங்கள் வந்துவிட்ட பிறகு அங்கீகாரத்திற்காக மனது அடித்துக் கொள்கிறது. தூக்கில் தொங்கிய பையனும், பி.வி.அருண் மட்டுமில்லை. நாமும் அப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறோம். இல்லையா?

எந்தவிதமான அங்கீகாரமும் இல்லாமல் எவ்வளவோ பெரிய காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். Jadev Payeng என்று கூகிளில் தேடிப்பாருங்கள். தனியொரு மனிதனாக அஸ்ஸாம் மாநிலத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்து நானூறு ஏக்கரில் ஒரு வனத்தை அமைத்திருக்கிறார். இப்பொழுது அந்த வனத்தையே அவர் பெயரில்தான் அழைக்கிறார்கள். அங்கீகாரம் கிடைக்கும் என்றா அவர் செய்திருப்பார்?  

இவனது தற்கொலையை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. யாருமே கண்டுகொள்ளவில்லை என்பதற்காக முடிவைத் தேடிக் கொண்டான் என்பதை இன்னமும் கூட நம்பமுடியவில்லை. ஆனால் கடிதத்திலும் அப்படித்தான் எழுதி வைத்திருக்கிறானாம்.

என்ன பெரிய அங்கீகாரம் வேண்டிக் கிடக்கிறது? நமது வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தால் போதும். ‘நான் நல்லா வேலை செய்யறேன்’ என்கிற எண்ணம்தான் நம் வெற்றியின் பெரிய எமன். வாழ்க்கையில் தோல்வியடைந்த மனிதர்களிடம் பேசினால் இந்த நினைப்பை ஆழப் பதித்து வைத்திருப்பார்கள். அதுதான் பிரச்சினை.‘best is yet to come' என்பதுதான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இன்றைக்கு செய்வதைவிட நாளைக்கு ஒருபடி மேலே இருக்க வேண்டும். நாளை மறுநாள் அதைவிடவும் ஒரு படி மேலே இருக்க வேண்டும். இதுதான் நம்முடைய பெஸ்ட் என்ற நினைப்பு மட்டும் வரவே கூடாது. அப்படி ஒரு நினைப்பு வந்தால் காலி ஆகிவிடுவோம். கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் லிங்குசாமி அஞ்சானில் இறக்கி வைத்த மாதிரிதான். பல்லிளித்துவிடும். சலிப்படையாமல் வேலையைச் செய்து கொண்டிருந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கால தாமதமாகவாவது கிடைத்துவிடும். எழுத்தாளர் சுஜாதாவின் வாழ்நாளில் எத்தனை விருதுகள் வாங்கியிருப்பார்? எனக்குத் தெரிந்து முக்கியமான விருது ஒன்றுமே இல்லை. என்ன குறைந்துவிட்டது? இன்றைக்கும் புத்தகக் கண்காட்சிகளில் சுஜாதாதான் பெஸ்ட் செல்லர். 

ஆனால் ஒன்று- இந்த இடத்தை அவர் அடைவதற்கு ஐம்பதாண்டு கால உழைப்பு பின்னணியில் இருக்கிறது. மூணேமுக்கால் சிறுகதையை எழுதிவிட்டு ‘என்னை யாருமே எழுத்தாளர் என்று சொல்வதில்லை’ என்று புலம்புவதில் இருந்துதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. 

சிலர் சொல்வார்கள். ஒன்றேயொன்று என்றாலும் அது சிங்கக்குட்டியாக இருக்க வேண்டும் என்று. அதெல்லாம் சாத்தியமில்லை. இளையராஜாவின் அத்தனை பாடல்களும் ஹிட் அடித்துவிட்டனவா என்ன? அவர் தனது வேலையைச் செய்து கொண்டேயிருக்கிறார். தனது திறமையைச் செதுக்கிக் கொண்டேயிருக்கிறார். வெற்றியடையும் இசையானது இளையராஜாவின் பெயரை பொன்னெழுத்துக்களால் பொறித்துவிட்டு ஒலிக்கிறது. அவ்வளவுதான்.

இதுதான் அடிப்படை. தொடர்ந்து நமது பாதையில் சென்று கொண்டேயிருக்க வேண்டும். நம்மைப் பார்த்து சிலர் கருத்துச் சொல்ல ஆரம்பிக்கும் போது அடுத்தவர்கள் கவனிக்கும் இடத்தை அடைந்துவிட்டோம் என்று பொருள். உருப்படியான கருத்துக்கள் வரும் போது காது கொடுத்துக் கேட்பதில் தவறில்லை. அதற்கேற்றபடி நமது திசையைக் கொஞ்சம் மாற்றியும் கொள்ளலாம். கருத்துக்களே வரவில்லையென்றாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. இன்னமும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்று மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு இன்னமும் வேகமாக ஓட ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஓடுகிறவன்தான் ஜெயிக்கிறான். இந்த உலகம் எங்கே போய்விடும்? உழைப்பில் வெறியைக் காட்டினால் இந்த உலகம் நம்மைத் திரும்பிப் பார்த்துதான் தீர வேண்டும். நம்மிடமிருந்து தப்பிப்பதற்கு அதற்கு வேறு வழியே இல்லை.