Nov 19, 2014

இண்டர்வியூக்கு போகிறேன்

நேற்று ஒரு நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். வேலை மாறிவிடலாம் என்ற எண்ணம் வெகு நாட்களாகவே மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. இந்த நிறுவனத்தில் சேர்ந்து ஏழு வருடங்கள் ஆகப் போகிறது. ஒரே இடத்தில் வெகுநாட்களுக்கு இருப்பது நமக்கும் நல்லதில்லை அவர்களுக்கும் நல்லதில்லை. அப்படித்தான் நம்புகிறேன். எந்த வேலையைக் கொடுத்தாலும் எப்படி ஏய்ப்பது என்று அத்துப்படியாகிவிட்டது. இப்படியே எத்தனை நாட்களுக்குத்தான் காலத்தை ஓட்டுவது? ஒருவேளை எனது தில்லாலங்கடியை அவர்கள் கண்டுபிடித்து வெளியில் அனுப்பினால் புதிதாக வேலையைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம். கிளம்பிவிடலாம்.

பல வருடங்களுக்குப் பிறகான நேர்காணல் என்பதால் சற்று நடுக்கமாகத்தான் இருந்தது. இதுவரைக்கும் செய்த வேலையில் இருந்துதான் கேள்வி கேட்பார்கள் என்றாலும் இப்பொழுது செய்கிற வேலைக்கும் அவர்களின் தேவைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் ஒரு வாரமாகவே முரட்டுத்தனமாக படித்துக் கொண்டிருந்தேன். அதிகாலை இரண்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து படிப்பது, வார இறுதி நாட்களில் இடைவிடாமல் படிப்பது என்று பித்து ஏறிக் கொண்டிருந்தது. எதுவுமே படிக்காமல் பன்னிரெண்டாம் வகுப்பின் கணக்குத் தேர்வுக்கு செல்வது போன்றெல்லாம் கனவுகள் வரத் துவங்கியிருந்தன. இப்படியே போனால் விவகாரம் ஆகிவிடக் கூடும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு படிப்பதை நிறுத்திக் கொண்டேன். செவ்வாய்க்கிழமையன்று நேர்காணல்.

முதல் இரண்டு சுற்றுக்களில் நிறைய கேள்விகளைக் கேட்டார்கள். சமாளித்துவிட்டேன். அது கூட சிரமமாக இருக்கவில்லை. ஹெச்.ஆர் சுற்றில்தான் அந்தப் பெண்மணி தாளித்துவிட்டார். ஆரம்பத்தில் சுமூகமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ‘நீ ஏன் மற்றவர்களைவிட பெஸ்ட்?’ என்ற போதுதான் சற்று பிசகிவிட்டேன். ‘அப்படி நான் சொல்லவேயில்லையே?’ என்று கேட்டுவிட்டேன். ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு ‘அப்படி நிரூபிக்க வேண்டிய அவசியம் வந்தால் எப்படி நிரூபிப்பாய்?’ என்றார். இப்படியான கேள்விகளை எதிர்பார்க்கவில்லை. ஹெச்.ஆர் சுற்றில் எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று மட்டும்தான் கேட்பார்கள் என நினைத்திருந்தேன். 

நேர்காணல்களை எதிர்கொள்வது ஒரு கலை. முன்னதாகவே சில தயாரிப்புகளைச் செய்து கொள்ள வேண்டியிருக்கும். அதில் முக்கியமான விஷயம்- நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருக்கும் ‘இண்டர்வியூக்கு போறேன்; இண்டர்வியூக்கு போறேன்’ எனத் தெரியப்படுத்த வேண்டியதில்லை. ரிசல்ட் என்ன ஆனது என்பது குறித்து நம்மைவிட அவர்கள்தான் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிடும். இந்தத் தேவையில்லாத அழுத்தத்தை நாமாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. 

அதே போல இந்த வேலையை வாங்கியே தீர வேண்டும் என்ற வெறியோடு் நேர்காணலுக்கு போகவே கூடாது. திருப்தியான அளவுக்கு தயாரிப்புகளை முடித்துவிட்டு ‘வந்தால் மலை போனால் இன்னொன்றை பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற மனநிலையோடு இருப்பதுதான் மிக முக்கியம். இதை விட்டால் வேறு கதியே இல்லை என்ற நினைப்பிருந்தால் நேர்காணல் முழுவதும் பதறிக் கொண்டே இருப்போம். ஒரு நிறுவனத்திற்கு நம்மைவிட்டால் இன்னமும் ஆயிரம் ஆட்கள் கிடைப்பார்கள் என்பதைப் போலவே நமக்கும் அந்த நிறுவனத்தைவிட்டால் இன்னமும் நூறு நிறுவனங்கள் கிடைக்கும். அவ்வளவுதான்.

நேர்காணலின் போதும் சில தகிடுதத்தங்களைச் செய்யச் சொல்வார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன்பாக கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டேன். கல்வி ஆலோசகர் ஒருவரும் பேசினார். இறுதியாண்டு மாணவர்கள்தான் பார்வையாளர்கள். நேர்காணல்களை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். எளிமையான கான்செப்ட்தான். ‘மோட்டார் எப்படிச் சுற்றுகிறது?’ என்ற கேள்வியைக் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு பதில் தெரியாது. ஆனால் ஜெனரேட்டரைப் பற்றித் தெரியும். கமுக்கமாக ஜெனரேட்டர் என்ற சொல்லை உள்ளே கொண்டு வந்துவிட வேண்டும். அடுத்த கேள்வி நிச்சயமாக ஜெனரேட்டரைப் பற்றித்தான் இருக்கும். எதிராளியை நம் கட்டத்துக்குள் கொண்டு வந்து கபடி ஆட வேண்டும். இந்த சூட்சமம் அனுபவஸ்தர்களுக்கும் ஓரளவுக்கு பயன்படும் என்றாலும் Freshersக்கு நிச்சயமாக பயன்படும். இந்த சூட்சமத்தை பயன்படுத்த பயிற்சி முக்கியம். பயிற்சி எதுவும் இல்லாமல் அவன் கேட்கும் கேள்விக்கு முரட்டு அடியாக சம்பந்தமேயில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தினால் கண்டுபிடித்துவிடுவான். 

‘நீதான் பெஸ்ட் என எப்படி நிரூபிப்பாய்?’ என்று கேட்டதற்கு என்ன பதில் சொன்னேன் என்று சொல்லவில்லை பாருங்கள். ‘If you are looking only for a skilled person then I may not be the right candidate but if you are looking for someone with humanity, I can say that I am the right choice' என்று ஒரு பிட்டைப் போட்டேன். சூழல் தலைகீழாக மாறிவிட்டது. ‘எப்படிச் சொல்லுறீங்க?’ என்றார். என் பதிலை இங்கு எழுதினால் சுய தம்பட்டம் அடிப்பது போல ஆகிவிடும். அவ்வளவு பேசினேன். 

வெளியில் வந்து யோசித்த போதுதான் எனக்கே வெட்கமாக இருந்தது. இந்தப் பேச்சுக்கு வேலை தருவார்களா என்றெல்லாம் தெரியவில்லை. வந்தால் வரட்டும். வேலை, குடும்பம் எல்லாம் தனித் தனி ட்ராக். ஓடிக் கொண்டிருக்கட்டும்.

நாம் இன்னொரு ட்ராக் பற்றி பேசலாம். 

கடந்த சில நாட்களாக நிசப்தம் அறக்கட்டளையின் அடுத்த செயல் பற்றி மின்னஞ்சலில் சிலர் கேள்வி கேட்டிருந்தார்கள். எல்லோருக்கும் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை. இரண்டு திட்டங்கள் இருந்தன.

1) ஏதேனும் ஊரைத் தேர்ந்தெடுத்து மரங்களை நடுவது
2) தகுதியான பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது

இப்பொழுது சிறு மாற்றம். 

இரண்டு திட்டங்களையும் இணைத்துவிடலாம். கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் ரூபாய் வரைக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். ஒரு லட்சம் ரூபாய்க்கு பத்து பள்ளிகளுக்கு விளையாட்டு சாமான்களை வழங்க முடியும். ஒரு பள்ளிக்கு பத்தாயிரம் ரூபாய். ஆனால் அந்தப் பள்ளிகள் ஒரு பிரதியுபகாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் ஐம்பது மரங்களை வளர்ப்பதற்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும். நூறு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இரண்டு பேருக்கு ஒரு செடியை ஒதுக்கிவிடலாம். செடிகளையும் நாமே வாங்கித் தந்துவிடலாம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட செடிகளுக்கு மாணவர்கள் நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் தண்ணீர் போதும். அடுத்த வருடம் செடிகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் மாணவர்களுக்கு சான்றிதழையும் பரிசையும் நாமே வழங்கிவிடலாம். மரம் வளர்த்த மாதிரியும் ஆகிவிடும். மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்கிய மாதிரியும் ஆகிவிடும். 

இந்தத் திட்டம் எப்படியிருக்கிறது?