Oct 6, 2014

அவர்கள் என்ன செய்தார்கள்?

ஒரு சமூகத்தைத் நல்வழிப்படுத்த வேண்டும் என்றால் அதைப் பள்ளிகளிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பார்கள். அதே சமூகத்திற்கான நஞ்சை விதைக்க வேண்டுமென்றாலும்  பள்ளிகளிலிருந்து தொடங்கலாம். ஒரு மனிதனின் அத்தனை திறமைகளுக்கும் பதினைந்து வயது வரையிலும்தான் உரம் போடப்படுகிறது. அந்தப் பருவத்தில்தான் அவனது அத்தனை தீமைகளுக்கும் விதையிடப்படுகிறது. மிகப்பெரிய கிரிமினல் என்று நாம் நினைக்கிற மனிதனின் - சந்தர்ப்ப சூழலினால் குற்றங்களைச் செய்தவனில்லை- திட்டமிட்ட சூழ்ச்சிகளின் வழியாக கிரிமினல் குற்றங்களைச் செய்கிற மனிதனின் இளம்பிராயத்தை விசாரித்துப் பார்த்தால் அது நிச்சயம் மிகச் சிக்கலானதாக இருந்திருக்கும். 

நம் அப்பாக்களின் காலத்தில் பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி கண்டிப்பு இருந்தது. தயவு தாட்சண்யமேயில்லாமல் அடி நொறுக்கிவிடுவார்கள். ஆசிரியர்கள் குறித்தான பயம் இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும், அடுத்தவனை ஏமாற்றக் கூடாது, பிறருக்கு தீங்கு செய்யக் கூடாது என்பதெல்லாம் மிக அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது. அவற்றை கடைபிடிக்கவும் செய்தார்கள். அதுவே நம் தலைமுறையில் ஒழுக்கத்தைவிடவும் படிப்புதான் அவசியம் என்று சொல்ல ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுதுதான் மருத்துவராக முடியும், பொறியாளனாக முடியும் என்றும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்றும் வெறியேற்றினார்கள். ஒழுக்கம் ஒரு படி பின்னால் சென்றது. பணம் இருந்தால் போதும் எதையும் சாதித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்தது. சென்ற தலைமுறையோடு ஒப்பிடும் போது நம் தலைமுறையில் ஒழுக்கம் குறைந்திருக்கிறது. ஏமாற்றுதல் அதிகமாகியிருக்கிறது. வன்முறைகள் பரவலாகியிருக்கிறது. பொய் ஆக்கிரமிக்கிறது- சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்பொழுது பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் நிலைமை இன்னமும் மோசமாகியிருக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களில் இருபது சதவீதம் மது அருந்திப் பார்த்துவிடுகிறார்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் இந்த சதவீதம் முப்பதைத் தாண்டுகிறது. கல்லூரியில் அறுபதைத் தாண்டிவிடுகிறது. மதுவை ஒழுக்கத்தின் அளவுகோலாகச் சொல்லவில்லை. அது தனிமனித விருப்பம். ஆனால் எதை எப்பொழுது தொட வேண்டும் என்கிற வரைமுறை இருக்கிறதல்லவா? நான்கு மாணவர்கள் சேர்ந்து பள்ளியின் மர நாற்காலியைத் திருடி விற்று மது அருந்தியிருக்கிறார்கள். சென்ற வாரத்தில் திருப்பூரில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் மூன்று வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தன் வீட்டிற்குத் தூக்கிச் சென்று கந்தரகோலமாக்கிவிட்டு திருப்பி அனுப்பிவிட்டான். அடுத்த சில நாட்களில் அந்தக் குழந்தைக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. ரத்தப் போக்கு அதிகரித்து இறந்து போனது. எங்கேயிருந்து இந்த தைரியம் வருகிறது? 

வாய்க்கால் ஓரமாக நான்கைந்து மாணவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆசிரியர் நடந்து வந்திருக்கிறார். பள்ளிச் சீருடையிலும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் நமக்கெதுக்கு வம்பு என்று ஆசிரியர் அமைதியாக வந்திருக்கிறார். அதில் ஒருவன் அருகில் வந்து ‘சரக்கு சாப்பிடலாம்ன்னு வந்தோம் சார்’ என்று சொல்லியிருக்கிறான். தனது கெத்தைக் காட்டிவிட்டதாக அவனுக்கு ஒரு சந்தோஷம். ஆசிரியர் எதுவுமே சொல்லாமல் வந்திருக்கிறார். இருபது வருடங்களுக்கு முன்பு கூட இதெல்லாம் சாத்தியமில்லை. ஆசிரியர்களைக் கண்டால் பயம் இருக்கும். உள்ளுக்குள் எவ்வளவுதான் திட்டினாலும் எதிர்த்துப் பேச தைரியம் இருக்காது. தனது குற்றத்தை திமிருடன் ஒத்துக் கொள்ளும் தெனாவெட்டு இருக்காது. இப்பொழுது ஏன் நிலைமை இவ்வளவு தாறுமாறாகிக் கொண்டிருக்கிறது? ஏன் ஒரு தலைமுறையே சீரழிந்து கொண்டிருக்கிறது?

கிராமப்புற மாணவர்களுக்காகச் செய்கிறோம் என்று ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வேயில்லாமல் தேர்ச்சி அளித்தார்கள். கிராமப்புற அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தால் இப்படியொரு தேர்ச்சி அவசியம்தான் என்கிறார்கள். குறிப்பாக மாணவிகளுக்கு. எட்டாம் வகுப்பில் தோல்வியடையும் பெண்ணை அதற்குமேல் பள்ளிக்கு அனுப்புவதில்லை. அதுவே தேர்ச்சியடைந்தால் போகட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். ஆனால் ‘ஆல் பாஸ்’ என்பது வேறுவிதமான எதிர்மறை விளைவுகளையும் உருவாக்குகின்றன. சுமாராக படிக்கும் மாணவர்களுக்கும் கூட ‘படிக்க வேண்டியதில்லை’ என்ற நினைப்பு வந்துவிடுகிறது. திருக்குறளை மனனம் செய்வதைக் கூட சுமையாக நினைக்கிறார்கள். அதுதானே குழந்தைகளின் இயல்பு? தேவையில்லாமல் எதற்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நினைப்பு.

இதை ஒரு உதாரணத்துக்காகச் சொல்கிறேன். பின்விளைவுகள் பற்றிய எந்தவிதமான திட்டமிடலுமின்றி அறிவிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஒரு திட்டத்தை அறிவிக்கும் போது அதில் இருக்கும் பிரச்சினைகளையும் அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டுமல்லவா? 

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான நுழைவுத்தேர்வு அவசியமில்லை என்று நீக்கினார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது? இப்பொழுது கிராமப்புறப்பள்ளி மாணவர்களால் முதல்தரக் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றனவா? அதெல்லாம் ஒன்றுமில்லை. நுழைவுத் தேர்வு, அடிப்படையான தகுதி மதிப்பெண்கள் போன்றவை இருக்கும் வரையில் சுயநிதிக் கல்லூரிகளால் தங்கள் இடங்களை நிரப்ப முடியவில்லை. அரசாங்கத்துக்கும் கல்லூரிகளுக்கும் என்ன டீலிங் என்று தெரியவில்லை. ப்ளஸ் டூ தேர்வாகியிருந்தால் போதும் என்றார்கள். கல்வி வள்ளல்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று மாணவர்களை பிடித்து வந்து தங்களது கல்லூரியில் நிரப்புகிறார்கள். ‘ஃபீஸை பத்தி ஒன்னும் கவலைப்படாதீங்க...லோன் வாங்கிடலாம்’ என்று பெற்றவர்களை மயக்கினார்கள். கடன் மேல் கடனைச் சேர்த்தார்கள்.  இதுதான் கண்டபலன்.

சீரழிவதற்கான எல்லா வாய்ப்புகளும் வெளியில் கொட்டிக் கிடக்கின்றன. படிப்பு பற்றிய கண்டிப்புகள் குறைந்து கொண்டிருக்கின்றன. தீவிரமாக படிக்க வேண்டிய அவசியமில்லை என்கிற மாதிரியான மனநிலை உண்டாகிக் கொண்டிருக்கிறது. ஆக பள்ளி, கல்லூரி என எல்லா மட்டங்களிலுமே சீரழிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒழுக்கத்துடன் கூடிய கல்வி, நேர்மை என்பதெல்லாம் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இன்னும் இருபத்தைந்தாண்டுகளில் நிலைமை எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சற்று திகிலாகத்தான் இருக்கிறது. எவ்வளவு கீழாக வேண்டுமானாலும் இறங்குவார்கள். எச்சில் துப்புவதைப் போல கொலைகள் நடக்கக் கூடும். என்ன செய்யப் போகிறோம்?

ஒழுக்கத்தை விதைப்பது என்பது பெற்றோர்களின் கடமை மட்டுமில்லை. என்னதான் வீட்டில் கட்டுப்பாடாக வைத்திருந்தாலும் வெளியில் இருக்கும் நண்பர்களோடு சேரும் போது சேட்டைகளைச் செய்யத்தான் தொடங்குவார்கள். அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இது ஒட்டுமொத்த சமூகத்திலும் நிகழ வேண்டிய மாற்றம். ஒழுக்கம் என்பதன் முக்கியத்துவம் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படல் வேண்டும். ஆசிரியர்கள் தங்களது கண்டிப்பைக் காட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களிடம் விசாரித்துப் பார்த்தால் எந்த மாணவனையும் மிரட்டுவதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும். மாணவன் மிரட்டுகிறான். பெற்றோர்கள் மிரட்டுகிறார்கள். உள்ளூர் சாதிச்சங்கம் மதச்சங்கமெல்லாம் மிரட்டுகின்றன. விசாரணைக்கு வரும் கல்வி அதிகாரிகள் ‘கண்டுக்காம விடுங்க’ என்ற அட்வைஸோடு முடித்து வைக்கிறார்கள். பிறகு எப்படி கண்டிப்பார்கள்?

இந்தப் பிரச்சினையில்- ஒழுக்கம், பள்ளிக்கல்வி மாறுதல்கள் உள்ளிட்ட பிரச்சினையில்- அரசாங்கம் செய்ய வேண்டிய ஏராளமான வேலைகள் பாக்கியிருக்கின்றன. அரசும் ஆட்சியாளர்களும் துளியாவது யோசிக்க வேண்டும். இப்படியே போய்க் கொண்டிருந்தால் ஒரு சமூகத்தின் அடுத்த தலைமுறையே சிறுகச் சிறுக சீரழிந்துவிடும். நெஞ்சு வரைக்கும் நீரோட்டம் இருக்கும் போதே தப்பிக்க முயற்சிப்பது நல்லது. தலைக்கு மேல் நீர்மட்டம் ஏற இன்னமும் வெகுகாலம் இல்லை.

மற்றபடி, நீங்கள் கண்ணீரோடு பதவி ஏற்கலாம். தப்பில்லை. வீதிக்கு வீதி வித்தியாசமாக போஸ்டர் அடித்து ஒட்டலாம். தப்பில்லை. பேருந்துகளை நிறுத்துங்கள், தியேட்டர்களை நிறுத்துங்கள், சினிமா நடிகர்களை வீதிக்கு கொண்டு வாருங்கள், கேபிளைத் துண்டியுங்கள், தீக்குளியுங்கள், உண்ணாவிரதம் இருங்கள், போராட்டங்களில் பெட்ரோல் ஊற்றுங்கள். சகித்துக் கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே நாறிக் கொண்டிருக்கும் இளஞ்சமுதாயத்தை மேலும் நாறடிக்க வேண்டாம். பள்ளிகளை விட்டுவிடுங்கள். குழந்தைகள் இதிலிருந்தாவது தப்பிக்கட்டும்.