Oct 19, 2014

உயிர்ப்பலி சரியா? தவறா?

நேற்று யூடியூப்பில் ஒரு சலனப்படம் பார்த்தேன். குலை நடுங்கிவிட்டது. எருமைகளையும், ஆடுகளையும் வரிசையாகக் கட்டி வைத்திருக்கிறார்கள். அதுவொரு மிகப்பெரிய கொட்டகை. அந்தக் கொட்டகைக்குள் ஏகப்பட்ட இளைஞர்கள் கையில் வெட்டருவாளோடு சுற்றுகிறார்கள். அவர்கள் போதையில் இருப்பதாக பின்னணிக் குரல் சொல்கிறது. எதைப் பற்றியும் தெரியாமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கும் எருமையின் கழுத்துக்கு அருகில் சென்று நிற்கிறார்கள். அரிவாளை ஓங்கி அரிவாளை அதே வேகத்துடன் இறக்குகிறார்கள். தலை துண்டித்து விழுகிறது. எருமை எந்த அசைவும் இல்லாமல் நிலத்தில் விழுகிறது.

2009 ஆம் ஆண்டு நேபாளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அது. அங்கு காதிமை (Gadhimai) என்றொரு கோவில் இருக்கிறது. பெண் தெய்வம். அந்தக் கோவிலில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடக்கிறது. அந்தத் திருவிழாதான் உலகிலேயே மிக அதிகளவில் உயிர்ப்பலி கொடுக்கப்படும் நிகழ்வு என்று விக்கிப்பீடியாவில் எழுதி வைத்திருக்கிறார்கள். இரண்டரை லட்சம் விலங்குகளைக் கொல்கிறார்கள். எருமைகள், ஆடுகள், புறா, எலி என்று வெட்டித் தள்ளுகிறார்கள். வெட்டப்பட்ட விலங்குகள் அந்தக் களத்திலேயே கிடக்கின்றன. யாரோ ஒரு புண்ணியவானுக்கு மகன் பிறந்ததற்காக அவர் மட்டுமே நூற்றியெட்டு எருமைகளை பலி கொடுத்திருக்கிறார்.

இந்நிகழ்வு குறித்தான டாக்குமெண்டரிகளும் இணையத்தில் இருக்கின்றன. பெரும்பாலானவை ‘உயிர்ப்பலியை நிறுத்துவோம்’ என்கிற வகையிலான டாக்குமெண்டரிகள். 

பரிதாபமான விலங்குகள்தான். ஆனால் இதைத் தவறு என்று சொல்வதற்கு எனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஆனால் நாக்கு மிளகுசாறுக்கு ஏங்கிப் போகிறது. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் வெட்டப்படும் ஆடுகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று மனம் கணக்குப் போடுகிறது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான கோழிகள் சட்டியில் குழம்பாக கொதிக்கின்றன. பல கோடி மீன்கள் ரோட்டுக்கடையிலிருந்து ரெஸ்டாரண்ட் வரையிலும் வறுவலாக மணக்கின்றன. இந்த லட்சணத்தில் ஒரே நாளில் வெட்டப்படும் இருபதாயிரம் எருமைகளைக் காப்பாற்ற வேண்டும் என எப்படிச் சொல்வது?

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நவம்பர் மாதம் விழாவுக்குத் தயாராகி வருகிறார்கள். பல லட்சம் மக்கள் கூடுவார்கள் என்கிறார்கள். பிராணிகள் நல ஆர்வலர்கள் இந்நிகழ்வைத் தடுத்து நிறுத்த வேண்டுமென குரல் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். நேபாள அரசு இதைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமே இல்லை என்று சொல்லி வருகிறது. பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் இந்நிகழ்வை ஒரே சட்டத்தில் தடுத்து நிறுத்தினால் அதன் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என அரசாங்கம் சொல்கிறது. அரசு சொல்வதும் சரியென்றுதான் படுகிறது.

உயிர்ப்பலி கூடாது என்றால் அது எந்தவிதத்திலும் இருக்கக் கூடாது. ‘சாப்பிடுவதற்காக வெட்டலாம்’ என்று நம்மால் கறிக்கடைகளையும், கேரளாவுக்கான மாடு ஏற்றுமதியையும் ஏற்றுக் கொள்ள முடியுமானால் ‘நம்பிக்கைக்காக வெட்டலாம்’ என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம். உயிர்ப்பலி என்பது காலங்காலமாக நம் பண்பாட்டில் ஊறிப் போன விஷயம். நடுகற்களைப் பற்றித் தேடிப் போனால் தன்னைத்தானே உயிர்பலி கொடுத்தவர்கள் பற்றிய வரலாறுகளையெல்லாம் எடுக்க முடிகிறது. தலையை ஒரு வளைந்து நிற்கும் ஒரு குச்சியில் கட்டிக் கொண்டு- தலை வெட்டப்படுவதற்கு தோதாக இழுத்துப் பிடிக்கும் குச்சி அது- தனது கழுத்தை தானே அரிந்து கொண்ட வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. பிற்காலத்திலும் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவும், அரசனுக்கு நன்மை நிகழ வேண்டும் என்பதற்காகவும் உயிர்பலி கொடுத்திருக்கிறார்கள். இந்த உயிர்ப்பலிகளில் பெரும்பாலும் உயிரை இழந்தவர்கள் மனிதர்கள்தான். 

அந்த நிலையிலிருந்து வெகு தூரம் முன்னேறி வந்துவிட்டோம். ஆனால் இன்னமும் காளி, கருப்பராயன் கோவில்களில் ஆடுகளையும் கோழிகளையும் பலி கொடுத்துக் கொண்டுதான்  இருக்கிறார்கள். அது ஏதாவதொரு வகையில் எளிய மனிதர்களுக்குத் தேவையானதாக இருக்கிறது. சாகக் கிடக்கும் தன் கணவனைக் காபாற்றிவிட்டால் ஒரு சேவலை அறுப்பதாக வலுப்பூர் அம்மனிடம் வேண்டிக்கொண்டு ‘ஆத்தா காப்பாத்திடுவா’ என்கிற நம்பிக்கையில் வாழும் சாதாரண பெண்மணிக்கு உயிர்ப்பலி என்பது தேவையானதாக இருக்கிறது. ‘இந்த வருஷம் மழை பொய்க்காம இருந்துட்டா ஒரு கிடா வெட்டிடுறேன்’ என்று தோட்டத்துக் கருப்பராயனுக்கு வேண்டிக்கொள்ளும் ஒரு எளிமையான விவசாயிக்கு இந்த வேண்டுதல்தான் வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது. 

இது போன்ற சாதாரண மக்களின் நம்பிக்கைகள் காலங்காலமாக இருந்து வருபவை. அவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும் என்று மேனகா காந்தி போன்றவர்கள் குரல் எழுப்புவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வீதிக்கு வீதி KFC கடைகளை அனுமதித்துவிட்டு வலுப்பூர் அம்மனுக்கு கோழி அறுக்கக் கூடாது என்று சொல்வதில் எந்த நியாமும் இருப்பதாகத் தெரியவில்லை. KFCயில் மட்டும் அனஸ்தீசியா கொடுத்துவிட்டு கோழியை அறுக்கிறார்களா என்ன? நாமக்கல்லில் வளர்க்கப்படும் பண்ணைக் கோழிகள் பெங்களூருக்கும் சென்னைக்கும் வந்து சேர்ந்து உயிரைக் இழப்பது வரையிலும் அனுபவிக்கும் வதையில் முப்பது சதவீதத்தைக் கூட கோவில்களில் வெட்டப்படும் விலங்குகள் அனுபவிப்பதில்லை என்றுதான் நினைக்கிறேன்.

அதற்காக உயிர்ப்பலியை ஆதரிக்கலாமா என்று மடக்கினால் என்னிடம் சரியான பதில் இல்லைதான். அந்த விலங்குகள் பரிதாபமானவைதான். அவைகளுக்கும் வலி உண்டுதான். இந்த மனிதர்களிடம் சிக்கியது தவிர வேறு எந்த பாவத்தையும் அவை செய்யவில்லை. அவைகளை வெட்டுவது பாவம்தான். ஆனால் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மனமுருகி வேண்டிக் கொள்ளும் எளிய மனிதனின் பார்வையில் இருந்து பார்த்தால் இந்த உயிர்ப்பலியை தவறு என்று சொல்ல முடியவில்லை.