Jul 30, 2014

அனுபவம் இருக்கா?

இந்தத் தலைமுறையில் எத்தனை பேருக்கு முதல் வேலை திருப்தியானதாக இருந்தது என்று தெரியவில்லை. எனக்கு திருப்தியாக இருக்கவில்லை. வேறு என்ன? சம்பளம்தான். நம்மோடு படித்தவனெல்லாம் நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் போது நமக்கும் மட்டும் கிள்ளிக் கொடுக்கிறார்களே என்ற அங்கலாய்ப்புதான். வாய்ப்பு கிடைத்தால் எட்டிக் குதித்துவிடலாம் என்று பற்களை கடித்துக் கொண்டு காத்திருந்தேன். ஐடி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் எனக்குத் தெரிந்து டிசிஎஸ்ஸில் சேர்ந்தவர்கள் மட்டும் பத்து பன்னிரெண்டு வருடங்களாக அங்கேயே ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். பத்து வருடங்களில் ஆறேழு வருடங்களாவது அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் சுவிட்சர்லாந்திலும் காலம் ஓட்டிவிடுகிறார்கள். வேலையை விட்டு துரத்துவதும் இல்லை என்கிறார்கள். அரசாங்க உத்தியோகம் மாதிரிதான். 

மற்ற  நிறுவனங்களில் சேர்ந்தவர்களும் கூட வெகுகாலமாக அங்கேயே காலம் ஓட்டிக் கொண்டிருக்கக் கூடும். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் இந்த நிறுவனத்தில் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் அங்கேயே இருக்கிறார்கள். மற்றபடி பெரும்பாலானோர் ஜம்ப்தான். 

முப்பது சதவீதம் சம்பள உயர்வு ஐம்பது சதவீதம் உயர்வு என்பதெல்லாம் வெகுவாக குறைந்துவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்கேல் வைத்திருக்கிறார்கள். ஒரு வருட அனுபவத்திற்கு ஒன்றரை லட்சம் சம்பளம். பத்து வருட அனுபவமிருந்தால் வருடச் சம்பளம் பதினைந்து லட்சம். அதுவும் எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. மூக்கால் அழ வேண்டியிருக்கிறது. கிடைத்தவன் அதிர்ஷ்டசாலி.

வருடத்திற்கு ஒன்றரை லட்சம் என்கிற இந்தக் கணக்கு கூட குறிப்பிட்ட புள்ளி வரைக்கும் தான். பத்து பன்னிரெண்டு வருடங்கள் வரைக்கும் அனுபவம் இருந்தால் இந்த விகிதத்தில் கொடுக்கிறார்கள். அதற்கு மேல் போய்விட்டால் ‘ஓவர் எக்ஸ்பீரியன்ஸ்’ என்று சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பதினைந்து வருடங்கள் அனுபவம் இருப்பவரை வேலைக்கு எடுத்தால் மேனேஜர் ஆக்க வேண்டும். வேறு வழியே இல்லையென்றால்தான் மேல்மட்ட ஆட்களை நிறுவனங்கள் வெளியிலிருந்து எடுக்கின்றன. முடிந்தவரை தங்கள் பணியாளர்களுக்குத்தான் பதவி உயர்வு கொடுக்க விரும்புகிறார்கள், அதனால்தான் நாற்பது வயதை நெருங்க நெருங்க விழிப்பான ஆட்கள் வேறு வகையில் வருமானத்திற்கு வழி செய்து கொள்கிறார்கள். நாற்பதைத் தாண்டிய பிறகு நிறுவனம் நம்மை வெளியே போகச் சொன்னால் என்ன செய்வது? எனது முன்னாள் மேனஜர் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாக பிரியாணிக்கடையில் ஐந்து சதவீதம் முதலீடு செய்தார். ஐந்து சதவீதம் முதலீடு செய்தால் என்ன வருமானம் என்று யோசித்தால் மாத வருமானம் லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறதாம். அந்த பிரியாணிக்கடை இப்பொழுது பெங்களூரில் ஏரியாவுக்கு ஏரியா கிளை விரிக்கிறது. அப்புறம் வருமானம் வராமல் என்ன? 

அது இருக்கட்டும்.

மென்பொருள் துறையில்தான் இப்படி. உற்பத்தி துறையில் இப்படி இல்லை. மீசை நரைக்க நரைக்க மதிப்பு ஏறிக் கொண்டே போகிறது. முதலில் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். வருடம் இரண்டாயிரம் ரூபாய் சம்பள உயர்வு கொடுக்கிறார்கள். முப்பத்தைந்து வயது வரையிலும் கொஞ்சம் சிரமம்தான். ஆனால் முப்பத்தைந்து வாக்கில் தங்களது துறையில் கைதேர்ந்தவர்களாகிவிடுகிறார்கள். கிட்டத்தட்ட பதினைந்து வருட அனுபவங்கள். எந்த ஸ்க்ரூ லூஸ் ஆனால் எந்திரத்தின் சப்தம் மாறும் என்பது வரைக்கும் தெரிந்து கொள்கிறார்கள். பிறகு அவர்களது மதிப்பே தனிதான். வேலையே இல்லையென்றாலும் நாற்பது வயதில் ஆலோசகர்களாக கொடிகட்டுபவர்கள் அதிகம். நாற்பத்தைந்து வயதில் மொதுமேலாளர் அளவுக்கு ஆகிவிடுகிறார்கள்.

பி.ஈ முடித்துவிட்டு ஐடியிலேயே வேலை வேண்டும் என்று விரும்பும் விட்டில் பூச்சிகளிடம் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். வளாக நேர்முகத் தேர்வுகளிலோ அல்லது சுலபமாகவோ மென்பொருள் துறையில் வேலை கிடைத்துவிட்டால் பரவாயில்லை. ஆனால் வேலையே கிடைக்காமல் இருக்கும் போது ‘எனக்கு ஐடியில்தான் வேலை வேண்டும்’ என்று தவமிருக்க வேண்டியதில்லை. ஒருவேளை விபத்து போல வேறு துறைகளில் வேலைக்குச் சேர நேரிட்டால் உடனடி சம்பளத்தைப் பற்றி கவலைப்படாமல் அனுபவத்தை பெற்றுக் கொள்வதுதான் நல்லது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒருவர் அழைத்திருந்தார். பெங்களூரில்தான் இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பாக மென்பொருளில் வேலை தேடித்தான் இங்கே வந்திருக்கிறார். வந்தவருக்கு ஊடகத்துறையில் வேலை கிடைத்துவிட்டது. இணைய ஊடகம். அந்தத் தளத்திற்கு ஒரு பிரிவின் செய்திகளை எழுதித்தருவதுதான் வேலை. வேலை பிடித்திருக்கிறதாம். ஆனால் சம்பளம்தான் பிடிக்கவில்லை என்றார். அவரது அம்மா அப்பாவுக்கெல்லாம் ஒரே வருத்தம். பொறியியல் முடித்துவிட்டு இவ்வளவு குறைவாகச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறான் என்று புலம்புகிறார்களாம். அவர்களுக்கு வருத்தம் இருக்கத்தானே செய்யும்? மகன் ப்ளைட் ஏற வேண்டும். லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஏகப்பட்ட கோட்டைகளை கட்டியிருப்பார்கள். இப்பொழுது சொற்ப சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தால் வருந்தத்தானே செய்வார்கள்? தங்களது கோட்டையிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு செங்கல்லை பிடுங்கிக் கொண்டிருப்பார்கள்.

எனக்கு என்னவோ அவர் சரியான துறையில் இருப்பதாகத்தான் தெரிகிறது. பொறியியல் முடித்துவிட்ட ஒரே காரணத்திற்காக எல்லோரும் விழும் குழியிலேயே அவரும் விழ வேண்டும் என்றில்லை. இணைய ஊடகம் என்பது மிகப்பெரிய பூதமாக வளரப் போகிறது. இன்று கூட பிலிப்கார்ட் நிறுவனர் ‘சீனாவில் ஒன்பது வருடங்களுக்கு முன்பாக எப்படி இணையப்பயன்பாடு இருந்தததோ அப்படித்தான் இந்தியாவில் இன்று இருக்கிறது’என்று பேசியிருந்தார். ஆக இந்த ஊடகத்திற்கான எதிர்காலம் என்பது மிகப் பிரகாசமானது. இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் பன்மடங்கு வளரப் போகிறது. அப்பொழுது இந்தத் துறையில் வல்லுனர்களுக்கான தேவை என்பது வதவதவென இருக்கும். வெறும் வெப்சைட் டெவலப்மெண்ட் மட்டும் வேலை இல்லை- இணையதளங்களின் உள்ளடக்கம் எழுதுபவர்களுக்கான தேவையைச் சொல்கிறேன்.

இந்த வேலையைச் செய்வதற்கு ஒரு அடிப்படைத் தகுதி இருக்கிறது. வாசகர்களின் நாடி பார்த்துப் பழக வேண்டும். எதை எழுதினால் வாசிப்பார்கள். எப்படி எழுதினால் மனதுக்குள் கைதட்டுவார்கள் என்று தெரிய வேண்டும். அதை அறிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அனுபவத்தில்தான் வரும். கட்டுரைகளுக்கான தலைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில் கூட சூட்சமம் இருக்கிறது. இதையெல்லாம் தெரிந்து கொள்ள சிலருக்கு ஐந்து ஆண்டுகள் ஆகலாம் சிலருக்கு பத்து ஆண்டுகள் ஆகலாம். ஆனால் இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பவருக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என நம்புகிறேன். பெரும்பாலான வியாபாரங்களும் விளம்பரங்களும் இணையதளம் வழியாகவே நடக்கத் தொடங்கும் போது இந்தத் துறையில் அனுபவமுள்ளவர்களுக்கும் வாசகர்களுக்கு ஏற்ப கட்டுரைகளை எழுதத் தெரிந்தவர்களுக்கும் வாய்ப்புகள் நிரம்பத் துவங்கும்.

ஒரேயொரு எச்சரிக்கையை மட்டும் அவருக்குச் சொல்ல வேண்டியிருந்தது. எதிர்காலத்தில் இணைய ஊடகத்தில் தமிழ் எப்படி இருக்கும் என்று சரியாகக் கணிக்க முடியவில்லை. அதனால் தமிழில் மட்டும் புலமையை வளர்த்துக் கொள்வது சிக்கலாகிவிடக் கூடும். தமிழில் கலக்கலாம்தான். ஆனால் பிழைப்பு நோக்கில் யோசிக்கும் போது ஆங்கிலத்திலும் கட்டுரைகளை எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்னதான் தமிழின் சில சேனல்களிலும் புதிதாகத் தொடங்கப்பட்ட செய்தித்தாள்களிலும் சம்பளத்தை அள்ளிக் கொடுத்தாலும் ஆங்கில ஊடகங்களோடு ஒப்பிடும் போது இது குறைவுதான்.

6 எதிர் சப்தங்கள்:

Avargal Unmaigal said...

//தமிழில் மட்டும் புலமையை வளர்த்துக் கொள்வது சிக்கலாகிவிடக் கூடும். தமிழில் கலக்கலாம்தான். ஆனால் பிழைப்பு நோக்கில் யோசிக்கும் போது ஆங்கிலத்திலும் கட்டுரைகளை எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.////

மிக மிக சரி

harish sangameshwaran said...

போச்சு போங்க.. தமிழோடு சேர்த்து ஆங்கிலத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் னு சொல்லி வாண்டடா வண்டியில ஏறிட்டீங்களே !!! தமிழினக் காவலர்கள் கிட்டருந்து உங்களுக்கு என்னெல்லாம் கண்டனங்கள் மிரட்டல்கள் மறுப்பறிக்கைகள் வரப் போவுதோ....Feeling " என்ன நடக்க போவுதோ".. ( ஓ.. இது பேஸ்புக் இல்லையோ... கஷ்டம் டா சாமி)

சேக்காளி said...

//எனக்கு என்னவோ அவர் சரியான துறையில் இருப்பதாகத்தான் தெரிகிறது//
உங்களுக்கு சரி. அமைதிப்படை அமாவாசைக்கு அரசியல் ல ஆர்வம் இருந்த மாதிரி அவருக்கு அந்த(ஊடகம்) துறையில்ஆர்வம் இருக்கிறதா.

ezhil said...

பொறியியல் முடித்து சாப்ட்வேர் துறைக்கு மட்டுமே ஏங்கிக்கொண்டிருப்போருக்கான நல்ல அறிவுரை ஆனால் கேட்க வேண்டுமே... இதையே யோசித்து மன அழுத்தத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கின்றனர் புதிதாக முடித்து வரும் பொறியியல் இளைஞர்கள்..

mk said...

gud..

Unknown said...

//சொற்ப சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தால் வருந்தத்தானே செய்வார்கள்? தங்களது கோட்டையிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு செங்கல்லை பிடுங்கிக் கொண்டிருப்பார்கள்.//

எங்க வீட்ல செங்கலல்லாம் பிடுங்கி முடிச்சுட்டு இப்ப பில்லர் வரைக்கும் வந்துட்டாங்க....