Jul 29, 2014

வீட்டிலேயே இருக்க முடியாதா?

வீட்டுக்கு பக்கத்தில் ஒரு மின்சாதனக் கடை இருக்கிறது. கடையை நடத்துவது வழக்கம்போல சேட்டு பையன்தான். பையன் இல்லை - ஆண். கைலாஷ். திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது. ஹொசா ரோட்டில் இருக்கும் இந்தக் கடையை பதினைந்து வருடங்களுக்கு முன்பாகவே இன்னொரு சேட் ஆரம்பித்திருக்கிறார். பிறகு கைலாஷின் குடும்பம் விலைக்கு வாங்கிக் கொண்டது. முதலில் நான்கைந்து வருடங்களுக்கு இவரது தம்பிதான் நடத்தியிருக்கிறார். ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்தாயிரம் வரைக்கும் வியாபாரம் ஓடிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் கைலாஷ் ஒரு வங்கிப் பணியாளர். தனியார் வங்கிதான். ஆனால் நல்ல சம்பளம் கொடுத்தார்களாம்.

கடந்த இரண்டு வருடங்களாக கைலாஷூடன் எனக்கு பழக்கம். மற்ற கடைகளை விட இவரிடம் இரண்டு ரூபாயாவது குறைவாக இருக்கும். அதைவிட முக்கியம் அவரது பேச்சுதான். நாக்கில் தேன் தடவி பேசுவார். ஏமாற்றுகிறாரோ இல்லையோ அந்த பேச்சுக்காகவே அவர் கடையில் வாங்கிவிடுவேன். நேற்று LED விளக்கு வாங்க வேண்டியிருந்தது. அதை வாங்கச் சென்ற போது கடையை மூடும் நேரம். மழை தூறிக் கொண்டிருந்தது. உடனடியாக வீடு திரும்பாமல் பேசிக் கொண்டிருந்தோம். 

சில வருடங்களுக்கு முன்பாக கடையைப் பார்த்துக் கொண்டிருந்த தம்பி தும்கூர் சென்றுவிட கடையின் பொறுப்பை கைலாஷ் ஏற்றுக் கொண்டார். அவர் வங்கியில் சம்பாதித்ததைவிடவும் கடையில் அதிகமாகச் சம்பாதிக்கிறாராம். இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு நாற்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் வியாபாரம் ஆகிறது. மூன்று சதவீதம் இலாபமாக நின்றால் கூட போதும். பல நாட்களில் ஐந்து சதவீதமே நிற்கிறது. அதனால் பணம் பிரச்சினையில்லை. பிரச்சினையெல்லாம் வீடுதான். மாதத்தில் அமாவாசை மட்டும்தான் விடுமுறை. அன்றும் கூட ஆடிட்டரை பார்க்க வேண்டும்; வசூலுக்குச் செல்ல வேண்டும் என்று நிற்க நேரம் இருப்பதில்லை. மற்ற நாட்களில் எல்லாம் காலையில் எட்டு மணிக்கு கடையைத் திறந்தால் இரவு பத்து மணி ஆகிறது. இரவில் வீட்டுக்குச் செல்லும் போது குழந்தைகள் உறங்கிவிடுகிறார்கள். நீங்கள் வீட்டை கவனிப்பதேயில்லை என்று மனைவிக்கு வருத்தம். அப்பா வீட்டிலேயே இருப்பதில்லை என்று குழந்தைகளுக்கும் வருத்தம். உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கைலாஷ் அலைந்து கொண்டிருக்கிறார். 

இதே பிரச்சினையைச் சொன்ன வேறொரு மனிதரைத் தெரியும். அவர் ஐடி நிறுவனத்தில்தான் பணிபுரிகிறார். சூழல் சார்ந்த நடவடிக்கைகளுக்காக ஒரு என்.ஜி.ஓ நடத்துகிறார். என்.ஜி.ஓ என்றால் உண்மையிலேயே என்.ஜி.ஓதான். சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டிராத ஒரு அமைப்பு. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நான்காயிரம் மரங்களை பெங்களூரில் நட்டிருக்கிறார்கள் என்றால் முடிவு செய்து கொள்ளலாம். மழைக் காலத்தில் செடிகளை நட்டால் உயிர் பிடித்துக் கொள்ளும். அதற்காகத்தான் வெறித்தனமாக களமிறங்கியிருக்கிறார்கள். ஊருக்கு சேவகம் செய்கிறார். ஆனால் மனைவிக்கு புருஷனாக இல்லை; குழந்தைக்கு அப்பனாக இல்லை. சனி, ஞாயிறு ஆனால் மண்வெட்டியைத் தூக்கி தோளில் போட்டபடி கிளம்பிவிடுகிறார். மற்ற நாட்களில் வேலைக்கு ஆட்களைத் திரட்டுவதும், நாற்றுகளை வாங்குவதுமாக இதே வேலையாக அழுகிறார். மனைவியும் குழந்தையும் தகராறு செய்கிறார்கள். ஆனால் விட்டுவிட முடியவில்லை. 

இதில் யாரைக் குற்றம் சொல்வது? வாரத்தில் ஒரு நாளைத்தான் மனைவியும் குழந்தைகளும் தங்களுக்காகக் கேட்கிறார்கள். அதைக் கூட ஆண்களால் ஒதுக்க முடிவதில்லை. கிட்டத்தட்ட பல வீடுகளில் இதே பிரச்சினை உண்டு. ஆண்களால் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி தங்களை குடும்பத்திலிருந்து தற்காலிகமாக அந்நியப்படுத்திக் கொள்ள முடிகிறது. தொழிலைக் காரணம் காட்டலாம். தங்களது லட்சியத்தைக் காரணம் காட்டலாம். நண்பர்களைக் கை நீட்டலாம். உறவுகளைப் பார்க்கச் செல்லலாம்- இப்படி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டைவிட்டு வெளியே செல்கிறார்கள். ஆண்கள் நினைத்தால் நான்கு பேராகச் சேர்ந்து மலைவாசஸ்தலத்திற்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம். சனிக்கிழமை இரவில் நண்பர்களின் வீடுகளில் தங்கலாம். வேலையிருந்தால் அலுவலகத்திலேயே படுத்துக் கொள்ளலாம். இதெல்லாம் எத்தனை பெண்களுக்கு இது சாத்தியம்? அதுவும் திருமணமான பெண்களுக்கு. 

கணவனையும், குழந்தையையும் விட்டுவிட்டு சமூகசேவகம் செய்கிறேன் என்றும் வேலைக்குச் செல்கிறேன் என்றும் ஒரு நாள் கூட வீட்டில் தங்காமல் மனைவி கிளம்பிச் சென்றால் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எத்தனை ஆண்களுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு இல்லை. வெளியில் வேண்டுமானால் பெண்ணுரிமை, சுதந்திரம் என்று தேங்காய் உருட்டலாம். அலுவலகம் முடித்து வரும் மனைவி வீட்டிற்கு வந்து கணினியைத் திறந்தால் கோபம் வந்து தொலைக்கிறது.

யோசித்துப் பார்த்தால் அடிப்படையில் நம் சமூக அமைப்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. நமது மனநிலையும் அதே போலத்தான் இருக்கிறது. வெளியில்தான் இதெல்லாம் மாறிவிட்டது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

பெண்கள் மது அருந்துவதையும், சிகரெட் பிடிப்பதையும்தான் நக்கலடிக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் பார்க்கலாம்.  ஆனால் ஆண்களுக்கு எப்பொழுதும் டாஸ்மாக்கும், மதுபாட்டிலும் ஒரு வீரச்சின்னம்தானே? ‘எங்க ஆபிஸ்ல பெண்கள் குடிக்கிறாங்க’ என்று யாராவது சொல்லும் போது ஏற்படும் கிளுகிளுப்பு ஏன் எந்தக்காலத்திலும் குறைவதில்லை என்று தெரியவில்லை. பாலியல் பற்றி பெண்கள் ஓரிரு வரிகள் எழுதினால் ஏன் மனம் அத்தனை குதூகலப்படுகிறது? இதையெல்லாம் அடுத்த வீட்டுப் பெண்கள் செய்தால்தான் கிளுகிளுப்பும் குதூகலமும். நம் வீட்டுப் பெண்கள் சிகரெட் பிடிப்பதையோ, மது அருந்துவதையோ, பாலியல் பற்றி பேசுவதையோ எத்தனை பேரால் ஏற்றுக் கொள்ள முடியும்? விரல் விட்டு எண்ணும் அளவுக்குக் கூட தேறாது.

குடிப்பது, புகைப்பதையெல்லாம் சுதந்திரம் என்று சொல்லவில்லை. ஆனால் இதிலெல்லாம்தான் நமது லட்சணம் ‘சுருக்’ என்று குத்துகிறது. இதையெல்லாம் ஆண்கள் செய்யலாம். இதையெல்லாம் பெண்கள் செய்யக் கூடாது என்று எந்தக் காலத்திலோ வரையறை செய்யப்பட்ட அத்தனை கோடுகளும் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கின்றன. அவ்வப்போது அவற்றைத் துளி அழித்து மீண்டும் வரைந்து கொள்கிறோம். உலகம் மாறிக் கொண்டிருக்கும் வேகத்தோடு ஒப்பிடும் போது இந்த அழித்து வரையும் வேகம் மிகக் குறைவு. ஆண்களும் சரி பெண்களும் சரி- இந்த வரையறைகளைப் பற்றிய அதீதமான conscious உடனேயே இருக்கிறோம். அதுதான் அடிப்படையான சிக்கல். வரையறைகளின் எல்லைகள் flexible ஆகும் போது எதிர்பார்ப்புகளின் அழுத்தம் குறையக் கூடும். ஆனால் எல்லைகளை மாற்றுவது அவ்வளவு எளிதான காரியமா என்ன?

ஆண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்கள் என்பதன் அட்வாண்டேஜ்களை ஆண்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

கைலாஷூக்கும், சூழலியலாளருக்கும், மிச்சமிருக்கும் ஆண்களுக்கும் இருப்பது ஒரே பிரச்சினைதான். அதே போலத்தான் கைலாஷின் மனைவிக்கும், சூழலியலாளரின் மனைவிக்கும், மிச்சமிருக்கும் மனைவியருக்கும் இருப்பதும் ஒரே பிரச்சினைதான். ஆனால் அதுதான் இப்போதைக்கு தீர்க்கவே முடியாத- நம் ஜீனிலேயே ஊறிய பிரச்சினை.

10 எதிர் சப்தங்கள்:

MMESAKKI said...

சூப்பர் கட்டுரை. அப்படியே கொஞ்சம் சினிமா கட்டுரையும் எழுதுங்க சார்

harish sangameshwaran said...

ஒரு பெண்ணிடம் கடலை போடும் போது " நீங்க ஸ்மோக் பண்ணுவீங்களா"என்றாள். இல்லை என்றேன். "ட்ரிங் பண்ணுவீங்களா" என்றாள். "அடிக்கடி கிடையாதுங்க. எப்பயாச்சும் உண்டு" என்றேன். அதற்கு அவள் "போங்க நீங்க சுத்த வேஸ்ட்டு. நான் மட்டும் பையனா பொறந்திருந்தா ஒலகத்துல இருக்கற எல்லா சரக்கையும் அடிச்சிருப்பேன்"என்ற சினிமா வசனத்தை என்னிடம் ரிப்பீட் செய்தாள்.

Unknown said...

வட. மாநிலங்களில் இந்த நிலை மாறிவருகிறது என்றே கூற வேண்டும். வடகத்தியர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை வரவேற்க ஆரம்பித்து விட்டார்கள். நம்முடைய வாரிசுகளின் காலத்தில் இது சாத்தியமே

”தளிர் சுரேஷ்” said...

குடும்பத்துக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம்தான்! நல்லதொரு பதிவு! நன்றி!

Karuna said...

அருமையான உண்மையான செய்தி, குடுமத்துடன் நாம் ந ம் நேரத்தை ஒத்துக்க வேண்டும்.

அது என் எல்லா கதைகளிலும் மழை தூறும் போது கடைக்கு செல்கிறீர்கள், :-)

Muthuram Srinivasan said...

எனக்கு என்னவோ இந்த கட்டுரையில் முழுக்க உடன்பாடு இல்லை. முதலில் பெண் சுதந்திரம் என்பது என்ன? ஆண்கள் செய்வது எல்லாம் பெண்களும் செய்வது என்பதா? பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் பெரும்பாலும் அவர்களின் பாதுகாப்பு கருதிதான் என்பது என் எண்ணம். இயல்பிலேயே உடல்ரீதியாக பலவீனமானவர்கள் என்பதால்தான் ஆண்கள் அவர்களுக்கு அரணாக இருப்பது என்று உருவாகியிருக்க வேண்டும். காலப்போக்கில் இதனை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக்கி பெண்களை அடிமைகள் போல நடத்த ஆரம்பித்து இருக்கலாம். ஒரு குடும்பத்தில் உள்ள வேலைகள் உடல் அமைப்பின் அடிப்படையிலேயே ஆண்களும், பெண்களும் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் தான் பொருள் தேடுவது, வேட்டையாடுதல்(உணவு தேடுதல்), எதிரிகளிடம் இருந்து காத்தல், இயற்கை சீற்றங்களிடம் இருந்து காத்தல் முதலியவை ஆண்களின் பொறுப்பாகவும், குடும்பத்தை பேணுதல், குழந்தை வளர்ப்பு முதலியவை பெண்களுக்கானதாகவும் இருந்து வந்திருக்கிறது. தலைகீழாய் நின்றாலும் பெண்களின் வேலையை ஆண்கள் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் முழுமையானதாய் இருக்காது. ஆதலால் தான் பழந்தமைளர்கள் பெண்மையை தெய்வத் தன்மையுடன் கொண்டாடி இருக்கிறார்கள்.புனிதம் என்று பாடி இருக்கிறார்கள். நாகரீகம், வாழ்க்கை முறை இவற்றின் வளர்ச்சி காரணமாக ஆனால் ஆண்களின் வேலைகளாக கருதப்பட்ட பொருள் ஈட்டுதல் இன்று பெண்களுக்கும் எளிதாகி விட்டது. வேட்டையாடி உணவுகொண்டுவரத் தேவை இல்லை. ஆனால், இன்னும் பெண்களுக்கான கலையில் ஆண்கள் பெரிதாக தேர்ச்சி பெற முடியவில்லை.இதன் காரணமாகவே ஆண் தனது தனித்தன்மை என்று அடையாளம் காட்ட எதுவும் இல்லாமல் நிற்கிறான்.இது காலம் காலமாக தான் அனுபவித்து வந்த அதிகாரம் பறிபோய்விடுமோ என்கிற ஒரு அச்சதை ஏற்படுத்தி உள்ளது. அதுவே பெண்களின் மீதான ஒரு வித அடக்குமுறையை மூர்க்கமாக திணிக்க காரணமாகிறது. இந்த அடிப்படையில் யோசித்தால் நீங்கள் சொல்லும் பிரச்னைகள் தீர வழி கிடைக்கும்.
" பெண்களுக்கான வேலையை செய்வது இழுக்கு" என்று பெண்களே நம்ப ஆரம்பித்து விட்டது மற்றும் ஒரு பிரச்சினை. அதன் மாண்பு அறியாத தலைமுறையில் இனிமேல் அதைப்பற்றி பேசி ஒன்றும் பிரய்ஜனம் இல்லை. பிளேன் ஓட்டுதல், ராக்கெட் விடுதல், கணிப்பொறி இவை எல்லாவற்றையும் விட ஒரு நிம்மதியான, சந்தோஷமான குடும்பத்தை கட்டமைத்தலே சிறப்பானது என்று யாரவது சொன்னால் அவர்களை நாமே பழமை வாதி என்று கூறி விடுவோம்.

Ram said...

மிக உண்மை மற்றும் மிக நன்றாக அதை எழுதியுள்ளீர்கள், முத்துராம்.

Ram said...

ஒன்று, பெங்கையில் மழை தூறிக்கொண்டே இருக்க வேண்டும், அல்லது மழை தூறும்போது மணியார் எப்படியும் எழுத உட்கார்ந்து நேரத்தை 'வீணடிப்பார்' என்று வீட்டிலுள்ளோர் கணித்து, அவருக்குக் கடைக்குச் செல்லும் வேலைகளைக் கொடுத்திருக்க வேண்டும்.

Anonymous said...

ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும்

Anonymous said...

10th Fazli - Sundar