நேற்று ஒரு அவுட்டிங். தலைக்கு ஆயிரத்துச் சொச்சம் செலவு செய்து ஒரு ரிஸார்ட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். தும்க்கூர் சாலையில் இருக்கிறது அந்த ரிஸார்ட். ஒரு பழைய ஹிந்திப்பட நடிகருடையதாம். சினிமாக்காரர்கள் தங்களின் விவாதங்களுக்கும், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் தங்களின் டீலிங்குக்காகவும் வருவார்களாம். என்ன மாதிரியான விவாதங்கள், என்ன மாதிரியான டீலிங் என்றெல்லாம் கேள்வி கேட்டு வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டாம். நேற்றுக் கூட தமிழ் டைரக்டர் ஒருவரைப் பார்த்தேன். அவருடன் யார் இருந்தார் என்பதைச் சொன்னால் ‘கிசுகிசு’ எழுதியது போல ஆகிவிடும்.
அறை வாடகை பதின்மூன்றாயிரம் ரூபாய்+இருபத்து மூன்று சதவீத வரி. இது சிங்கிள் ரூமுக்கு. அதுவே பிரெசிடென்ஷியல் சூட் என்றால் முப்பத்தைந்தாயிரம் ரூபாய்+வரி. ஒரு இரவு தங்குவதற்கு மட்டுமே இத்தனை செலவு செய்ய வேண்டும். அது போக உணவு, குடியெல்லாம் தனிக்கணக்கு. இப்படியான ஒரு பந்தா ஹோட்டலுக்குத்தான் எங்களை ஓட்டிக் கொண்டு சென்றிருந்தார்கள்.
இந்த ‘டீம் பில்டிங்’ என்றாலே எனக்கு அலர்ஜிதான். தங்களை ‘நிர்மாணித்து’க் கொள்வதற்காக சிலர் இல்லாத சேட்டையை செய்து கொண்டிருப்பார்கள். மொத்த டீமும் தன்னை கவனிப்பது குறித்த பெருமிதம் அவர்கள் முகத்தில் பொங்கி வழியும். பாடுவார்கள் அல்லது நம்மை பாடச் சொல்லி படுத்தி எடுப்பார்கள். ஒரு விளையாட்டு இருக்கும். சாப்பாடு இருக்கும். மதியம் நீச்சல் குளத்தில் இறங்குவார்கள். களைத்துப் போன பிறகு வீட்டுக்கு வந்துவிட வேண்டியதுதான்.
இந்த ஒரு நாள் நடவடிக்கையில் ‘ஒற்றுமை’ வந்துவிடும் என்பதெல்லாம் பொய். ஒரு எழவும் ஒட்டாது. அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தவுடன் அதே பொறாமை, அதே அரசியல், அடுத்தவன் மீதான அதே வன்மம் எட்டிப்பார்க்கும். மூன்று மாதம் கழிந்தவுடன் மீண்டும் இப்படி செலவு செய்வார்கள். அதே ‘டீம் பில்டிங்’ என்பார்கள்.
நூறு பேர் ஒரு நாள் டேரா அடித்ததற்காக அந்த நடிகனுக்கு ஒன்றரை லட்சத்திற்கு ‘செக்’ எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார்கள்.
இதே டீம்தான் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு எட்டாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தார்கள். அநாதை குழந்தைகளின் ஆசிரமத்திற்கு இருபத்தியிரண்டாயிரம் கொடுத்தார்கள். ஆனால் ஒரு வாரம் தொண்டைத் தண்ணீர் காயுமளவுக்கு கத்திக் கத்தி வசூல் செய்தார்கள். இப்பொழுது ஒரே ஒரு நாளுக்கு ஒன்றரை லட்சம். ஆனால் இந்தப் பணத்தை அந்த பாவப்பட்டவர்களுக்கு கொடுக்க முடியாது. ‘டீம் பில்டிங்’க்கு மட்டும்தான் இதைச் செலவு செய்ய முடியும் என்று கம்பெனி பாலிஸி சொல்லும்.
இதைத் தவறு என்றெல்லாம் சொல்லவில்லை. எனக்கு ஒத்துவராது. அவ்வளவுதான்.
ஒரு மூலையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது தம்பி அழைத்தான். விவகாரம் இருந்தது.
நேற்று மட்டும் ஒரே நாளில் அவனது நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட அறுபது பேரை மூட்டை கட்டி அனுப்பி வைத்துவிட்டார்களாம். ஃபயரிங்தான். பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்- ‘ஃபயரிங்’.
காலையில் பதினோரு மணி வாக்கில் ஒவ்வொருவராக வரிசையாக அறைக்குள் அழைத்திருக்கிறார்கள். ஹெச்.ஆர் திடீரென்று அழைக்கும் போதே கிட்டத்தட்ட தெரிந்துவிடும். பதறிக் கொண்டே போக வேண்டியதுதான். டேபிள் சாவி, ஐடி கார்டையெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு செக், அனுபவச் சான்றிதழ், ரிலீவிங் லெட்டர் என அத்தனையும் தயாராக போட்டு வைத்திருந்த கவரைக் கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.
வெட்டப்பட்ட சிலர் கெஞ்சிப் பார்ப்பார்கள், சிலர் அழுது பார்ப்பார்கள், சிலர் கருணையைக் கோருவார்கள். வெட்டுபவர்கள் எதைப் பற்றியும் கண்டுகொள்ளமாட்டார்கள். ‘மேலேயிருந்து ஆர்டர்’ என்பார்கள். அந்த மேலேயிருப்பவன் யாரென்றே தெரியாமல் சாபம் விட்டுவிட்டு வருவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
தம்பியும் பதறித்தான் போயிருந்தான். அவனோடு எங்கள் ஊர்ப்பையன் ஒருவனும் வேலை செய்கிறான். இன்னொரு டீமில் இருந்திருக்கிறான். அவனையும் வெட்டியிருக்கிறார்கள். அடுத்ததாக யார் கழுத்தில் கத்தி இறங்கும் என்று நடுங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அப்பொழுதுதான் என்னை அழைத்தான். ‘பார்த்துக்கலாம் விடு’ என்று சொல்வது மட்டும்தான் சரியான பதிலாகத் தெரிந்தது.
வேலையில் இருந்து அனுப்புவது கூட பிரச்சினை இல்லை. அந்த உடனடித் தாக்குதல்தான் பெரிய மனச்சோர்வைத் தந்துவிடும். ஐ.டியில் வேலை செய்பவனுக்கு வேறு என்ன வேலை தெரியும்? மெக்கானிக்கல் படித்திருந்தாலும் கூட இங்கு வந்து ஸ்பேனர் பிடிக்க மறந்து போனவர்கள்தான் அதிகம். எலெக்ட்ரிக்கல் முடித்திருந்தாலும் மோட்டருக்கும், ஜெனரேட்டருக்கும் வித்தியாசத்தை தொலைத்துவிட்டவர்கள்தான் அதிகம். பிறகு எங்கே போவது?
ப்ராய்லர் கோழிக்கும் ஐடி ஆளுங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. வெளியே துரத்திவிட்டாலும் கூட ஓடவோ பறக்கவோ தெரியாது. இன்னொரு பெட்டிக்குள் போய் அடங்கிக் கொள்ளத்தான் விரும்புவார்கள். ஒரு ஐடி நிறுவனம் துரத்திவிட்டால் இன்னொரு ஐடி நிறுவனம்தான் கதி என்ற மனநிலை அது. இப்படியான மனநிலையைத் தெரிந்து கொண்டுதான் வேட்டையாடுகிறார்கள். ஒருவனைத் துரத்தினால் உள்ளே வருவதற்கு நூறு பேர் வெளியே நிற்கிறார்கள். எவன் எதிர்த்து பேசிவிடுவான் என்ற தைரியம். எந்தச் சட்டமும் தன்னை வளைக்க முடியாது என்ற தெனாவெட்டு.
வெட்டுகிறார்கள்.
ஆட்டுக்கு கூட வெட்டுவதற்கு முன்பாக சிலிர்த்துக் கொள்வதற்கு இரண்டு மூன்று நிமிட இடைவெளி தருவார்கள். ஆனால் இங்கு அதுவும் கூட இல்லை. எதிர்பாராத நேரத்தில் கத்தியை ஓங்கி வீசிவிடுகிறார்கள். துளி பிசகாமல் அது உடலைத் துண்டித்துவிட்டுப் போகிறது.
டிசம்பர், ஜனவரி வந்தால் இப்படி பல நிறுவனங்களில் ‘ஜெர்க்’ கொடுத்துவிடுவார்கள். மார்ச் மாதம் யாரும் ‘சம்பளம் சேர்த்துக் கொடு’ என்று கேட்க முடியாதல்லவா? தம்பிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
மாலையில் வீட்டுக்கு வந்து தம்பி கதைகளைச் சொன்னான். பெரும்பாலான கதைகள் கண்ணீர் விட்டுச் சென்ற கதைகள்தான். அவையெல்லாம் தேவையே இல்லை. இந்த அறுபது பேரில் ஒருவன் மட்டும் சிலிர்த்துக் கொண்டானாம். அந்த சண்டைக்கோழியின் கதை முக்கியம்.
அந்த சண்டைக்கோழி அறைக்குள் நுழைந்த போது ஹெச்.ஆர் மற்றும் அவனது மேனேஜர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். உள்ளே நுழைந்தவுடன் வழமை போல ‘இதெல்லாம் மேலிடத்து உத்தரவு. எதுவும் பெர்சனலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது’ என்றிருக்கிறார்கள்.
தூக்குத்தண்டனைக் கைதியை தூக்கிலிடுபவன் கூட இதையேதான் சொல்வான் என்று நினைக்கிறேன்.
இவன் கொஞ்சம் கூட கட்டுப்பாட்டை இழந்துவிடாமல் ‘எந்த அடிப்படையில் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்’ என்றிருக்கிறான்.
‘மேலிடம் கொடுத்த பட்டியல்’ என்றார்களாம்.
‘பட்டியலில் என் பெயர் இருப்பது மேனஜருக்குத் தெரியாதா?’ என்றிருக்கிறான்.
‘தெரியாது’ என்றிருக்கிறார்கள்.
‘குறைந்தபட்சம் எங்களின் ரியாக்ஷனையாவது உங்களின் மேலிடத்துக்கு தெரிவிப்பீர்களா?’ என்று கேட்டிருக்கிறான்.
‘நிச்சயமாக’.
அவ்வளவுதான்.
கைகளை முறுக்கிக் கொண்டு இரண்டு பேரையும் அதே அறைக்குள் புரட்டி எடுத்திருக்கிறான். எல்லாமே ஊமைக்குத்து போலிருக்கிறது. வெளியே அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் தெரியவில்லை. ஐந்தாறு நிமிடங்கள் பின்னியெடுத்திருக்கிறான்.
எப்படியோ மேனேஜர் மட்டும் சுதாரித்துக் கொண்டு வெளியே தப்பி ஆட்களைத் திரட்டிவிட்டார். ஆனால் ஆட்கள் கூடுவதற்குள் ஹெச்.ஆர் ஆள்தான் நொறுங்கிப் போய்விட்டானாம். காட்டு அடி என்பார்களே- அப்படி. செக்யூரிட்டி ஓடி வந்த போது தனக்கு கொடுக்கப்பட்ட கவரை எல்லாம் எடுத்துக் கொண்டு ‘போலீஸில் வேண்டுமானாலும் சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அமைதியாகியிருக்கிறான் சண்டைக்கோழி.
இவர்கள் போலீஸூக்கு போக மாட்டார்கள். விவகாரம் வெளியே தெரிந்தால் இவர்களுக்குத்தான் பிரச்சினை. அதைத் தெரிந்து கொண்டேதான் சவால் விட்டிருப்பான் போலிருக்கிறது.
இதைக் கேட்டவுடன் எனக்கு ஏகப்பட்ட சந்தோஷமாகிவிட்டது.
ஐடியில் நாய்படாத பாடு படுகிறார்கள். முடிந்தவரைக்கும் உறிஞ்சிக் கொண்டு வேண்டாத போது கறிவேப்பிலை மாதிரி வீசுவார்கள். அழுது கொண்டே போக வேண்டுமா? அட்டகாசமான ரியாக்ஷன் இது. அடுத்த முறை மூன்று நான்கு செக்யூரிட்டிகளை கூட வைத்துக் கொண்டுதான் வெட்டுவார்கள். அந்த பயமாவது வரட்டும்.
ஐடியில் நாய்படாத பாடு படுகிறார்கள். முடிந்தவரைக்கும் உறிஞ்சிக் கொண்டு வேண்டாத போது கறிவேப்பிலை மாதிரி வீசுவார்கள். அழுது கொண்டே போக வேண்டுமா? அட்டகாசமான ரியாக்ஷன் இது. அடுத்த முறை மூன்று நான்கு செக்யூரிட்டிகளை கூட வைத்துக் கொண்டுதான் வெட்டுவார்கள். அந்த பயமாவது வரட்டும்.
இந்த அடிதடியில் கூட்டம் கூடிவிட்டதாம். அவன் வெளியே போகும் போது சொன்னானாம். ‘இவர்களிடம் இருந்து விடுதலை கிடைத்துவிட்டது நண்பர்களே. எமோஷனலாகச் சொல்லவில்லை. இனி மேல்தான் எனக்கான வாழ்க்கை இருக்கிறது..ஊரில் போய் பிழைத்துக் கொள்கிறேன்.நீங்களும்.....’ என்று பேச முயற்சித்திருக்கிறான். சட்டசபையிலிருந்து எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை வெளியேற்றுவது போல குண்டுகட்டாக தூக்கிப் போய்விட்டார்களாம்.
அவன் எந்த ஊர்க்காரன் என்று தெரியவில்லை. ஆனால் தமிழன்தான்.
அது போதுமல்லவா? நீங்களும் நானும் சந்தோஷப்படுவதற்கு. நேற்றிலிருந்து படு உற்சாகமாகத் திரிகிறேன். கையில் யாராவது சிக்கட்டும். ஊமைக்குத்துதான்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment