Nov 6, 2013

கிள்ளி வெச்சுட்டா...

பாப்பாத்திக்கு பக்கத்து ஊர்தான். உண்மையான பெயர் வேறு என்னவோ- யாருக்குத் தெரியும்? ஆனால் ரொம்ப காலமாகவே அவரை பாப்பாத்தி என்கிறார்கள். ரொம்ப காலம் என்றால் அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்பிருந்து. அவருக்கு எழுபது வயதுக்கு மேலாக வயது இருக்கும். எங்கள் அப்பாவுக்கே அறுபத்தைந்து வயது. அவருக்கு அத்தை என்றால் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். குத்துமதிப்பாக கணக்கு போட்டாலும் எழுபதைத் தாண்டி பல வருடங்கள் ஆகியிருக்கும்.

பாப்பாத்தியின் வயதும், பெயரும் இப்பொழுது எந்த விதத்திலும் நமக்கு முக்கியமில்லை. ஆனால் அந்தக் கேரக்டர் இருக்கிறதே- அதை கண்டிப்பாக உங்களிடம் சொல்லிவிட வேண்டும். பாப்பாத்திக்கு எந்த வயதில் இருந்து இந்த பழக்கம் ஒட்டிக் கொண்டது என்று யாருக்கும் தெரியவில்லை. பெரியவர்களிடம் கேட்டால் ‘அவ எப்பவுமே அப்படித்தான்’ என்பார்கள். அவரிடமே கேட்டாலும் கூட பதில் வராது. சிரிப்பார். அவ்வளவுதான். என்ன பழக்கம் என்றுதானே கேட்கிறீர்கள்? கிள்ளி வைத்துவிடுவார். அவ்வளவுதான். வெறும் கிள்ளி வைப்பதுதான். ஆனால் அதை அவ்வளவு சுலபத்தில் விட்டுவிட முடியாது. ஒரு முறை பாப்பாத்தியிடம் கிள்ளு வாங்கியவர்களிடம் கேட்டுப்பார்க்க வேண்டும். ரத்தக் கண்ணீர் வடிப்பார்கள். 

திருமணம், இழவு வீடு, வளை காப்பு, காதணி விழா என்ற எந்தக் கூட்டமாக இருந்தாலும் சரி. கூட்டத்தை பார்த்தால் பாப்ஸூக்கு கை பரபரத்துவிடும். நான்கைந்து பேருக்காவது கிள்ளு போட்டுவிடுவார். அதுவும் உடலில் ‘இந்த’ இடம்தான் என்று குறிப்பிட்ட இடம் எல்லாம் இல்லை. அதே போல ஆண், பெண், குழந்தை, கிழடு என்ற வகைப்பாடும் கிடையாது. வாய்ப்புக் கிடைத்தால் போதும் வகை தொகையில்லாமல் தாளித்துவிடுவார். பாப்பாத்தி கிள்ள ஆரம்பித்ததிலிருந்து எத்தனையோ வருடங்கள் வரைக்கும் கூட்டத்தில் யார் கிள்ளுகிறார்கள் என்று தெரியாமலே ஆளாளுக்கு கிள்ளு வாங்கியிருக்கிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நின்று கைக்கு வாகாக மாட்டும் சதையில் சுட்டுவிரலையும், கட்டைவிரலையும் சேர்த்து வைத்து நூற்றி எண்பது டிகிரியில் ஒரு திருகு. வலி உச்சந்தலை வரைக்கும் ஏறி இறங்குவதற்குள்ளாக கிள்ளிய இடத்தில் சிவந்து, கொஞ்சம் தடித்து அதில் பல சமயங்களில் துளி துளியாக ரத்தம் துளிர்த்து நிற்கும். பாப்பாத்தி ஒன்றுமே தெரியாதது போல முகத்தை வைத்துக் கொண்டு நிற்பார்.

இழவு வீட்டில் கிள்ளு வாங்கியவர்கள் பாக்கியசாலிகள். அழுகையோடு அழுகையாக சேர்த்து அழுது கொள்ளலாம். அதுவே திருமண வீட்டில் என்றால் நினைத்துப் பாருங்கள். ‘யார்றா கிள்ளி வெச்ச கண்டாரோலி’ என்று கோபத்தில் கத்தினால் மொத்த கூட்டமும் கத்தியவர்களைத்தான் திரும்பிப்பார்க்கும் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ள வேண்டும். என்னதான் பல்லைக் கடித்தாலும் கண்களில் நீர் கசியாமல் இருக்குமா? வெறித்தனமாக சாபங்கள் கொடுப்பதைத் தவிர வேறு வழியிருக்காது. அதைத்தான் அதிகபட்சமாகச் செய்ய முடியும். பாப்பாத்திக்கு சாபம் என்பது சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது மாதிரி. கவலையே படாமல் அடுத்த சதையை விரல்கள் தேடிக் கொண்டிருக்கும். 

எத்தனை நாளைக்குத்தான் தப்பிக்க முடியும்? பாப்பாத்தி மாட்டிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அதுவும் அவரது திருமணப் பந்தலில். மாப்பிள்ளை ஏற்கனவே வந்து அமர்ந்துவிட்டார். அந்தக் காலத்தில் ஐயர் எல்லாம் இல்லை. அருமைக்காரர் நடத்தி வைப்பதுதான் திருமணம். பெண்ணை அழைத்து வரச் சொன்ன போது பாப்பாத்தி பாந்தமாக அமர்ந்து கொண்டாள். அத்தனை கூட்டத்தை பார்த்தவளுக்கு கையில் அரிப்பெடுத்துக் கொண்டது. ஆனால் பக்கத்தில்தான் யாரும் இல்லையே. கை அடிக்கடி மாப்பிள்ளையை நோக்கி போகிறது. ஆனால் ஒருவாறு சமாளித்துக் கொண்டாள். எந்த ஆசையையும் மிக மூர்க்கத்தனமாக அடக்கி வைத்திருந்தால் ஒரு சமயத்தில் மொத்தக் கட்டுப்பாட்டையும் இழந்துவிடுவோம். அப்படித்தான் ஆகிவிட்டது. பாப்பாத்திக்கு அருகில் இருக்கும் ஒரே ஜீவன் மாப்பிள்ளைதான். பட்டு வேஷ்டி, சட்டையும், தலையில் குடுமியோடு சேர்ந்த கிராப்புமாக அமர்ந்திருந்த மாப்பிள்ளைக்கு கெட்டநேரத்திலும் ஒரு நல்ல நேரம். திருகு போட்டுவிட்டாள். அதுவும் தொடையில். இங்கு தொடை என்று சொல்வது சபை நாகரீகம் கருதி என்று புரிந்து கொள்க.

அவன் கடுப்பிலும் வலியிலும் என்னனென்னவோ சொல்லிக் கத்திக் கொண்டிருக்கும் போதே பட்டுவேஷ்டி சிவப்பு நிறத்தில் கம்யூனிஸ்டாக மாறிக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் எல்லை மீறிப் போனால் நக்ஸலைட்தானே? வலி பொறுக்க முடியாத மாப்பிள்ளை ஓங்கி ஒரு அடி போட்டுவிட்டான். பாப்பாத்தி சுருண்டு விழ, காரணத்தைச் சொல்லிவிட்டு எனக்கு இந்த கல்யாணமே என்று ஓடியவன் தான். அந்தக் காலமாக போய்விட்டதால் அதோடு சோலி சுத்தம். பாப்பாத்தியை யாரும் கட்டிக் கொள்ளவில்லை. கடைசி வரைக்கும் தனிக்கட்டைதான்.

இத்தனை காலத்திற்கு பிறகு அவரைப் பார்த்து வர வேண்டும் என்று  அப்பாவுக்கு விருப்பம். 

சென்றிருந்தோம். 

பாப்பாத்திக்கு இப்பொழுது கூன் விழுந்துவிட்டது. தலைமுடிகள் திருகி கயிறு கயிறாகத் தொங்குகின்றன. துணைக்கு யாருமே இல்லாத வீட்டில் கயிற்றுக் கட்டிலில் சுருண்டு கிடக்கிறார். பாலப்பாளையத்தில் ஒன்றேகால் ஏக்கர் காடு அவர் பெயரில் இருக்கிறது. அந்தக் காலத்தில் மிளகாயோ தக்காளியோ விளையுமாம். மூட்டை கட்டி அவரே மாட்டுவண்டி ஓட்டிக் கொண்டு சந்தைக்கு போன காலம் என்பது கனாக்காலம். இப்பொழுது பொதுக்கிணறு காய்ந்துவிட்டது. அதனால் தண்ணீர் வசதி இல்லை. மற்ற காட்டுக்காரர்கள் போர்வெல் போட்டு விவசாயம் செய்கிறார்கள். ஆனால் பாப்பாத்தியின் காடு வீணாகத்தான் கிடக்கிறது மழை பெய்தால் சோளம் விதைப்பாராம். இரண்டு மூன்று வருடங்களாக அதுவும் இல்லை. கிடையில் விழுந்த உடனே பக்கத்து தோட்டத்துக்காரருக்கு காட்டை கிரயம் செய்து கொடுத்துவிட்டார். காடு வாங்கியதற்கு பலனாக அவர்கள் கஞ்சி ஊற்றுகிறார்கள். இனி செத்துப் போனால் தூக்கி வீசுவார்கள். அவ்வளவுதான்.

பாலப்பாளையம் சென்றிருந்த போது பாப்பாத்தி கிழிந்த துணியைப் போல கயிற்றுக் கட்டிலில் கிடந்தார். அருகில் யாரும் இல்லை. பாப்பாத்தியால் அப்பாவை கண்டு கொள்ள முடியவில்லை. அப்பா அழைத்துப் பார்த்தார். ம்ஹூம். எதுவுமே காட்டிக் கொள்ளவில்லை. என்னை அழைத்து பாப்பாத்தியின் கைகளை பார்க்கச் சொன்னார். அது எதையோ துழாவிக் கொண்டிருந்தது. அப்பா தனது கையை அருகில் கொண்டுபோனார். கிழவி நிச்சயம் சந்தோஷம் அடைந்திருக்க வேண்டும். தனது இரண்டு விரல்களையும் அருகருகே கொண்டுவந்தாலும் கிள்ளுவதற்கு தெம்பு இல்லை போலிருக்கிறது. ஆனாலும் முயற்சித்தார். கிள்ள முடியவில்லை. விடுவாரா? கண்களை மூடிக் கொண்டே இன்னொரு கிள்ளு. இப்பொழுது கிள்ளிவிட்டார். அப்பா விடுக்கென்று கையை இழுத்தார். அப்பொழுது  பார்க்க வேண்டுமே! கிழவி படு சந்தோஷமாகக் சிரித்தது. அது மென் புன்னகை. அதே வேகத்திலேயே முகத்தை இயல்பாக மாற்றிக் கொள்ள முயற்சித்தது. நடிக்கிறாராம். அந்த சந்தோஷ கணம் ஒரு பூ மலர்வதைப் போலவோ அல்லது ஒரு குழந்தை சிரிப்பதைப் போலவோ இருந்தது என்றால் பொருத்தமாகத்தான் இருக்கும். அப்பாவுக்கு திருப்தி. “இனி அந்தக் கிழவி சந்தோஷமாகச் சாகும்” என்று சொல்லிவிட்டு எழுந்தார். வாசலுக்கு அருகில் வந்து திரும்பிப் பார்த்தோம். கிழவி இன்னும் சிரித்துக் கொண்டிருந்தது.