கடந்த இரண்டு மூன்று வாரங்களாக சனி, ஞாயிறுகள் வராமலே இருந்தாலும் கூட நன்றாக இருக்கும் என்றிருக்கிறது.
வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஆனால் போதும் - ‘இந்த வாரம் சனி, ஞாயிறுகளில் அலுவலகம் வந்துவிடுங்கள்’ என்று சமிக்ஞை தந்துவிடுகிறார்கள். சமிக்ஞை என்ன சமிக்ஞை- கிட்டத்தட்ட உத்தரவு. சோற்றுப் போசியை சுமந்து கொண்டு அலுவலகம் வந்து பார்த்தால் மொத்தம் நான்கைந்து பேர்தான் இருக்கிறார்கள். வந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தலையில் அம்மிக்கல்லைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்- மிளகாய் அரைப்பதற்கு வசதியாக. யார் வேண்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்.
வழக்கமாக என் தலையில் எப்பொழுதுமே அம்மிக்கல்லைக் கட்டி வைத்திருப்பேன். சென்ற வாரத்தில் தெரியாத்தனமாக பெரிய கல்லாகக் கட்டிக் கொண்டேன் போலிருக்கிறது. அம்மிக்கல்லில் நிறைய இடம் இருக்கிறது என்று ஜூனியர் ஒருவனும் சேர்ந்து மிளகாய் அரைத்துக் கொண்டான். அவன் என்னை விட நான்கைந்து வருடம் ஜூனியர். வயதிலும் அனுபவத்திலும்தான் ஜூனியர். ஆனால் ஆள் ஆஜானுபாகுவாக இருப்பான். அவன் நினைத்தால் என்னை எடுத்து அக்குளுக்குள் இடுக்கி பிடித்துக் கொள்ள முடியும். இருந்தாலும் ஜூனியர் ஜூனியர்தானே!
மீட்டிங் ஒன்றில் ஏதோ நினைப்பில் நான் அமர்ந்திருக்க ‘அதை முடிச்சுட்டுயா? இதை முடிச்சுட்டுயா?’ என்று ஏகப்பட்ட பன்னாட்டு அவனுக்கு. நானும் தெரியாத்தனமாக ‘ஆமாங்க...இல்லீங்க’ என்று பம்மிக் கொண்டிருந்தேன். வெளியே வந்த பிறகு ‘அவனுக்கு எல்லாம் ஏன் பம்முற’ என்று கேட்டு ஆளாளுக்கு தாளித்துவிட்டார்கள். நம் ஆட்கள் எப்பவுமே இப்படித்தான். தனியாக இருக்கும் போதுதான் அட்வைஸ் செய்வார்கள். மீட்டிங்கில் ஒருத்தராவது ‘மணியை கேள்வி கேட்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?’ என்று அவனைக் கேட்டிருந்தால் விழித்திருப்பேன்.
அத்தனை பேர்களுக்கு முன்னால் அவமானப்படுத்திவிட்டான். அதுவும் ஏகப்பட்ட பெண்கள் வேறு. ஜீன்ஸ் அணிந்த குஜராத் பெண்ணொருத்தியும் அந்த மீட்டிங்கில் இருந்தாள். அவளிடம் கெத்துக் காட்டுவதற்கு என்னை சட்னியாக்கிக் கொண்டான். இருக்கட்டும். அடுத்த மீட்டிங்கில் அவன் மூக்கு மீது குத்திவிடலாம் என்று கைகளை நிலத்தில் உரசிக் கொண்டிருக்கிறேன்.
சொந்தக் கதை சோகக் கதையை எழுதியபடி முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன். இந்த வாரமும் அலுவலகத்திற்கு வரச் சொல்லிவிட்டார்கள். மற்ற நாட்கள் என்றால் வந்துவிடலாம். நாளைக்கு டிஸ்கவரி புக் பேலஸில் மீட்டிங் இருக்கிறதல்லவா? ‘வேண்டுமானால் சனிக்கிழமை அலுவலகம் வருகிறேன். ஆனால் ஞாயிறு வருவதற்கு வாய்ப்பே இல்லை’ என்று சொல்லிவிட்டேன். போனால் போகிறது என்று அனுமதித்துவிட்டார்கள்.
உண்மையில் சனிக்கிழமை இரவே சென்னையை அடைந்துவிட வேண்டும் என்றுதான் விரும்பினேன். முதற்காரணம்- பகலில், அதுவும் பேருந்தில் சென்னைக்கு பயணிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும். எட்டு மணி நேரம் முழுமையாகக் கிடைக்கும். பெரிய நாவல் ஒன்றை எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாசித்துவிடலாம். அப்படி நிறைய நாவல்களை சென்னை-பெங்களூர் பயணத்தின் போது வாசித்த அனுபவம் உண்டு. அதை விட முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது. அதை வெளியே சொல்வதால் பந்தா செய்கிறான் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆனாலும் சொல்லிவிடுகிறேன்.
இன்று இரவிலிருந்து நாளை இரவு வரை நான் சென்னையில் தங்குவதற்கு ஒரு அறையை ரிசர்வ் செய்து கொடுத்திருக்கிறார் ஒரு மருத்துவர். 'இது என்ன பெரிய மேட்டர்' என்றுதான் தோன்றும். ஆனால் இதுவரை அவரை நேரில் கூட பார்த்ததில்லை. அந்த ஹோட்டலின் வெப்சைட்டில் பார்த்தால் குறைந்தபட்ச அறை வாடகை நான்காயிரத்தில் தொடங்குகிறது என்று போட்டிருக்கிறார்கள். தூக்கிவாரிப் போட்டது.
சென்னை வரும் போது முன்பெல்லாம் நண்பர்களின் அறையில் ஓசியாக ஒட்டிக் கொள்வேன். இப்பொழுதெல்லாம் தி.நகர் ரத்னா கபேயில் ஐந்நூறு ரூபாய் கொடுத்தால் நாற்றமடிக்கும் அறை ஒன்றைக் கொடுப்பார்கள். வீட்டில் இருந்து கொண்டு வந்திருக்கும் துண்டை விரித்து அதன் மீது படுத்துக் கொண்டால் படுக்கையின் ‘கப்பு’ அவ்வளவாகத் தெரியாது. அதற்கு அதிகமாக செலவு செய்யவும் எனக்கு மனசு வராது. அதனால் போதும் என்று நினைத்து பொன் செய்து விடுவேன்.
இவர் செய்திருக்கும் காரியம் படு ஆச்சரியம் எனக்கு.
எதற்காக இவ்வளவு செய்கிறார் என்று யோசனையாக இருந்தது.
‘எனக்கு அந்த ஹோட்டலில் கன்செஷன்ஸ் இருக்கு. அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க’ என்றார். ஹோட்டல்காரர்கள் இனாமாகவே கொடுத்தாலும் அதை வாங்கித் தருவதற்கு ஒரு மனசு வேண்டும் அல்லவா? அப்படியே மனசு இருந்தாலும் கொடுப்பதை வாங்கிக் கொள்வதற்கு நமக்கும் ஒரு தகுதி வேண்டும்.
‘வேண்டாம்’ என்று தவிர்க்கத்தான் முயற்சித்தேன்.
‘தினமும் நீங்கள் எழுதுவதை வாசிக்கிறேன். பணம் முக்கியமில்லை. இது ஒரு courtesy’ என்றார். இத்தனைக்கும் நாளை அவர் சென்னையிலும் இல்லை. ஏதோ ஒரு கருத்தரங்குக்காக வெளியூர் செல்கிறார். சந்திக்கப் போவதுமில்லை.
அவரது சிரமங்களுக்காகவேண்டியாவது சனிக்கிழமை இரவே சென்னை வந்து அந்த அறையில் தங்கிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பாருங்கள். அலுவலகம் வரச் சொல்லிவிட்டார்கள்.
இன்று காலையில் ஹோட்டலுக்கு ஃபோன் செய்த போது ‘எப்பொழுது வருவீர்கள்?’ என்றார்கள்.
‘நாளை காலை’ என்றேன்.
‘நாளைக்கு காலை வந்து மாலையே காலி செய்துவிடுவீர்களா?’ என்றார்.
‘ஆமாம்’ என்று சொன்ன போது குற்றவுணர்வாகத்தான் இருந்தது. ஒரே ஒரு பகல் தங்குவதற்கு நாலாயிரத்து சொச்சம் செலவு.
வெறும் பதின்மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாயை கடனாக வாங்கிக் கொண்டு திரும்பத் தரவில்லை என்பதற்காக அடுத்தவன் மண்டையை உடைத்த சண்டையை ஓரிரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் பார்த்தேன். சண்டை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் அறையின் வாடகை தொகைதான் பூதாகரமாக வந்து பயமுறுத்தியது.
எழுதுவதால் என்ன பயன் என்று யாராவது கேட்டால் ‘இது’தான். நான்காயிரம் ரூபாயை விடுங்கள். பணம் வரும் போகும். ஆனால் முகமே தெரியாத மனிதர்களின் அன்பும் அனுசரனையும் கிடைக்கிறது பாருங்கள். அதுதான்.
நாளை மாலை சென்னையில் இருப்பவர்கள் நிச்சயம் வாருங்கள். சந்திக்கலாம்.
பேச்சோடு பேச்சாக இன்னொன்றும் சொல்லிவிடுகிறேன். சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று இந்த டிசம்பரில் வெளிவருகிறது அல்லவா? தலைப்பு கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’.
தொகுப்பில் இருக்கும் கதைகள் யாவும் light reading short stories தான். ஜாலியான கதைகள். என்ன மாதிரியான கதைகள் என்பதனை தலைப்பு சொல்லிவிடும் என நம்புகிறேன். நன்றாக இருக்கிறதுதானே?