Oct 27, 2013

சிக்கிக் கொண்ட சின்னப்பையன்

ஒரு பார்ட்டி நடக்கிறது. பார்ட்டி என்றால் பிரச்சினைதானே? அப்படித்தான் இந்த பார்ட்டியும். மரணதண்டனையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பார்ட்டியில் ஒரு வக்கீலும் இருக்கிறார். அவருக்கு இளம் வயது. மரண தண்டனையை ஒப்பிடும் போது ஆயுள் தண்டனை எவ்வளவோ தேவலாம் என்கிறார். இது அங்கிருக்கும் ஒரு பணக்காரரை சொறிந்துவிடுகிறது. அவர் மரணதண்டனையின் ஆதரவாளர்.  “அப்படியானால் நீ தனிமைச் சிறையில் இருக்க முடியுமா? இது நமக்குள்ளான பந்தயம். நீ சிறையில் இருந்து வென்றுவிட்டால் பெரும் தொகையைத் தருகிறேன்” என்கிறார். வழக்கறிஞருக்குத்தான் இள ரத்தமாயிற்றே. துடிக்கிறது. “சரி, பதினைந்து வருடம் இருக்கிறேன்” என்கிறான்.

பணக்காரரின் தோட்டத்தில் ஒரு வீடு தயாராகிறது. அதுதான் சிறைச்சாலை. அந்த இளைஞனுக்கு அடுத்த பதினைந்து வருடங்களுக்கு எந்த வெளியுலகத் தொடர்பும் இருக்காது. கடிதங்கள் கூட கிடையாது. ஆனால் எவ்வளவு வேண்டுமானாலும் வாசிக்கலாம், எழுதலாம். பதினைந்து வருடங்களில் அந்த இளைஞன் நிறைய வாசிக்கிறான். தத்துவம், வரலாறு, ஆன்மிகம் என தொடாத ஏரியாவே இல்லை. பதினைந்து வருடங்கள் முடியப் போகின்றன. அவன் கிட்டத்தட்ட பந்தயத்தின் வெற்றியை நோக்கி பயணிக்கிறான். ஆனால் இந்த பதினைந்து வருடங்களில் பணக்காரர் ‘போண்டி’யாகிக் கொண்டிருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவனுக்கு கொடுக்க வேண்டிய பெருந்தொகையைத் தயார் செய்தாக வேண்டும். பணக்காரருக்கு வேறு வழியே இல்லை. அவனைக் கொன்றுவிட முடிவு செய்கிறார். மழை பெய்யும் இரவு நேரத்தில் அவனது அறைக்கு தீக்குச்சியின் வெளிச்சத்தில் தடுமாறிச் செல்கிறார். அறைக்குள் செல்லும் பணக்காரருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.  ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து அவன் தப்பித்திருக்கிறான் அதில் தனக்கு பணம் முக்கியமில்லை என்பதை நிரூபிப்பதற்காக தப்பிப்பதாக எழுதி வைத்திருக்கிறான். பணக்காரர் கமுக்கமாக திரும்பி வந்துவிடுகிறார். அடுத்த நாள் காலையில் காவலாளி ‘கைதியைக் காணவில்லை’ என்று அலறியடித்து ஓடி வருகிறான். கதை முடிகிறது.

இது அன்டன் செக்கோவின் ‘பந்தயம்’ என்ற கதையின் சாராம்சம்.  இருபத்து மூன்று வயதில் சிறைக்குள் நுழைந்து தனது இளமையை முழுமையாக தொலைத்துவிட்ட வழக்கறிஞரின் கடிதம் உருவாக்கும் சலனம் மிக முக்கியமானது. அவன் தனது லெளகீக வாழ்க்கையைத் தான் தொலைக்கிறான். ஆனால் புத்தகங்களின் வழியாக வாழ்க்கையை அவன் புரிந்து கொள்ளும் கோணம் நமக்கு அந்த சலனத்தை உருவாக்கிவிடுகிறது. தேர்ந்த எழுத்தாளரால் மட்டுமே பதினைந்து வருட சித்திரத்தை ஒரு சிறுகதையில் கொண்டுவந்து இறுதியில் நம்மை சலனப்படுத்த முடியும். அன்டன் செக்கோவ் அப்படியான எழுத்தாளர்.

சமீபத்தில் அன்டன் செக்கோவின் சிறுகதைகள் ஒன்று கையில் சிக்கியது. அதுவும் தமிழில்- 

செக்கோவின் சிறுகதைகளை தமிழில் வாசிப்பது பிரச்சினையில்லை ஆனால் அந்நியத்தன்மையில்லாமல் இருக்க வேண்டுமே என்று மனம் விரும்பியது. இப்படித்தான் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஆயிற்றே என்று சில மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசிக்கும் போது ‘ஜூனூன்’ சீரியல் பார்ப்பது போல இருக்கும். நம்மை நாமே கஷ்டப்படுத்தி வாசிப்பதற்கு பதிலாக அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசிக்காகமலேயே இருந்துவிடலாம் என்று மூன்று பக்கங்களில் மூடி வைத்துவிடத் தோன்றும். ஆனால் இந்தப் புத்தகம் அப்படியிருக்க வாய்ப்பே இல்லை என்று நம்பினேன். காரணம், மொழிபெயர்ப்பாளர். எம்.எஸ் தான் செக்கோவின் கதைகளை தமிழுக்கு மாற்றியிருக்கிறார். எம்.எஸ் மொழிபெயர்ப்பு பற்றி எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. மிகச் சிரத்தையாக செய்பவர். அவரது பிற மொழிபெயர்ப்புகளைப் பற்றி தனியாகவே எழுத முடியும். 

செக்கோவ் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பும் அப்படித்தான். நம்பிக்கை எந்தவிதத்திலும் பொய்க்கவில்லை. மொழிபெயர்ப்பு மிக இயல்பாக இருக்கிறது. விதிவிலக்காக, ஒரு கதையில் எஜமானியின் காணாமல் போன ‘புரூச்’சைத் தேடுகிறார்கள். அது இரண்டாயிரம் ரூபிள் பெறுமானமுடையதாம். ஆனால் கடைசி வரைக்கும் புரூச் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஒரு அடிக்குறிப்பு கொடுத்திருக்கலாம்.
                  
அன்டன் செக்கோவ் 1860 ஆம் ஆண்டு பிறந்தவர். மருத்துவம் படித்திருக்கிறார். ஆனால் தனது படிப்பின் மூலமாக பெரிதாக சம்பாதிக்கவில்லை. இலவச மருத்துவம் செய்தாராம். ஆனால் எழுத்து வழியாகவே நிறைய சம்பாதித்திருக்கிறார். ஆனால் மொத்த வாழ்க்கையும் நாற்பத்தி நான்கு ஆண்டுகள்தான். நுரையீரல் பிரச்சினையின் காரணமாக இறந்துவிட்டார். இந்த பாதி ஆயுளிலேயே நூற்றியைம்பது வருடங்களுக்கு பிறகும் ‘முக்கியமான சிறுகதையாளர்’ என்று இன்னமும் நம்மை பேச வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட அட்டகாசமான எழுத்துக்காரர் இந்த மனிதர்.

சரக்கு இல்லாமல் ஒரு மனிதரை இத்தனை காலமும் கொண்டாடுவோமா? அவரது சிறுகதைகள் நமக்கு ஒரு திறப்பை உருவாக்குகின்றன. ‘அட! இதைக் கூட சிறுகதை ஆக்க முடியும்’என்று யோசிக்க வைக்கின்றன. மேம்போக்காக பார்த்தால் அது ஒரு சாதாரண விஷயமாகத்தான் இருக்கும். ஆனால் அந்தக் கதைக்கான பின்னணி, கதாபாத்திரங்களின் மனநிலை போன்றவற்றை எல்லாம் சேர்த்து யோசிக்கும் போது செக்கோவின் கதைகள் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்குகின்றன. 

உதாரணமாக ‘வேட்டைக்காரன்’ என்று ஒரு கதை. ஒரு வனத்தில் வேட்டைக்காரனும், ஒரு பெண்ணும் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் இருவரின் பேச்சு மட்டும்தான் சிறுகதை. அநேகமாக ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் பேசியிருப்பார்கள். தங்கள் உரையாடலின் போது தன்னோடு வந்துவிடும்படி அவனை கெஞ்சுகிறாள் அந்தப் பெண். ஆனால் தனக்கு வேட்டைதான் பிடித்தமான தொழில் என்றும் கிராமத்தில் உன்னோடு அடைந்து கிடக்க முடியாது என்றும் மறுக்கிறான். கதையின் பேக்ரவுண்ட் முக்கியமானது - அவர்கள் கணவன், மனைவி. ஆனால் சேர்ந்து வாழவில்லை. வனத்தில் யதேச்சையாக சந்தித்து இதை பேசிக் கொள்கிறார்கள். அவனுக்கு வெளியுலக வாழ்க்கைதான் பிடிக்கிறது; அவளுக்கு கணவனோடு வாழ வேண்டும் என்று விருப்பம். சண்டை பிடித்துக் கொள்ளாமல் பேசுகிறார்கள். இருவரும் தங்களின் நிலைப்பாட்டை அடுத்தவர்கள் புரிந்து கொள்ளும்படியாக பேசுகிறார்கள். நான்கு பக்கங்கள்தான் இருக்கும். ஆனால் அவனது விருப்பம், அவளது ஏக்கம், அவனால் அவளோடு ஏன் சேர்ந்து வாழ முடியாது என்பதற்கான காரணங்கள் போன்றவை சேர்ந்து கதையை கணமாக்கிவிடுக்கின்றன. கதை, நமக்குள் ஒரு இறுக்கத்தைக் கொண்டு வந்துவிடுகிறது.

இன்னொரு கதையில் ஒரு நடுத்தர வயது ஆள் திருமண ஏஜெண்ட்டை பார்க்கிறான். அவளுக்கும் நடுத்தர வயதுதான். தனக்கு மனைவியாக வரப் போகிறவள் எப்படி இருக்க வேண்டும் என விவரிக்கிறான். கதையின் இறுதியில் அவளுக்கே ப்ரொபோஸ் செய்துவிடுகிறான். இது ஒரு ஜாலியான கதை.

இந்த புத்தகம் பாதரசம் பதிப்பகத்தின் வெளியீடு. பதிப்பாளர் சரவணனை ஒரு முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்திருக்கிறேன். வேறொரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாக புத்தகங்களை பதிப்பிக்கிறார். அனேகமாக சம்பளக் காசைப் போட்டுத்தான் புத்தகங்கள் பதிப்பிக்கிறார் என நினைக்கிறேன். செக்கோவின் கதைகளை வாசித்துவிட்டு ஃபோனில் பேசினேன். சென்ற வருட புத்தகங்கள் விற்றுவிட்டதா என்று கேட்டால் சிரிக்கிறார். அவையே விற்காமல் இருந்தாலும் இந்த வருடம் இன்னும் ஆறு புத்தகங்களை கொண்டு வருகிறாராம். இந்த மாதிரியான எளிய, விளம்பரம் தேடாத, நஷ்டமடைந்தாலும் சோர்வடையாத பதிப்பாளர்களை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். எழுத்து மட்டுமே அவர்களை இயங்கச் செய்கிறது. எழுத்து என்ற ஒரேயொரு பிடிமானத்தை வைத்துக் கொண்டு அத்தனை சிரமங்களையும் தாண்டி வருகிறார்கள். 

சரி. மீண்டும் செக்கோவோடு இந்த குறிப்பை முடித்துக் கொள்ளலாம். 

செக்கோவின் கதைகளில் இன்னொரு முக்கியமான பலமாக அவரது நகைச்சுவையுணர்வு தெரிகிறது. மெலிதாக சிரிக்க வைத்துவிடுகிறார். வித்தியாசமான கதைக்களம், கதாபாத்திரங்களின் சித்தரிப்பு,  பாத்திரங்களின் மனநிலை, நகைச்சுவை என்பனவெல்லாம் சேர்ந்து செக்கோவை ‘முக்கியமான சிறுகதையாளர்’ என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை என்று நம்ப வைத்துவிடுகிறது. செக்கோவின் மொத்த எழுத்துக்களையும் நான் வாசித்ததில்லை. இந்த மொழிபெயர்ப்பு கதைகள் மட்டும்தான். இதன் அடிப்படையில்தான் செக்கோவை பற்றி பேச முடியும். இன்னும் அவரது பிற எழுத்துக்களை வாசித்தால் வேறொரு பரிமாணம் கிடைக்கக் கூடும்.

[சிறு புத்தகம்தான். நூற்றியிருபது பக்கங்கள். நூறு ரூபாய் விலை. புத்தகத்தை ஆன்லைனில் வாங்கலாம்.

சரவணனின் மின்னஞ்சல் : creator.saravanan@gmail.com]