Oct 22, 2013

திருமணம் ஆனாலும் அவஸ்தைதான்

நேற்று ஒரு பஞ்சாயத்து. அதுவும் கணவன் மனைவிக்கிடையேயான பஞ்சாயத்து. இரும்படிக்கிற இடம் என்றாலும் ஈக்களுக்கும் அங்கு துளி இடம் இருக்கும் அல்லவா? அப்படித்தான் எனக்கும் துளி இடம் கிடைத்தது. 

நந்தினியை எனக்கு நன்றாகவே தெரியும். எங்கள் அலுவலகத்தில் முக்கியமான வேலையில் இருக்கிறாள். நந்தினி மாதிரி முக்கியமான பணியில் இருப்பவர்களோடு தொடர்பில் இருப்பது என்பது சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டரக்டர்களோடு தொடர்பில் இருப்பது போல- அவ்வப்போது நமக்கு பரபரப்பான தகவல்களைச் சொல்லிவிடுவார்கள். நந்தினியும் அப்படித்தான். தலைக்கு இடியே வந்தாலும் கூட ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே அழைத்துச் சொல்லிவிடுவாள். தயாராகிக் கொள்ளலாம். அப்படிப்பட்டவளுக்கே ஒரு பேராபத்து. 

நேற்று மதியவாக்கில் போனில் அழைத்து ‘ஒரு பிரச்சினை. ரெண்டு நிமிஷம் ரிஷப்சனுக்கு வர முடியுமா?’ என்றாள். அவள் அழைத்தது திருமண ரிசப்ஷனுக்கு இல்லை. அலுவலக ரிசப்ஷனுக்கு. ஆண்களுக்கு பிரச்சினை என்றால் மெதுவாக போகலாம். பெண்களுக்கு பிரச்சினை என்றால் விட முடியுமா? பதறியடித்து ஓடினேன். அவள் அழைத்ததற்கு காரணம் இருக்கிறது. நந்தினி கன்னடப் பெண். பிரச்சினையைக் கொண்டு வந்தவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். ஒருவேளை நான் அருகாமையில் இருந்தால் தனக்கு உதவிகரமாக இருக்கக் கூடும் என நினைத்திருக்கலாம். 

கணவன் நாகூரைச் சேர்ந்தவன், மனைவி நாகர்கோவில். ஊர்ப் பெயரைக் கேட்டதுமே சமாதானம் ஆகிவிட்டேன். சாரு நிவேதிதாவின் ஊர்க்காரனுக்கும், ஜெயமோகனின் ஊர்க்காரிக்கும் திருமணம் செய்துவைத்தால் கொஞ்சிக் கொண்டா இருப்பார்கள்? இதற்குத்தான் திருமணம் செய்யும் போது இதற்குத்தான் மற்ற பொருத்தங்களோடு சேர்த்து ஊர்ப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்பது. ஊர் பிரச்சினையை விடுங்கள். 

இருவருக்கும் திருமணம் ஆகி ஆறு மாதங்கள்தான் முடிந்திருக்கிறது. கணவன் நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்கிறான். மனைவி பகல் ஷிஃப்ட். இதைவிடக் கொடுமை என்னவென்றால் அவனுக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை. அவளுக்கு சனி, ஞாயிறு. இருவருக்கும் பார்த்துக் கொள்ளவே வாய்ப்பு இல்லை. பிறகு மற்றதெல்லாம் எப்படி நடக்கும்? இந்த இடத்தில் ‘மற்றது’ என்றால் இருவரும் பேசிக் கொள்வது, புரிந்து கொள்வது எல்லாம். வேறு  ‘எதையாவது’ நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இருவரும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். ஆனால் இருவருக்கும் சம்பந்தமே இல்லாதது போல வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வப்போது சந்தித்துக் கொண்டால் சண்டை பிடிக்கத்தான் நேரம் சரியாக இருக்கும் போல. இப்படி போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் முந்தாநாள் புயலடித்திருக்கிறது. 

அதிசயமாக சனிக்கிழமை இரண்டு பேரும் வீட்டில் இருந்திருக்கிறார்கள். அதுதான் வம்பாக போய்விட்டது. அதிகாலையிலேயே சண்டை ஆரம்பமாகியிருக்கிறது. அவர்களின் பாஷையில் அதிகாலை என்றால் பத்து மணி. அப்பொழுதுதான் எழுந்திருக்கிறார்கள். எழுந்தவுடன் பிரச்சினை. கண்டபடி திட்டிக் கொண்டார்களாம். 

வீட்டில் சமையலுக்கு எதுவும் இல்லை. முந்நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு கடைக்கு போயிருக்கிறாள் அந்தப் பெண். திரும்ப வரும் போது வீடு பூட்டியிருக்கிறது. அவன் எங்கோ போய்விட்டான். போனவன் போனவன் தான். மாலை வர திரும்ப வரவில்லை. வீட்டிற்கு வெளியிலேயே அமர்ந்திருக்கிறாள். மாலை முடிந்து இரவும் தொடங்கியாகிவிட்டது. ம்ஹும். இப்படியே அடுத்த நாளும் ஓடியிருக்கிறது. வீட்டுக்கு முன்பான வராண்டாவிலேயே படுத்திருந்தாளாம். கையில் இருந்த ஐம்பது ரூபாயில் சனிக்கிழமை மதியம் சாப்பிட்டிருக்கிறாள். அதோடு சரி. திங்கள் மதியம் வரைக்கும் உணவுக்கும் வழியில்லை. படுக்கைக்கும் வழியில்லை. 

வடகிழக்கு பருவமழையின் சாரல் பெங்களூரை குளிர்வித்துக் கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் போர்த்திக் கொண்டு படுத்தாலும் குளிர்கிறது. அவள் இரண்டு நாட்களாக வெறுந்தரையில் பசியோடு கிடந்ததை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. அபார்ட்மெண்டில் இருந்தவர்கள் இவளை கவனித்தார்களா என்றும் தெரியவில்லை. கவனித்திருந்தாலும் கூட நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கிப் போயிருக்கக் கூடும். 

கதவை உடைத்திருக்கலாம்தான். ஆனால் அந்த ஜீவனுக்கு அதற்கும் தைரியம் இல்லை. கதவை உடைத்தால் வீட்டு ஓனர் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டார் என்று பயந்திருக்கிறாள். திங்கட்கிழமை செக்யூரிட்டி மூலமாக ஓனருக்கு தகவல் சென்று அவரே வந்திருக்கிறார். அவரிடமும் டூப்ளிகேட் சாவி எதுவும் இல்லையாம். இவளது நிலைமையை உணர்ந்தவர் பூட்டை உடைத்துவிடச் சொல்லியிருக்கிறார். பூட்டை உடைத்து உள்ளே சென்று கணவனுக்கு ஃபோன் செய்த போது அழைப்பைத் துண்டித்திருக்கிறான். ஏதோ விபரீதம் நடந்ததை புரிந்து கொண்டவள் வீட்டைத் தேடிய போது அவனது சர்டிபிகேட், துணிமணிகள் என அனைத்து உடைமைகளையும் வழித்து எடுத்துச் சென்றிருக்கிறான். அதோடு இவளது பர்ஸ், ஏடிஎம் கார்ட், கிரெடிட் கார்டுகளையும் எடுத்துச் சென்றுவிட்டானாம். அத்தனையையும் எடுத்துக் கொண்டு போனவன் மறதியாக எங்கள் நிறுவனம் கொடுத்த ஆஃபர் லெட்டரை மட்டும் ஒரு டேபிளுக்குள் போட்டு வைத்திருக்கிறான். அதன் பின்புறம்தான் நந்தினியின் பெயரையும் அவளது ஃபோன் நெம்பரையும் எழுதியிருக்கிறான்.

இதுதான் நந்தினிக்கு வினையாக போய்விட்டது. நந்தினிக்கும் தனது கணவனுக்கும் தொடர்பிருக்கிறது என்று நினைத்தவள் எங்களது அலுவலகத்திற்கு வந்து ரிசப்ஷனில் இருந்து நந்தினியை அழைத்திருக்கிறாள். அழைத்தவள் போனிலேயே அழ ஆரம்பித்திருக்கிறாள். ரிசப்ஷனிஸ்ட்டிலிருந்து, செக்யூரிட்டி வரை ஆளாளுக்கு பதறியிருக்கிறார்கள். அவர்கள் பதறுவதற்கு ஏற்றபடி அவளது கோலமும் அப்படி இருந்திருக்கிறது. இரண்டு நாட்களாக சாப்பிடாதவள், தூக்கம் வேறு கெட்டு போதாக்குறைக்கு மழையில் நனைந்து நைந்த பழைய காகிதத்தைப் போல நின்று கொண்டிருந்தாள். 

இப்பொழுதான் மூன்றாவது பத்தியின் செய்தி எனக்கு வந்தது. ‘ஒரு பிரச்சினை. ரெண்டு நிமிஷம் ரிஷப்சன் வர முடியுமா?’.

கீழே போன போது நந்தினியும் பேசும் மனநிலையில் இல்லை. பயந்திருந்தாள். திடீரென்று அறிமுகமில்லாத பெண் வந்து ‘என் கணவனைக் கொடுடி’ என்று கேட்டால் எந்தப் பெண்ணுக்குத்தான் பேச்சு வரும்? இத்தனைக்கும் இதற்கு முன்பாக நந்தினி அவனைப் பார்த்தது கூடவும் இல்லையாம். நந்தினிக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. ஆனால் அதை அந்தப் பெண்ணும் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. இருவருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று உறுதியாக நம்பியிருந்தாள். அவள் கிட்டத்தட்ட தன்னிலை இழந்திருந்தாள். கையில் காசு இல்லை; தனது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து நான்கைந்து மாதங்கள்தான் ஆகியிருக்கிறது- அதனால் பெங்களூரில் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை. பசியும் மழையும் சேர்ந்ததனால் என்ன பேசுகிறோம் என்பதே புரியாமல் பேசிக் கொண்டிருந்தாள். பார்க்கவே கொடுமையாக இருந்தது.

அவளது கணவனுக்கு அலுவலகத்திலிருந்தே போனில் பேசலாம் என்று தோன்றியது. ஹெச்.ஆர் நண்பர் ஒருவரை உதவிக்கு அழைத்துக் கொண்டோம். அலுவலக நெம்பரில் இருந்து போன் செய்த போது எடுத்தான். ஹெச்.ஆரிலிருந்து பேசுகிறோம் என்றவுடன் அவன் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தான். ‘அவள் ஒரு லூசுங்க’ என்றுதான் அந்தக் கதையின் முதல் வாக்கியம் இருந்தது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவளையே கை காட்டினான்.  இரண்டு பேரும் விவாகரத்து கோரப் போகிறார்களாம்.

திருமணம் முடிந்து ஆறு மாதம் கூட முடியவில்லை- அதற்குள் விவாகரத்து.

இரண்டு நாட்களாக எங்கே சென்றாய் என்றால் ‘ஒரு பெர்சனல் ட்ரிப்’ என்று பதில் வந்தது. இதற்கு மேல் அவனிடம் என்ன கேட்பது? ‘எதற்கு கதவைப் பூட்டிக் கொண்டு போனாய்’என்றால், ‘அவளுக்கு பனிஷ்மெண்ட்தான்’ என்றான் அசால்ட்டாக. 

பிறகு அவளிடமே பேசச் சொன்னதற்கு முடியாது என்றான். பிறகு அவனே ‘சரி கொடுங்க’ என்று சொல்லிவிட்டு இரண்டு பேரும் ஐந்து நிமிடம் பேசினார்கள். அதை எப்படி ‘பேசினார்கள்’ என்று சொல்ல முடியும்? தாறுமாறாக சண்டை போட்டுக் கொண்டார்கள். அவள் உடைந்து அழத் துவங்கினாள். பெரும் அழுகை வெடித்தது. இது இப்போதைக்கு சமாதானம் ஆகாது என வலுக்கட்டாயமாக சண்டையை நிறுத்த வேண்டியிருந்தது. அவன் இன்று இரவு நைட் ஷிஃப்டுக்கு வருவான். அதுவரை இருந்து பார்த்துவிட்டு போகிறேன் என்றாள். ஆனால் அதற்கு செக்யூரிட்டி அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

என்ன செய்வது என்று தெரியவில்லை. கேண்டீனில் சாப்பிடச் சொன்னபோது மறுத்தாள். வற்புறுத்தலுக்குப் பிறகு ஒரு ஜூஸ் மட்டும் குடித்தாள். வேறு வழியில்லை- நண்பர்களிடம் ஆயிரம் ரூபாய் திரட்டி அவளிடம் கொடுத்து ஊருக்கு செல்லச் சொன்னோம். முதலில் தற்கொலை செய்து கொள்வதாகச் சொன்னாள். அந்த ஹெச்.ஆர் நண்பர் நிறைய பேசினார். இரண்டு மணி நேரமாவது பேசியிருப்பார். சற்று கரைந்திருந்தாள். ஊருக்கு போவது என்பது நல்ல ஐடியாவாகத் தோன்றியிருக்கக் கூடும். சம்மதித்தாள். அவளது அப்பா நெம்பரை வாங்கிக் கொண்டோம். ‘அப்பாகிட்ட சொல்லாதீங்க நானே பேசிக்கிறேன்’ என்று எங்கள் முன்னாலேயே அவரை அழைத்து ‘அப்பா கொஞ்சம் உடம்பு சரியில்லை; ஊருக்கு வர்றேன்’ என்றாள்.

‘இல்லப்பா...மாப்பிள்ளைக்கு லீவு இல்லை அவர் தீபாவளிக்கு வருவார்’ என்று தொடர்ந்தாள். 

அவளுக்கு அம்மாவும் இல்லையாம். அவரது அப்பா தனது மகள் உண்டாகியிருப்பதாக நினைத்துக் கொண்டு உற்சாகமாகிவிட்டாராம். இதை எங்களிடம் சொன்ன போது அவளது உதடுகளில் இருந்து வறண்ட புன்னகை பூத்திருந்தது. ‘அவனை நாங்க பார்த்துக்கிறோம். நீ தைரியமா போய்ட்டு வா’ என்றார் ஹெச்.ஆர் வாலா. அவள் ஒருவாறாக தெளிவான மனநிலைக்கு வந்திருந்தாள். ஆனால் நடை தளர்ந்திருந்தது. மெதுவாக நடந்து அவள் ஒரு புள்ளியாக மாறி மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்படி பார்த்துக் கொண்டிருப்பது ஒரு பெருந்துக்கமாக இருந்தது. என்றாலும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தோம்.