Jun 6, 2013

மனுஷ்ய புத்திரனும் இறங்கும் இடிகளும்

மனுஷ்யபுத்திரனை எனக்கு 2004 ஆம் ஆண்டிலிருந்து தெரியும். அதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் உயிர்மை இதழைத் தொடங்கியிருந்தார்கள். அப்பொழுது அவர் இத்தனை பிரபலமும் ஆகியிருக்கவில்லை- அதனால் அவருக்கு இத்தனை சிக்கல்களும் இல்லை; எதிர்ப்புகளும் இல்லை.

மனுஷ்ய புத்திரனை சந்திக்கும் வரைக்கும் சினிமா பாடலாசிரியர்கள்தான் தமிழின் ஆகச் சிறந்த கவிஞர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அவர்களைச் சந்தித்து பேசினால் தமிழின் மிக முக்கியமான கவிஞன் ஆகிவிடலாம் என்ற நினைப்பு வேறு மண்டைக்குள் ‘டேரா’ அடித்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஒரு சில சினிமாக் கவிஞர்கள் வீட்டுக் கதவையும் தட்டியிருக்கிறேன். சூளைமேட்டில் தனது மிகச் சிறிய வீட்டின் முன்பாக கயிற்றுக் கட்டிலில் லுங்கியைக் கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த நா.முத்துக்குமாரை எழுப்பியிருக்கிறேன். மேற்கு மாம்பலத்தில் வீதி வீதியாகத் தேடி பா.விஜய்யின் வீட்டைக் கண்டுபிடித்த அனுபவம் இருக்கிறது. வடபழனியில் விவேகாவின் வீட்டிற்கு போவதற்கான தடத்தை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லத் தெரியும். ஆனால் இவை எதுவுமே திருப்தியாக இருந்ததில்லை. ஏதோ ‘மிஸ்’ ஆகிக் கொண்டிருப்பதாகவே பட்டது.

அப்பொழுதுதான் தமிழச்சி தங்கப்பாண்டியனின் நூல் அறிமுக விழாவில் அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ மனுஷ்ய புத்திரனை சந்திக்க முடிந்தது. அதிர்ஷ்டவசம் என்பது எனக்கு, துரதிர்ஷ்டவசம் என்பது என்னைத் தவிர்த்த மற்றவர்களுக்கு. வீட்டிற்கு வரச் சொல்லி முகவரியைக் கொடுத்தார். அந்த வார இறுதியில் அவரது அபிராமபுரம் வீட்டிற்கு சென்ற போது கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு சில கவிதைத் தொகுதிகளைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அடுத்த முறை அவரைப் பார்ப்பதற்குள் வாசித்துவிடுவேன். பிறகு வேறு சில தொகுப்புகளைக் கொடுப்பார். இதுதான் ஒவ்வொரு வாரமும் நிகழ்ந்தது. அப்படியான வாசிப்பின் வழியாக அறிமுகமானதுதான் எனக்கான கவிதை. இப்படியான எழுத்தின் வழியாக அறிமுகமானவர்கள்தான் சுந்தர ராமசாமியும், ஆத்மாநாமும், சுகுமாரனும், நகுலனும். 

இதன் பிறகு நான் எழுதிப் பழகிய ஒவ்வொரு கவிதையையும் ஈரம் காய்வதற்குள் மனுஷ்ய புத்திரனுக்கு முன்னால் வைத்திருக்கிறேன்- பாராட்டியிருக்கிறார், திருத்தியிருக்கிறார், நிராகரித்திருக்கிறார். அப்படித்தான் எனது முதல் கவிதை உயிர்மையில் வெளியானது. ஐம்பத்துச் சொச்சம் கவிதைகள் சேர்ந்தவுடன் முதல் தொகுப்பும் உயிர்மையில்தான் வெளியானது. இந்தக் காலகட்டத்தில் நான் சந்தித்தது, பேசியது, பழகியது எல்லாம் மிகத் தூய்மையான அன்பு கொண்ட ஒரு மனிதனிடம். ஒரு பிரியம் மிகுந்த கவிஞனிடம். எள்ளலும், துள்ளலுமான ஒரு நல்ல நண்பனிடம். எந்தக் காலத்திலும் மறக்க விரும்பாத ஒரு அண்ணனிடம்.

பழகிய காலத்தில் அவரிடம் களங்கமில்லாத அன்பை பார்த்ததுதான் ஞாபகம் இருக்கிறது. தனது கவிதையை மெகா சீரியலில் யாரோ Quote செய்தார்கள் என்பதற்காக உச்சி குளிர்ந்து பேசிய வெள்ளந்தியான மனுஷ்ய புத்திரனை பார்த்திருக்கிறேன். சுனாமி வந்த போது ஒரு குழந்தையைப் போல பயந்தவரோடு இருந்திருக்கிறேன். அவரது பிறந்தநாளின் போது மொட்டை மாடியில் அமர்ந்து வெறும் மூன்று பேரோடு மது அருந்திய கவிஞனின் பேச்சைக் கேட்டிருக்கிறேன்.

அதன் பிறகு ஏதேதோ காரணங்களால் விலகிக் கொண்டோம். விலகிக் கொண்டதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால் மனுஷ்யபுத்திரனும் மாறிவிட்டார். மணிகண்டனும் மாறிவிட்டான்.

இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன். ஒருவேளை மனுஷ்ய புத்திரனை அந்த விழாவில் சந்திக்காமல் போயிருந்தால் எம்.டெக் டிகிரியை அடமானம் வைத்துவிட்டு சினிமா வாய்ப்புகளுக்காக சீட்டியடித்துக் கொண்டிருக்கக் கூடும் அல்லது அமெரிக்காவில் H1 விசாவோடு செட்டில் ஆகியிருக்கக் கூடும். இந்த இரண்டையும் தவிர வேறு ஒன்றும் சாத்தியமாகியிருக்காது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- இன்றைக்கு செய்து கொண்டிருக்கும் எந்தச் செயலையும் செய்திருக்க மாட்டேன்- நிசப்தம் தளத்தில் எழுதுவது உட்பட.

அப்பொழுது பார்த்த மனுஷ்ய புத்திரனை இனி மீட்டெடுப்பது மிகச் சிரமம். இப்பொழுது அவர் தொலைக்காட்சிகளில் வருகிறார், ஃபேஸ்புக்கில் அவரை பல்லாயிரம் பேர்கள் பின் தொடர்கிறார்கள், சினிமா நட்சத்திரங்களோடு பழகுகிறார், வைரமுத்துவுடன் தோள் குலுக்குகிறார். கலைஞருடன் ஒரே மேடையில் பேசுகிறார். 

இப்பொழுதெல்லாம் அவரின் அத்தனை செயல்களிலும் முரண்படுகிறேன். அவரது அரசியல் பிடிக்கவில்லை. அவரது எழுத்து பிடிக்கவில்லை. அவரது கர்வம் பிடிக்கவில்லை. அவரைப் பற்றி பேசும் போது பிடிக்கவில்லை, பிடிக்கவில்லை என ‘பிடிக்கவில்லை’ என்பதன் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போவதால் இனிமேல் மனுஷ்ய புத்திரனிடம் பழைய படி நட்பு பாராட்ட மாட்டேன் என்று தெரிகிறது. ஒரு காலத்திலும் அவரைத் தேடிப் போகப் போவதில்லை என்றும் தெரிகிறது. இனி அவரிடம் ஐந்து நிமிடம் கூட தொடர்ச்சியாக பேசுவது சாத்தியமில்லை என்றுதான் நினைக்கிறேன். 

என்னதான் பிரச்சினைகள் இருந்தாலும் அவர் மீதாக கடந்த ஓரிரண்டு நாட்களாக வைக்கப்படும் விமர்சனங்களும், தாக்குதல்களும் ஒருவிதத்தில் பதட்டம் அடையச் செய்கின்றன. உண்மையைச் சொன்னால் தொடக்கத்தில் இந்த விமர்சனங்கள் என்னை சற்று மகிழ்ச்சியடையச் செய்திருந்தன. ‘அவருக்கு இதெல்லாம் தேவைதான்’ என்று கூடத்தான் தோன்றியது. சில நண்பர்களிடமும் கூட இந்த விமர்சனங்களைப் பற்றி பேச்சினேன். ஆனால் விமர்சனங்களின் வீரியமும் பன்முனைத் தாக்குதல்களும் சற்று திகிலடையச் செய்கின்றன. 

நாம் யாரோடு நெருங்கியிருந்தோமோ, யாரிடம் அதிகம் அன்பு பாராட்டினோமோ அவரிடம்தான் பிறிதொரு காலத்தில் அதிகபட்ச பகையை வளர்த்துக் கொள்கிறோம் என்பதுதானே உண்மை? அப்படித்தான் மனுஷ்ய புத்திரனிடம் பகைமையை வளர்த்து வைத்திருக்கிறேன் போலிருக்கிறது. இந்தப் பகைமையினால் அவர் மீது வைத்திருக்கும் அன்பை எந்தக் காலத்திலும் மாற்றிக் கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனம். இப்பொழுது அவரை ஆதரிப்பது கூட அவரின் மீதான எனது கலங்கல் இல்லாத அன்பின் காரணமாக மட்டும்தான். இந்த பத்தியை எழுதும் போது கூட, இதையெல்லாம் வெளிப்படையாக எழுதத் தேவையில்லை என்று தோன்றியது. ஆனால் ஏதேதோ காரணங்களால் மனதிற்குள் வைத்துக் கொள்வதைவிடவும் சொல்லிவிடுவதுதான் சரி என்று பட்டது. எழுதிவிட்டேன்.

மனுஷ்ய புத்திரன் மிகச் சிறந்த திறமைசாலி என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையிருக்கிறது. தனது ஒவ்வொரு ‘மூவ்’வையும் மிகத்திட்டமிட்டே செய்து கொண்டிருக்கிறார். தனது ஒவ்வொரு செயலுக்குமான எதிப்புகளை எதிர்பார்த்துதான் எட்டி வைக்கிறார் என நினைக்கிறேன். எந்தவொரு மனிதனும் தனது உயரத்திற்கு ஏற்ற விலையைக் கொடுத்தே தீர வேண்டும். இப்பொழுது மனுஷ்ய புத்திரன் தனது புகழுக்கும் உயர்வுக்குமான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த விமர்சனங்களை அவரால் சமாளித்துவிட முடியும் என்றே தோன்றுகிறது. ஒருவேளை இந்த பரபரப்புகளை அவரே கூட விரும்புவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. தன்னைச் சுற்றி உலகம் சுழல்கிறது என்ற பிம்பம் அவருக்குத் தேவையானதாகக் கூட இருக்கலாம். இருந்த போதிலும் திடீரென உருவாகும் எதிர்ப்புகளையும், அதிர்ச்சிகளையும் தாண்டி மேலே வருவதற்கான உடல் மற்றும் ஆன்மபலத்தை அவருக்கு ஆண்டவன் கொடுக்கட்டும் என்றே விரும்புகிறேன்.

மனுஷ்ய புத்திரனின் கவிதையொன்று-

நான் இன்று காலை
சிறிதளவு புகழை விரும்பினேன்

ஒரு பொய்யனைத் தேடிச் சென்றேன்
அவன்
என் கவிதைகளைப் புகழ்ந்தான்

ஒரு வேசியைத் தேடிச் சென்றேன்
அவள்
என் ஆண்மையைப் புகழ்ந்தாள்

ஒரு கங்காணியைத் தேடிச் சென்றேன்
அவன்
என் வேலைகளைப் புகழ்ந்தான்

ஒரு சித்ரவதையாளனை தேடிச் சென்றேன்
அவன்
என் பொறுமையைப் புகழ்ந்தான்

ஒரு கடவுளின் தூதரை தேடிச் சென்றேன்
அவர்
நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன்
என்று புகழ்ந்தார்

நாட்டின் தலைவரை தேடிச் சென்றேன்
அவர்
நீதான் இந்த நாட்டின் சிறந்த குடிமகன்
என்று புகழ்ந்தார்

எனக்கு எதுவுமே போதுமானதாக இல்லை
என் கையில் ஊர்ந்துகொண்டிருந்த
எறும்பிடம் கேட்டேன்

‘நீ என்னைப் பற்றி
என்ன நினைக்கிறாய்?’ என

‘நீ ஏன் இவ்வளவு நீளமான கைகளுடன்
இருக்கிறாய்
எவ்வளவோ நேரமாக
இதைக் கடந்துகொண்டிருக்கிறேன்’
என்றது சலிப்புடன்.