Jun 2, 2013

சுஜாதா மனைவியின் நேர்காணல் - அதிர்ச்சியா? ஆச்சரியமா?

பெங்களூரில் தமிழ் செய்தித்தாள் வேண்டுமெனில் தினத்தந்தி அல்லது தினகரன்தான் எளிதில் கிடைக்கும். மற்ற தமிழ் செய்தித்தாள்கள் வேண்டுமென்றால் கொஞ்சம் அலைய வேண்டும். வழக்கமாக எங்கள் வீட்டில் தினத்தந்தியை வீசிச் செல்வார்கள். இன்றைக்கு எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி நேர்காணல் வருகிறது என சில நாட்களாக ஃபேஸ்புக்கில் நடந்த அலப்பறையின் காரணமாக தினகரன் போடச் சொல்லியிருந்தேன். ஆனால் இன்றும் தினத்தந்தியைத்தான் வீசியிருந்தான். படுக்கையில் இருந்து எழுந்தும் எழாமலும் தினகரன் வாங்கி வரக் கிளம்பினேன். கடையிலிருந்து வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் நேர்காணலை வாசித்தாகிவிட்டது.

தினகரனின் ஞாயிறு இணைப்பான ‘வசந்தத்தில்’இரண்டு பக்க நேர்காணல். ரங்கராஜன் ‘குடும்ப மனிதராக’ எப்படி வாழ்ந்தார்? அவரது சுபாவம் என்ன? என்பதை அவரது மனைவி சுஜாதா சற்று நிறைய பேசியிருக்கிறார். ரங்கராஜனின் மனநிலை எப்பொழுது மாறும் என்றே கண்டுபிடிக்க முடியாது, படிப்பது, எழுதுவது என எப்போதும் தனது வட்டத்திற்குள்ளேயே இருந்தார், எங்களுக்கான அன்பை அவர் வெளிப்படுத்தியதே இல்லை, தனது மகன்களின் வளர்ச்சியில் எந்த அக்கறையும் இல்லாமல் இருந்தார், அவர் எழுதியதை நான் படித்தால் அது அவருக்கு பிடிக்காது, அக்ரஹாரத்து பையனாகவே கடைசி வரைக்கும் இருந்தார், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பார் என சுஜாதாவின் வெளியில் தெரியாத இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘பெண்கள் வீட்டை விட்டு வெளியில் போகக் கூடாது’ என்ற மனநிலை உடையவராக சுஜாதா இருந்தார் என்பது மட்டும் சற்று அதிர்ச்சியாக இருந்ததே தவிர மற்ற எந்த குற்றச்சாட்டுகளும் அதிர்ச்சியை உருவாக்கவில்லை. தனது வாழ்நாளில் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், நாடகங்கள் என ஏகப்பட்ட எழுத்துக்களை எழுதிக் குவித்த இந்த மனிதன் குடும்பத்தையும் சேர்த்து கவனித்திருந்தால்தான் ‘எப்படி சாத்தியமானது?’ என அதிர்ச்சியடைந்திருப்பேன். 

தினமும் ஒரு மணி நேரம் எழுத வேண்டுமென்றாலும் கூட நாளின் பெரும்பாலான நேரம் எழுதுவது பற்றியே யோசிக்க வேண்டியிருக்கிறது. இப்படியிருக்க, சுஜாதா ஏழு தொடர்கதைகளை ஒரே சமயத்தில் எழுதிக் கொண்டிருந்தாராம். அந்தக் காலத்தில் ஒவ்வொரு தொடரும் ஒரு வாரப்பத்திரிக்கையில் வந்திருக்கிறது. எத்தனை யோசித்திருக்க வேண்டும்? எத்தனை உழைத்திருக்க வேண்டும்?

சுஜாதாவின் புகழ் மீது பொறாமைப்படும் எந்த மனிதனுமே அவரது உழைப்பின் நீள அகலத்தைப் பற்றி கிஞ்சித்தும் நினைப்பதில்லை என்பதுதான் அவலம். கலையின் பிற எந்த வடிவத்திலும், புகழ் அடைந்த ஒருவனைக்காட்டி ‘அதிர்ஷ்டத்தால் வென்றான்’, ‘அவனுக்கு நல்ல நேரம்’ என எதையாவது காரணமாக சொல்லி விட முடியும். ஆனால் எழுத்தில் மட்டும் அது சாத்தியமே இல்லை. தன் திறமைக்கும், உழைப்பும் ஏற்பவே  ஒரு மனிதனால் வெற்றியும் புகழும் அடைய முடிகிறது. சுஜாதா இதில் எந்த விதிவிலக்கும் இல்லை. மிக வெறித்தனமான உழைப்பைக் கோரும் எழுத்துத் துறையில் அந்த மனிதன் தனது வெற்றிக்காக தன் குடும்பத்தை compromise செய்திருக்கிறார். இதில் ஆச்சரியம் அடையவும், அதிர்ச்சி அடையவும் என்ன இருக்கிறது என்று புரியவில்லை. 

சுஜாதாவின் எழுத்து மீது Personal ஆக எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவரது உழைப்பு மீது எப்பொழுதுமே ஒரு பிரமிப்பு இருக்கிறது. இந்த பத்தியை எழுதுவதற்கும் கூட அவரது உழைப்பு மீது இருக்கும் மரியாதைதான் அடிப்படையான காரணம். எழுத்து என்பதை தவம் போல செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒன்றரை கவிதை எழுதியவர்களுக்கு மத்தியில் சுஜாதாவின் எழுத்துக்களை கணக்கிட்டாலோ அல்லது அவரது மனைவியின் நேர்காணலை வாசித்தாலோ சுஜாதா உண்மையிலேயே எழுத்தை தவமாகத்தான் செய்திருக்கிறார் என புரிந்து கொள்ள முடிகிறது. எழுத்து, வாசிப்பு என்ற தனது தவத்தை குடும்பமோ, மனைவியோ, குழந்தைகளோ எந்தவிதத்திலும் கலைப்பதற்கு அவர் அனுமதிக்கவில்லை என்பது இப்பொழுது வெளியே தெரிகிறது. அவ்வளவுதான்.

ஏன் இப்பொழுதுதான் வெளியில் தெரிகிறது? 

எங்கள் ஊரில் நிகழ்ந்த ஒரு மரணத்திற்கு வந்திருந்த வயதான அப்பத்தா ஒருவர் எதையோ பேசிக் கொண்டிருந்துவிட்டு “சொன்னாலும் சொல்லப்பிடாது. ஆனா புருஷஞ் செத்த பிறகு பொம்பளைக்கு ஒரு செலாக்கியம் வரும்” என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது. செலாக்கியம் என்பது தேஜஸ். அவர் சொன்னது தென்னிந்திய பெண்கள் பெரும்பாலானோருக்கும் பொருந்தும். குடும்பம், கணவன், பிள்ளைகள் என தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ‘கட்டுப்பெட்டித்தனமாக’வே நம் ஊர் பெண்கள் வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். இதில் சாமானியனின் மனைவி, நடிகரின் மனைவி, அரசியல்வாதியின் மனைவி, எழுத்தாளனின் மனைவி என்ற எந்த வேறுபாடும் இல்லை. பெண்களுக்கு கணவரின் மறைவு என்பது ஒருவிதத்தில் விடுதலை. தனக்கான வாழ்வை வாழத் துவங்குவதற்கான சாத்தியத்தை உருவாக்கும் பிரிவு அது. இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்த திருமதி. சுஜாதா இப்பொழுது இப்படி பேசக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தால் அந்த அப்பத்தா சொன்னதுதான் பொருந்துகிறது. 

எழுத்தாளனின் பிம்பம் இப்படி உடைவது ஒருவிதத்தில் நல்லதுதான். எழுத்தாளன் என்பவனும் இன்னொரு மனிதன்தானே. அவனை கடவுளாகவும், யோக்கியசீலனாகவும், ஒழுக்கவாதியாகவும் எதற்காக கட்டமைக்க வேண்டும்? 

எழுத்தாளனின் பிம்பம்(Image) என்பது அவனை வைத்து வியாபாரம் செய்யும் பதிப்பகத்தாருக்கு வேண்டுமானால் தேவையானதாக இருக்கலாம். ஆனால் வாசகனுக்கும், எழுத்துக்கும் அவனது பிம்பம் பற்றிய எந்த கவலையும் இல்லை. இதுவரை கட்டமைக்கப்பட்ட மொத்த பிம்பமும் உருகிப் போன பிறகும் கூட பாலைவனத்தின் மணற்பரப்பில் நின்று கொண்டிருக்கும் ஒற்றை மரத்தை போல அவனது எழுத்து மட்டும் நின்று கொண்டிருக்கும். எழுத்தாளன் தனது வாழ்வில் இழந்த குடும்ப வாழ்க்கை, சந்தோஷம் என அத்தனைக்குமான பதில் இந்த ஒற்றை மரம்தான். இது சுஜாதாவுக்கு மட்டுமில்லை, ஒவ்வொரு எழுத்தாளனுக்குமே பொருந்தும் என நினைக்கிறேன்.