Apr 29, 2013

பப்ளிக் கிஸ்


அசைவம் பழக்கப்பட்ட வீட்டு நாய்க்கு குறிப்பிட்ட இடைவெளியில் கடிப்பதற்கு எலும்பை கொடுத்துவிட வேண்டுமாம். இல்லாவிட்டால் ‘எலும்பு ஏக்கம்’ பிடித்து சோறு தின்னாமல், அடிக்கடி கோபப்பட்டு அழிச்சாட்டியம் செய்துவிடும் என்பார்கள். யோசித்துப் பார்த்தால் இந்த விஷயத்தில் நானும் அதே வகையறாதான். வாரம் ஒரு முறை கோழிக்குழம்போ, எலும்புச்சாறோ கிடைக்காவிட்டால் அடுத்த வாரம் ஒழுங்காக சோறு இறங்குவதில்லை. சர்க்கரையோ, ரத்த அழுத்தமோ வரும் வரைக்கும் வகைதொகையில்லாமல் வயிற்றுக்கு ஈயலாம் என்பதுதான் திட்டம்.

நேற்று ஞாயிற்றுக்கிழமையல்லவா? கறிநாள். மத்தியானத்திற்கு கோழி வருவலும் ஆட்டுக்கறி குழம்பும் செய்து வைத்திருந்தார்கள். ஆனால் விதி விளையாட வேண்டும் என்று நினைத்தால் நோபாலில் கூட சிக்ஸர் அடித்து திணற அடிக்கும். அப்படித்தான் சோற்று நேரத்தில் ஒரு சோலி வந்து சேர்ந்துவிட்டது. மணி ஒன்றரை ஆகியிருந்தது. வெறும் குழம்பு மட்டும் ஊற்றி அவசரமாக காரியத்தை முடித்துவிட்டு வெளியே கிளம்ப வேண்டியதாகிவிட்டது. அங்கிருந்து கப்பன் பூங்காவில் ஒரு கூட்டம். முடித்துவிட்டு வீட்டிற்கு போனால் நிம்மதியாக ஒரு வாய் பசியாறலாம் என்று நினைத்திருந்தேன். 

சொன்னது போலவே விதி கிரிஸ் கெயிலாக உருமாறியிருந்தது. வீட்டிற்கு திரும்பி சமையலைறைக்குச் சென்றால் அடுப்பில் தக்காளிச் சட்னி கொதித்துக் கொண்டிருந்தது. நேரடியாக கேட்காமல் ஃப்ரிட்ஜ்ஜில் தேடிப்பார்த்தால் எதுவும் சிக்கவில்லை. கறி ஆக்கியிருந்த பாத்திரங்களையும் கழுவி குப்புற கவிழ்த்திருந்தார்கள். ஏதோ விபரீதம் நடந்திருப்பது புரிந்தது. இனியும் கேட்காமல் இருக்கத் தேவையில்லை என்று “ராத்திரிக்கு என்ன சாப்பாடு” என்றேன். 

“பணியாரமும் தக்காளிச் சட்னியும்”

“கறிக்குழம்பு?”

“அதுவா. நீங்க போனதுக்கப்புறம் ஊர்ல இருந்து வந்திருந்தாங்க”

குண்டு விழுந்துவிட்டது. கைகள் லேசாக நடுங்கத் துவங்கின. கஞ்சாக்காரனுக்கு கஞ்சா கிடைக்காததால் வரும் நடுக்கம் அது. சில்லி சிக்கனாவது தின்றாக வேண்டும் போலிருந்தது. ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். எங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கும் மெயின் ரோட்டில் சில தள்ளுவண்டி கடைகளில் சில்லி சிக்கன் கிடைக்கும். அந்தச் சாலையில் ஒரு பிராந்திக் கடை ஒன்றும் இருக்கிறது. அதன் அருகில்தான் சில்லிசிக்கன், சில்லி மீன் எல்லாம் பொறிப்பார்கள். காரமாக இருக்கும். ஆனால் சுவையாக இருக்குமா, சுகாதாரமாக இருக்குமா என்றெல்லாம் கேட்பது ஒருவிதத்தில் நம்மை நாமே அசிங்கப்படுத்திக் கொள்வது போலத்தான். 

அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஆப்பிரிக்க க்ரூப் ஒன்று அதே சாலையில் சுற்றிக் கொண்டிருந்தது. அதே போன்றதொரு க்ரூப் எங்கள் லே-அவுட்டில் இருக்கும் ஒரு அபார்ட்மெண்டில்தான் தங்கியிருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பைக்கில் லிப்ட் கொடுத்திருக்கிறேன். எந்த நாடு என்று விசாரித்த போது கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் பெயர் ஒன்றைச் சொன்னான். ஞாபகத்தில் நிற்கவில்லை. இங்கு ஏதோ ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அவன் சொன்னதிலேயே முக்கியமான விஷயமாகத் தெரிந்தது ஒன்றுதான். சில மாணவிகளும் இந்த பையன்களோடு தங்கியிருக்கிறார்களாம்.

சாலையில் நின்று நிழற்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை பெரிதாக அலட்சியம் செய்யாமல் கண்ணும் கருத்துமாக சில்லி சிக்கனுக்கான கடையை நோட்டமிட்டுக் கொண்டிருந்த போதுதான் காணுதற்கரிய அந்தக் காட்சி நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒரு ஆப்பிரிக்க பையனும் அவனது தோழியும் முத்தமிட்டுக் கொண்டிருக்க அதை இன்னொருத்தி படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

பப்ளிக் கிஸ்.

போகிறவர்கள் வருபவர்களெல்லாம் ‘சைட்’ கண்களில் நோட்டமிட்டார்கள். இந்தப் பாவிகளுக்கு வேறு நல்ல இடமா கிடைக்கவில்லை? இந்த மெயின்ரோட்டில் அதுவும் பிராந்திக் கடைக்கு முன்பாக நின்று அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த போதே ஒரு காவலர் வந்துவிட்டார். காக்கிச் சட்டை போட்ட காவலர் இல்லை. கலாச்சாரக் காவலர். இந்த நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவை எந்தவிதத்திலும் பங்கப்படாமல் பார்த்துக் கொள்வதற்காக அவதாரம் எடுத்திருப்பார் போலிருக்கிறது. எனர்ஜி ட்ரிங்கும் அருந்தியிருந்தார்.

அந்த ஆப்பிரிக்கக் குழுவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். நான் நூறு கிராம் சிக்கனை கையில் ஏந்தி கடிக்க ஆரம்பித்திருந்தேன். இரண்டு ஆப்பிரிக்க பையன்களில் ஒருவனுக்கு கையில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்றிருக்கின்றன போலிருக்கிறது. முறுக்கி காவலரை ஒரு குத்துவிட்டுவிட்டான்.  ‘குப்’. அவ்வளவுதான்.

ஆப்பிரிக்க பையன் இருக்கும் முரட்டுத் தோற்றத்திற்கு என்னை மாதிரியான நோஞ்சான்களை குத்துவிட்டிருந்தால் வயிற்றுக்குள்ளிருக்கும் குடல் வாய் வழியாக வெளியே முட்டியிருக்கும். ஆனால் காவலரும் ஓரளவும் தெம்பான ஆள்தான். அதனால் குடல் வெளியே வரவில்லை. ஆனால் வயிற்றைப் பிடித்தபடியே குத்துக்காலிட்டு அமர்ந்துவிட்டார்.

கன்னடக்காரனை யார் அடித்தாலும் கூட்டம் சேர்ந்து கும்மிவிடுவார்கள். அதுவும் இவன் ஆப்பிரிக்க பையன். அதைவிடவும் முக்கியம் பிராந்திக்கடைக்கு முன்பாக அடித்திருக்கிறான். ஈசல் பூச்சி போல பிராந்திக்கடைக்குள் இருந்து வெளியே வந்துவிட்டார்கள். கூட்டத்தில் இருந்த ஆட்டோக்காரன் என்ன ஏது என்றெல்லாம் கேட்கவே இல்லை. ஆப்பிரிக்கப் பையனை ஒரு அறை விட்டான். ஆப்பிரிக்க பையன் கையை ஓங்கினான். ஆனால் நிலைமை அவனது கட்டுப்பாட்டிற்குள் இல்லை. ஆளாளுக்கு கும்மிவிட்டார்கள். மற்ற மூவருக்கும் அடி எதுவும் விழவில்லை. ஒருவிதத்தில் அவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். ஆனால் இன்னொரு விதத்தில் அடி வாங்கும் பையன் ஒரு பெரும் துரதிருஷ்டசாலி. மற்ற மூவருக்கு விழ வேண்டிய அடியையும் வாங்கிக் கொண்டிருந்தான். 

சிக்கனை பாதியிலேயே வைத்துவிட்டு கடைக்காரருக்கு இருபது ரூபாயைக் கொடுத்துவிட்டு அருகில் சென்ற போது குரூரமாக இருந்தது. ஆனால் வேடிக்கைதான் பார்க்க முடியும். தெரியாத்தனமாக தமிழில் பேசினால் எனக்கும் இரண்டு மூன்று அடி சேர்ந்து விழக் கூடும். அந்தப் பையனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் யாரோ சிலர் “சாக்கு சாக்கு” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். “போதும்” என்று அர்த்தம். ஆனால் யாரும் கேட்கும் மனநிலையில் இல்லை.

இனி என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஒரு முத்தமும் ஒரு குத்தும் இவனை வாழ்நாளின் உச்சபட்ச துன்பத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. மொழி தெரியாத ஊரில் முகம் தெரியாத ஆட்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இனி அடிப்பதை நிறுத்தினாலும் கூட வாங்கியிருக்கும் அடிகளுக்கு மாதக் கணக்கில் சிகிச்சை எடுக்க வேண்டும். ஒரு கட்டத்திற்கு மேல் “ஸாரி.” என்று கையெடுத்துக் கும்பிட்டான். 

அங்கிருந்தவர்கள் அத்துமீறிக் கொண்டிருந்த போது நல்லவேளையாக ரோந்து போலீஸ்காரர்கள் இரண்டு பேர்கள் வந்து சேர்ந்தார்கள். கூட்டத்தை விலக்க முயற்சித்தார்கள். அவர்களாலும் பெரிய வெற்றியடைய முடியவில்லை. பிறகு ட்ராபிக் போலீஸ் ஜீப்பும் வந்து சேர்ந்த போது அடிக்கு ‘ப்ரேக்’ கொடுத்தார்கள். போலீஸார் சமாதானம் பேசிக் கொண்டிருந்த போது அவனை யாரும் அடிக்கவில்லை. மற்ற மூவரும் அவனைத் தாங்கிப் பிடித்தவாறு கூட்டத்தை விட்டு விலக்கினார்கள்.

இந்த விவகாரம் நடந்து கொண்டிருந்த இடம் சர்வீஸ் ரோடு. நடுவில் இருந்த தடுப்பானைத் தாண்டினால் மெயின் ரோடு. பாதசாரிகள் சாலையைத் தாண்டுவதற்கு தோதாக ஒரு இடத்தில் உடைத்து வைத்திருப்பார்கள். அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். இன்னமும் போலீஸார் பேசிக் கொண்டிருந்தார்கள். கன்னடக் காரர்கள் ஆப்பிரிக்கர்களை கூட்டத்திற்குள் வரும்படி மிரட்டினார்கள். அவர்கள் உள்ளே வரத் தயங்கினார்கள். சில வினாடிகள்தான் இருக்கும். ஒரு ஆல்டோ கார் மிக வேகமாக வந்தது. ஆப்பிரிக்கர்களின் ஓரமாக நின்றது. கூட்டத்தினர் சுதாரிப்பதற்குள் அவசர அவசரமாக காரைத் திறந்து நான்குபேரும் தங்களை உள்ளே திணித்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். 

சிலர் அந்தக் காரைப் பிடிப்பதற்காக ஓட எத்தனித்தார்கள். ஒருவன் கார் அருகிலேயே போய்விட்டான். சிலர் கத்தினார்கள். ம்ஹூம். வேலைக்கே ஆகவில்லை. பட்சிகள் பறந்து விட்டன. ஒருவனுக்கு அடி விழுந்த போது மற்றவர்கள் கார்காரனுக்கு தகவல் கொடுத்திருக்கக் கூடும். மிகத் துல்லியமாக திட்டமிட்டு அரக்கர்களிடமிருந்து தப்பித்துவிட்டார்கள். போலீஸாருக்கும் நிம்மதியாக இருந்திருக்கக் கூடும். அவர்கள் கூட்டத்தை கலைந்து போகச் சொன்னார்கள்.  மீண்டும் ஈசல் பூச்சிகள் பிராந்திக் கடைக்குள் நுழைந்து கொண்டன. இப்பொழுது அந்த இடம் இயல்பு நிலைக்கு வர சில வினாடிகள் மட்டுமே தேவையானதாக இருந்தது.