Mar 19, 2013

கருணாநிதியின் போங்கு ஆட்டம்


எதிர்பார்த்ததுதான். இன்று அறிவித்துவிட்டார்கள். ஐ.மு. கூட்டணியில் இருந்து திமுக விலகுகிறதாம். ஒரு சோக நாடகத்தின் க்ளைமேக்ஸில் வில்லன் குரூப்பிலிருந்து ஒருவன் மட்டும் விலகி தன்னை புனிதனாக்கிக் கொள்ளும் போன்றதான நடவடிக்கையை திமுக தலைமை எடுத்திருக்கிறது. நடவடிக்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஆனால் இதையெல்லாம் மக்கள் நம்புவார்களா என்றுதான் தெரியவில்லை. 2004 ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அந்த ஆண்டிலிருந்தே திமுகவும் கூட்டணியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பத்து ஆண்டுகளில் ஐ.மு.கூட்டணி நடத்திய ‘நல்ல’ காரியங்களைப் பட்டியலிட்டால் பல பக்கங்களுக்குத் தாண்டும். ஆனால் எதற்குமே வாய் திறவாமல் கூட்டணியில் ஒட்டிக் கொண்டு வாளிப்பான துறைகளில் வழித்துக் கட்டிய திமுக இன்றைக்கு மட்டும் ஏன் பொங்கி எழுகிறது? ஈழம் மட்டுமே காரணம் என்கிறார்கள். நம்புவோம். அப்படியே இருக்கட்டும்.

இன்றைக்கு உருவாகியிருக்கும் திமுகவின் ஈழப்பாசம் 2008 ஆம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2009 ஆம் ஆண்டு தொடக்கத்திலோ உருவாகியிருக்கக் கூடாதா? 

கொத்து கொத்தாக பொழிந்த குண்டுகளுக்கு பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கருகியபோது வந்திருக்கக் கூடாதா உங்கள் அக்கறை?

நிர்வாணமாக்கப்பட்டு பின் மண்டையில் சுடப்பட்டு சுருண்டு விழுந்த இளைஞர்களைப் பார்த்த போதும் அமைதியாகத்தானே இருந்தீர்கள்?

இலட்சக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட போது ராஜபக்‌ஷேவின் விருந்தை உண்டுவிட்டு “இலங்கை நன்றாக இருக்கிறது வாய் கூசாமல்” சொன்ன பிறகாவது வெளிப்பட்டிருக்கலாம் உங்கள் கருணை. 

இளைஞர்களும், யுவதிகளும் ஈழத்தில் காணாமல் போனதாக பெற்றவர்களும், உற்றவர்களும் கதறியபோது காது கொடுத்து கேட்டிருக்கலாம் நீங்கள். 

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வன்புணரப்பட்ட போதும் அவர்களின் அலறலுக்கு சற்றேனும் நீங்கள் சலனமுற்றிருக்கலாம். அப்பொழுதும் ஆட்சியிலும் கூட்டணியிலும் இருந்தது இதே திமுகதானே? 

மூன்று மணி நேர உண்ணாவிரம் இருந்து ‘இலங்கையில் போர் முடிந்துவிட்டது’ என அறிவித்தது, ‘கொத்து குண்டுகள் இன்றைக்கும் விழுந்ததாக செய்திகள் வந்திருக்கின்றனவே?’ என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ‘மழை நின்றாலும் தூவானம் விடவில்லை’ என்ற பதில் போன்ற நாடகங்களை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுவார்கள் என்று நம்புகிறார்களா என்று தெரியவில்லை.

“போர் நின்றுவிட்டது” என அறிவித்த அதே கலைஞர்தான் ‘அது வேற வாய்..இது நாற வாய்’ என்பது போல சமீபத்தில் “போர் நின்றுவிட்டது என்று மற்றவர்கள் சொன்னதை நம்பிவிட்டேன்” என்று அறிவிக்கிறார். மற்றவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே நம்புமளவுக்கு வெள்ளந்தியான மனிதர் போலிருக்கிறது.

ஈழத்தின் அத்தனை படுகொலைக்குப் பிறகும் காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்து மிச்சமிருந்த தனது சொச்ச உணர்வுகளுக்கு சமாதிகட்டிய திமுகவுக்கு காங்கிரஸ் ஒரு காய்ந்து கொண்டிருக்கும் மரம் என்பது தெளிவாகத் தெரியும் அல்லது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸோடு யார் சேர்ந்தாலும் தமிழகத்தில் மண்ணோடு புதைக்கப்படுவார்கள் என்று தெரியும். அதனால் பழம் காய்க்கும் வேறு மரம் ஒன்றைத் தேடத் துவங்குகிறது இந்தக் குருவி.

தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் பெரும் வெற்றியடைந்து கொண்டிருக்கும் போது அதை திசை திருப்பவும், இன்னமும் நான் மட்டுமே தமிழினத் தலைவர் என்று மார் தட்டுவதற்கும் வெட்கமே இல்லாமலும் வேறு வழியில்லாமலும் கூட்டணியை விட்டு விலகியிருக்கிறார்கள். விலகவில்லை- விலகுவதாக அறிவித்திருக்கிறார்கள். நாளையே கூட மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காகவோ அல்லது தேசத்தில் நிலையாமை வந்துவிடக் கூடாது என்பதற்காகவோ மத்திய அரசை வெளியிலிருந்தோ அல்லது வீட்டிலிருந்தோ திமுக ஆதரிக்கும் என்று அறிவித்தாலும் நாம் ஆச்சரியமடையாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

திமுகவிற்கும் கலைஞருக்கும் டெசோவுக்கும் இன்றைக்கு இருக்கும் ஒரே பிரச்சினை மாணவர் போராட்டம் எந்தவிதத்திலும் திமுகவின்  ‘தமிழினக் காவலன்’ என்ற இமேஜை டேமேஜ் ஆக்கிவிடக் கூடாது என்பதுதான். அந்த இமேஜ் காலியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது என்று யாராவது தலைமையிடம் சொன்னால் பரவாயில்லை. சரி விடுங்கள்.

இது நாடகமோ அல்லது என்ன கருமாந்திரமோ தெரியவில்லை- ஆனால் ஒன்று. வட நாட்டு ஊடகங்களும் மக்களும் இப்பவாவது ஈழத்தில் நிலவும் பிரச்சினை குறித்தான தங்கள் கவனத்தை திருப்புவார்கள் என நம்பலாம். அந்தவிதத்தில் இந்த கவன ஈர்ப்புக்காக கலைஞருக்கு நன்றி தெரிவிக்கலாம்.