Mar 1, 2013

எல்லோரும் சிரிச்சாங்கன்னு பூனை பொடக்காலியில போய் சிரிச்சுதாம்


ஆத்தா, அமத்தா, அம்மாயி, ஆயாக்கள் வாயிலிருந்து அசால்ட்டாக வந்து விழும் ஆயிரக்கணக்கான சொலவடைகளில் பொறுக்கி எடுத்துக் கொண்டவை இவை- கொங்குதேசத்தில் புழங்கும் சொலவடைகள். 

ஸ்டாம்ப் சேகரிப்பது, நாணயங்கள் சேகரிப்பது போன்றவற்றையெல்லாம் விடவும் ஒரு மொழியின் ஆபரணங்களான சொலவடைகளையும், அதன் வட்டார வழக்குகளையும் சேகரிப்பது முக்கியம் எனத் தோன்றுகிறது. இந்தத் தலைமுறையிலிருந்து எத்தனை சொலவடைகள் அடுத்த தலைமுறைக்குச் செல்லும் என்று தெரியவில்லை. பத்து சொலவடைகள் சொல்லத் தெரிந்த இந்தத் தலைமுறை யுவன், யுவதிகளை பார்ப்பது கூட அத்தனை சுலபமான காரியமில்லை என்று நம்பலாம். கிடைக்கும் போதெல்லாம் சேர்த்து வைத்தால் ஏதாவதொரு காலத்தில் உதவக் கூடும்.

1) பொன்னி வந்து பொங்கல் வைக்கும்ன்னு புள்ளையாரு காத்திருக்குமா?

ஐயர் வரும் வரைக்கும் அமாவாசை காத்திருக்காது என்பதன் வேறொரு         Form.

2) தூங்குன மணியகாரனை எழுப்பினா பழைய கந்தாயம் கேட்பானாம்

கிராம நிர்வாக அலுவலரின் பழைய பெயர்தான் மணியகாரர். இவர்தான் கிராமத்தில் வரி வசூல் செய்யும் அதிகாரியாக இருந்தார். கந்தாயம் என்பது வரியைக் குறிக்கும்.

3) உளுசன் சந்தைக்கு போனா புழுத்த கத்தரிக்காய் ஊடு சேரும்

உளுசன் - கஞ்சன். 

கஞ்சன் சந்தைக்குச் சென்றால் புழுத்துப் போன கத்தரிக்காய் சல்லிசாகக் கிடைக்கிறது என அதைத்தான் வாங்கிவருவானாம்.

4) வித்தாரகள்ளி வெறவுக்கு போனா கத்தாழை முள்ளு கொத்தோட  ஏறுச்சாமா

வித்தாரக்கள்ளி- வித்தை செய்யும் கள்ளி.

வித்தாரக்க்கள்ளி விறகு வெட்டச் சென்றால் கத்தாழை முள் கொத்து கொத்தாக ஏறிவிட்டதாக ஸீன் போடுவாள். (கற்றாழையில் கொத்து முள் இருக்காது)

5) பணத்துக்கு பத்துப்படி அரிசி அளந்தாலும் பாவி ஊடு பட்டினிதான்

6) அள்ளுவித்தான் துள்ளு வித்தான் அந்தச் சந்தையில; அதையும் கொண்டி வித்தானாம் துலுக்கன் சந்தையில

அள்ளு, துள்ளு என்பதெல்லாம் சந்தத்திற்காக பயன்படுத்தியிருப்பார்கள் போலிருக்கிறது. கண்டதையெல்லாம்  சந்தையில் விற்று காசு சேர்த்தவன், ஏதோ ஒரு காரணத்தினால் துலுக்கன் சந்தையில் மிச்ச மீதியையும் விற்றுவிட்டு போண்டியாகிவிட்டான்.

7) கொடுமை கொடுமைன்னு போனா சின்னாயா ஈச்சம் பாயைக் கட்டிட்டு எதுக்கால வந்தாளாம்

பஞ்சம், வறுமை போன்ற கொடுமைகளின் காரணமாக எங்கோ போய்க் கொண்டிருப்பவன் எதிரில் சித்தி (சின்னாயா) பஞ்சத்தின் காரணமாக ஈச்சம் பாயை ஆடையாக சுற்றிக் கொண்டு வருகிறாள்.

8) பாவி போனால் ஏரியும் பாழ்

9) கொண்டி எரிய கூலி ஆளு வேணும்

ஒன்றுக்குமே ஆகாதவன் செத்துப் போனால் அவனை கொண்டு போய் எறிந்து வருவதற்குக் கூட ஆள் இல்லாமல் கூலி ஆள் வைத்துத்தான் அப்புறப்படுத்த வேண்டும். (பெரும்பாலும் அவலட்சணமானவர்களை நக்கலடிப்பதற்கு இந்தச் சொலவடையை பயன்படுத்துவதை கவனித்திருக்கிறேன்)

10) ஒண்ணாத சாமி ஒதுங்கி நிக்குதாம் பொடக்காலி சாமி பொங்கிலியும் பொங்கிலியுங்குதாமா

முக்கியமான சாமியே ஒதுங்கி நிற்கிறது. ஆனால் பொடக்காலியில் இருக்கும் சாமி பொங்கல், பூசையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

11) ஒண்ணுக்கே சந்தையம் கறிக்கு வெந்தயம்

வீட்டில் எதுவுமே இல்லை. எது தேவையானாலும் சந்தைக்கு போக வேண்டிய சூழல் ஆனால் கறிக்கு வெந்தயம் போடு என்றானாம். வீட்டில் பஞ்சம் என்றாலும் வெளியில் பந்தா காட்டும் ஆட்களை குறிப்பதற்கு பயன்படும் சொலவடை.

12) பெத்த புள்ள மறந்தாலும் வெச்ச பிள்ள மறக்காது

பிள்ளையைப் பெத்தா கண்ணீரு; தென்னையை பெத்தா இளநீரு என்பது வேறொரு வடிவம்.

13) மாமியார் உடைச்சா மண்குடம்; மருமவ உடைச்சா பொன் குடம்

14) துலுக்கன் துணியில கெட்ட மாதிரி; பாப்பான் பலகாரத்துல கெட்ட மாதிரி

முஸ்லீம்கள் துணிமணிக்காக அதிக செலவு செய்வதையும், ஐயர்கள் தின்பண்டங்களுக்காக அதிக செலவு செய்வதையும் நக்கலடிக்கிறார்கள்

15) முள்ளிக்கா சோத்துக்கு மூலை ஒதுங்கி நிக்குறா; கள்ளிக்கா சோத்துக்கு கதவு ஒண்டி நிக்குறா

பெண்ணை கொடுமைப் படுத்துதலை குறிப்பது. முள்ளிக்காய் அல்லது கள்ளிக்காய் சோற்றுக்காக ஒதுங்கி நின்று வாங்கித் தின்பதை சுட்டுகிறது.

16) வாழைப்பழத்தை கொண்டு போனவ வாசப்படியில வாயைக் கொண்டு போனவ நடு ஊட்டுல

பொருள் இருப்பதால் மட்டும் மரியாதை கொடுத்து வீட்டிற்குள் அனுமதித்து விடமாட்டார்கள். நன்றாக பேசத்தெரிய வேண்டும். பொருளே இல்லாமல் இருந்தாலும் கூட வெறும் பேச்சு இருந்தால் சமாளித்துக் கொள்ளலாமாம்.

17) உப்பில்லா பத்தியகாரன் ஊறுகாயை தின்னானாம்

பத்தியகாரன் - சிலவற்றை உண்ணாமல் தவிர்த்து பத்தியம் இருப்பவன்.

18) நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு
நல்லவன் வருகிறான் செம்பை எடுத்து உள்ளே வை என்பதை வஞ்சப்புகழ்ச்சியணியாக மாற்றி கொங்கு தேசத்தில் சொல்கிறார்கள்.

19) சுடுகளியை நாய் புரட்டுனாப்ல

நாய் கையில் கிடைத்த தென்னம் பழம் போல என்பதன் வேறொரு Form.தின்னவும் இயலாமல் விட்டுவிடவும் மனம் இல்லாமல் புரட்டிக் கொண்டே இருக்கும்.

20) முக்கி முக்கி இடிச்சவளுக்கு மூணு கொலுக்கட்டை; எட்டி எட்டி பார்த்தவளுக்கு ஏழு கொலுகட்டை
    
கஷ்டப்பட்டு இடித்தவளுக்கு மூன்று கொலுக்கட்டைதான் கிடைத்தது. ஆனால் அவளை Monitor செய்தவளுக்கு ஏழு கொலுக்கட்டை கிடைத்தது.

தொடர்புடைய பதிவுகள்:

10 எதிர் சப்தங்கள்:

Kபாலி said...

Is it

வித்தாரகள்ளி வெறவுக்கு போனா கத்தாழை கொத்தோட முள்ளு ஏறுச்சாமா? or

வித்தாரகள்ளி வெறவுக்கு போனா கத்தாழை முள்ளு கொத்தோட ஏறுச்சாமா

portfolio said...

அருமையான தொகுப்பு,படிக்க ரொம்ப சுவாரசியமா இருக்கு.

எனக்கு தெரிஞ்ச சில சொலவடைகள்.

1.தென்னமரத்துல தேளு கொட்டி,பனமரத்துல நெறிகட்டுன கதையால்ல இருக்கு...

2.பிச்ச எடுத்தாராம் பெருமாளு,அத புடுங்கி தின்னாராம் அனுமாரு...

நான் ஸ்கூல்ல படிக்கும்போது எங்க ஸ்கூல்ல இது ரொம்ப பிரபலமா இருந்தது.

பஜாஜ் எம் எய்ட்டி,கைய எடுறா கம்னாட்டி.

Vaa.Manikandan said...

Kபாலி...தப்பா டைப் செய்துவிட்ட்டேன். மாற்றிவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி :)

vimal said...

பொடக்காலி என்று நீங்கள் குறிப்பிடுவது "மாட்டு தொழுவத்தை" தானே ? அல்லது வேறு அர்த்தம் உள்ளதா ? விளக்கம் தரவும் நன்றி.

Vaa.Manikandan said...

பொடக்காலி என்பது வீட்டின் பின்புறமாக இருக்கும் காலி இடம்.

காலிப்புறம்- புறம் காலின்னு மாறி அப்படியே பொடக்காலி என்று மாறிவிட்டது.

வாய்க்கால்-கால்வாய், காலிப்புறம்- புறம் காலி...இவை முற்றுப்போலிகள் (இலக்கணக்குறிப்பு)

Uma said...

அருமையான பதிவு.நிறைய (வட்டார வழக்கு) புதுவார்த்தைகள் தெரிந்து கொண்டேன்!

பொன்.முத்துக்குமார் said...

"7) கொடுமை கொடுமைன்னு போனா சின்னாயா ஈச்சம் பாயைக் கட்டிட்டு எதுக்கால வந்தாளாம்"

இதன் மரூவு :

"கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை அவுத்து போட்டு ஆடிச்சாம்" :)

"10) ஒண்ணாத சாமி ஒதுங்கி நிக்குதாம் பொடக்காலி சாமி பொங்கிலியும் பொங்கிலியுங்குதாமா"

இதன் நவீன மரூவு :

"சாமியே சைக்கிள்ள போவுதாம்; பூசாரிக்கு புல்லட் கேக்குதாம்"

Unknown said...

நல்ல அருமையான திரட்டு

ராமுடு said...

துலுக்கன் துணியில கெட்ட மாதிரி; பாப்பான் பலகாரத்துல கெட்ட மாதிரி -->

In Thanjavur side, we have something like this:

உடுத்தி கெட்டான் துலுக்கன்.. தின்னு கெட்டான் பாப்பான்.. ரெண்டுங்கெட்டான் தமிழன்

:)

RAGUNATHAN said...

அடி புடேன்னு வட சுட்டாளாம்...அஞ்சாறு ஊட்டுல ஞ்சொய் ஞ்சொய்னுச்சாம்...