Feb 2, 2013

வில்லன் பிரகாஷ் ராஜூம் கண்ணம்மா டீச்சரும்


மற்றவர்களைப் பற்றி நாமாக எதையாவது பில்ட் அப் செய்து கொள்கிறோம். கடைசியில் பார்த்தால் நாம் நினைத்ததற்கு முற்றிலும் வேறான ஒரு விஸ்வரூபத்தை எடுத்துவிடுகிறார்கள். அவஸ்தை என்னமோ நமக்குத்தான்.

இப்படித்தான் ஆறாவது படிக்கும் போது கண்ணம்மா டீச்சர் தமிழ் பாடம் எடுத்தார். அந்த வகுப்பிற்கு வந்த ஆசிரியர்களிலேயே அடிக்காத டீச்சர் என்றால் கண்ணம்மா டீச்சர்தான். கணக்கு வாத்தியார் ராமசாமியும் அடிக்க மாட்டார்தான். ஆனால் எப்பவாவது கோபம் வந்து கை வைத்தால் அடி வாங்குபவன் ‘செத்தான்’ என்று வைத்துக் கொள்ளலாம். எதிரில் இருப்பவன் கண்ணும் தெரியாது கீழே கிடக்கும் மண்ணும் தெரியாது. பின்னி எடுத்துவிடுவார்.  மற்றபடி சமூகவியல் டீச்சர் சிலம்புச்செல்வி, ஆங்கிலம் எடுத்த சுசீலா டீச்சர் , அறிவியல் வாத்தியார் வெங்கடாஜலபதி எல்லாம் ஒரே வகையறாவைச் சேர்ந்தவர்கள். ரெகுலர் அடி சர்வீஸ் டீச்சர்ஸ். குச்சியும் கையுமாகத்தான் வகுப்புக்கு வருவார்கள். நினைக்கும் போது அடித்து மேய்ந்துவிட்டு போவார்கள். 

கண்ணம்மா டீச்சர் சாந்தமாக பேசுவார். முக்கால்வாசி நரைத்த முடியுடன் இருக்கும் அவருக்கு கோபம் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று நம்பிவிடலாம். அப்படித்தான் அவரது உருவமும் பேச்சும் இருக்கும். அந்த டீச்சருக்கும் கடும் கோபத்தை வர வைத்தான் சுரேஷ். அவன் எங்கள் வகுப்பில்தான் படித்தான். கீச்சுக்குரலோன். அந்தக் குரலை மற்றவர்கள் கலாய்ப்பது உண்டு. மற்றவர்கள் என்றால் கிட்டத்தட்ட அத்தனை மாணவர்களும்.  என்னதான் கலாய்த்தாலும் டென்ஷன் ஆகமாட்டான். சிரித்துக் கொண்டே நிற்பான். அந்த சிரிப்புதான் மற்றவர்களுக்கு ‘பூஸ்ட்’. அடுத்த முறை இன்னமும் வீர்யமாக கலாய்ப்பார்கள்.

சுரேஷூக்கு உடன்பிறந்தவர்கள் யாருமில்லை. பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்ல மகனாகவும் இருந்தான். அவனது அப்பா பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். பள்ளியில் இருந்து நடக்கும் தூரத்தில்தான் வீடு இருந்தது. கண்ணம்மா டீச்சர் ட்யூஷனும் எடுத்தார். பள்ளி முடிந்தவுடன் ஒரு மணி நேரம் பள்ளியிலேயே ட்யூஷன் நடக்கும். ட்யூஷன் போகும் பையன்கள் எல்லோருமே ஃபீஸ் கொடுத்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களிடம் ஃபீஸ் வசூலிப்பதற்காக ஒவ்வொரு நாளும் டீச்சர் நொந்து கொண்டிருந்தார். ஆனாலும் முரட்டுத்தனமாக கேட்டதில்லை. 

கோழிக்கு புழுவை படைத்த ஆண்டவன் கோழியை பருந்துக்கு படைப்பான் என்று எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள்.அப்படித்தான் ஏகப்பட்ட பேர் சுரேஷை கலாய்த்தாலும் அவன் கலாய்ப்பதற்கு என்று ஜீவன் கிடைத்திருந்தது. கண்ணம்மா டீச்சர்தான அந்த ஜீவன்.

டீச்சர் வகுப்பிற்குள் வந்தால் போதும். சுரேஷ் குஷி ஆகிவிடுவான். டீச்சரை ஓட்ட ஆரம்பித்துவிடுவான். டீச்சருக்கும் அவனை பேச விட்டுப் பார்ப்பதில் சந்தோஷம் இருந்திருக்க வேண்டும். வகுப்பில் வருகைப்பதிவு எடுத்து முடித்தவுடன் “சுரேஷ், ட்யூஷன் ஃபீஸ் என்னாச்சுடா?” என்பார். டீச்சர், செவ்வாய் அபாயம்ன்னு எங்கம்மா சொல்லிடுச்சு..இன்னொரு நாளைக்கு தந்துடுறேன்” என்பான். வகுப்பு மொத்தத்திலிருந்தும் ‘ஜல்ல்ல்ல்ல்’ என்று சத்தம் வரும். டீச்சர் எங்களையெல்லாம் பார்த்து ‘உஷ்ஷ்ஷ்’ என்பார். டீச்சர் முறைத்தாலும் எங்களுக்கு பயமாக இருக்காது என்பதால்  ‘ஈஈஈஈஈ’ என்று பல்லைக் காட்டிக் கொண்டிருப்போம்.

ஒவ்வொரு முறையும் கண்ணம்மா டீச்சர் ட்யூஷன் ஃபீஸைக் கேட்கும் போதும் “இன்னொரு நாளைக்கு” என்று இழுத்தடிப்பான். டீச்சரும் விடாமல் “இன்னொரு நாளைக்குன்னா எப்போ?” என்றால் அவனும் சலிக்காமல் “எங்கம்மாகிட்ட கேட்டுட்டு வந்து சொல்லுறேன்” என்பான்.

“புதன் கொடுத்தால் பந்தம் நிக்காது டீச்சர்”,“வியாழன் வரவு வெச்சா விடிஞ்சா செலவு வெக்கும்”, “வெள்ளிக்கெழம கொடுத்தால் மகாலட்சுமி போயிடும்” என்ற டுபாக்கூர் பழமொழிகளை இடைவெளியில்லாமல் சுரேஷ் அடித்துவிட்டுக் கொண்டிருந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. 

ஒவ்வொரு நாளும் ஃபீஸ் பற்றிய கேள்வி, அதற்கு ஒரு பழமொழி, அதற்கப்புறம் நிறைய டயலாக் பரிமாற்றங்கள். எல்லாம் முடிந்த பிறகு “உங்க அம்மாவைக் கூட்டிட்டு வா” என்று டீச்சர் சொல்வார். அவர்  சொன்னவுடன் “சரிங்க டீச்சர்” என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிடுவான். இதற்கு பிறகு அவனிடம் ஃபீஸ் பற்றி டீச்சர் எதுவும் கேட்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும். இந்த பல்லவிகள் இனி அடுத்த நாள்தான் தொடரும். 

டீச்சருக்கும் சுரேஷூக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் இருந்தது. அவன் சொன்னால் டீச்சர் முழுமையாக நம்பினார். இந்தச் சமயத்தில்தான் நானும் சுரேஷூம் நண்பர்கள் ஆகிக் கொண்டிருந்தோம். காலாண்டுத் தேர்வுகளுக்குப் பிறகாக சுரேஷ் என்னிடம் நெருக்கமாக பழகிவந்தான். அவர்கள் வீட்டு மரத்தில் காய்த்த நெல்லிக்காய், சீதாப்பழம் என சீஸனுக்கு தகுந்தாற் போல கொண்டு வருவான். அவற்றை எனக்கு மட்டும்தான் தருவான். பதிலுக்கு இண்டர்வெல்லில் அவனுக்கு சீடை அல்லது தேன்மிட்டாய் வாங்கித் தருவேன். இந்த பரிமாற்றத்தினாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ எங்கள் நட்பு இறுகிக் கொண்டிருந்தது. 

அரையாண்டுத்தேர்வு முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தது. கண்ணம்மா டீச்சர் வகுப்பு. பாடம் எழுதிய நோட்டை ஒவ்வொருவராகக் கொண்டு வரச் சொன்னார். ஒவ்வொரு மாணவராக வரிசையாகச் சென்றார்கள். எழுதாதவர்களை தலைமையாசிரியர் அறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். நான் பாடம் எழுதியிருக்கவில்லை. ஆனால் சுரேஷ் பாடம் எழுதியிருந்தான். தலைமையாசிரியர் அறைக்குச் செல்ல வேண்டுமே என பயமாக இருந்தது. 

வகுப்பு முடிவதற்கு கடைசி பத்து நிமிடங்கள்தான் இருந்தது. எங்கள் வரிசையை அழைக்க இன்னும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகக் கூடும். பின்னாலிருக்கும் வரிசையில் அமர்ந்து கொண்டால் தப்பித்துவிடலாம் என்று தோன்றியது. சுரேஷிடம் சொன்னேன். “நல்ல ஐடியா” என்றான். பென்ச்சுக்கு கீழாக நகர்ந்து பின் வரிசையில் அமர்ந்து கொண்டேன். இப்பொழுது இரண்டு மாணவர்களுக்கு அடுத்து சுரேஷின் முறை. டீச்சருக்கு அருகாமையில் வரிசையில் நின்று கொண்டிருந்தான். நான் அவனை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்காட்டி விரலைக் காட்டி “சிக்கிக் கொண்டாய்” என்ற பாவனையைக் காட்டினான். அதிர்ச்சியடைந்தேன். “ஏன்” என்று சைகை காட்டினேன். திரும்பவும் அதையே செய்தான். பயம் அதிகமானது. நடுங்கத் துவங்கினேன்.

நல்லவேளையாக பள்ளியின் பெல் அடித்தது. ஆசுவாசமாக இருந்தது. டீச்சர் எழுந்தார். இன்றைக்கு தப்பித்துவிடலாம் என்று தோன்றியது. எல்லோரும் எழுந்து நின்று கோரஸாக “நன்றி டீச்சர்” என்று கத்தவும் டீச்சர் வெளியேறவும் சரியாக இருந்தது. எனக்கு நிம்மதியாகவும் இருந்தது. ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை. “டீச்சர்” என்று சுரேஷ் குரல் கொடுத்தான். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். “மணிகண்டன் எழுதவே இல்லை டீச்சர். உங்களை ஏமாத்த பின்னாடி பென்ச்சுக்கு போய்ட்டான்” என்றான். 

டீச்சர் அத்தனை கோபப்பட்டு பார்த்ததேயில்லை. வெளியே போன டீச்சர் உள்ளே படு வேகமாக வந்தார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். “ராஸ்கல் இந்த வயசுலேயே ஃபோர்ஜரி பண்ணுறியா?” என்று தாறுமாறாக மொத்திவிட்டார். அடுத்த வகுப்பு எடுப்பதற்காக வெளியே அறிவியல் வாத்தியார் வெங்கடாஜலபதி காத்துக் கொண்டிருந்தார். டீச்சர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவரை உள்ளே ஆழைத்து “நீங்க அடிங்க சார்” என்றார். அவருக்கு மேட்டர் புரிந்ததோ இல்லையோ நொங்கிவிட்டார். 

அதன்பிறகுதான் புயல் கரையைக் கடந்தது. டீச்சர் வெளியேறினார். வெங்கடாஜலபதி வாத்தியார் பாடம் நடத்தினார். எனக்கு கண்கள் குளமாகிக் கிடந்தது. சுரேஷ் எதற்கு என்னை மாட்டிவிட்டான் என்று யோசித்துக் கொண்டேயிருந்தேன். ஒன்றுமே பிடிபடவில்லை. அவன் என்னை அவ்வப்போது திரும்பிப்பார்த்து கமுக்கமாக சிரித்துக் கொண்டிருந்தான். எனக்கு கோபம் உச்சிக்கு மேல் ஏறிக் கொண்டிருந்தது. எழுந்து கொட்டி வைக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை.

வகுப்பு முடிந்த பிறகு சுரேஷ் என்னிடம் வந்தான். “செமத்தியா மாட்டுனியா?” என்றான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவனேதான் சொன்னான் “முந்தாநாள் என்னோட கலர் சிலேட் பென்சிலை உடைச்சதுக்கு பழிக்கு பழி” என்றான். எனக்கு உயிர் ஒரு வினாடிக்கு போய் வந்தது. அதை நான் தெரியாத்தனமாகத்தான் முறித்தேன். அப்பொழுது அழுது கொண்டே ஓடிவிட்டான். அடுத்தநாள் வழக்கம் போல சிரித்தும் பேசினான். இந்த பென்சில் மேட்டருக்காக அவன் பிரகாஷ் ராஜை மிஞ்சிய வில்லன் ஆவான் என்று எதிர்பார்க்கவில்லை. பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவனைத் தாண்டினேன். 

வீட்டிற்குச் செல்வதற்காக இரண்டாம் நெம்பர் டவுன்பஸ்ஸில் ஏறி இடம் பிடித்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் அழுது முடித்த போது கடுங்கோபம் உருவாகியிருந்தது. அப்பொழுது அத்தனை கோபத்தையும் திரட்டி ஒரு முடிவு எடுத்தேன் “உனக்கு இருக்குடா”

(எப்பொழுதும் பிரகாஷ் ராஜ்கள் ஜெயித்துக் கொண்டேயிருப்பதில்லை அல்லவா? அவனை ஜெயித்த கதை இன்னொரு நாள்)

3 எதிர் சப்தங்கள்:

இராஜராஜேஸ்வரி said...

ஆறாம் வகுப்பிலேயே சின்னசின்ன விளையாட்டு விஷயங்களுக்காக
வில்லாதி வில்லன்களாக பழிக்குப்பழியா..!1??

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அறிவியல் வாத்தியார் வெங்கடாஜலபதி காத்துக் கொண்டிருந்தார். டீச்சர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவரை உள்ளே ஆழைத்து “நீங்க அடிங்க சார்” என்றார். அவருக்கு மேட்டர் புரிந்ததோ இல்லையோ நொங்கிவிட்டார்.//

வாய்விட்டுச் சிரித்தேன். உண்மையா?
நல்ல நகைச்சுவை நடை

vimal said...

எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது நண்பரே சிறுவயதில் ரஜினிகாந்தின் ரசிகன் நான், நண்பன் (!) ஒருவன் பரட்டை என்று கிண்டல் செய்ததை பொறுக்காமல் இரண்டு நண்பர்கள் உடன் இருந்த தைரியத்தில் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டேன் , அடி வாங்கியவன் அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல சைக்கிளை உருட்டி கொண்டு போய் விட்டான் மறு நாள் அடிவாங்கிய அதே இடம் சரேலென்று அவனது சைக்கிள் நிறுத்தப்பட்டது புயலாய் இறங்கியவன் எனது காதில் விட்டானே ஒரு அறை... காதுக்குள் விமானம் தாழ்வாக பறக்கும் பயங்கரமான ஓசை கேட்டது. இவனா ... இவனா இப்படி நிதானிப்பதற்கு முன் மற்றொரு அறை . மறக்க முடியுமா அந்த அமைதியான வில்லனை இது நடந்து 25 ஆண்டுகளுக்கு முன் ( இப்பொழுது இந்தியாவுக்கு போனால்கூட என்னை பார்த்து நட்புடன் சிரிப்பான் உணமையிலே நட்புடன் சிரிக்கிறானா இல்லை வஞ்சபுகழ்ச்சியணியை போலவோ என்னவோ )