Dec 11, 2012

மனுஷ்யபுத்திரனையே கலாய்க்கிறார்கள்


'எதுவரை' இணைய இதழில் அவ்வப்பொழுது சூடு கிளப்பிவிடுகிறார்கள். இந்த முறை நவீனின் நேர்காணல். நவீன் மலேசியாவில் இருக்கிறார். வல்லினம் என்ற இணைய இதழை நடத்தி வரும் நவீனுக்கு மனுஷ்ய புத்திரன் மீது ஏதாச்சும் ‘காண்டு’ இருக்கிறதா எனத் தெரியவில்லை. காய்ச்சி எடுத்திருக்கிறார். நேரம் இருந்தால் நேர்காணலை இணைப்பில் முழுமையாக வாசிக்கலாம். நேரமும் பொறுமையும் இல்லாதவர்களுக்கு மனுஷ்ய புத்திரனை சீண்டியிருக்கும் பகுதி மட்டும் கீழே.

                                                                      ********

இன்று நம்முன் இருக்கும் மிகப்பெரிய சவால் வைரமுத்து ரகம் அல்ல என நினைக்கிறேன்; மாறாக, மனுஷ்ய புத்திரன் போன்றவர்கள்தான். கே.எஸ்.ரவிக்குமார் அல்ல இயக்குனர் பாலா போன்றவர்கள்தான். வைரமுத்துவின் இலக்கியத் தாக்கம் கொஞ்ச காலம் நீடிக்கும். பின்னர் காணாமல் போய்விடும். இதே நிலைதான் கே.எஸ்.ரவிக்குமார் திரைப்படங்களுக்கும். தீவிர இலக்கியத்தை, நல்ல கலைப்படைப்பை நாடும் ஒருவனை இவர்களது படைப்புகள் எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. வைரமுத்து அளவுக்கோ , அவரைவிடவோ தமிழ் இலக்கியச் சூழலில் செல்வாக்கு செலுத்தியவர்கள் அதிகம் பேர் உண்டு. இன்று அவர்களின் இடம் என்ன என்பதைக்கொண்டே நாம் இன்றைய ஜனரஞ்சக எழுத்தாளர்களின் நிலையை அணுமானித்துவிடலாம். ஆனால், மனுஷ்ய புத்திரனையும் பாலாவையும் எந்த இடத்தில் வைப்பீர்கள். அவர்கள் தங்கள் படைப்புகள் மூலமும் இயங்கும் தளம் மூலமும் எளிதில் தீவிரமான கலை இலக்கிய வெளிக்குள் நுழைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அதற்கு எதிரான எல்லா செயல்களையும் செய்துகொண்டே இருப்பார்கள்.

மனுஷ்ய புத்திரனின் இலக்கியச் செயல்பாட்டையோ அவரது கவிதைகளையோ அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாது. அதே போல பாலாவையும் முழு முற்றாகப் புறக்கணிக்க முடியாதுதான். ஆனால், நாம் இவர்களின் அரசியலை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. வைரமுத்துவுக்கு ‘கவிபேரரசு’ பட்டம் கிடைத்ததும் அதை விமர்சித்து ‘என்றென்றும் வாழும் கோடையில் ‘ எழுதிய மனுஷ்ய புத்திரன், மரத்தடி இணையத்தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு கடுமையாக வைரமுத்துவை விமர்சித்த மனுஷ்ய புத்திரன்தான் இன்று பதாகைகள் மூலம் ‘கவிபேரரசு’ என விளித்து வைரமுத்துவுக்குத் தன் மேடைகளில் இடம் கொடுக்கிறார். ராயல்டி தராமல் சக எழுத்தாளர்களை ஏமாற்றுகிறார். உயிர்மை நூல்களுக்கு அதிகம் நூலக ஆர்டர் கிடைக்க, கனிமொழிக்கும் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கும் கட் அவுட் வைக்கிறார் . இலக்கியத்தில் மனுஷ்ய புத்திரன் வழி நுழையும் ஒரு இளம் தமிழ் எழுத்தாளனின் நிலை என்ன என்பதை யூகிக்க முடிகிறதா? அவனிடம் நிலையான ஒரு பிடிப்பு இருக்காது. வணிகம் ஒன்றுக்காக எதையும் விற்கத்துணிவான். இந்தக் குற்றச்சாட்டையெல்லாம் சமாளிக்க மனுஷ்ய புத்திரனிடம் சொற்களா இருக்காது… ‘இது ஒரு சூதாட்டம்’ என பேட்டி கொடுப்பார். அல்லது ‘நான் உயிர்மையை என் நண்பர்களுக்காக நடத்துகிறேன் இலக்கியம் வளர்க்க அல்ல’ என்பார். ஆனால், நேரடியாக அவரைச் சந்திக்கும் போது தமிழ் இலக்கியத்திற்காக உழைத்த களைப்பில் பேசுவார். தன்னை எதுவுமே பாதிக்கவில்லை என்பது போல கட்டுரை எழுதுவார் . ஆனால், சக எழுத்தாளர்களை பொரிந்து தள்ளுவார். ‘நேர்மை’ குறித்து தலையங்கள் எழுதுவார், ஆனால் சக எழுத்தாளர்களுக்கு ராயல்டி தராமல் ஏமாற்றுவார். நான் முன்பே சொன்னது போல அவரிடமும் அவரைப் போன்றவர்களிடமும் அதிகச் சொற்கள் உண்டு. அதை வைத்துக்கொண்டு திறம்பட தங்களை நியாயப்படுத்தி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பிழைப்பை ஓட்டி விடுவார்கள். சொற்கள் இருந்தால் எதையும் நியாயப்படுத்தலாம்தானே.
                                              
                                                           *********

வாசித்துவிட்டீர்களா? இந்த வெட்டி அரசியல் நமக்கு எதுக்கு என்று நினைத்தால் ப்ரவுசரை மூடிவிடுங்கள். மற்றவர்கள் மூக்கை தொட்டுப்பாருங்கள். வியர்த்திருந்தால் அடுத்த பத்திக்கு போகலாம்.

வைரமுத்து மேட்டருக்கான பேக்ரவுண்ட் இதுதான் - வைரமுத்துவை சில வருடங்களுக்கு முன்பாக கவியரசு என்று அழைத்தார்கள் அல்லது அவரே கூட அப்படி தன்னை அழைக்கச் சொல்லியிருக்கலாம். அது எப்படியோ போகட்டும். அந்தச் சமயத்தில் ‘கவியரசு’ என்பது கண்ணதாசனுக்கு அளிக்கப்பட்டிருந்த பட்டம் என முணுமுணுப்பு கிளம்பியது. வைரமுத்து ரோஷக்காரக் கவிஞன் அல்லவா? அந்தப்பட்டத்தை துறக்கிறேன் என்று அறிவித்துவிட்டார். அப்பொழுது மனுஷ்ய புத்திரன் தனது ‘எப்போதும் வாழும் கோடை’ என்ற புத்தகத்தில் “பாரதியின் கோட்டுச்சித்திரங்களின் இருப்படை அடைவதற்காக இடைவிடாத உடற்பயிற்சியிலும் குரல் பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கும் வைரமுத்துவின் நாடகத்தோற்றங்கள்” என்ற ரீதியில் வைரமுத்துவை வாரியிருந்தார். புத்தகத்தின் முதல்வரியே வைரமுத்துவை கலாய்த்துதான் தொடங்குகிறது. 

இது நடந்து சில வருடங்கள் ஓடிவிட்டன. இடையில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சமீபத்தில் நடந்த உயிர்மையின் விழா ஒன்றிற்கு வைரமுத்துவை அழைத்து, கவியரசு பட்டத்தை துறந்ததற்குத்தான் உங்களை நக்கலடித்தேன் ஆனால் நீங்கள் ‘கவிப்பேரரசு’ என பேனர் அடித்திருந்தார். இதைத்தான் நவீன் இப்பொழுது குத்திக்காட்டியிருக்கிறார். 

வைரமுத்து எப்பவுமே நவீனுக்கு வேப்பங்காய்தான். இதை அவரது நேர்காணல் முழுவதும் கவனிக்கலாம். வைரமுத்துவைக் கொண்டாடும் மலேசிய Pseudo இலக்கியவாதிகளின் மூக்கில் பவுன்ஸர் விட்ட நவீனின் முகம் நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு பரிச்சயமாகியிருக்கக் கூடும்.  ஒரு காலத்தில் மனுஷ்ய புத்திரனுக்கு நண்பராக இருந்து இப்பொழுது எதிரியாகிவிட்ட சாரு நிவேதிதா நவீனுடன் சேர்ந்து கோகோ கோலோவை உறிஞ்சிய தருணத்தில் நவீனை ஏற்றிவிட்டிருக்கக் கூடும் என சந்தேகப்படுகிறேன். இப்பொழுது மனுஷ்ய புத்திரன் மூக்குக்கும் ஒரு பவுன்ஸரைக் குறி வைத்திருக்கிறார். ஆனால் யாரும் ஏற்றிவிடுவதால் ஆட்டம் போடுமளவிற்கு நவீன் ஒன்றும் சிறுவன் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ராயல்டி என்பது என்னளவில் பெரிதான விஷயமாகத் தெரியவில்லை. தமிழில் லட்சக்கணக்கிலா புத்தகங்கள் விற்கின்றன? சில நூறு புத்தகங்கள் விற்றாலே பேரதிசயம். அதிகபட்சமாக சில ஆயிரம் ரூபாய்கள் ராயல்டி கிடைக்கலாம். ‘உயிர்மை’ என்ற பெயருக்கு இருக்கும் ப்ராண்ட் வேல்யூவிற்காக பணம் கொடுத்து வேண்டுமானாலும் புத்தகம் கொண்டு வர ஆட்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. உயிர்மை வழியாக வெளிவரும் புத்தகங்களுக்கு நல்ல ரீச் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் ரீச் ஆகிறதோ இல்லையோ எழுத்தாளனின் பெயர் கொஞ்சம் பரவலாக கவனம் பெறுகிறது. அதற்காகத்தான் எழுத்தாளர்கள் மொய்க்கிறார்கள். மற்றபடி எத்தனை புத்தகங்கள் விற்றன போன்ற தகவல்களை ஆரம்பகட்ட எழுத்தாளரால் ஒரு போதும் கறக்க முடியாது. ஒவ்வொரு வருடமும்  மனுஷ்ய புத்திரனிடம் “புத்தகம் கொண்டு வாங்க” என்று கேட்பவர்கள் அத்தனை பேருக்கும் இந்த நிலவரம் தெரியும். ஆனாலும் புத்தகத்தைக் கொடுக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது பணத்தை அல்ல என்பது நவீனுக்கும் தெரிந்திருக்கலாம்.

கட் அவுட் வைப்பதில் ஆரம்பித்து பல்டி அடிப்பது என்பது வரையிலான அவரது செயல்பாடுகளையும் அரசியலையும் அவரை கவனிக்கும் அத்தனை பேராலும் புரிந்து கொள்ள முடியும். அவர் இலக்கியச் சேவை செய்ய வந்திருக்கிறேன் என்று ஒருபோதும் குறிப்பிட்டதில்லை. கைக் காசு செலவழித்து இலக்கியம் வளர்க்க இது  ‘எழுத்து’* காலமும் இல்லை. மற்றவர்கள் தன் மீது சுமத்தும் விமர்சனங்களைப் பற்றி மனுஷ்ய புத்திரன் அறிந்து கொள்ளாமல் இருப்பார் என்றா நினைக்கிறீர்கள்? தன் செயல்பாடுகள் எந்தவிதத்திலும் இலக்கியவாதிக்கான செயல்பாடில்லை என்பதை தெரிந்து வைத்திருக்கும் அறிவாளிதான் அவர். அதேசமயம் தன்னை களைத்துப் போனவராக காட்டிக் கொள்வதிலும், இலக்கிய உழைப்பாளியாக நிலை நிறுத்திக் கொள்வதிலும் அவருக்கும் அலாதி விருப்பம். இந்த விருப்பங்களின் மூலமாக அவர் தனது பிம்பத்தை தொடர்ந்து வடிவமைத்து வருகிறார். யாராவது இந்த பிம்பவடிவமைப்பைச் சிதைக்க முயன்றால் அது அவரை கடும் வதைக்கு உள்ளாக்கக் கூடும். அவரை வதைத்து நவீன் எதைச் சாதித்துக் கொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை. 

மனுஷ்ய புத்திரனை வாரிவிடுவதானால் அசாத்திய திறமை வேண்டும். எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. அவருக்கு இருக்கும் மொழியால் தனது எதிரிகளை தவிடுபொடியாக்கிவிடுவார். அவரது நக்கலான பதில்களாலும், நையாண்டிகளாலும் எதிரிகள் தூக்குப்போட்டுக் கொண்டு இறந்தாலும் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்பது இலக்கிய உலகம் அறிந்த ஒன்று. “நீ தூசிடா தம்பி” என்று ஊதி விடுவதிலும், “போ..போய் வீட்ல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா” என்று துரத்திவிடுவதிலும் “பந்து பொறுக்கி போடுற பையனுக்கு லோலாயத்தை பாரு” என்று அடித்து காலியாக்குவதிலும் மனுஷ்ய புத்திரனுக்கு நிகர் அவர்தான். ஆனானப்பட்ட ஜாம்பவான்களே பம்மிக் கொண்டிருக்கும் போது நவீனுக்கு தெனாவெட்டு கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. 

கவனித்துப்பார்த்தால் இப்பொழுது மனுஷ்ய புத்திரனை விமர்சிக்கும் பெரும்பாலானவர்கள் அவரோடு ஒரு காலத்தில் மிக அணுக்கமாக இருந்தவர்கள். அவரளவிற்கு நண்பர்களையும் அதே வேகத்தில் எதிரிகளையும் வேறு யாரேனும் உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. அவருடைய நண்பர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு கணத்தில் எதிரியாகிவிடுகிறார்கள். திடீரென கருமேகம் திரண்டு மழை கொட்டுவதைப் போல. 

உண்மையில் மனுஷ்ய புத்திரன் என் குருநாதர். இலக்கியப் புத்தகங்களைக் கொடுத்து எனக்குவாசிப்பு பழக்கத்தை உருவாக்கியவர்.  ‘மனுஷ்ய புத்திரன் வழியாக இலக்கியத்திற்குள் நுழையும் இளம் எழுத்தாளன் வணிகத்திற்காக எதை வேண்டுமானாலும் விற்கத்துணிவான்’ என்ற நவீனின் வரியை வாசித்த போது உறுத்தலாக இருந்தது. ஆனால் நல்ல வேளையாக என் ஆசானின் கூற்றுப்படி நான் இன்னமும் எழுத்தாளனாகவில்லை. ஆனாலும் இப்பொழுது நான் செய்து கொண்டிருக்கும் இலக்கிய கிரவுண்டில் பந்து பொறுக்கி போடும் கலையைக் கூட கற்றுக் கொடுத்ததே ஆசான் தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்வேன்.

குரு துரோகம் மட்டுமில்லை குருவை யாராவது ஓட்டிக் கொண்டிருக்கும் போது வேடிக்கை பார்த்தாலும் பாவம் பிடித்துக் கொள்ளும் என்பதால் கோதாவில் குதிக்க வேண்டியதாகிவிட்டது. ஆனால் இதற்கு யாராவது பதில் எழுதினால் அதற்கு நான் உடனடியாக திருப்பி பதில் எழுதுவேன் என்று தப்பித்தவறி கூட கணக்கு போட்டுவிட வேண்டாம். As always...எனக்கு நாக்கில் சனி.

* எழுத்து என்ற சிற்றிதழ் சி.சு.செல்லப்பாவால் நடத்தப்பட்டு வந்தது. ஜனவரி 1959 - முதல் 1968 மார்ச் வரை மாத இதழாக வெளிவந்தது . (மொத்தம் 111  இதழ்கள்) . 1968 (ஏப்ரல் - ஜூன்) முதல்1970 (ஜனவரி - மார்ச்) வரை காலாண்டிதழாக வெளிவந்தது (8 காலாண்டிதழ்கள்) ஆகமொத்தம் 119 இதழ்கள் வெளிவந்தன .

2 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

அட்டகாசம்!

Unknown said...

கலக்கல்..!!
அரசியல்கள் இல்லாவிட்டால் இவர்கள் எப்படி பெயர் பெறுவது :P