Oct 31, 2012

Site for Sale @ செவ்வாய்நிலவில் முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று தெரியும். இரண்டாவதாக வைத்தவர்? ஆல்ட்ரின். இவர்களோடு இன்னொருவரும் சென்றிருந்தார். அவர் மைக்கேல் காலின்ஸ். மற்ற இருவரும்தான் நிலவில் கால் பதித்தார்கள். காலின்ஸ் விண்கலத்தைவிட்டு இறங்கவே இல்லை. அவர் கொஞ்சம் வருத்தப்பட்டிருக்கக் கூடும். ஆக்ரா போய்விட்டு தாஜ்மஹாலுக்கு போகாதது மாதிரி.

அப்பல்லோ-11 விண்கலத்திற்குள் மூன்று வீரர்களும் தயாரான பிறகு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருந்து ராக்கெட் பறந்தது. அது 1969 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள். நான்கு நாட்கள் பயணித்த பிறகு நிலவை நெருங்கும் நேரத்தில் அந்த இடம் அபாயகரமானது என்பதை மூவரும் உணர்ந்தார்கள். விண்கலம் வெடித்து சிதறிவிடவும் வாய்ப்பிருந்தது. அதுவரை ஆட்டோமேட்டிக்காக இயங்கிய விண்கலத்தின் கட்டுப்பாட்டை உடனடியாக ஆம்ஸ்ட்ராங் எடுத்துக் கொண்டார். நிலவை அடைவதற்காக குறிக்கப்பட்டிருந்த நேரத்தை விடவும் இழுத்துக் கொண்டிருந்தது. பூமியில் இருந்த கட்டுப்பாட்டு அறையில் பதறத்துவங்கினார்கள். "30 வினாடிகள்" என்று அறிவித்தார்கள். இறங்குவதற்கு என ஒதுக்கப்பட்ட எரிபொருள் இன்னும் முப்பது வினாடிகளில் தீர்ந்துவிடும் என்பது அதன் அர்த்தம். விரல்களை கொறித்துக் கொண்டிருந்தார்கள். ஆம்ஸ்ட்ராங் திறமைசாலி. வெற்றிகரமாக விண்கலத்தை நிலவில் இறக்கினார். ஆறு மணி நேரத்திற்கு பிறகு ஆம்ஸ்ட்ராங் தனது பாதங்களை நிலவில் பதித்தார். அமெரிக்க கொடியையும் பறக்கவிட்டார்.

தெரியாத ஊருக்கு போனாலே திகில் கிளம்புகிறது. இதுவரை யாருமே போகாத ஊருக்கு, அதுவும் பூமியைத் தாண்டி அந்நிய கிரகத்திற்கு ஒரு மனிதனை அனுப்பி வைத்தால் அவருக்கு அடிவயிறு கலங்கித்தானே போகும். கிளம்பும்போது ஆம்ஸ்ட்ராங்கின் இதயத்துடிப்பு 110 என்று தாறுமாறாக எகிறியது. நிலா எட்டிப்பிடிக்கும் தூரத்தில் இருந்ததால் ஏதோ பக்கத்து ஊருக்கு போய்வருவது போல கொடியை நட்டிவிட்டு வந்துவிட்டார்கள். கொடி நட்ட விரும்பும் ஒவ்வொரு கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்புவது என்பது சாத்தியம் இல்லை. மனிதனை வேற்றுகிரகங்களுக்கு அனுப்புவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. 

பூமிக்கு பக்கத்தில் இருக்கும் கோள் செவ்வாய். இங்கிருந்து வெறும் கண்ணால் பார்த்துவிடும் தூரம்தான். ஜஸ்ட் ஐம்பத்தாறு கோடி கிலோமீட்டர்கள். பக்கத்தில்தான் என்றாலும் செவ்வாய் கிரகத்துக்கு போய்ச்சேர எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் பிடிக்கும். அங்கு கொஞ்சம் நாட்கள் தங்கி ஆராய்ச்சியெல்லாம் செய்துவிட்டு திரும்பவும் பயணிக்க வேண்டும். மொத்தமாக கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் தேவைப்படும். கூட அத்தனை நாட்களுக்கு மனிதர்களை அனுப்பிவைத்தால் குறைந்த புவியீர்ப்புவிசை, காஸ்மிக் கதிர்களின் தாக்கம், மனரீதியிலான சிக்கல்கள் என்று ஒரு வழியாக்கிவிடும்.

பல வருடங்களாகவே செவ்வாய் பற்றிய பல கதைகளும் கற்பனைகளும் றெக்கை கட்டி பறக்கின்றன. செவ்வாயில் தண்ணீர் இருக்கிறது, ஆக்ஸிஜன் இருக்கிறது, உயிரினங்கள் வாழ்கின்றன, நாமும் 'ப்ளாட்' போட்டு விற்றுவிடலாம் என்று ஆளுக்கு தகுந்த மாதிரி ஒரு கதை சொல்லி வந்தார்கள். சாதாரண ஆட்களே கதை சொல்லும் போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா'க்காரன் சும்மா இருப்பானா? செவ்வாயை ரவுண்டு கட்டி ஆராய்கிறான். ரோபோக்களை அனுப்பி.

ஆமாம். விண்வெளி மற்றும் பிற கோள்களைப் பற்றிய ஆய்வுகளுக்கு ஸ்பேஸ் ரோபோக்களை பயன்படுத்துகிறார்கள். விண்வெளி ஆய்வு வீரர்களை 'ஆஸ்ட்ரோனாட்' என்று அழைப்பதால் இந்த ரோபோக்களுக்கு 'ரோபோனாட்' என்றுபெயர். செவ்வாய் கிரகத்தை இந்த ரோபோக்கள்தான் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. மற்ற எந்த ரோபோக்களையும் விட விண்வெளி ரோபோ வடிவமைப்பும் சவால்கள் நிறைந்தது. 

விண்வெளியில் வெப்பநிலை தாறுமாறாக ஏறி இறங்கும் என்பதால் அதற்கேற்ற உலோகத்தில் ரோபோனாட் வடிவமைக்கப்படுகிறது. ரோபோவின் உடல் அலுமினியத்தாலும் கைகள் இரும்பினாலும் செய்யப்படுகிறது. வேற்றுகிரகங்களில் புழுதிப்புயலுக்கு வாய்ப்பு அதிகம். அந்தச் சமயங்களில் மண்ணோ கல்லோ ரோபோவின் உடலுக்குள் புகுந்துவிடாமல் இருப்பதும் அவசியம் எனவே உலோக உடலமைப்பின் மீது கதிரியக்கதை தாங்கும் படியும், நெருப்பு பற்ற முடியாத, அந்நியத் துகள்களை அனுமதிக்காதவாறு துணி (Fabric)சுற்றப்பட்டுவிடும். இது ரோபோனாட்டுக்கு விண்வெளி வீரரைப் போன்ற ஒரு 'லுக்' கொடுத்துவிடுகிறது. 

செவ்வாய் கிரகத்துக்கு ரோபோக்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவை மனித வடிவில் இல்லை. இந்த தரையுலவி(Rover)கள் 'பாடி'கட்டாத லாரியைப் போலத்தான் இருக்கின்றன. செவ்வாய் கிரகத்திலோ அல்லது நிலவிலோ நில அமைப்பு குண்டு குழியுமாக இருக்கும். எனவே ரோபோ நகரும் போது குட்டிக்கரணம் அடித்துவிடாதபடிக்கு வடிவமைப்பதும் மிக முக்கியம். காற்றின் வேகத்தை அறிவதிலிருந்து, வெப்பநிலை, நில அமைப்பு என பலவற்றையும் உணர்ந்துகொள்ளும் படி நூற்றுக்கும் மேற்பட்ட சென்சார்கள் ரோபோவின் உடல் முழுவதும் தேவைப்படும்.  மின்சாரம் வேண்டுமே? புளூடோனியம்-238 போன்ற கதிரியக்கப் பொருளை ரோபோவில் வைத்துவிடுவார்கள். இந்த கதிரியக்கத்தின் மூலம் உருவாகும் வெப்பம்தான் ரோபோவுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு குட்டி அணு உலை. இவ்வாறு சென்சார்கள், குட்டிக் கம்ப்யூட்டர், கதிரியக்கத்தை ஆற்றலாக மாற்றும் ஜெனரேட்டர் என சகலத்தையும் இந்த ரோபோ சுமந்து செல்லும். 

மேற்சொன்னவையெல்லாம் ரோபோ இயங்குவதற்கான அமைப்புகள். போன இடத்தில் கொடுத்த வேலையைச் செய்ய வேண்டுமல்லவா? அதற்காக காமிராக்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் என இன்னும் சில பல ஐட்டங்களும் ரோபோவுக்குள் அடக்கம். முட்டுச்சந்தில் நின்றால் கூட மொபைல் போனில் சிக்னல் இல்லை என கதற வேண்டியிருக்கிறது. பலகோடி மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் தகவல்களை பரிமாறிக்கொள்ள எத்தனை சக்திவாய்ந்த கம்யூனிகேசன் சிஸ்டம் தேவைப்படும் என்பதை ஒரு வினாடி யோசித்துப்பாருங்கள். 

சமீபகாலமாக க்யூரியாசிட்டி என்ற தரையுலவிதான் செவ்வாய் கிரகத்தில் அதகளம் செய்துகொண்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் காலநிலை, நில அமைப்பு, நீர் இருக்கிறதா எதிர்காலத்தில் மனிதன் போய் வர என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் போன்றவைகளை ஆராய்வதுதான் இதன் குறிக்கோள்கள். இவற்றையெல்லாம் தாண்டி ஏகப்பட்ட தகவல்களையும் போட்டோக்களையும் அள்ளி வீசி ஆராய்ச்சியாளர்களை திக்குமுக்காடச் செய்து வருகிறது. மனித உலகம் ஆச்சரியப்படும்படியான தகவல்களை க்யூரியாசிட்டி அளிக்கவிருக்கிறது என நாசா அறிவித்திருக்கிறது. காத்திருப்போம். 

[கல்கி வார இதழில் வெளியாகும் ‘ரோபோஜாலம்’  என்ற ரோபோடிக்ஸ் பற்றிய தொடரின் ஒரு அத்தியாயம்]

1 எதிர் சப்தங்கள்:

Uma said...

எளிமையான அருமையான கட்டுரை. ஜால்ம் தொடர வாழ்த்துக்கள்!