May 18, 2012

கற்பழித்ததா இந்திய இராணுவம்? ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகனின் ”கற்பழித்ததா இந்திய இராணுவம்?” என்ற கட்டுரை http://www.jeyamohan.in/?p=27320 என்ற இணைப்பில் இருக்கிறது.
                                                           
                                                                   ***

டியர் சார்,

வணக்கம்.

முள்ளிவாய்க்காலில் மூன்றாண்டுகளுக்கு முன்பாக அரங்கேற்றப்பட்ட கொடூரத்தை அசை போட்டுக்கொண்டிருக்கும் அதே மே மூன்றாவது வாரத்தில் ”கற்பழித்ததா இந்திய இராணுவம்” என்ற உங்களின் குறிப்பை வாசிக்க நேர்ந்துவிட்டது. இரண்டு நாட்களாக- குறிப்பாக இரவுகளில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திய குறிப்பு அது. 

திருமாவளவனும், ஷோபாசக்தியும் இந்திய இராணுவம் இலங்கையில் அரங்கேற்றிய கொடூரத்தின் நேரடி சாட்சிகளாக முன் நிற்கிறார்கள் என்பதும், அவர்களின் கடிதங்கள் ஜாஸ் டயஸ் மற்றும் உங்களின் கருத்துக்களுக்கு எதிர்வினையாக அமைந்து நீங்கள் குறிப்பிட்டவை ”உண்மையன்று” எனக் கலைப்பதும் சற்று ஆறுதலாக இருந்தது.

இந்திய இராணுவத்தால் தனது சொந்த மண்ணில் நிகழ்த்தப்பட்ட வன்புணர்ச்சிகளும், பாலியல் அத்துமீறல்களும் தொடர்ந்து ஊடகங்களிலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் முன் வைக்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது. அஸ்ஸாமின் கோக்ராஜார் (kokrajhar)நிகழ்த்தப்பட்ட வன்புணர்ச்சிகள், 1991 இல் குணான் போஸ்பராவில் (Kunan Poshpara)அரங்கேறிய பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், மணிப்பூரில் நிகழும் தொடர்ச்சியான வன்புணர்வுகள் மற்றும் பெண்கள் காணாமல் போகிறார்கள் என்ற செய்திகளை அவ்வப்போது எதிர்கொண்டுதானே இருக்கிறோம். நான் இருக்கும் பகுதியில் என் சாதியைச் சார்ந்தவனோ, என் தொழிலைச் செய்பவனோ எந்தப்பிரச்சினையும் செய்யவில்லை என்றால் எந்த ஊரிலும் என் சாதியைச் சார்ந்தவனும், என் தொழிலைச் செய்பவனும் குற்றமே புரிவதில்லை என்று சொல்வதன் அபத்தைத்தான் ஜான் டயஸின் கடிதத்தில் காண்கிறேன்.

பேரழிவின் கடைசிக் கணங்களில் இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது பொதுமக்கள் ஆதரிக்காமல் போனதற்கு இந்திய இராணுவத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பிரச்சாரத்தின் கசப்புதான் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதும் ஏற்புடையதில்லை. தமிழகம் தாண்டி இந்தக் கொடுமைகள் வெளியில் தெரியாமல் போனதற்கு பிற மொழி ஊடகங்கள் இந்த விஷயத்தை கையில் எடுக்கவில்லை என்றாலும், தமிழகத்தில் பொதுமக்களிடையே ஒரு கொந்தளிப்பு இருந்ததும், முத்துக்குமரனின் தற்கொலைக்குப் பிறகாக கொந்தளிப்பு ஒரு பெரும் மக்கள் போராட்டமாக மாறும் சூழல் உருவானதும்தான் உண்மை. ஆனால் அந்த கொந்தளிப்பில் நீர் ஊற்றியதிலும், போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ததிலும் தமிழக அரசியல்வாதிகளுக்கும், இந்திய அரசுக்கும் பெரும் பங்கு இருந்ததாகவே நம்புகிறேன். இந்த மழுங்கடித்தலில் இந்திய இராணுவத்தின் மீதான பிரச்சாரம் போன்ற சிறு காரணங்களைத் தாண்டி பெரும் அரசியல் காரணங்கள் இருந்தன என்பது உங்களுக்கும் தெரிந்தே இருக்கும்.

நேற்றிரவு முகநூலில் ஒரு குறிப்பை எழுதினேன் “Controversy மட்டுமே தன் மீதான ஈர்ப்பை தொடர்ந்து நிறுத்திக் கொள்ள உதவும் என்ற மனநிலையில் ஜெயமோகன் இருக்கிறாரோ என்ற உறுத்தல் இம்சிக்கிறது” பிறகு இன்னொரு குறிப்பையும் எழுதினேன் “ஜெயமோகனின் வாசகனான எனக்கு இப்படியான மனநிலையை உருவாக்கியது அவரின் தோல்வியாகவே பார்க்கிறேன்”.

இருப்பினும்- தீராத வருத்தத்தில் இந்தக் கடிதத்தின் முதல் வரியை எழுதத் துவங்கினேன்.

நன்றி.

அன்புடன்,
வா.மணிகண்டன்
                                                ***

அன்புள்ள மணிகண்டன்,

எப்போதுமே என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான் எழுதவந்த காலத்தில் இருந்தே.

என்ன காரணம் என்று நான் பலமுறை விளக்கியிருக்கிறேன். வழக்கமாக எல்லா தளங்களிலும் எல்லாராலும் சொல்லப்படும் விஷயங்களுக்கு அப்பால் ஏதேனும் சொல்லப்படாத, கேட்கப்படாத ஒன்று உள்ளதா என்ற பார்வை எழுத்தாளனுக்கு இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். எப்போதும் விடுபட்ட இன்னொன்றைச் சுட்டிக்காட்ட விரும்புவேன். அது பிழையாக கூட இருக்கலாம். ஆனால் அந்தக்குரலையும் கேட்டாகவேண்டும் என்று நினைப்பேன்.

அப்படிச் செய்யும்போது அது பெரும்பாலான தரப்பின் கசப்புக்கும் கோபத்துக்கும் வழிவகுக்கும். அது உணர்ச்சிகரமானதாக இருக்கையில் இன்னும் சிக்கலானது.  அது எனக்கு ஒன்றும் புதியதல்ல. நான் பிராபல்யத்தை அல்லது பரவலான ஏற்பை விரும்பக்கூடியவன் அல்ல. பெரும்பாலானவர்கள் என்னை எதிரியாக நினைத்தாலும் அதில் எனக்கு வருத்தம் இல்லை.

இந்த விஷயத்தில் எனக்கு வந்த கடிதங்கள் நான் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறேனோ என எண்ண வைத்தன. ஏனென்றால் அந்த பிரச்சாரத்துடன் ஒருகாலகட்டத்தில் நான் சம்பந்தப்பட்டிருக்கிறேன். ஆகவே அவற்றைப் பிரசுரித்தேன். அவ்வளவுதான்

ஜெ

10 எதிர் சப்தங்கள்:

பொன். வாசுதேவன் said...

//வழக்கமாக எல்லா தளங்களிலும் எல்லாராலும் சொல்லப்படும் விஷயங்களுக்கு அப்பால் ஏதேனும் சொல்லப்படாத, கேட்கப்படாத ஒன்று உள்ளதா என்ற பார்வை எழுத்தாளனுக்கு இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன்.//

மணி, ஜெயமோகனின் பதிலில் இது ஏற்கக்கூடியதாக இருக்கிறது. அதே சமயம், முரண் பார்வை கொண்டே எதையும் அணுகுவது சரியா என்ற கேள்வியும் எழுவிதை தவிர்க்க இயலவில்லை.

பொன். வாசுதேவன் said...

‘எழுவதை‘ என திருத்தி வாசிக்கவும்.

தமிழ்நதி said...

வாசுதேவன்,

முரண்பார்வையோடு எதை எதை அணுகலாம், கேள்வி கேட்கலாம் என்பதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது என்று நான் கருதுகிறேன். பூமி உருண்டையாக இருக்கிறது என்று விஞ்ஞானபூர்வமாக நிறுவப்பட்டான பிறகு, 'அது சதுரமாக இருக்கலாமோ...'என்று ஐயப்படலாமா? கதிரவன் கிழக்கில் உதிக்கிறான் என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தும் 'சில சமயம் வடக்குத் திசையிலும் உதிக்கலாம்'என்று சம்சயம் கொள்ளலாமா? அது போல நூறு சதவீதம் நிறுவப்பட்டதே, ஈழத்தில் இந்திய அமைதிப் படை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டது என்பதும். அதற்கு நாங்கள் வாழும் சாட்சியங்களாக இருக்கிறோம். ஒரு விடயத்தில் குறைந்தபட்சத் தெளிவும் இல்லாதவர் எதற்காக அந்த விடயங்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற விடயம் எனக்குப் புரியவேயில்லை.

Garunyan Konfuzius said...

ஜெயமோகன் என் சிந்தனைகள் அயோக்கியத்தனமானவையா அபாண்டமானவையா பக்கச்சார்பானவையா என்று மட்டும் ஒருபொழுதும் சிந்திப்பதில்லை. மற்றும்படி சிந்தனையாளர்தான். ஒத்துக்கணும்.

யுவகிருஷ்ணா said...

இன்னும் சில ஆண்டுகளில் முத்துக்குமரன் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டான் என்றுகூட எல்லோராலும் சொல்லப்படாத விஷயங்களுக்கு அப்பால் ஏதேனும் கருத்து வரலாற்றில் நிறுவப்படலாம் :-(

நம் கண்களுக்கு முன்னால் நம் காலத்தில் நடந்த இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களை இவ்வளவு விரைவாக நேரெதிர் நோக்கில் மாற்றி எழுதுகிறார்கள். இதுவரை எழுதப்பட்ட வரலாறு குறித்த நம்பகத்தன்மை குறித்த கேள்வியை நாம் நமக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சரவணன் விவேகாநந்தன் said...

இது ஒரு மாபாதகம் என்று கருத தேவையில்லை என்றே எண்ணுகின்றேன். இந்தியராணுவ வீரர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதற்கான எல்லா சாத்திய கூறுகளும் உள்ளன. ஆனால் இது பற்றிய அவர்களது perspective வையும் பொதுவில் வைப்பதில் தவறேதும் இல்லை. இதைசார்ந்த எல்லோரது perspective களும் முன்னரே வைக்கபட்டுவிட்டன அல்லவா? இந்த பிரச்சனை சார்ந்த இராணுவத்தினரும் இதை பொதுவில் வைப்பதில் என்ன தவறு? நாம் ஏற்று கொள்கிறோமா இல்லையா என்பது நமக்கு இதுவரைக்கும் கிடைத்த தவல்கள் மூலம் நாம் வந்தடைந்த மன முடிவை பொறுத்தது. அதைத்தானே ஜனநாயக வழிமுறையாக பின்பற்றி கொண்டு இருக்கிறோம்? விடுதலை புலிகள் பற்றி நல்லதை சிலபேர் சொல்கிறார்கள் அவர்களை பற்றிய கெட்டதையும் சில பேர் சொல்லுகிறார்கள். எல்லாவற்றையும் சீர் துக்கி பார்த்து ஒவ்வொருவரும் அவர்களுக்கான முடிவை எடுக்கிறார்கள். அந்த அடிப்படையில் தானே விடுதலை புலிகள் ஆதரவு நிலையையோ அல்லது எதிர்ப்பு நிலையையோ ஒருவரால் எடுக்க முடிகிறது? நான் எடுத்த முடிவையே நீயும் எடுக்க வேண்டும் என்றோ அதற்க்கு எதிரான எந்த கருத்துகளும் போது வெளியில் வைக்கப்பட கூடாது என்றோ ஒருவர் சொல்ல முடியுமா?

Athisha said...

முட்டாள்தனமான ஜெமோவின் பதிவுக்கு கடிதமெல்லாம் எழுதி குசலம் விசாரித்த உங்கள் கடமையுணர்ச்சியை கண்டு நான் வியக்கேன்!

ம.தி.சுதா said...

யுவகிருஸ்ணா சொன்னது போலத் தான் இன்னும் மூ வருடத்தில் அவர் எழுதக் கூடும்..

நானும் சில ஆதாரங்களை கொடுத்துள்ளேன் சகோ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்

Anonymous said...

இந்திய அமைதிப் படை என்ற பெயரில் வந்த அட்டூழியப் படையினர் வீடுகளுக்குள் புகுந்து பாவித்த வெளிநாட்டு உள்ளாடைகளையும் திருடிச்சென்றனர். நாயில் கேவலமான பிழைப்பு...

தூரன் குணா said...

ஜெயமோகனை எள்ளவும் வருத்தப்படுத்திவிடக் கூடாது என்ற பிரயத்தனம் இந்தக் கடிதப் பதிவில் இருப்பதாக என்னளவில் நான் புரிந்து கொள்கிறேன்..மேலும் இவ்வளவு மென்மையாக அரசியல் கருத்துகளை பரிமாறிக் கொள்வதும் ஒரு வரம்தான்.