நேற்று இரவு மூன்று மணி வரைக்கும் தூங்கவில்லை. இரண்டு மிக முக்கியமான வேலைகளைச் செய்தேன். 2012 ருத்ரம், வேட்டைக்காரன் ஆகிய இரண்டு படங்களைப் பார்த்தேன்.
பொதுவாக எனக்கு மசாலாப் படங்கள் மிகப் பிடிக்கும் என்பதனால் ருத்ரம் 2012 ஐ விட வேட்டைக்காரன்தான் பிடித்திருந்தது. அதைவிடவும் ஆங்கிலப்படங்களில் பிரம்மாண்டம் என்ற பெயரில் அவர்கள் வெறுமனே பயமூட்டுகிறார்கள். இப்படித்தான் பயமுறுத்துவார்கள் என்று கிட்டத்தட்ட படம் பார்க்கும் போது யூகித்து விட முடிவதால் ஜூராசிக் பார்க் படத்தில் கிடைத்த 'த்ரில்' பிறகு வந்த படங்களில் கிடைத்ததில்லை. இத்தகைய ஹீரோயிசப் படங்களில் எத்தனை பெரிய அழிவு வந்தாலும் கதாநாயகன் கடைசியில் தப்பித்துவிடுகிறான்.
வேட்டைக்காரன் பற்றி ஏகப்பட்ட பேர் எழுதியிருக்கிறார்கள். விமர்சனம் எழுதுகிறேன்(அதுவும் இத்தனை நாட்களுக்குப் பிறகு) என்று துவங்கினால் பதிவை படிக்கும் கொஞ்ச நஞ்ச பேரும் கணிணித்திரையின் வாஸ்துப்படி வலது பக்க மேல் மூலையில் இருக்கும் பெருக்கல் குறியை அழுத்திவிடுவார்கள்.
கதாநாயகன் ஒரே அடியில் எதிரிகளை வீழ்த்துவதைப் பார்க்க பரவசமாக இருக்கிறது. சிலிர்த்து நிற்கும் கைகளை உணர்ச்சிவசப்பட்டு சுவற்றில் ஓங்கிக் குத்தி சுவரை இடித்துவிடுவேனோ என்று கூட பயமாக இருக்கிறது. படம் பார்க்கும் போது லாஜிக் பார்க்கக் கூடாது என்ற கட்சியில் நான் இருக்கிறேன். அதனால் இரண்டேகால் மணி நேரம் பிரமாதமாக ஓடிப்போனது. மூன்று மணிக்கு மேல் தூங்கினால் என் வீட்டை எல்லாம் ஏதோ ரவுடிக்கூட்டம் அடாவடியாக பிடுங்கிக் கொள்வதாகவே கனவு வந்தது. அதுதான் கொடுமை.
===
அலுவலகப் பணி நிமித்தமாக செவ்வாய்க்கிழமை மும்பை போயிருந்தேன். பிரபல யூத் பதிவர் அனுஜன்யாவை சந்தித்ததைத் தவிர உருப்படியான நிகழ்வு எதுவுமில்லை. அவரது கவிதைகள் எனக்கு மிக விருப்பம். அனுஜன்யாவுக்கு அவரது அலுவலகத்தில் தனி அறை கொடுத்து இரண்டு மூன்று கணிணிகளையும் கொடுத்து வைத்திருக்கிறார்கள். பெரிய வேலைக்காரர் போலிருக்கிறது. நான் இருந்த நேரம் முழுவதும் அவரது அறைக்குள் யாருமே வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு "தமிழ் ஆளாக இருந்தால் தமிழில் கவிதை சொல்லுவேன். ஹிந்திக்காரனாக இருந்தால் சலிக்காமல் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் கவிதை சொல்லுவேன்"என்றார். பிறகு ஏன் வரப்போகிறார்கள்.
===
டைரி எழுதுவது போல பல் விளக்கினேன், பாத்ரூம் போனேன் என்று வலைப்பதிவில் எழுதுவதில் விருப்பம் இருந்ததில்லை. குறைந்தபட்சம் எனக்கு உருப்படியான விஷயம் என்று தோன்றுவதைத்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு.
நேற்று ஒரு நண்பர் ஆன்லைனில் வந்து 'அதை எழுது!இதை எழுது!' என்று உச்சகட்ட டார்ச்சரைக் கொடுத்தார். சிரிப்பானை அடித்துக் கொண்டிருந்தேன். கடைசியாக, நான் பல மாதங்களாக உங்கள் பதிவை பார்க்கவில்லை, உங்கள் பதிவின் லின்க் தாருங்கள் என்றார்.
தீர்க்கதரிசி! ப்லாக்கையே பார்க்காமல் இவன் இதைத்தான் எழுதுவான் என்று முடிவு செய்திருக்கிறார். அதற்காகவாவது எதையாவது எழுத வேண்டும் போலிருக்கிறது. எதுவுமே எழுதாமல் இருக்கும் நாட்களில் கூட இந்தத் தளத்தை நம்பி திறந்து படிக்கும் சில நூறு பேர்களை இழந்துவிடக் கூடாது என்றும் நினைக்கிறேன்.
==
'கமெண்ட் மாடரேஷன்' ஐ எடுக்கச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி. சுந்தர ராமசாமியின் கவிதை பற்றி "முற்றாகக் களைந்து அம்மணம் கொள்" என்ற தலைப்பில் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அந்த இடுகைக்கு குறைந்தபட்சம் நாளொன்றுக்கு மூன்று பின்னூட்டங்களாவது கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. அத்தனையும் அனானி பின்னூட்டங்கள். ஏதோ ஒரு லின்க் மட்டும் பின்னூட்டாமாக இடப்படுகிறது. அந்த பின்னூட்டங்களை நிறுத்த இன்னும் சில நாட்களுக்காவது "கமெண்ட் மாடரேஷன்" தேவைப்படும் என்று நினைக்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
9 எதிர் சப்தங்கள்:
//மூன்று மணிக்கு மேல் தூங்கினால் என் வீட்டை எல்லாம் ஏதோ ரவுடிக்கூட்டம் அடாவடியாக பிடுங்கிக் கொள்வதாகவே கனவு வந்தது. அதுதான் கொடுமை//
LOL:))))
விஜய் மாதிரி சண்டையெல்லாம் போட்டு.வீட்டை மீட்கற மாதிரி கனவு கண்டினியூ ஆகாதது சோகமே!
சிங்கம் படம் பாத்தீங்கன்னா சிலிர்த்துப் போய்டுவீங்க போல..... :)
//படம் பார்க்கும் போது லாஜிக் பார்க்கக் கூடாது என்ற கட்சியில் நான் இருக்கிறேன்//
நானும்தான்.....எப்பல்லாம் ஊருக்கு போவேனோ..நிச்சயமாக ஒரு செகன்ட் ஷோ ஜெயமாருதியில பாத்துட்டுதான் வருவேன் (சமீபத்தில் சுறா..)...
:-))
மிக சுவராசியம்!
அதிரி புதிரியா உதிரி உதிரி...மும்பைக்குப் போகுறச்சே சூட்கேசில் செம்பும் துப்பாக்கியும் இருந்துச்சா? இருந்தால் பாதுகாப்பு...அவசியம் வரும்போது தொடர்பு கொள்கிறேன்..ஓன் டூ த்ரீ
இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
//பிறகு ஏன் வரப்போகிறார்கள்.//
கவிஞர்கள் எல்லோருமே ஒரே மாதிரி கொலைவெறியில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது தோழர்.
// அந்த இடுகைக்கு குறைந்தபட்சம் நாளொன்றுக்கு மூன்று பின்னூட்டங்களாவது கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. அத்தனையும் அனானி பின்னூட்டங்கள். ஏதோ ஒரு லின்க் மட்டும் பின்னூட்டாமாக இடப்படுகிறது. அந்த பின்னூட்டங்களை நிறுத்த இன்னும் சில நாட்களுக்காவது "கமெண்ட் மாடரேஷன்" தேவைப்படும் என்று நினைக்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்//
மணிகண்டன் நீங்கள் அந்த பதிவிற்கு மட்டும் பின்னூட்டத்தை தடை செய்யலாம்! விரும்பினால் ...
//கவிஞர்கள் எல்லோருமே ஒரே மாதிரி கொலைவெறியில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது தோழர்.//
ஹரன், தமிழில் இல்லாவிட்டாலும் ஹிந்தியிலாவது சாஹித்ய அகாடமி (அ) ஞானபீடம் வாங்கியே தீருவது என்ற முடிவில் மாற்றமே இல்லை. நீங்களும் டில்லி புத்தக கண்காட்சியின் போது ஆட்டோ ஓட்டுனரிடம் கவிதை சொல்லியது நினைவில் இருக்கு :)
அனுஜன்யா
Post a Comment