Jul 16, 2009

எனக்கு சுவாரஸியமான பதிவுகள்

எந்த ஒரு அற்புத எழுத்தாளரின் அனைத்து எழுத்துக்களும் ஒரு வாசகனை ஈர்த்து விடுவதில்லை. அதே சமயத்தில் எந்த மோசமான எழுத்தாளரின் அனைத்து எழுத்துக்களையும் வாசகன் புறந்தள்ளிவிடுவதில்லை. நிற்க. இந்த அற்புத/மோச என்ற வரையறைகள் கூட வாசக மனம் சார்ந்த பகுப்புதான். நான் கொண்டாடும் ஒரு எழுத்தாளனையும் அவனது எழுத்தையும் நீங்கள் நிராகரிக்கலாம். நான் நிராகரிக்கும் எழுத்து உங்களின் மதிப்புமிக்க படைப்பாக இடம்பெறலாம்.

எழுத்தாளனை தனிப்பட்ட முறையில் அறியாமல் அவனது எழுத்துக்களை மட்டும் வாசிக்கும் போது கிடைக்கும் அனுபவமும் உருவாகும் பிம்பமும் வேறு, அவனை அறிந்த பின்னர் அவனது எழுத்தில் கிடைக்கும் வாசிப்பனுபவம் வேறு. பிம்பம் சிதைதல்- இதுதான் இரண்டாவதில் நிகழ்கிறது. இணைய எழுத்தின் மிகப்பெரிய பலவீனமும் பலமும் இதுதான். எழுத்தை விரும்பிவிட்டால், அந்த வாசகனுக்கு எழுத்தாளனோடான நட்புக்கு எந்தவித தடையும் இருப்பதில்லை. அவனை அறிந்து கொள்ளவும் அவன் பற்றியதான நம் உள் மன பிம்பத்தை சிதைக்கவும் அதே இணையம் இமெயில், சாட் மூலம் உதவிவிடுகிறது.
=======
நான் வாசிக்கும் சுவாரஸியமான பதிவர்களை பற்றி ஒரு குறிப்பெழுத நண்பர் சென்ஷி அழைத்திருக்கிறார்.

கலாப்ரியா :
நவீன தமிழ்க் கவிதையில் தவிர்க்க முடியாத பெயர். நான் மிக மதிக்கும் கவிஞர். சென்ற ஆண்டிலிருந்து பதிவு எழுதி வருகிறார்.கவிதைகளை விட அதிகமாக தன் வாழ்வியல் அனுபவங்களை ஈர்ப்பான எழுத்துகளின் மூலம் பதிவு செய்து வருகிறார். நேரடியாக பேசும் போது குறைந்த அளவிலேயே பேசும் இவரது எழுத்துக்களில் தெறிக்கும் நகைச்சுவை ஆச்சரியமூட்டுபவை. அவரது எழுத்தின் சுவாரஸியத்தை வாசித்தவர்கள் உணரலாம்.

கலாப்ரியாவின் off the record ஜோக் ஒன்று இங்கு record செய்யப்படுகிறது.

பி.யூ.சி முடித்த கலாப்ரியாவிடம் அவரது தந்தையாரின் அலட்டல் நண்பர் ஒருவர், அடுத்ததாக என்ன கோர்ஸ் பண்ணலாம் என்றிருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார். அருகில் இருந்த தந்தையாரையும் பொருட்படுத்தாமல் கடுப்பில் கலாப்ரியா உதிர்த்த வார்த்தை "ம்....இண்டர்கோர்ஸ்".

சுரேஷ்கண்ணன்:
சுரேஷ் கண்ணனின் பதிவுகளில் மாற்று சினிமா குறித்தான பார்வையும், சமகால தமிழ் இலக்கிய உலகம் குறித்தான குறிப்புகளும் என்னை பெரிதும் ஈர்த்தவை என்றாலும், சற்றேறக்குறைய இவரின் அனைத்து பதிவுகளையும் வாசித்து விடுவதுண்டு. தொடர்ந்து பதிவுகளாக அதுவும் சுவாரஸியமாக (அடுத்தவர்களின் கடிதங்களை பதிவிலேற்றி காலம் ஓட்டுவதில்லை) இவரிடம் ஒரு கேள்வி,ஸார்..இது பிச்சைப்பாத்திரமா?அட்சயபாத்திரமா?

நதியலை:
நதியலையின் பதிவில் கவிதைகள்தான் அதிகம். அனைத்துக் கவிதைகளும் எனக்கு உவப்பானவை அல்ல என்றாலும் கவிதையில் இவர் உருவாக்கும் வெளிக்காக இவரது கவிதைகளை தொடர்ந்து வாசிப்பேன். சில கவிதைகளை வேண்டுமென்றே திருகலாக எழுதிறாரோ என்ற சந்தேகம் உண்டு. அதே திருகல் மொழி கவிதையை இன்னொரு முறை வாசிக்கச் செய்கிறது.

புதிய வார்த்தைகளை(வழக்கத்தில் இல்லாத) கவிதைக்குள் சரியான இடத்தில் பயன்படுத்துகிறார். இவரது கவிதைகளை வாசிக்கும் போது ஒரு முறை நாஞ்சில் நாடன் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. இன்றைய கவிஞர்கள் "500 சொற்களையே திரும்ப திரும்ப உபயோகப்படுத்தி கவிதைகளை எழுதிவிடுகிறார்கள். புதிய சொற்களுக்கான தேடல் இல்லை".

சில கவிதைகளில் புதிய வார்த்தைகளையும் திருகல் மொழியையும் கொஞ்ச ஓவர் டோஸாக கொடுத்து சிதைப்பதிலும் நதியலைக்கு நிகர் அவரே.

சித்தார்த்:
இவரது வாசிப்பனுபவத்தையே பெரும்பாலும் பதிவிடுகிறார். பிறமொழி இலக்கியத்திலிருந்து மாற்று சினிமா பழம்பெரும் தமிழிலக்கியம் என்ற பரந்துபட்ட வாசகர். எழுத்து என்பது தொடர்ச்சியான வாசிப்புடன் கூடிய உழைப்பு. இவர் வாசிப்பதோடு நின்றுவிடுகிறார். மாதம் ஒரு பதிவு என்பதே கூட பெரும் விஷயமாக இருக்கிறது. ஆனால் எழுதிய பதிவுகள் பெரும்பாலும் முக்கியமானவை.

மணல்வீடு ஹரி பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார்: "மணி நமக்கு முன்னாடி எழுதினவங்கள படிக்கறதே முடியாம கிடக்கு, அத படிச்சாவே போதும், நான் எல்லாம் என்னத்த எழுதறது?"

சித்தார்த் மனதில் எழுதுவது பற்றிய எண்ணம் எதுவாக இருக்கும் என்று தெரியவில்லை.

வா மு கோமு :
கொங்கு மண்டலத்தின் கவனிக்கத்தகுந்த இளம் படைப்பாளி. கலாச்சாரம் கருமாந்திரம் என்று நாம் கட்டமைத்து வைத்திருக்கும் ஒவ்வொரு கூறையும் கேள்விக்குள்ளாக்கும் படைப்புகளை மிக வீரியமாக உருவாக்கும் எழுத்தாளர். தன் எழுத்தில் இவர் உருவாக்கியிருக்கும் கட்டற்ற தன்மையே இவரது எழுத்துக்கான பலம்.

கவிஞி கமலா எழுதிய கவிதைகள் இறக்கை வாசர்களிடம் மிகப் பிரபலம். அதே கவிஞி இணையத்தளத்திலும் பிரவேசிப்பதே சந்தோஷமான விஷயமாக இருக்கிறது.

=================
இன்னும் முகுந்த் நாகராஜன், கென், மண்குதிரை, அனுஜன்யா, நந்தா, யாத்ரா, முபாரக், தமிழ்மகன், கரையோரம், தமிழ்நதி, குழலி, முத்து(தமிழினி), அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர், சிதைவுகள், வேடிக்கை, குசும்பன், சென்ஷி, இளவஞ்சி, உண்மைத்தமிழன் போன்ற பதிவுகள் நான் தொடர்ந்து வாசிப்பவை. (மனுஷ்யபுத்திரன், சாருநிவேதிதா, எஸ்.ரா,ஜெ.மோ வை இங்கு குறிப்பிடலாமா என்று தெரியவில்லை)

என்ன பிடித்தது, ஏன் பிடித்தது என்பதெல்லாம் தனிப்பட்ட விஷயம். ஒவ்வொருவரும் வாசிப்பதன் மூலமாகவே உணர வேண்டும். பிடித்ததா இல்லையா என்பதை வேண்டுமானால் குறிப்பிடலாம். அதைக் கூட தவிர்ப்பது உத்தமம்.
==================
என் பதிவுக்கு கவுண்ட்டர் இல்லை. யார் படிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் அல்லது யாரும் படிக்கவில்லை என நம்பிக்கை இழக்கக் கூடாது என்று எனக்காக சொல்லிக் கொண்டு கவுண்ட்டர் வைக்கவில்லை.

பதிவு எழுதத் துவங்கிய காலத்திருந்து ஒரு வருடத்திற்கும் அல்லது சற்றே அதிகமான காலத்திற்கும் எப்படியாவது கொஞ்சம் பேரைக் கவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பின்னர் அதைத் தொலைத்துவிட்டேன். பின்னூட்டம் வந்தால் பதிலிட வேண்டும் என்ற அடிப்படை நியதியைக் கூட பல சமயங்களில் பின்பற்றுவதில்லை. முப்பதுக்கும் சற்றே அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். கூகிள் ரீடரில் நூற்றியருபது சொச்சம் பேர் வாசிக்கிறார்கள் என்பதும் மிகச் சமீமபாய் தெரியும். "பரவாயில்லையே" என்றிருந்தது.

தோன்றும் போது எழுதுகிறேன். இந்த தான்தோன்றித்தனம் சுதந்திரத்தை தருகிறது. எழுதி பதிவில் ஏற்றிய பின்பு புலம்பிவிட்ட ஒரு ஆயாசம் கிடைக்கிறது. இந்த ஆயாசம் யாருமில்லாத பெருவெளியில் காற்றிடமும் வெளிச்சத்திடமும் புலம்பும் ஆயாசம்.

எனது எழுத்து அவருக்கு சுவாரஸியம் என்று குறிப்பிட்ட நண்பர் சென்ஷிக்கு நன்றி.

10 எதிர் சப்தங்கள்:

நேசமித்ரன் said...

உங்கள் தளத்திற்கு வந்து பின்னூட்டம் இடும் தகுதி இருக்கிறதா நமக்கு என்ற தயக்கத்திலேயே தயங்கி நின்ற காலம் உண்டு மணிகண்டன்
உங்கள் பாசாங்கில்லாத கவிதைகள்
தனக்குத் தெரிந்ததை திருகளற்ற மொழி மூலம் அனைவருக்கும் எடுத்து செல்லும் உங்கள் பதிவுகள் என்னை நெகிழ்ச்சி நிரம்பிய மனநிலையுடனே திரும்பிச் செல்ல வைத்திருக்கின்றன
உங்களின் அறிமுககள் மூலம் அறிந்த கவிதைகளின் மீதான் அப்பார்வை மாறியது
நன்றி
எப்பவும் போல இந்த பதிவும் அற்புதம்
நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது பணிவார்ந்த வேண்டுகோள்

பிச்சைப்பாத்திரம் said...

நன்றி மணிகண்டன். சற்று உற்சாகமாக இருக்கிறது. இதைப் போல் நானும் மற்றவர்களைப் பற்றி பாராட்டி எழுதுவதில்லையே என்று சங்கடமாகவும் இருக்கிறது.

யாத்ரா said...

\\என்ன பிடித்தது, ஏன் பிடித்தது என்பதெல்லாம் தனிப்பட்ட விஷயம். ஒவ்வொருவரும் வாசிப்பதன் மூலமாகவே உணர வேண்டும். பிடித்ததா இல்லையா என்பதை வேண்டுமானால் குறிப்பிடலாம். அதைக் கூட தவிர்ப்பது உத்தமம்.\\

அருமை :)

உங்கள், வாசிக்கும் பட்டியலில் என் பெயரும் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன், நன்றி.

நாமக்கல் சிபி said...

:)

நாமக்கல் சிபி said...

உங்கள், வாசிக்கும் பட்டியலில் என் பெயரும் இல்லாதிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன், நன்றி.

நாமக்கல் சிபி said...

// நாமக்கல் சிபி said...

உங்கள், வாசிக்கும் பட்டியலில் என் பெயரும் இல்லாதிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன், நன்றி.//

அடப் பாவிகளா! ஏன்யா கொளுத்திப் போடுறீங்க?

மணிகண்டன், யூ நோ அபவுட் மீ!

சென்ஷி said...

வாசிப்பின்பம் அப்படிங்கறது பொழுது போக்கறதுக்கான ஒரு சமாச்சாரம்ன்னு தான் ரொம்ப நாள் நினைச்சுட்டு இருந்தேன். சில பதிவுகள்ல கிடைக்குற வார்த்தைப்பின்னல்கள் புதிரா சுவாரசியமாக்குற விசயமா இருக்கும். அதுல குறிப்பிடத்தகுந்தது உங்கள் கவிதைகளும் புனை கதைகளும்..

ரொம்ப எழுதத்தோணுது. அப்புறமா தனிப்பதிவிட இது ஒரு சந்தர்ப்பமா இருக்கும்ன்னு நம்பறேன். நன்றி தலைவா!


உங்களிடமிருந்து விருது பெற்ற பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் தொல்லை செய்தாவது அவர்களையும் எழுதச் செய்துவிட்டால் அதை விட வேறு மகிழ்ச்சி ஏதுமில்லை :))

ரவி said...

super !!!!!!!!

இளங்கோ கிருஷ்ணன் said...

அன்புள்ள மணிகண்டன் உங்கள் பதிவை படித்தேன். இப்போதுதான் பிளாக் எழுத துவங்கியிருக்கும் எனக்கு உங்களின் பதிவு உபயோகமாக இருந்தது. நன்றி

இளங்கோ கிருஷ்ணன்.

Anonymous said...

மணி...

நன்றி.

இனி தொடர்ந்து எழுத முயற்சி செய்யலாம்னு இருக்கேன். ரொம்ப அழகான முறைல பின்னந்தலைல பொட்டேல்னு அடிச்சு எழுதுடானு சொன்னதுக்கு நன்றி :)

சித்தார்த்.