Jan 20, 2009

சென்னை சங்கமம்‍ - கவிதைச் சங்கமம்.

சென்னை சங்கமம் மூன்றாவது ஆண்டாக ஜனவரி 15 ஆம் நாள் கவிதைச் சங்கமத்தை நடத்தியது. இந்த ஆண்டு நிகழ்வுக்கு "கவிக்குற்றாலம்" என்ற பெயரைச் சூட்டியிருந்தார்கள்.

நவீன கவிதை, திராவிட கவிதை, மரபுக்கவிதை என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் இருந்தும் 126 கவிஞர்களின் பெயரை பெருமொத்தமாக பட்டியலில் இணைத்திருந்தார்கள்.

சர்.பிட்டி.தியாகராயர் அரங்கின் வெளியில், வந்திருந்த கவிஞர்களின் பெயர்களை பதிவு செய்யச் சொல்லியும், அவர்கள் வாசிக்கவிருந்த கவிதையின் ஒரு பிரதியை வாங்கியும் வைத்துக் கொண்டிருந்தார் தென்பாண்டியன்.

ஒன்பது மணி வாக்கில் ஆரம்பிப்பதாக இருந்த அரங்கம் கிட்டத்தட்ட பதினொன்றரை வாக்கில் தொடங்கி வைக்கப்பட்டது. கனிமொழி துவக்கி வைப்பதாக இருந்த அரங்கத்தை அவர் வராததால் இளையபாரதி துவக்கி வைத்தார்.

கவிஞர் கலாப்ப்ரியா தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கின் மேடையில் க‌விஞ‌ர்க‌ள் விக்ர‌மாதித்ய‌ன், சுகுமார‌ன், எஸ்.வைத்தீஸ்வ‌ர‌ன் அமர்ந்திருந்த‌ன‌ர். திராவிட‌ எழுத்தாள‌ர் க‌விப்பித்த‌ன், இளைய‌பார‌தி ம‌ற்றும் நிக‌ழ்ச்சி அமைப்பாள‌ர் முத்த‌மிழ் விரும்பியும் உட‌ன் அம‌ர்ந்திருந்தன‌ர். ப‌வா.செல்ல‌த்துரை நிக‌ழ்வை ஒருங்கிணைத்தார்.கலாப்ரியா நீண்ட உரை ஒன்றினை நிகழ்த்தினார். இளையபாரதி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் இருக்கும் சங்கடங்களை பதட்டத்துடனும், கோபமாகவும் பட்டியலிட்டார்.

எந்த வரிசையில் கவிதை வாசிக்க அழைத்தார்கள் என்று தெரியவில்லை. காலை நிகழ்வில் 26 கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். பின்னர் மதிய உணவு இடைவேளை. அரங்கத்திலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள். அசைவ‌ம் அஞ்ச‌ப்ப‌ரில் இருந்தும், சைவ‌ம் ச‌ர‌வ‌ண‌ பவ‌னில் இருந்து வ‌ந்திருந்த‌தாம்.

அரை ம‌ணி இடைவெளிக்குப் பிற‌கு அடுத்த‌ அம‌ர்வு இருக்கும் என்ற‌வ‌ர்க‌ள் இர‌ண்டு ம‌ணி நேர‌ம் ஆகியும் துவ‌க்காம‌ல் இருப்ப‌வ‌ர்க‌ளை க‌டுப்பேற்றினார்கள். ம‌திய‌ நிக‌ழ்வுக்கும் க‌னிமொழியின் வ‌ர‌வுக்காக‌ காத்திருந்த‌தாக‌ பேசிக்கொண்டார்க‌ள். ஆனாலும் அவ‌ர் வ‌ர‌வில்லை.

கூட்ட‌த்தில் இருந்த‌வ‌ர்க‌ளின் அழுத்த‌ம் தாங்க‌முடியாம‌ல் க‌னிமொழி வ‌ராமலே மதிய நிகழ்வினை ஆர‌ம்பித்தார்க‌ள். தான்தான் அடுத்த‌ க‌விதை வாசிக்க‌ வேண்டும் என்று கீழே இருந்த‌ ஒவ்வொருவ‌ரும் எஸ்.எம்.எஸ் அனுப்பியும், தொலைபேசியிலும் அழைத்து க‌ழுத்தை நெருக்கிய‌தாக‌ அமைப்பாள‌ர்க‌ள் வ‌ருந்தினார்க‌ள்.

காலையிலும், மாலையிலும் த‌லா இர‌ண்ட‌ரை ம‌ணி நேரத்தை வீண‌டித்த‌தை த‌விர்த்திருந்தால் யாரும் காலில் சுடுத‌ண்ணீரை ஊற்றிய‌து போல‌ குதித்திருக்க‌ மாட்டார்க‌ள் என்று நினைக்கிறேன்.அப்படியிருந்தும் சில கவிஞர்கள் காத்திருந்துவிட்டு கவிதை வாசிக்காமலேயே கிளம்பிவிட்டனர். பட்டியலில் பெயர் இல்லாத கவிஞர்கள் சிலர் இடையிடையே மேடையேறியது, பாக்கெட்டில் கவிதையை பதினாறாக மடித்து வைத்து மேடையில் ஏறி 'ஸ்டைலாக' எடுத்து படித்தது குறித்தெல்லாம் நண்பர்கள் சிலர் 'செம டென்ஷன்' ஆனார்கள்.

சில 'கவிஞர்கள்' தட்டையான வார்த்தைகளை கவிதை என்று மேடையேற்றினார்கள். மிகக் கொடுமையாக இருந்தது. நவீன கவிதைகளுக்கு மட்டும் மேடையில் இடம் தர வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் நல்ல கவிதைகளுக்கு மட்டும் இடம் என்பதை அமைப்பாளர்கள் உறுதிப்படுத்தலாம். நல்ல கவிதை என்ற நிர்ணயம் எப்படி செய்வது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் பள்ளி ஆண்டு மலர் கவிதைகளை வாசிப்பதற்கும், கேட்பதற்கும் சென்னை சங்கமத்தில் கூடத் தேவையில்லை.

கடந்த‌ இரண்டு ஆண்டுகளாக‌ நடைபெற்ற கவிதைச் சங்கமத்தின் கவிதைகளை "நூறு பூக்கள் மலரட்டும்" என்ற பெயரில் தொகுப்பு நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு தவறு, ராஜா சந்திரசேகரின் கவிதை முகுந்த் நாகராஜனின் கவிதைகளுக்குள்ளாக வந்திருந்தது.

ஆதவன் தீட்சண்யா கவிஞர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் இருந்த 'சர்வாதிகார தொனி'க்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார். அமைப்பாளர்கள் எதுவும் பதில் சொன்னதாக நினைவில் இல்லை.

இந்த கவிதைச் சங்கமம் மிக நல்ல முயற்சி. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கான நோக்கம் திசை மாறுவதாக உணர முடிகிறது.

நான் திருமணத்திற்கு பிறகாக வேணியோடு கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது. முக்கியமான நவீன‌ கவிஞர் ஒருவர் எங்களிடம், "இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எந்த நிகழ்ச்சிக்கு வேண்டுமானாலும் இரண்டு பேரும் சேர்ந்து போகலாம். இதைவிட வேறெதுவும் 'போர்' அடிக்காது" என்றார். ஆனால் அவ‌ர் தீர்க்க‌த்த‌ரிசி. நிக‌ழ்ச்சி தொட‌ங்குவ‌த‌ற்கு முன்பாக‌வே இதைச் சொன்னார்.

3 எதிர் சப்தங்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா! அப்படியா இருந்தது கவிதை சங்கமம்!!

ராஜா சந்திரசேகர் said...

மணி
சரியாக எழுதியுள்ளீர்கள்.என் ஒரு கவிதை'தூறலைப் பிடிக்கும் சிறுமி(பக்க எண்.109ல்,அதாவது முகுந்த் நாகராஜனின் பக்கங்களில் வந்துள்ளது.நாங்கள் இது பற்றி பேசினோம்.தெரியப்படுத்தினோம்.முகுந்த் கவிதை வாசித்து சென்று விட்டார்.நான் என் கவிதைகளை காலையிலேயே கொடுத்துவிட்டு பிறகு இரவு ஏழு மணி வரை காத்திருந்து திரும்பிவிட்டேன்.

தமிழ்நதி said...

காலையில் வாசித்த என் போன்றவர்கள் பாடு பரவாயில்லை. 'ஏதோ முடிந்ததே'என்று உட்கார்ந்திருந்தோம். ஏனையோர் வாசிப்பிற்கு மதிப்பளிக்க வேண்டுமென்ற முறைமைக்காக எத்தனை நேரந்தான் காத்திருப்பது? மாலை 6 மணிக்கெல்லாம் நானும் கிளம்பிவிட்டேன். சாப்பிடப் போனால் சைவ உணவு முடிந்துவிட்டது. கொஞ்சூண்டு தயிர்ச்சாதம் கிடைத்தது. சரவணபவனில் இருபது பேருக்குத்தான் சாப்பாடு சொல்லியிருந்ததாகச் சொன்னார்கள். தேநீரும் காலையும் சரி மாலையும் சரி முதலிரண்டு வரிசைகளுக்கு மட்டுமே பரிமாறப்பட்டது. அதற்குப் பின்னால் உட்கார்ந்திருந்தவர்கள் வெளியில் போய்க் குடித்துவிட்டு வந்தார்கள். சிலர் 'காய்ந்து'போய் அமர்ந்திருந்தார்கள். அவ்வளவு நேரம் அமர்ந்திருக்கிறோம்... சாப்பாடு, தேநீர்கூட ஒழுங்கில்லையென்றால் எப்படி? அதேபோல கவிதை வாசித்த சிலருக்குப் பணம் வழங்கப்பட்டதாம். சிலருக்கு இல்லை.

மேலும், என்னதான் கவிதை பிடிக்குமென்றாலும்,நூற்றுக்கு மேல் கவிதை கேட்டால் பைத்தியந்தான் பிடிக்கும். நீங்கள் சொன்னதுபோல 'பள்ளி ஆண்டு மலர்'கவிதைகள் வாசிக்கப்பட்டபோது கடுப்பாக இருந்தது. 'தமிழே நீ என் உயிரே'என்பதுபோன்ற வீரவசனங்களின் காலம் கழிந்துபோனதைக் கூட சிலர் உணரவில்லை. இதையெல்லாம் நாங்கள் சொன்னால்..... என்னமோ போங்க...

வேணியை எங்களுக்கு அறிமுகப்படுத்தினால் என்னவாம்... கல்யாணத்துக்கு வராதவர்களுக்குப் பொண்டாட்டி முகத்தைக் காட்டமாட்டீர்களா மணிகண்டன்:)