Jan 25, 2008

கடுப்பும் ம‌ருந்தும்.

என் நீண்ட நாள் நண்பருக்கு கடுப்பு வலி வந்துவிட்டது. எனக்கும் இந்த கடுப்புக்கும் நீண்ட தூரம். வருவதே இல்லை.

நண்பர் கடுப்பில் என்னோடு இன்னும் சில பதிவர்களையும் காய்ச்சியிருந்தார் என்றாலும், நான் இரண்டாவதாக காய்ச்சப்பட்டிருந்தேன். முதலாவதாக ஒருவரை திட்ட, அதற்கு அவர் ஒரு பதில் பதிவை எழுத எட்டிப்பார்த்த எனக்கு ஜன்னி வந்துவிடும் போலாகிவிட்டது.

நண்பரின் கடுப்பு இன்னமும் அதிகம் ஆகியிருக்கக் கூடும் என்பதால் நான் நண்பருக்கு வைத்தியம் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

1)'பொதுப்புத்தியில் இருந்து வெளியில் வரவும்' என்று சொன்னால் கூட‌ உள்ளூர வெளியில் வருவது என்பது எல்லோருக்குமே இயலாதது. என்றாலும், எனக்கு சிரமம் இன்னமும் அதிகம். அதற்காக எல்லா விஷயங்களிலும் மொத்தமாக பேசுவேன் என்று முடிவு செய்ய வேண்டியதில்லை.

அதே சமயம் ரஜினி கண்ணாடியை சுழற்றும் போது விசிலடிப்பதையும், விஜயகாந்த் பட இன்டர்வெல்லில் யாராவது 'நோஞ்சான்' கிடைத்தால் குத்து விட்டு என் பலத்தை பரிசோதிக்க நினைத்துக் கொளவதையும் இன்று வரை என்னால் நிறுத்த முடிவதில்லை. இது எல்லாம் தவிர்த்தவன் தான் கவிதை எழுதலாம்(நுட்பமான கவிதை)என்று சொன்னால், என‌க்கு லைச‌ன்சு வேண்டாம்.

2) இன்டெல்க்சுவ‌லாக‌ ந‌ட‌ந்து கொள்வ‌திலும் அத‌னை நிரூபிப்ப‌திலும் பெரும் சிர‌மம் இருக்கிற‌து. 'போக்கிரி' அது தெலுங்கு ஆக‌ட்டும் அல்ல‌து த‌மிழ் ஆக‌ட்டும், பார்த்துவிட்டு ஒரு கூட்ட‌ம் மிக‌ச் ச‌ந்தோஷ‌மாக‌ வெளிவ‌ரும். எதிரில் இருக்கும் பிலிம் சொசைட்டியில் 'சினிமா பார‌டைஸோ' பார்த்துவிட்டு ப‌த்துப் பேர்க‌ள் க‌ப்ப‌ல் முழுகிப் போன‌தைப் போல‌ வெளிவ‌ருவார்க‌ள். என்னை இன்ட‌லெக்சுவ‌ல் ஆக்குவ‌த‌ற்கு நானும் என் க‌ப்ப‌லை மூழ்க‌டிக்க‌ வேண்டியிருக்கும்.

3) நான்தான் சிற‌ந்த‌வ‌ன், நான் புக‌ழ‌த் த‌குதி கொண்ட‌வ‌ன் ஒருவ‌னுமில்லை என்று நான் சொல்லிக் கொண்டு திரிவ‌தால் என்ன‌ ப‌ல‌ன் வ‌ந்துவிட‌ப்போகிற‌து என்று புரிய‌வில்லை. இன்ட‌லெக்சுவ‌ல் ஆன‌ பிற‌கு ந‌ம்மை விட‌ உய‌ர்ந்த‌வ‌ர்க‌ளையோ அல்ல‌து ச‌ம‌மான‌வ‌ர்க‌ளையோ பாராட்டக் கூடாது. ந‌ம்மை விட‌ சிறிய‌வ‌ர்க‌ளை வேண்டுமானால் மேதாவித்த‌ன‌த்தோடு பாராட்ட‌லாம். இல்லையா? ஆளைவிடுங்க‌ சாமி.

4) ப‌டைப்பை ம‌ட்டும் உள்வாங்கிக் கொண்டு ப‌டைப்பாளியின் ஆளுமையை தூர‌ எறிந்துவிடுவ‌தில் என‌க்கு ந‌ம்பிக்கையில்லை. ப‌டைப்பின் வ‌ழியாக‌ ப‌டைப்பாளியின் ஆளுமையை உண‌ர்வ‌தையும் பிடித்திருக்கும் ப‌ட்ச‌த்தில் சிலாகிப்ப‌தையும் ஒரு இல‌க்கிய‌ செய‌ல்பாடாக‌வே நான் உணார்கிறேன்.

5) அடிவ‌ருடித்த‌ன‌ம் என்ப‌தும், ஆளுமையை உண‌ர்ந்து கொள்வ‌தும் இரு வேறுபட்ட செயல்பாடுகள் என்ப‌த‌னை த‌னியாக‌ விள‌க்க‌ வேண்டிய‌தில்லை என்று நினைக்கிறேன்.

6) நான் ஜெய‌மோக‌ன் குறித்து ஆளுமையை புரிந்து கொள்ளும் க‌ட்டுரையாக‌வே எழுத‌ முற்ப‌ட்டதும், ச‌ற்று 'மெல்ட்' ஆகியிருப்ப‌தும் நான் உண‌ர்ந்த‌ விஷ‌ய‌ங்க‌ளே. இன்னமும் இதனை த‌னிம‌னித‌ துதி,ஜெய‌மோக‌ன் கொடி என்ற‌ வார்த்தைக‌ளுக்குள் நீங்க‌ள் அல்ல‌து வேறு சில‌ அறிவாள‌ர்க‌ள் அட‌க்க‌லாம். அப்ப‌டிச் செய்யும் போது நான் புன்ன‌கைத்துக் கொண்டிருப்ப‌தாக‌ நினைத்துக் கொள்ளவும்.

க‌டைசியாக‌...

7) என்னை சொங்கி என்று வர்ணித்துக் கொண்டதற்கு நீங்கள் கடுப்பாக வேண்டியதில்லை. அதனை வெளியே நிரூபிக்க வேண்டாம் என்றுதான் புகைப்படத்தை அனுப்பவில்லை. சென்னை சங்கமத்தில் என்னைப் பார்த்த கவிஞர் ஒருவர் 'உங்க மூஞ்சிக்கு பொண்ணு கிடைக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்' என்று சொன்னார். இந்த வாக்கினை இதுவ‌ரை நிச்ச‌ய‌ம் நீங்க‌ள் கேட்டிருக்க‌ மாட்டீர்க‌ள் என்ப‌தாலும், உங்க‌ள் பெண் ர‌சிகைக‌ளின் க‌ண‌க்கு என‌க்கும் தெரியும் என்ப‌தாலும் ஒரு முறை சிரித்துவிட்டு க‌டுப்பைக் குறைக்க‌வும்.

சுக்கு காபியும் ந‌ல்ல‌தொரு ம‌ருந்து. துபாயில் சுக்கு காபி கிடைக்க‌ ஆண்ட‌வ‌னை பிரார்த்திக்கிறேன்.

0 எதிர் சப்தங்கள்: