Oct 21, 2007

ஞாநி: கண்டனக் கூட்டம்.

ஓ போடும் ஞாநி, கலைஞரின் முதுமை குறித்து ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முக்கியமான எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்த கூட்டத்தை 'தீம்புனல்' அமைப்பு, வாணிமஹாலில் அக்டோபர் 21 ஆம் நாளில் நடத்தியது.

எழுத்தாளர்கள் மார்க்ஸ், அரசு, பிரபஞ்சன், சி.மகேந்திரன், அறிவுமதி, மனுஷ்ய புத்திரன், இமையம், தமிழச்சி, சல்மா, ரவிக்குமார், டி.எஸ்.எஸ்.மணி, கரிகாலன் மற்றும் பத்திரிக்கையாளர் பன்னீர் செல்வம் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

இளையபாரதி தொகுத்தளித்தார்.

தமிழச்சி பேசும் போது ஞாநியின் கட்டுரையில் பொதிந்திருந்த சாதீயப்பார்வையை முன் வைத்தார். மார்க்ஸ் தனது ஆவேசமான பேச்சில் பார்ப்பனீய ஆதிக்கம் இன்னும் ஊடகங்களில் விரவிக்கிடப்பது குறித்துப் பேசினார். பேச்சினை முடிக்கும் சமயமாக காலச்சுவடு இதழில் பெரியார் குறித்தான தரக்குறைவான விமர்சனம் வந்ததையும், அச்சமயத்தில் கனிமொழியும் காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

டி.எஸ்.எஸ் மணி மிக உரக்கமாகவும் ஆவேசமாகவும் பேசியதில் பெரும்பாலான கருத்துக்கள் என்னவென்று புரியவில்லை. சல்மா ஞாநியை, ஒருமையில் விளித்து 'டிபிகல்' அரசியல் மேடையாக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டார். நல்லவேளையாக அவருக்குப் பின்னால் பேசியவர்கள் அந்த வழிமுறையைப் பின்பற்றவில்லை.

ரவிக்குமார், கலைஞர் சட்டப்பேரவையில் மிகத்துல்லியமாக விமர்சனங்களை கவனிப்பது குறித்தும் அவரது ஞாபக ஆற்றல் குறித்தும் பேசினார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த நூறாவது நாளில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம் ஆட்சி குறித்தான தன் பார்வைகளை முன் வைத்த போது, அ.தி.மு.க உறுப்பினர் செங்கோட்டையன் குறுக்கிட்டு அவையின் நேரத்தை வீணடிப்பதாகப் பேசினாராம். ஏதோ கோப்புகளை கவனித்துக் கொண்டே குறிப்பு எழுதிக் கொண்டிருந்த கலைஞர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 'செயிண்ட் ஜார்ஜ்' கோட்டையை பற்றி புகழ்ந்தால் செங்கோட்டைக்கு ஏன் பொறுக்கவில்லை என நகைச்சுவையாக தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

சி.மகேந்திரன், கலைஞர் கைது செய்யப்பட்ட போது நிகழ்த்தப்பட்ட உபாதைகள் ஞாநியின் கண்களுக்குத் தெரியவில்லை என்பது குறித்தான வினாவை எழுப்பி சூடேற்றினார். தோழர் ஜீவா குறித்து தான் படம் எடுக்கப்போவதாக எழுதிய கட்டுரையையும் முடிவாக பெரியாரின் படத்திற்கு பணம் கொடுத்த கலைஞர், ஜீவா படத்திற்கு பணம் தரமாட்டாரா என எழுதி, இடதுசாரிகளுக்கு கொம்பு சீவ முயன்ற ஞாநியின் 'பெருந்தன்மை'யையும் குறிப்பிட்டார்.

அறிவுமதி பேசும் போது பாழாய்ப்போன நண்பன் ஒருவன் என்னை தொலைபேசியில் அழைத்தான். வெளியே சென்று அவனோடு பேசிவிட்டு அரங்கிற்குள் வரும் போது ஞாநியைக் கண்டிக்கும் வகையில் இணையத்தில் வெளிந்த கட்டுரை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் எந்தத்தளம் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் இணையத்தளங்கள் கவனிக்கப்படுகின்றன என்ற சந்தோஷம் எனக்கு இருந்தது.

மனுஷ்ய புத்திரன், உயிர்மை தலையங்கத்தில் கலைஞரின் அரசு குறித்தான விவரங்களை எல்லாம் சேகரித்து, உயிர்மை பதிப்பகத்தின் நூல்களை அரசாங்கம் நூலகங்களுக்காக வாங்கக்கூடாது என்ற புகார்களை சில எதிரிகள் அரசுக்கு அனுப்பி வைத்த போதும் எந்தத் தடங்கலும் இல்லாமல் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டது எனவும், தமிழக அரசியல் சூழலில் கலைஞரின் ஆட்சி தவிர்த்த வேறு ஆட்சிகளில் இத்தகைய ஜனநாயக முறையை நினைத்துக் கூட பார்க்க இயலாது என்றும் குறிப்பிட்டார்.

பிரபஞ்சன் தன் வழக்கமான நகைச்சுவை கலந்த பேச்சில் பட்டாசைக் கொளுத்தினார். கோவை ஞானிதான் அசல் ஞானி என்றும், ஓ பக்க ஞாநி 'அஞ்ஞானி' என்றும் தான் ஏற்கனவே சொல்லியிருப்பதை ஞாபகப்படுத்தினார். ஓ பக்கத்தில் இருக்கும் முகங்கள் சமூகத்தால் தூக்கியெறியப்பட்ட சுப்பிரமணிய சாமி, சோ போன்றோரின் முகம் என்றும் இவர்களின் பின்பாக ஒளிந்து கொண்டு, ஞாநி பூனையை போல் 'மியாவ்' என்று கத்துவதாகவும் பேசினார்.

இறுதியாக பத்திரிக்கையாளர் பன்னீர்செல்வம் பேசினார்.

ஞாநி, ஆனந்த விகடனோடு சேர்த்து காலச்சுவடு குறித்தான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது நான் எதிர்பார்க்காத ஒன்று.

பார்வையாளர்களில் பிரான்சிஸ் கிருபா, மணா, பத்ரி, தேவி பாரதி போன்ற எனக்குத் தெரிந்த சில முகங்களையும் பார்க்க முடிந்தது.

பார்ப்பனீயம் என்பது சகித்துக் கொள்ளவியலாத ஒன்று என்பதனை தொடர்ச்சியான நிகழ்வுகள் உணர்த்துவது மன நிறைவைத் தருகின்றது.

16 எதிர் சப்தங்கள்:

ஜமாலன் said...

நண்பருக்கு...

இப்பிரச்சனையில் ஞானியின் அக்கறை கண்டனத்துக்குரியதுதான். அதற்காக, எத்தனையோ வயது முதிர்ந்த நடக்க இயலாத பெரியவர்கள் குடியரசுத்தலைவராகவும், பிரதமராகவுவும் இருந்துள்ளனர். அப்பொழுத ஏற்படாத கரிசனம் தற்பொழுது ஏன்? என்று கேட்க மாட்டேன்.

ஆணால், இவ்விவாதம் மூலம் ஸ்டாலின் முதல்வராவது பற்றிய பிரச்சனையை முன்னக்கு கொண்டவந்துள்ளது ஒரு ஆரோக்கிமான விஷயம்தான். அதற்க அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.

குசும்பன் said...

மணி ,
மென்மையாக ஒரு கண்டனம் பதிவை படித்தேன், அதில் சொல்லி இருந்ததுக்கும் நீங்கள் சொல்லி இருப்பதுக்கும் நிறைய வித்தியாசங்கள்.


நீங்கள் சொல்லி இருப்பதில்தான் உண்மை இருக்கிறது.

cheena (சீனா) said...

கண்டனக் கூட்டத்தைப் பற்றி இரு வேறு விதமான பதிவுகள் வந்திருக்கின்றன. இரண்டையும் படித்தேன். இரண்டிலும் உண்மை இருக்கிறது. கண்ணோட்டம் தான் வேறு படுகிறது.

மணிப்பக்கம் said...

இது போன்ற வெங்காய கூட்டங்கள் தேவைதானா? கனிமொழிக்கு கொடுக்க பட்ட கழக (கலக) பணி இதுதான் போலும்!

- யெஸ்.பாலபாரதி said...

கூட்டத்திற்கு வந்திருந்தீரா? அடப்பாவி.. சொல்லக்கூடாதா?
நான், சுகுணாதிவாகர், பத்ரி போன்றோரும் இருந்தோமே?!

அப்புறம் ஒரு முக்கியமான விசயாம். ஞானி அல்ல.. ஞாநி என்பதி தான் சரி.

ஞானி என்று கோவையில் இருப்பரைத்தான் குறிப்பிடுவோம். ஞாநி என்றால் தான் ஓ.. போட்டவர். :) அதனால.. மாத்திருங்க ப்ளீஸ்!

Badri Seshadri said...

http://thoughtsintamil.blogspot.com/2007/10/blog-post_21.html

எனது பதிவில் முழுமையான ஆடியோ உள்ளது. உண்மையை அவற்றைக் கேட்டு உணரலாம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஞாநியின் பழைய செயல்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டே அவரை விமர்சிக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர் பார்ப்பன மறுப்பாளராகவே செயல் பட்டிருக்ககிறார் தானே.

இந்த கட்டுரையை மட்டும் வைத்து அவரை பார்ப்பன சார்பாளர் என கட்டம் கட்டுவது சரியல்ல என்றே தோன்றுகிறது.

அவரது அந்தக் கட்டுரை ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதையும் சேர்த்துக் கொள்கிறேன்.

Vaa.Manikandan said...

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே.

நன்றி குசும்பன், ஜமாலன்,சீனா.

சிவாஜி,
இந்த மாதிரியான கூட்டங்கள் நடக்காவிடில் தங்களின் மேதாவித்தனம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு பார்ப்பனீயத்தை பரப்பும் குழுக்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டேதான் இருப்பார்கள்.

சாதீயம் எந்தவிதமான முறையில் தலைதூக்கினாலும் அவற்றை கண்டிக்கப்பட வேண்டியது கட்டாயம்.

க‌னிமொழியும் ஞாநியால் க‌ட்டுரைக்குள் இழுக்க‌ப்ப‌ட்டிருக்கிறார். அக்க‌ட்டுரையை எதிர்த்து ந‌ட‌க்கும் கூட்ட‌த்தில் க‌னிமொழி க‌ல‌ந்து கொள்வ‌தில் என்ன‌ த‌வ‌று? அதைவிட‌வும் ந‌ட‌ந்த‌ கூட்ட‌ம் அர‌சியல் கூட்ட‌ம‌ன்று. 'தீம்புன‌ல்' என்னும் அர‌சிய‌ல்/இல‌க்கிய‌ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த‌ கூட்ட‌ம் என்ப‌தையும் குறித்துக் கொள்க‌.

பால‌பார‌தி, ஞாநியாக்கிவிட்டேன். :) உங்க‌ளை என‌க்கு அடையாள்ம் தெரியாதே. எப்ப‌டிக் கண்ட‌றிவ‌து.

சுந்தர் என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்?

ஞாநி எப்பொழுது பார்ப்பன வெறுப்பாளர்? சத்யராஜ் பாணியில் சொல்வதானால் எல்லாம் நடிப்பு...பிரபஞ்சன் பாணியில் சொல்வதானால் கட்டுடைத்துப் பார்த்தால் அவ‌ர‌து சாதீய‌ எதிர்ப்பு ப‌ல்லிளிக்கும்.

க‌டைந்தெடுத்த‌ சாதி ஆத‌ர‌வாள‌ர் அவ‌ர்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கடந்த 16 / 17 வருடங்களாக அவரது எழுத்து / நாடகம் முதலான செயல்பாடுகளைக் கவனித்து வந்ததில் அவர் ஒரு பார்பனீய மறுப்பாளராகவே அவதானித்துள்ளேன்.

அவரது சமீபத்திய செயல்பாடுகள் அவ்வளவு உவப்பாயில்லை.

அவர் இப்போது சுய விமர்சனம் செய்து கொண்டால் நல்லது. இல்லை, ரோசா வசந்த் சொன்ன மாதிரி இன்னொரு ரவி சீனிவாசாகும் அபாயம் உள்ளது.

மதுமிதா said...

///வாணிமஹாலில் அக்டோபர் 21 ஆம் நாளில் நடத்தியது.///


அக்டோபர் 20 சனிக்கிழமை மாலை என மாற்றிவிடுங்கள் மணிகண்டன்.

Anonymous said...

மனுஷ்ய புத்திரன், உயிர்மை தலையங்கத்தில் கலைஞரின் அரசு குறித்தான விவரங்களை எல்லாம் சேகரித்து, உயிர்மை பதிப்பகத்தின் நூல்களை அரசாங்கம் நூலகங்களுக்காக வாங்கக்கூடாது என்ற புகார்களை சில எதிரிகள் அரசுக்கு அனுப்பி வைத்த போதும் எந்தத் தடங்கலும் இல்லாமல் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டது எனவும், தமிழக அரசியல் சூழலில் கலைஞரின் ஆட்சி தவிர்த்த வேறு ஆட்சிகளில் இத்தகைய ஜனநாயக முறையை நினைத்துக் கூட பார்க்க இயலாது என்றும் குறிப்பிட்டார்

As a businessman he is expressing
his gratitude like this.If the government did not buy those
books it would become an undemocratic and autocractic government. So as long as tamil nadu government buys
books published by him he will be
grateful to the powers that be. For him democracy means buying books published by him. MGR had lots of differences of opinion with Kannadasan but made him state poet. Politically there were in opposite camps. He had helped many who had criticised him. Going by that yardstick MGR would be the most democratic politician in the whole world.When rulers ask to bow
these 'intellectuals' will be willing to bend and fall at their
feet if their persoanal and business interests are taken care.

Unknown said...

ஆக எல்லா எலக்கியவாதிகளும் சத்தமாக ஜால்ரா தட்டினார்களாக்கும் ?

ஞாநி சொன்னதில் அப்படி என்ன குறையாம் ?

வயசாச்சே , ஸ்டாலினுக்கு பதவியை தந்து விட்டு திராவிட தொண்டு ( ????) புரிய வாருங்கள் என்றுதானே சொன்னார் ?

Vaa.Manikandan said...

வாங்கோ பரதரசு!

யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்தான். ஆனால் எப்படிச் சொல்கிறோம் என்பதில் ஒரு தரம் வேண்டாமா?

ஞாநியின் க‌ட்டுரையை முழுமையாக‌ ஒரு முறை வாசித்துவிட்டு ம‌றுப‌டியும் வாருங்க‌ள். ம‌ற்ற‌ப‌டி த‌மிழ‌ர்க‌ள் முடிவு செய்து கொள்வார்க‌ள் யார் எப்பொழுது ஓய்வு பெற‌ வேண்டும் என்ப‌தை.

Anonymous said...

கருத்துச் சொல்ல யாருக்குமே உரிமை இருக்கிறது. நேரடியாகத் தெரியும் உண்மையையும் விளக்கத்தையும் விட்டு விட்டு, யோசித்து ஒருவரைக் குறைசொல்ல வேண்டியது இல்லை. ஞாநியின் கருத்தை மறுப்பதற்கும் எழுத்தாளர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் பார்ப்பனர்களைப் பற்றி தேவையில்லாமல் பேச வேண்டியதில்லை. ஒரு மனிதரைப் பார்க்கும்போது நமக்கு அவருடைய ஜாதி நினைவுக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் அது நமது தவறே அன்றி அவர் தவறு இல்லை. நூறு வயது வாழவேண்டும் என்று வாழ்த்தி அதற்கு கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று சாதாரணமாக சொன்ன ஒரு கருத்துக்கு அப்படிக் குதித்திருக்க வேண்டியதில்லை. ஸ்டாலின் முதல்வர் ஆவதைப்பற்றியும் ஞாநி குறிப்பிட்டிருக்கும்போது காழ்ப்புணர்ச்சி என்று கருதவேண்டியதில்லை. இந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாரும் தமிழ்நாட்டில் "எப்படி முதலமைச்சரின் கவனத்தைக் கவருவது" என்று போட்டி போடுவதுதான் (கூட்டத்தைக்கூட்டி) வேடிக்கை.

Unknown said...

எல்லோரும் இப்பொழுது என்ன சொல்ல வருகிறீர்கள், இனிமேல் ஞாநி அவர்கள், யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய கூடாது என்கிறீர்களா. முதல்வர் என்றாலும் அவரும் ஒரு மனிதானே ஒழிய, வானத்தில் இருந்து குதித்தவர் அல்ல. பொது வாழ்வில் உள்ளவரின் பொது நடவடிக்கைகளை பற்றி விமர்சனம் செய்வது ஒன்றும் தவறல்ல.

தன் குடும்பத்தின் பால் 99% கவலையும் அக்கறையும், பொது மக்கள் மீது 1% அக்கறை கொணடுள்ள மதிப்பிற்குரிய ஐயா கலைஞர் கருணாநிதி அவர்களை ஓய்வெடுக்கச் சொல்லியது ஒரு தவறா?

ramesh sadasivam said...

ஞாநி அவர்கள் மீது பார்ப்பனிய முத்திரை குத்த முயற்சிப்பது, தி.மு.கவின் தலைவர் மற்றும் அவர்களின் தொண்டர்களின் கீழ்த்தரமான தந்திரங்களுள் ஒன்று.

கலைஞரை பிராமணர்கள் மட்டும் வெறுப்பதாக இருந்தால், அவர் இப்படி யொரு கேவலமான தோல்வியை தேர்தலில் சந்தித்திருக்க மாட்டார். ஜாதிகளை விடாமல் பிடித்துக் கொள்வதில் தி.மு.கவை விட தீவிரம் வேறு எவரிடமும் கிடையாது. அவர்கள் அமைக்கும் தேர்தல் கூட்டணியே இதற்கு சாட்சி.