May 23, 2007

மனுஷ்ய புத்திரன்: நேர்காணல் -1

1968ல் பிறந்தார். இயற்பெயர் எஸ்.அப்துல் ஹமீது. முதல் கவிதைத் தொகுப்புவெளிவந்தது 16 வயதில். இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத்தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். சென்னையில் வசிக்க்கிறார். உயிர்மை மாதஇதழையும் உயிர்மை பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். இளம்படைப்பளிகளுக்காகமதிப்பு வாய்ந்த தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் விருது இவருக்கு 2004ல்வழங்கப்பட்ட்டது.

1. நீங்கள் பிறந்து வளர்ந்த சூழல் வாசிப்பின் துவக்க புள்ளிகள் பற்றிச்சொல்லுங்கள்.

என்னுடைய கிராமம் திருச்சி மாவட்டத்துல துவரங்குறிச்சிங்கிற கிராமம். விவசாயகுடும்பம்.கல்வி அல்லது பிற அறிவுத்துறையில போதுமான தொடர்புகளோ, முயற்சிகளோசெய்வதற்கு வாய்ப்புகள் இல்லாத சூழல். ஆனா அது உருவாக்குகிற மூச்சுத்திணறல்தான் காற்றுக்கான வழியையும் கண்டு பிடிக்க காரணமாக இருந்தது.என்னோட இருப்பு சார்ந்த ஒரு குழப்பம். ரொம்ப சின்ன வயசில உடல் சரியில்லாமலஇருந்ததால, மற்றவங்க மாதிரி அதிகமா விளையாட்டு, வெளியுலகம் இல்ல.புத்தகங்கள் பத்திரிகைகள் வேறொரு உலகை திறந்தன. எங்க அப்பா தனக்குதெரியாமலே அந்த உலகை திறந்துவிட்டார். காமிக்ஸ்கள், மர்மக்கதைகள், குடும்பக்கதைகள், துணுக்குகள் எல்லாம் படிப்பேன். எங்க அப்பா கிட்ட ஒரு அபூர்வமான ஒருபுஸ்தகம் இருந்தது. அது சம்பூர்ண ராமாயணம் படத்தின் வசனப் புத்தகம்.வழுவழுப்பான வெள்ளைத் தாளில் படத்தின் ஸ்டிகளுடன் இருக்கும் அந்தப்புத்த்கத்தை எனக்கு படிக்கத் தருவார். படித்ததும் வாங்கி வைத்துக் கொள்வார்.எனக்கு அதை திரும்பவும் படிக்கணும்னு தோணும். மூணு மாசம் ஆகும் திரும்பவாங்க. அந்தக் காலம் முழுக்க ராமயணக் காட்சிகள் என் மனசில் விரிந்துகொண்டேஇருக்கும். ராமன் காட்டுக்கு போகும் காட்சியை என்னால தாங்கவே முடியாது.அப்புறம் அசோக வனத்தில் சீதையோட கண்ணீர். பத்து வயசில படிச்சேன். காப்பியதுயரங்களின் நிழல் நெஞ்சில் ஆழமாக விழுந்துவிட்டது.
ஒரு உடம்பு சரியில்லாத குழந்தை எது செஞ்சாலும் அது ரொம்பஆச்சரியமாவும்,பெருமையாவும் தான் இருக்கும். எங்க வீட்டைப்பொறுத்த வரைக்கும்நான் என்ன செய்ய நினைக்கிறேனோ, எதை விரும்புகிறேனோ அது செய்றதுக்கானமுழுமையான விருப்பமும் சம்மதம் இருந்தது. அப்புறம் எதோ விதத்திலே நான் மத்தகுழந்தைகள் மாதிரி இல்லை. எனக்கு சில யோசனைகள் உண்டு. கொஞ்சம்விஷேசமான ஆள்னு தோண ஆரம்பிச்சது
2. எந்த வயசில் முதலில் எழுதணும்னு தோன்றியது?
ரொம்ப சின்ன வயசிலேயே எழுத்து மேலே ஆசை, ஆர்வம். ஆரம்ப பள்ளி படிச்சகாலத்திலே எழுதவும், படிக்கவும் தொடங்கிய காலத்திலே எழுதிப்பபார்க்கணும்னுஆசையா இருந்தது. 4ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு சிறுகதை எழுதி ராணிபத்திரிகைக்கு அனுப்பினேன். இப்ப நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. ஐந்தாம்வகுப்பு படிக்கும்போது ஒரு துப்பறியும் நாவல் எழுத நினைத்தேன்.
இது எப்படினா தற்செயலா நாம திறந்துகிட்டு உள்ளே போன ஒரு அறைக்குள்ளேவேற ஒரு மாய உலகிற்கான கதவு திறந்த மாதிரி. வறட்சியூட்டும் எதார்த்தஉலகிலிருந்து அந்த கனவுலகம் பெரும் விடுதலையை கொண்டு வந்தது . அப்புறம்எனக்கு ஸ்கூல் போக பிடிக்கல. அப்படியே படிக்கவும் எழுதவுமா உர்காந்துட்டேன்.ஒவ்வொரு வாக்கியத்தையும் உருவாக்கிறபோது ரொம்ப சந்தோஷமக இருந்தது. 16வயதில் லேனா தமிழ்வாணன் என்ன கண்டு பிடிச்சு என் கிறுக்கல்ககளை புத்தகமாககொண்டுவந்தார். அந்தப் புத்தகத்திலேயே பெண்களோட கஷ்டங்கள் பத்தி எல்லாம்எழுதியிருக்கேன். நான் பிறந்த சமூகத்தில் பெண்களின் துயரங்கள் என்னை மிகவும்துன்புறுத்தின. பெண்கள் எல்லா இடங்கலிலும் அசோகவனங்களில்தான் வாழ்கிறார்கள்என்று தோன்றும்.
3 பத்திரிகைத் துறைக்கு எப்படி வந்தீங்க?
எழுத்து, படிப்பு, பத்திரிகை எல்லாமே ஒண்னுக்கொன்னு தொடர்புடையதா இருக்கு.முதலில் சில நண்பர்களோடு கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன்.சந்தோஷமான, வேடிக்கையான ஒரு கூட்டு முயற்சி. அதுல என்னுடைய கேள்விபதில் எல்லாம் கூட இருக்கும். பின்னாடி பிறகு சுந்தரராமசாமியை சந்திக்கும்வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தில தான் அவங்க காலச்சுவடு பத்திரிகையைதிரும்பக் கொண்டுவரணுங்கிற எண்ணத்தில இருந்தாங்க, என்னை ஆசிரியர் குழுவுலபணியாற்றும்படியா கேட்டா¡ங்க. எனக்கு பத்திரிகைல ஆர்வத்துக்கு வடிகால்கெடைச்ச மாதிரி இருந்தது. அப்படித்தான் நான் பத்திரிகை துறைக்கு உள்ளாறவந்தேன்... 9 வருஷம் வேலை செஞ்சேன். வெளியே வந்து உயிர்மை ஆரம்பிச்சேன்
4. காலச்சுவடு அனுபவம்?
அது ஒரு வாய்ப்பு. பத்திரிகைய உருவாக்கி எப்படி நிலைபெறச் செய்யறது என்பதைகற்றுக்கொள்ற ஒரு கால கட்டம்.. அப்ப எதுவுமே தெரியாது. பெரிய நிறுவனம்என்றால் எல்லாமே முன்மாதிரியா உருவாக்கப் பட்டிருக்கும். ஆனா இந்த மாதிரிஒரு பத்திரிகைல செஞ்சு செஞ்சு பார்த்து நீங்களாதான் எல்லாத்தையும்கத்துக்கணும். ஒரு பத்திரிகை தொடர்பான விஷயங்களை எல்லா நிலையிலும்கையாளும் வாய்ப்பு கிடைத்தது. அதுல எனக்கு பெரிய மனநிறைவு என்னன்னாதமிழ்ல எழுதக்கூடிய பெரும்பாலான எழுத்தாளார்களோட தமிழ் நாட்டுக்குஉள்ளேயும் வெளியேயும் ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியப்பட்டது. நவீன இலக்கியப்போக்குகலோடு ஒரு நெருக்கமான உறவு ஏற்பட்டது.
5. காலச்சுவடில் ஆசிரியர் பணி, உயிர்மையில் ஆசிரியர் வேறுபாடு சொல்லுங்க.
ஒரு காலக்கட்டத்தில காலச்சுவடு எனக்கு மனநெருக்கடியா இருந்தது. குறிப்பாஅவங்க தமிழ் பத்திரிகை உலகில் ஏற்படுத்தின அரசியல், அதை ஒட்டி ஏற்பட்டபகையுணர்ச்சி இது எல்லாமே என்னை அந்தரங்கமா பாதிக்க ஆரம்பிச்சது. அப்பஎனக்கு பொறுப்பில்லாத காரணங்களுக்குக்கூட நான் பொறுப்பேற்க வேண்டிஇருந்தது. பதில் சொல்ல அவசியம் இல்லாத விஷயங்களில் கூட நான் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது. இது வந்து ஒரு படைப்பாளியான என்னைதனிமைப்படுத்தக்கூடிய ஒரு அம்சமா இருந்தது. ஒரு எழுத்தாளனா நான் மிகப்பெரியமனச்சோர்வுக்கு ஆளானேன். என்னுடைய கவிதைகள் பத்தின பார்வைகள் கூடகாலச்சுவடின் செயல்பாட்டினை ஒட்டி நிர்ணயிக்கப்படக்கூடிய ஒண்ணா இருந்தது.மிகச் சிறந்த நண்பர்களை இழக்க வேண்டியிருந்தது. அந்த பத்திரிகையில் எனக்குஒரு இடம் இருந்தது.
ஆனா அதன் அரசியல் நான் தீர்மானிக்கல. அப்ப அந்தஅரசியல் காரணமா என் மேல் சுமத்தப்பட்ட பொறுப்புகள் எனக்கு சம்மதமில்லாதஒண்ணா இருந்தது. ஒரு காலகட்டத்துல ரொம்ப ஒரு தனிமையுணர்ச்சியும்,ஒருவிதமான வெறுப்புணர்வுக்கும் மத்தியில வாழக்கூடிய உணர்வுதான் இருந்தது..ஆனா, உயிர்மை என்பது வேற ஒரு சவால். காலச்சுவடு வழியா எதெல்லாம்உருவாக்கப்பட்டதோ, அதற்கு எதிரானதா உயிர்மை நடத்துகிறேன். முழுசாவேறுபடுற எழுத்தாளர்களுடைய படைப்புகளும் வரணுங்கிறதில ரொம்ப உறுதியாஇருந்தேன். அதனாலதான் ஒருத்தருக்கொருத்தர் முகம் கொடுக்காத எழுத்தாளர்கள்கூட பலபேர் உயிர்மைல தொடர்ந்து எழுதினாங்க. அதுக்கப்புறம் தமிழ் பத்திரிகைஉலகுல ஒரு பெரிய சாபக்கேடு என்னன்னா, எழுத்தாளர்கள் தங்களை ப்ரமோட்பண்ணிக்கறதுக்காக பத்திரிகை நடத்துறது. அது வெப் சைட் நடத்துறஎழுத்தாளர்களா இருக்கலாம், பத்திரிகை நடத்துற எழுத்தாளர்களா இருக்கலாம்,அவங்கள பொறுத்த வரைக்கும் என்னன்னா, தங்களை மைய்யமா கொண்டு ஒருபத்திரிகை நடத்துறது. அதற்கு சார்பான எழுத்துகளை பிரசுரிப்பது. இது வந்து, பலபத்திரிகைகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல போகமுடியாததற்கு முக்கிய காரணம்.
உயிர்மையைப் பொறுத்தவரைக்கும் அதனுடைய ஆசிரியரையோ, அல்லது அதைச்சார்ந்தவரையோ முன்னிலைப் படுத்தக் கூடிய எந்த ஒரு அம்சமும்இருக்கக்கூடாதுங்கறதுல ஆரம்பத்திலிருந்தே ரொம்ப உறுதியா இருந்தேன். ஒண்ணுபன்முகத்தன்மை, குழுக்கழுக்கிடையிலான ஏதோ இணக்கமான ஒரு இடம்,இரண்டாவதாக ஒரு வாசகனுக்கு எதோ ஒரு விதத்தில், அவர் தன்னுடையபுரிதல்களை, இலக்கியம் சார்ந்த அனுபவத்தை விரிவுபடுத்திக் கொள்ளக்கூடியஆக்கங்களை உருவாக்குவது, பிரசுரிப்பதுங்கிற நோக்கம் . இந்த மூன்று ஆண்டுகளில்இதையெல்லாம் முடிந்தவரை உயிர்மை நிறைவேற்றியிருக்கிறது. நிறையஇடர்ப்பாடுகள் இருந்தது. பொருளாதார ரீதியான பிரச்னைகள். இது போன்ற ஒருமுயற்சிக்கு நியாயமான ஆதரவு இல்லாத சூழலில் ஒரு பத்திரிகை நடத்தக்கூடியபயம். சில சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறது. சில மூச்சுத்திணறுகிறது. ஒருமாதத்தில் 15 லிருந்து 30 ஆம் தேதி வரை சென்னையிலேயே இருக்கவேண்டியுள்ளது. ஒவ்வொரு இதழும் வந்த பிறகு வாசகர்களுடைய ஈடுபாடு, அவர்கள்பத்திரிகையினை சொந்தப் படுத்திக் கொள்லும் விதம், அதுவே அர்த்தபூர்வமானகாரியம் ஆற்றுகிறேன் என்னும், அர்த்தபூர்வமாக வாழ்கிறேன் என்பதே சோர்வைப்போக்கி தொடர்ந்து செயல்படும் சக்தியைக் கொடுக்கிறதுன்னு சொல்லலாம்.
6. உயிர்மையின் தலையங்கங்கள் விரிவாக கவனம் பெற்றிருக்கின்றன என்னகாரணம் என்று நினைகிறீர்கள்
என்னுடைய தலையங்கங்கள் அறிவு ஜீவியின் பார்வை அல்ல. பொதுமனிதனின்உணர்வு.அநீதியை எதிர்த்து, ஒவ்வொரு பொது மனிதனுக்கும் ஏற்படக்கூடிய ஒருகோபம். அது ஆய்வு ரீதியா எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகளோ, அலசல்களோஅல்ல. கண் முன்னால் அதைப் பார்த்த உடன் ஏற்படக்கூடிய கேலி, கோபம்,அபத்தத்தைப் பார்த்து ஏற்படக்கூடிய ஏளனம்.
நாம் வாழும் சூழலில் உள்ள கோபமும், ஏளனமும், விமர்சனமும் தான் உயிர்மையில்உச்சக்கட்ட கோபமாகபதிவு செய்யப் படுகிறது உயிர்மை கோபத்தை பூசி மெழுகுவதில்லை. தனிப்பட்டஅரசியல் ரீதியான சாயங்கள் எதுவும் இல்லை.உங்களுக்கு ஒரு விஷயத்தைப்பார்க்கிறபோது என்ன உணர்வு ஏற்படுமோ அதைத்தான் உயிர்மை பிரதிபலிக்கிறது.
7. சுஜாதாவுக்கும் உங்களுக்குமான நட்பு பற்றிக் கூறுங்கள்.
அவர் எனக்கு எத்த்னையோ விதங்களில் முக்கியமான உதவிகள் செஞ்சிருக்கார்.ஒரு எழுத்தாளனாகவும் பதிப்பாளனாகவும் என்னுடைய காரியங்களை அவர் பெரியஅளவுக்கு வலிமைப்படுத்தியிருக்கார். அது ஒரு அபூர்வமான பிரியம். நட்பு.இன்னைக்கு நான் செஞ்சுகிட்டிருக்க பெரும்பாலான காரியங்கள்ல அவரோட அந்தப்பிரியம் சம்பந்தப்பட்டிருக்கு.
8. விமர்சனங்களை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?
ரொம்ப சின்ன வயசில பாராட்டுகள் அதிகமான உவகையையும், விமர்சனங்கள்அதிகமான வருத்தத்தையும் உண்டு பண்ணியது. ஆனா காலம் செல்லச்செல்ல நானேவிமர்சனங்கள் எழுத ஆரம்பிச்ச பிறகு விமர்சங்கள்பத்தி ரெண்டு விதமான பார்வை இருந்தது. முதலாவதாக தன்னுடைய படைப்புகள்மீது தனக்கே சுயவிமர்சனமுள்ள எழுத்தாளனுக்கு பாராட்டுரையோ, புகழுரையோஎதுவுமே பெரிதாக பாதிக்காது. என்னுடைய படைப்புகள் நான் எழுதிமுடிக்கிறபோதே எனக்கு ஒரு அபிப்ராயம் உண்டு இரண்டாவதாக அது என்னைவிட்டு விலகிப் போய்விடும். ஒட்டிக் கொண்டிருக்காது. இன்னொன்று தமிழில்சொல்லப்படுகிற பெரும்பாலான விமர்சனங்கள், பாராட்டுகள் இரண்டுமே சந்தர்ப்பம்சார்ந்ததாகவும், தனி மனித உறவுகள் சார்ந்ததாகவும், ஒரு விதத்தில்பொய்யானதாகவும் பைருக்கிறது. பொய் மிகவும் அலுப்பு தருகிறது. அசூயையாகஇருக்கிறது. ஏனென்றால் எனக்கு படைப்பு என்பது போதையூட்டக் கூடிய, மிகவும்கிறங்க வைக்கக் கூடிய அந்தரங்கமான அனுபவம்.விமர்சனங்கள் என்பது பல்வேறு காரணகாரியங்களுக்காக சொல்லப்படுகிற ஒருதொந்தரவு. மிகச்சிறந்த பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. அதற்கும் என்கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.என்னுடைய கவிதைகளைப் பற்றி எதுவுமே தெரியாமல், அதன் அடிப்படையைப்புரிந்து கொள்ளாமல் சொல்லப்படுகிற பாராட்டுகளைக் கேட்டிருக்கிறேன்.எந்தக்காரணங்களுக்காக பாராட்டப் படுகிறதோ அந்தக்காரணங்கள் அல்ல அதன் சிறப்பு. அதைப் போல எதிர்மறை விமர்சனங்கள். என்னைப்பற்றி எழுதப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களைவிட, மிக அதிகமானபுத்திசாலித்தனமான எதிர்மறை விமர்சனங்களை நான் எனது கவிதைகளுக்கு எழுதமுடியும். . நான் வேலை செய்யறேன். என்னுடைய வாசகன் எங்கேயோ இருக்கிறான்.அவனுக்காக நான் வேலை செய்யறேன். ஒரு புத்தகக் கண்காட்சியிலஉக்காந்திருக்கிறேன். யாரோ ஒருத்தர் வருவாரு மனுஷ்ய புத்திரன்- னு கையஅழுத்துவாரு.அப்படியே போயிடுவாரு. அவர் முகம் கூட பாக்கறதுக்குள்ளபோயிடுவாரு. அவர் கையில இருக்கக்கூடிய வெப்பமும், அழுத்தமும் பேசும்.திரும்பவும் ஒரு கவிதை எழுதறதுக்குண்டான எனர்ஜிய கொடுக்குது. அவருடையபேரு கூட தெரியாது.அவசியமா அவரு நினைக்கல. அவர் எங்கேயோ என் கூட பேசிட்டிருக்கிறாரு. இதுகொடுக்கக்கூடிய போதை. ட்ரெயின்ல போகும் போது யாரோ ஒருத்தர் நீங்கதானேமனுஷ்யபுத்திரன்னுபேசுவாரு. ஏதோ ஒரு பெண் உங்க கவிதைகள் பிடிக்கும்னுசொல்வாங்க. எனக்கே மறந்து போன என் கவிதை. அப்ப அந்தப் பயணம் அற்புதமாமாறிடும். இதுக்காகதான் எழுதிட்டிருக்கிறேன்.எனக்கே மறந்த வரிகளை மனசில வெச்சிருக்கிறாங்க. சொந்தம் கொண்டாடுறாங்க.தற்செயலா சந்திக்கக்கூடிய வாசகனுக்காகவும், வாசகிக்காகவும் மட்டும் தான் நான்வேலை செய்யறேன். விமர்சகர்களுக்காக என்னுடைய படைப்புகள் இல்லை.
9 கவிதைகளில் துயரம், அந்தர நிலை கட்டுரைகளில் கோபம். உங்கள் ஒருவரின்படைப்புகளே இருவிதமாக இருக்கக் காரணம்?
என்னுடைய வாழ்க்கைல இரண்டு அம்சங்களுமே இருந்தது. ஒண்னு என்னுடையஅந்தரங்கமான துயரங்கள் அவை அன்பு குறித்தவை. பிரியம் குறித்தவை. அவற்றின்புரிந்துகொள்ள முடியாத நிழல்கள் குறித்தவை.இதுதான் திரும்பத்திரும்ப என்கவிதைகளில் வருகிறது. ஒருபிரம்மாண்டமான மலர் மாதிரி கைக்கெட்டுற தூரத்திலஅஅன்பு எப்போதும் இருக்கிறது. ஆனா இடையில நிஜ வாழ்க்கையின்அற்ப்பத்தனங்கள் ஒரு பெரிய ஆறு மாதிரி ஓடிட்டிருக்கிறது. அதைக்கடந்து அந்தமலரை அடைய முடியல. அந்த மலரை நெருங்கவே முடியல. பரிசுத்தமான ஒருஇடத்தில அந்த மலர் இருந்திட்டே இருக்குது.ரொம்ப பக்கத்தில் போறவரைக்கும்இந்த அற்ப்பத்தனங்கிற ஆறு குறுக்கே ஓடிட்டிருக்கிறது எனக்கு தெரியல. எனக்குஅந்த மலர் கைக்கெட்டுன தூரத்தில இருக்கிறதா நான் நம்பிட்டே இருக்கிறேன்.
வெறுங்கையோட வீடு திரும்பர போது ஆற்றமுடியா துயரத்தை கொடுக்குது. நான்வெவ்வேறு விதமான உறவுகளின் வழியா ஒரே விதமான அன்பைத்தான் அடையவிரும்பறேன். எத்தனை ரூபத்திலதேடிப்போனா கூட அது தப்பி போய்டுது.நீது அற்ற சமூகம் குறித்த கேள்விகள் எனக்கு ரொம்ப சின்ன வயசிலேயே வந்துடுச்சு.தான் பெரியாரியம், மார்க்க்சியம் பெரிய வழிகாட்டியா இருந்துச்சு. .சமூககொடுமைகள், சமூக அநீதிகள், அரசியல், பொருளாதார ரீதியான பிரச்சினைகள்என்னுடைய அக்கறைக்குரிய ஒண்ணா இருந்திட்டிருக்கு. தொடர்ந்து எழுதுகிறேன்.என்னுடைய கவிதைகளில் அது வெளிப்பட்டிருக்கு.
கவிதை, கட்டுரை இரண்டுமே இணைகோடுகள். என்னுடைய இருத்தலியல் சார்ந்தஅந்தரங்கமான நெருக்கடிக்குரிய கவிதைக்கான ஒரு மையப்புள்ளியாகவும், சமூகரீதியான பார்வைக்கான உரைநடையின் மையப்புள்ளியாகவும் இருந்தது.10. வாசகருடனான மறக்க முடியாத அனுபவம்?ஒருமுறை நம்ப வாசகர் கட்டிடங்கள் கட்டுமான வேலை செய்யக்கூடிய தொழிலாளி.அவருக்கு ஒருநாள் சம்பளம் 60௭5 ரூபாய் இருக்கும். இலக்கிய கூட்டம் நடக்கும்போது வேலையைப் போட்டுட்டு வந்துவிடுவார். “எனக்கு வருத்தமா இருக்கு.ஒருவிஷயம் பேசணும்” என்றார். என்ன சொல்லுங்க என்றவுடன் எனக்கு ‘இந்தஎழுத்தாளர்கள் சண்டை எல்லாம் படிச்சேன்.டிஸ்டர்பன்ஸா இருக்கு சைகலாஜிகலா.”ன்னார். ‘உங்களுக்கு என்ன இதில பிரச்சினைன்னேன்’ ‘ எழுத்தாளன்னாமத்தவங்களவிட புரின்சுக்க கூடியவங்க இல்லையா? அப்படின்னார்.நான் ஒரு எழுத்தாளன படிக்கறேன்னா நான் அந்த எழுத்தாளன எனக்குரியவனாமதிக்கிறேன்.உலகத்திலே ஒசத்தியான ஒரு ஆள்.என் கனவுகளுக்கு வடிவம்கொடுக்கறான். என்னால் சொல்லமுடியாத உணர்வுகளுக்கு சொற்கள்கொடுக்கறான். இந்த உலகத்தில வேற யாரையும் விட ஒரு எழுத்தாளன்முக்கியமானவனா இருக்கிறான். எனது கனவுகளில் வெச்சுப்பாதுகாக்கற ஆளு பொய்சொல்றப்ப, சக எழுத்தாளன் மேல அவதூறா ஒரு வார்த்தை சொல்றப்ப எனதுகனவுகள் எல்லாம் உடைஞ்சி போகுது. அது என்னால் தாங்கிக்கொள்ள முடியாதஒரு துயரத்தை ஏற்படுத்துது. அந்த வாசகர் சொல்றாரு. ‘எனக்கு அந்தரங்கமாநேசிக்கிற ஒருத்தர் எனக்கு துரோகம் பண்ணுனா இருக்குமோ அதே மாதிரிஇருக்குங்கறார்’. நீங்கள்ளாம் அப்படி பண்ணக்கூடாது சார். நீங்க யாருமே அப்படிசொல்லாதீங்க. ஒரு வாசகன் எழுத்தாளன என்னவா நினைக்கிறான்னு ஏன்யோசிக்கமாட்டேங்கறீங்க. சக எழுத்தாளன் என்ன பண்றான்னுதான் யோசிக்கறீங்க.நீங்க நடந்துக்கிற விதங்கறது இதெல்லாம் தாண்டி ஒரு வாசகனுக்கு ஏற்படுத்தறபாதிப்ப ஏன் யோசிக்கறதில்ல. நாங்க பொழுதுபோக்குக்காக படிக்கறதில்ல. எழுத்தும்வாழ்க்கையும் ஒண்ணா சந்திக்கிறத தேடித்தான் படிக்கிறோம். இப்ப நடக்கிறசண்டைகள் மிகப்பெரிய வேதனையை, துயரத்தை உண்டுபண்ணுதுன்னு’ சொன்னார்.அது எனக்கு ஏதோ எயெ பொஎனிங் மாதிரி இருந்தது. நான் எனக்கு பிடிக்காதஎழுத்தாளன ஒழிச்சு கட்டறதுக்காக நான் என்னவேணாலும் பண்ணலாம். அல்லதுஅவன் எனக்கெதிரா என்ன வேணா பண்ணலாம். ஆனா நாங்க ரெண்டு பேரும்வாசகனுக்குப் பண்ற துரோகம் இருக்கில்ல. அந்த துரோகத்தைப் பத்தி எந்தஎழுத்தாளணும் யோசிக்கிறதில்ல. என்னுடைய கவிதையை ஒருத்தன் படிக்கிறான்.அதை உள்வாங்கறான்னா அவனுடைய இதயத்தினுடைய ஆழத்தில அவன்நேசிக்கிறான். இந்த உலகத்தில் யாரையுமே நேசிக்காத அளவுக்கு என்னைநேசிக்கறான். தனக்கு ரொம்ப வேண்டிய அந்தரங்கமான ஒருத்தருட்ட கண்கலங்கஅந்த கவிதைய படிச்சு காட்டறான். ஒரு எழுத்தாளனுக்கு கொடுக்கப்படுற எவ்வளவுபெரிய கௌரவம் அது. எவ்வளவு பெரிய மதிப்பு அது. நம்முடைய எழுத்தாளர்கள்அந்த தகுதிய பேணுறாங்களான்னா இல்லை. அது மிகப்பெரிய அவலம். இந்தசம்பவம் திரும்பத் திரும்ப நினைவுக்கு வரும்.
11. இந்த சூழல் மாறும்னு நினைக்கிறீங்களா?
என்னன்னா இலக்கிய அரசியல்ல ஈடுபடக்கூடியவங்கன்னு பாத்தீங்கன்னா, ஒரு சிலர்மட்டுந்தான் இந்தக்காரியங்களைப் பண்றாங்க. திடீருன்னு நினைச்சுப் பார்த்தாநாலைஞ்சு பேரு நினைவுக்கு வரும். ஆனா அந்த நாலஞ்சு பேரு மட்டுமேஎழுதுறதில்ல.தமிழ் எழுத்தாளர்ங்கறது பெரிய பரப்பு எத்தனை ஆண்களும், பெண்களும்எழுதறாங்க. ஆனா இந்த அவதூறுகளையும்,பிறர் மீதான காழ்ப்புணர்ச்சிகளையும்தொடர்ந்து உருவாக்கக்கூடியவர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலயும் இரண்டு மூன்றுபேர் இருப்பார்கள். ஐந்தைக் கூடத் தாண்டாது இந்த எண்ணிக்கை. அவர்கள் எல்லாபத்திரிகையிலும் எழுதுவார்கள். எல்லா விதமான கட்சியும் உருவாக்கிக்கொண்டேயிருப்பார்கள். ஒட்டு மொத்த இலக்கிய சூழலே இவர்கள் தான்னு ஒருதோற்றம். உணர்ச்சி வசப்பட்டு சில எழுத்தாளர்கள் மாட்டிக் கொள்வார்கள்.இந்தவிதமான சூழல் மாறவேண்டுமென்றால் இவர்களுக்கு கொடுக்கப்படவேண்டியமுக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும்.பொருட் பொடுத்தக்கூடாது. இலக்கிய வட்டத்தில் சந்திக்கும் போது முதலில்பேசப்படுவது ‘இவர் அவரைப்பத்தி இப்படி எழுதியிருக்கிறாரு. என்ன நினைக்கிறீங்க.’பத்திரிகையில் எத்தனையோ கதைகள், கட்டுரைகள் பிரசுரமாகி இருக்கும். ஆனால்அதைப் பத்தி பேசாது முதலில் இதைப்பற்றி உடனே பேசவேண்டியதாகி விடும்.நான் ஆறுமாசத்தில ஐம்பது கவிதைகள் எழுதியிருப்பேன் . ரொம்ப ரகசியமாகயாராவது படிச்சிட்டிருப்பாங்க. எப்பவாவது என்னிடம் சொல்வாங்க. நான் யாரைக்குஎதிராவாவது ஒரு பக்கம் எழுதிட்டேன்னா அதைப்பத்தி எல்லோரும் பேசுவாங்க.என்னிடமும்யும் பேசுவாங்க. இது அரசியல் பண்றவங்களுக்கு உற்சாகம்கொடுக்குது.நீங்க பார்த்தீங்கன்னா எழுபதுகள்ல, எண்பதுகள்ல,தொண்ணூறுகள்லஉருவாக்கப்பட்ட அத்தனையோ அரசியல் இன்னைக்கு யாருக்குமே தெரியாது.அப்படியே காற்றோட போயிடுச்சு. பழைய இதழ்கள், இல்லைன்னா இதழ்தொகுப்புகளை எடுத்து பாக்கறப்போ தான் இப்படி ஒரு விஷயம் நடந்ததுங்கறதுதெரியும். ஆனா அந்த காலகட்டத்துல எழுதப்பட்ட கதைகள்,கவிதைகள்இன்னைக்கும் பரவலா பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. பிரமிள் எழுதின கவிதைகள்இன்னைக்கும் படிக்கிறோம். எல்லோருக்கும் தெரியும். அவர் உருவாக்கினசர்ச்சைகளில் யாருக்கும் எந்த அக்கறையும், எந்தஅவசியமும் தேவையில்லை.பிரமிளுக்கும், வெங்கடசாமிநாதனுக்கும் நடந்த சர்ச்சைகள் குறித்து இன்னைக்குயாருக்கும் எதுவுமே இல்லை.
12. வாசகர்களுடைய மனநிலையினை எப்படி அறியறீங்க?
வாசகர்களைச் சந்திக்கிற சந்தர்ப்பங்களை எப்போதுமே அதிகப்படுத்திக் கொண்டேஇருக்கிறேன். ஏன்னாபொதுவா நுண்ணுணர்வு கொண்ட வாசகர்கள் எல்லோருமே பெரும்பாலும் வாசகர்கடிதங்கள் எழுத மாட்டாங்க. நான் வாசகர்களை தனிப்பட்ட முறையில எல்லாஇடங்களிலயும் சந்திப்பேன். இலக்கிய கூட்டங்கள்ல, தேடி வரக்கூடியவங்க,தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடியவங்க, ரொம்ப அந்தரங்கமாஆத்மார்த்தமா ஏதாவது சொல்வாங்க. அதுபோல ஒவ்வொரு விஷயத்தைப் பத்தியும்தயக்கமின்றி பேசுவாங்க. ‘இது தேவையில்லை.இது உயிர்மையில வரக்கூடாது. இதுதவறான விஷயம்’ னு சொல்லக் கூடிய வாசகர்கல் இருக்காங்க. அதுக்கு ரொம்பமதிப்பு குடுத்திருக்கிறேன். என்னைவிட அதிகமா பத்திரிகையை சொந்தம்கொண்டாடியிருக்காங்க. எப்படி உயிர்மையில இதைப் போடலாம்னு கேப்ப்பாங்க.தப்புதாங்கன்னு தான் சொல்வேன்.அப்படித்தான் போடுவேன்னு சொல்ல முடியாது.ஏன்னா அது என்னுடைய பத்திரிகை இல்லை. அது வாசகனுடைய பத்திரிகை.எழுத்தாளனுடைய பத்திரிகை.
13.உயிர்மையில் தலையங்கம் மட்டுமே எழுதுகிறீர்கள்? ஏதாவது காரணம்இருக்கிறதா?
சில கவிதைகள் பிரசுரமாயிருக்கு. மத்த பத்திரிகைல வந்ததை விட உயிர்மைலகுறைவாதான் வந்திருக்கிறது. ரெண்டு விஷயம் இருக்கு. ஒண்ணு என்னை ப்ரமோட்செய்ய பத்திரிக்கை நடத்தறதுல விருப்பம் இல்லை. நான் பத்திரிகை நடத்திஎன்னுடைய ஆக்கங்களையே போடறதில கூச்சம் இருக்குது.ரெண்டாவதா மத்த பத்திரிகைல எழுதறதுக்கு ஆர்வம் இருக்கு. என்னுடையபத்திரிகையில எழுதறதைவிட இன்னொரு பத்திரிகைல எழுத்தாளன், பத்திரிகைங்கறஉறவு,சௌகரியம் இருக்கு. இந்த பத்திரிகை ஆரம்பிச்ச உடனே பொதுவா எழுதுறதுகுறைய ஆரம்பிச்சது. இது முக்கியமான இன்னொரு காரணம். ஒரு பதிப்பகம்,பத்திரிகை நடத்துறது சம்பந்தமான பல்வேறு விதமான சூழல்கள்,கவலைகள்,நெருக்கடிகள்,யோசனைகள் இதனால மனம் எப்பவுமேஆக்கிரமிக்கப்பட்டிருக்கு. படைப்பு மன நிலையிலைப் பேண முடியல. அதனால தான்எழுதுறதுக்கான உந்துதல் ஏதோ விதத்துல குறைவாயிடுச்சு. எழுதுவதற்கானஇழப்பாதான் நினைக்கிறேன். தமிழுக்கல்ல எனக்கு. எனக்கு அந்தரங்கமான இழப்பாநினைக்கிறேன். ஏதோ ஒருவிதத்தில சரிபண்ணிக்கணும்னு நினைக்கிறேன்.
14.வலைபதிவராக அனுபவம்....
இணையம் அல்லது இணைய எழுத்துக்கள் அந்த வடிவத்துல ஆரம்ப காலம்தொட்டே மிகுந்த அக்கறையும் ஆர்வமும் இருந்தது. தமிழ் இணைய இதழ்கள்ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டேஅதனுடைய பயன்பாடு, சாத்தியப்பாடுகள் குறித்து விரிவாக கட்டுரைகள்எழுதியிருக்கிறேன். அந்த அளவுக்கு என்னை மிகமிக ஈர்த்த வடிவம். எதிர்காலத்தில்மிகப்பெரிய புரட்சியை வலைப்பூக்களும், வலைப்பதிவுகளும் ஏற்படுத்தும் என்பதில்எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதன் காரணமாகவே நானும் வலைப்பதியஆரம்பித்தேன். ஆனால் இன்று இணையத்தில் எழுதும் கணிசமான பகுதியினர் எவ்விதபொறுப்புணர்ச்சியும் அற்ற புல்லுருவிகள். இவர்களுடைய நோக்கமே யாராவதுஇணையத்தில் புதிதாய் அக்கறையுடன் படைக்க வந்தால் அவர்களை துரத்தவேண்டுமென்பதுதான். போலி வலைப்பதிவுகள் மனோவக்கிரம் மிகுந்துகாணப்படுகிறது. உடனடியான கவன ஈர்ப்பிற்காக ஏதாவது ஒன்றை எழுதுவது.படிப்போ, சமூகபின்புலமோ கலாச்சார பிடிமானமில்லாத உதிரிகள். இணையத்தைப்பயன்படுத்தக்கூடிய ஒரு சமூகப்பிரிவு யாரென்று யோசித்து பார்த்தால், அந்தசமூகப்பிரிவினர் பொருளாதார பின்புலம் உள்ளவர்களால் இது உருவாகிறது.இணையத்தின் பயன்பாடு இன்னும் எளிமையாகவும்,பரவலாகவும் ஆகிறபோது எதுமுக்கியமானதோ அது மட்டுமே பார்க்கப்படும். ஊடகம் என்ற வகையில் பார்த்தால்மிகப்பெரிய புரட்சி.உலகமொழியில் அதிகமாக எழுதப்படுகிற பதிவுகளில் தமிழும் ஒன்று. இந்த வடிவம்இனி ஆக்க பூர்வமாக ஆக்கப்படும். இந்த வலைப்பதிவைப் பார்த்தால் ஒவ்வொருமொழியிலும் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றி,பிடித்த கவிதைகளைப் பற்றிவைத்திருப்பார்கள். துறை சார்ந்த வலைப்பதிவுகள் வைத்திருப்பார்கள். மிகவும்வேண்டிய கலைஞரைப் பற்றி, நல்ல இலக்கிய அறிமுகம் என்று பல சாத்தியப்பாடுகள்இருக்கின்றன. ஒரு ஈ -மெயில் போலல்லாது குரூப் மெயில் போல் இன்றுவலைப்பதிவுகள் இருக்கின்றன. வாசகனுக்கு பயனுள்ளதை அளிக்க வேண்டும் என்றுவரும் போது, புரட்சி ஏற்படுத்துவதற்கான அந்த சாத்தியப்பாட்டை அந்த வடிவம்கொடுக்கும்.15 தேசிய விருதுகள் குறித்து....இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.பொதுவா 2004 ல் சம்ஸ்க்ருத சம்மான் என்று 35 வயதிற்குள் கலை இலக்கியதுறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்ததற்காக என்னைத் தேர்வுசெய்திருந்தார்கள். 2005ல் இந்திய மனித வள சிறப்பு விருதினைக் கொடுத்தார்கள்.அந்த விருது வாங்கக்கூடிய சம்ஸ்க்ருதி சம்மான் விருது வாங்கியபோதுபுகழ்பெற்ற ஆங்கில இந்திய எழுத்தாளர் விக்ரம் சேத் “இந்த நிகழ்ச்சியை இன்றோடுமறந்து விடுங்கள். இதை நினைவில் வைத்திருந்தால் நீங்கள் எழுத மாட்டீர்கள்”என்றார். இதெல்லாம் வீண் பெருமைகக்குள் பெருமைகளுக்குள் மூழ்கடிக்கக்கூடியவிஷயம் தான், அங்கீகாரம் தான். அதனால் அது பெரும்பாலும் நினைவில் இல்லை.
16. வெளிநாட்டு அனுபவங்கள்...........
என்னுடைய முதல் வெளிநாட்டு பயணம் சிங்கப்பூர் மலேஷிய நாடுகளில்அமைந்திருந்தது. அந்த பயணத்தில நிறைய இலக்கிய கூட்டங்கள் நடந்தன.சிங்கப்பூர்,மலேசியா ரெண்டு நாடுகளிலயுமே ஒரு விஷயம் என்னை ஈர்த்தது. ரெண்டுநாடுகளிலேயுமே அடிப்படை கட்டமைப்பு வசதி. மிகக்குறுகிய காலத்தில் இவ்வளவுபெரிய வளர்ச்சி... வசதி. வரலாற்று ரீதியா அதற்கான வேறு பலகாரணங்கள்இருந்தாலும் கூட, தமிழ்நாடு போன்ற இடத்திலிருந்து செல்பவர்களுக்கு பெரியகட்டடங்கள், சாலை அமைப்புகள், பிற தொழில் நுட்ப வசதிகள் மிகப்பெரிய ஒழுங்கு,அழகு, நேர்த்தி இவை மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்துவது இயற்கை..இலக்கிய ரீதியாக எடுத்துக் கொண்டால் சிங்கப்பூர்,மலேசியா இரண்டுமே நவீனஇலக்கியம் உருவாக்கிய நவீனத்துவ போக்கிலிருந்து மிகவும் விலகி, பின் தங்கிஇருக்கின்றன. திராவிட இயக்கம் உருவாக்கிய இலக்கிய, சமூக மதிப்பீடுகள்இன்னும் சிங்கப்பூர், மலேசிய தமிழர்களிடையே ஒரு நோய் போல் பற்றிக்கொண்டிருக்கிறது. எந்த விதத்திலும் நவீனத்துவம் சமூக கலாச்சாரத்தை மறுமலர்ச்சிஅடையச் செய்யவில்லை. இலக்கியம் மரபு வழிப்பட்ட இலக்கியப் பார்வை, அல்லதுமரபிலக்கியம் உருவாக்கக்கூடிய கற்பனா வாதம்.சிங்கப்பூர், மலேசிய வாழ்க்கையினுடைய யதார்த்தத்தை எதிர்கொள்ளாத தமிழ்கற்பனாவாதம் அல்லது தமிழ்சினிமா உருவாக்கக்கூடிய கற்பனாவாதம். மரபு,சினிமாதவிர வேறு இலக்கிய ரீதியான செயல்பாடுகள் பெருமளவு இல்லையென்றுதான்சொல்ல வேண்டும். இது எழுத்தாளனுக்கு, வாசகனுக்குசோர்வூட்டக்கூடிய விஷயமென்று தான் நான் நினைக்கிறேன். அங்கு கூட்டப்பட்டகூட்டங்கள் அனைத்திலும் கேட்கப்பட்ட கேள்விகளையும் சொன்ன பதில்களையும்இப்போது நினைத்துப் பார்க்கிற போது மிகவும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.தமிழ்நாட்டில் இப்படி ஒரு இலக்கிய கூட்டத்தில இப்படி கேள்விய கற்பனையேசெய்ய முடியாது.ஒருத்தர் கேட்கிறார்.“நீங்கள் ‘கால்களின் ஆல்பம்’ னு கவிதை எழுதியிருக்கிறீங்க. ஆல்பத்திற்குதமிழ்ச்சொல் கிடைக்கவில்லையான்னு கேட்கிறாரு.பஸ் என்று பயன்படுத்திட்டிருந்தபோது பேருந்து என்ற சொல் நிலைபெற்றதும் அதன்பிறகு இலக்கியம் ஸ்வாதீனமா பயன் படுத்தறோம்.ஆல்பங்கிறது ஒரு நவீன வாழ்க்கை முரையில் உள்ள ஒரு சொல். அந்த உணர்வைபிரதிபலிக்க கூடிய தமிழ் சொல் இன்னும் உருவாகதபோது நான் கவிதையில்உயிறற்ற ஒரு மாற்றுச் சொல்லை பயன்படுத்த மாட்டேன்.தமிழ்நாடு போன்ற பெரிய ஜனத்தொகை கொண்ட இடத்தில என்னன்னா மரபுக்கவிதைகள் படிக்கக்கூடியவங்க,பேசறவங்க தனியா இருப்பாங்க . நவீன இலக்கியம்பேசக்கூடியவங்க தனியா இருப்பாங்க. யாருடைய கூட்டத்துக்கும் யாரும்வரமாட்டாங்க. சிங்கப்பூர், மலேசியா போன்ற இடத்தில,தமிழர்கள் குறைவாஇருக்கிறாங்க, அதுவும் இலக்கியம் பேசறவங்க, ஆர்வம் இருக்கிறவங்க அவங்கஎல்லோருமே ஒரே இடத்துல சந்திக்கறப்ப சிக்கல் இருக்கு. அப்போது சம்பந்தாசம்பந்தமில்லாத கேள்விகளோ குழப்பங்களோ உண்டாகுது.இதை எல்லாம் தாண்டி, ரெண்டு நாட்டிலயுமே இந்த அபத்தமான சூழ்நிலையைப்பற்றிய கடுமையான விமர்சனங்கள் கொண்ட ஒரு புது தலைமுறை எழுத்தாளர்கள்உருவாகிவர்றாங்க.அதற்கான சாட்சியங்கள் இந்த கூட்டங்கள்ல நான் பார்த்தேன்.இந்த பட்டறைகள்ல பார்த்தீங்கன்னா நான் பதில் சொல்லவேண்டிய கேள்விகளுக்குகூட்டத்திலருந்தே பதில் சொன்னாங்க. அந்த அளவில் உருவாக்கக்கூடிய ஒருதலைமுறைவந்திருக்கிறாங்க. இனிமேல் இலக்கிய செயல்பாடுகள் அவர்களை மட்டுமேமையமா கொண்டுதான் சிங்கப்பூர், மலேசியாவில நடக்கும். திராவிட செயல்பாடுகள்அவங்களுக்கான எந்த இடமும் இனிமே கிடையாது.
17கவிதை பட்டறை,பயிலரங்குகளின் பயன், எந்த அளவில படைப்பாளிகளுக்குவளர்ச்சியைத்தர்றதா இருக்கும்
பட்டறைகளின் நோக்கமே இலக்கியத்தைப் பற்றின பேச்சுக்களைஉருவாக்குவதுதான். உரையாடல்களே இல்லை இங்கே. எனக்கு பலவிதங்கள்லஉதவி செஞ்சிருக்கு. முக்கியமான கவிதைகளை எடுத்துக் கொண்டு அதன்தன்மைகளைப்பத்தி பேசறப்ப அந்த எழுத்தாளருடைய வாழ்க்கைலயே முதல்முறையாஅந்த கவிதையைப்பத்தி பேசக்கூடிய சந்தர்ப்பமா இருக்கலாம். யாராவது படிச்சுநல்லா இருக்குன்னு சொல்வாங்க. நல்லா இல்லைன்னு சொல்வாங்க.படிச்சேம்பாங்க. முகஸ்துதிக்காக ஏதாவது சொல்வாங்க. ஆனா இதையெல்லாம்தாண்டி இதுல இதல்லாம் இருக்கு, இதெல்லாம் இல்லன்னு பேசக் கூடிய சூழல்எப்பவாவதுதான் நடக்கும். ஒரு கவிதையைப்பத்தி பேசறப்பவே கவிதையின்பிரச்சினைகள், படிமங்கள் தவறா பயன்படுத்தப்பட்டிருக்குன்னோ, உருவகங்கள் சரியாஅமையல, உணர்வுநிலைக்கும் ,மொழித்தரத்துக்கும் இடையில பொதுவான இணக்கம்இல்லை. இந்த மாதிரியான விஷயங்களை பேசறப்போ அந்த ஒரு கவிதையோடநிக்காது, உங்க மனசு உடனே அதை வேறு கவிதையோடசம்பந்தப்படுத்தியோசிக்கும். இந்த யோசனைகள் எல்லாமே அடுத்தகட்டத்தில் எழுதக்கூடியகவிதைகளில் ஒரு பெரிய பாதிப்பை, தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படித்தான்பயிலரங்குகள் உதவி செய்ய முடியும். நேரடியா இது கவிஞர்களை உருவாக்காது.கவிதைகளில் தீவிரமா இயங்கிக் கொண்டிருக்கிற வாசகருக்கோ, படைப்பாளிக்கோஅதைப் பற்றின அடைதல், விழிப்புணர்வை ஏற்படுத்தும் அப்படின்னு நான்நினைக்கிறேன்.18. அடுத்த பரிமாணம் என்ன?உரைநடையில் எனக்கு ரொம்ப ஆர்வம் இருக்கு. சிறுகதைகள், நாவல் எழுதணும்னுஆசை இருக்கு. கனவு. ஆனா என்னன்னா மொதல்ல எழுத வர்றவங்க கவிதை,சிறுகதை பிறகு நாவல்னு எழுதற சடங்கு மாதிரி அது ஆகக்கூடாது. நாவல்எழுதணும்னா அது எழுதப்படுவதற்கான ஏதாவது ஒரு நியாயம் இருக்கணும். அதுதனித்துவமா இருக்கணும். இது பேராசை தான் இப்படி யோசிக்கிறது. இவ்வளவுநாவல்கள் எழுதப்பட்ட மொழில நான் முதல் நாவல் பண்ணுவேன் . அதை பெரியஅவுட்ஸ்டாண்டிங்கா பண்ணுவேங்கறது பேராசைதான்.எதை செய்தாலும் மங்கலா ஒரு காரியம் பண்ணறது எனக்கு பிடிக்காது. , பத்தோடுபதினொன்னா பண்ணனுங்கறது என்னால முடியாது. அப்படி தோணிச்சுன்னாஅப்படியே அதை விட்டுருவேன். எது செய்தாலும் ரொம்ப பிரகாசமா பண்ணனும்
19 நீங்கள் எடுத்த சுவாரஸ்யமான நேர்காணல் குறித்து சொல்லுங்கள்?
ஒருமுறை சின்னக்குத்தூசியை நேர்காணல் எடுத்தேன். அவர் நான் மிகவும்மதிக்கக்கூடிய ஒரு சிந்தனாவாதி, பத்திரிகையாளர். தன்னுடைய எந்தஅறிவுத்திறமையை சொந்த ஆதாயங்களுக்கோ, வாழ்க்கை சார்ந்த நலன்களுக்கோஎதற்கும் பயன்படுத்திக் கொள்ளாதவர். அவரை பேட்டி எடுத்தபோது ரொம்பவேடிக்கையான விஷயம். ஏதாவது ஒரு கேள்வி கேட்பேன். உடனேபாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர் எடுத்து இதோ கேள்விக்கான பதில்னு கொடுப்பாரு.வேறொரு கேள்வி கேட்பேன். இந்த பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுப்பாரு.அவருக்கு ஒரு ஐடியா இருக்கு. தமிழ்ல பேட்டி எடுக்கக்கூடியவன் என்னென்னகேள்விகேப்பான்னு ரெடியா எழுதி கொண்டு வந்திருக்காரு. தெளிவா எழுதியிருக்கிறேன்போட்டுருங்கம்பாரு. அப்பதான் எனக்கு தோணுனது பேட்டி எடுக்கறவங்க எப்படி ஒரேமாதிரியான காரியங்களைப் பண்ணிட்டிருக்கிறோம்னு.அது ஒரு வித்தியாசமான அனுபவம். என்ன புரியவச்சாருன்னா பெரும்பாலானபேட்டிகள்ல குறிப்பா தமிழ் எழுத்தாளர்களை பேட்டி எடுக்கறோம்னா பேட்டின்னுவந்தவுடன அவங்க மனசுல ஒரு ஒலி நாடா இருக்கு. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டஒலிநாட அது. பொலிடிகலி கரெக்டெட் வெர்ஷன், இதித்தான் சொல்லணும், இதுசொல்லக்கூடாதுன்னு. எந்த உளறலையும் பார்க்க முடியாது. தன்னுடைய இமேஜ்எப்படி பதிவு பண்ணனும், தன்னுடைய விஷயங்களை எப்படி நிலை நிறுத்தணும்னுஅவங்களுக்கு தெரியும் அதனாலதான் பேட்டிகள் எடுக்கரதுல எனக்கு ரொம்ப ஆர்வம்குறைஞ்சுடுத்து.ஒருமுறை சுபமங்களாவில ஒரு பேட்டி படிச்சேன். சந்திரலேகாவினுடையது.அற்புதமான இண்டர்வியூ. தன்னுடைய தன்னுடைய கலைக்கும் ஆன்மீகத்துக்கும்இடையிலான உறவை அர்ற்புதமாக சொல்லியிருப்பாங்க.
20.கஷ்டப்படும் மக்களுக்கு இலக்கியம் என்ன செய்ய இயலும்?
சமூக வாழ்வுல இலக்கியம் வாழ்வுல மாற்றம் கொண்டு வருதுங்கறதை விட படிக்கிறவாசகனிடம் மாற்றங்களைக் கொண்டு வருது. நீங்க தீவிர வாசகரா இருக்கும்பட்சத்தில உங்க ஆளுமைய கட்டமைக்குது. அல்லது ஆளுமையில மாற்றங்களைக்கொண்டுவருது. நிச்சயமா ஈடுபாட்டோட இலக்கியத்தை படிக்கிறப்போ உங்ககண்னுக்குத் தெரியாத நுண்ணிய மாற்றங்களை உண்டு பண்ணுது. உங்க ஆளுமையைமாத்துது. உங்க சமூக உறவுகளை மாத்துது. இலக்கியத்துல ஈடுபட ஈடுபட மனிதஅது மனித உறகளை ஏதோ ஒருவகையில மாற்றியமைக்கும். நம்ம நம்ம சமூகத்திலஏன் பெரிய பாதிப்பகளை உருவாக்கலைன்னா இங்க இலக்கியத்தில ஈடுபடறவங்கஎண்ணிக்கை குறைவா இருக்கு. அதற்கான ஒரு அடித்தளத்தை நம்ம கல்வியமைப்போஅரசியல் அமைப்போ உருவாக்கல. அதுதான் முக்கியமான பிரச்சினையாபார்க்கிறேன். இலக்கியம் ஒரு சிறுபிரிவினர்களால படிக்கப்படறதனால அதை ஒருசமூக மாற்றத்துக்கான கருவியா கொள்ள இயலாது. ஏன்னா சமூகம் என்பது ஒருபெருவாரியான மனிதர்கள் அதனால தான் இங்க சினிமா நம்ம அரசியலதீர்மானிக்குது.
21.குழந்தைகள் கல்வி?
உலகமயமாதலின் ஒரு விளைவாகத்தான் இன்கே குழந்தைகள்பயிற்றுவிக்கப்படுறாங்க. வேலைவாய்ப்புகள், சந்தை வாய்ப்புகள் அல்லது அந்தகுழந்தைகளை பணம் பொருள் ஈட்டக்கூடிய எந்திரமா பார்கிறாங்க. போட்டி,அந்தப் பந்தயத்தில் ஜெயிக்க வைக்கணுங்கிற ஆவேசம் , இது தான் இன்னைக்குகல்விஅமைப்பு, பெற்றோர்கள் எல்லோருக்குமே இருக்கு. மத்தபடி ஆளுமைபண்புகளை உருவாக்கக்கூடிய, அல்லது நம்முடைய வரலாறு, கலாசாரம் சார்ந்தகல்வி கிட்டத்தட்ட கைவிடப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக பன்னாட்டுகம்பனிகளுக்குத் தேவையான மனங்களையும், உடல்களையும் தயாரித்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் கம்பனிகளுக்குத்தேவையான மாடல்களைஉருவாக்குகிறோம்.
22 .கவிதைகளில் நகைச்சுவை இல்லை. ஆனால் நகைச்சுவையாக கட்டுரைகளில்எள்ளி நகையாடுதல் குறித்து?
நல்ல கேள்விதான். இந்தக்கேள்வி எனக்குமே இருக்கு. பொதுவா என் கட்டுரைகளில்இந்த அம்சங்கள் இருக்கு. நகைச்சுவைங்கிறது நாம உயிரோடிருப்பதற்கான ஒருவழி.இதையெல்லாம் பார்த்து சிரிக்க முடியலைன்னா நாம செத்துதான் போகணும்.சிரிப்பின் வழியாதான் இந்த நம்முடைய துக்கங்களையும், அவலங்களையும் ,முரண்பாட்டையும் எதிர்கொள்ள முடியும். எழுத்துன்னு வர்றப்ப அங்கதத்தை என்னால்கவிதைக்குள் கொண்டுவர இயலவில்லை. ஏன்னு தெரியல.எழுத்தில் அங்கதம்கொண்டு வருவது தனிக்கலை. ஞானக்கூத்தன் அதை கொண்டு வருவார், ஆத்மாநாம்அற்புதமாக கொண்டு வந்திருக்கார்.
பேட்டி கண்டவர்: மதுமிதா

3 எதிர் சப்தங்கள்:

நாமக்கல் சிபி said...

நல்ல விஷயமிருக்குற பதிவை இப்படி ஒரேடியா பெரிசா போட்டா எப்படி?

வினையூக்கி said...

நன்றி

மதுமிதா said...

'நுனிப்புல்'உஷா கூறினார்க‌ள் இங்கே வாசித்த‌தாக‌.

நேர்காணல் 'நான்காவது தூண்' நூலுக்காக எடுக்கப்பட்டது என்ற விபரத்தை ஆர‌ம்ப‌த்தில் கொடுங்கள்.

நன்றி வா.மணிகண்டன்.