Sep 19, 2006

கொங்கு வட்டார வழக்கு

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது.

கொங்கு நாட்டில்,'ழ'கர உச்சரிப்பை கண்டுபிடிப்பது மிகக் கடினம்.

1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்)

2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம்

3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.)

4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்]

5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை.

6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்)
வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்)

7. என்றது - என்னுடையது.

8. உன்றது - உன்னுடையது.

9. அப்பச்சி- தாய்வழி தாத்தா

10. அப்பாரு- தந்தை வழி தாத்தா.

11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி

12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி

13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்)

14. நடவை - வெளிப்புறக் கதவு

15. வட்டல்- தட்டு

16. நருவசா- முழுவதுமாக

17. ஸோலி- பணி (கானங்காத்தால கடை கடையா என்ன ஸோலி உனக்கு?)

18. மடார் - உடனடியாக (ஒரு வேலையச் சொன்னா மடார்ன்னு முடிச்சுட்டு வேற ஸோலியப் பாரு)

19. மோந்துட்டு - மொண்டு (குடுவையில் நீர் மொண்டு வருதல்)

20. ஒட்டுக்கா - இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்கா போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)

21. மொளவு சாறு- மிளகு சாறு என்பதன் மாறுபாடு (அசைவக் குழம்பைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது)

22. எகத்தாளம் - திமிரு/ நக்கல் (பெரியவங்க கிட்ட எகத்தாளமா பேசாதே)

23. இட்டாரி/ இட்டேரி - தெரு. (கிராமப்புறங்களில் குறிப்பாக மண் சாலை)

24. அவுறு - அவிழ்த்தல் (கயிற்றை அவிழ்த்து விடு)

25. அவத்தைக்கு - அங்கே

26. இவத்தைக்கு - இங்கே

27. சலவாதி - மலம்.

28. போச்சாது- "பரவாயில்லை விடு" என்பது போல (ஏதாவது பொருள் தொலைந்து விடும் பட்சத்தில் போச்சாது விடு என்று ஆறுதல் படுத்துவார்கள். போய்ச் சாகிறது என்ற சொல் இப்படி மாறி இருக்கலாம் என்பது என் தீர்மானம்)

29. போசி- பாத்திரம்

30. அலுங்காம -அசைக்காமல் (போசிய அலுங்காம எடுத்துட்டு வா - பாத்திரத்தை அசைக்காமல் எடுத்து வா)

31. சிந்திடாம - உதிராமல்/கீழே கொட்டாமல் (அரிசி சிந்தாம அள பார்க்கலாம்)

32. மலக்காகிதம் - மழைக்காகிதம் - பாலிதீன் காகிதம்

33. பொறவு - அப்புறம். (கடைக்கு பொறவு போறேன்)

34. வெசனம் - வருத்தம்/சோகம் (ஏண்டா அவன் வெசனம் புடிச்சு உக்காந்திருக்கான்?)

35, 36. கருமாந்திரம் - கருமாதி என்பதாக இருக்கலாம். பிடிக்காத ஒரு நிகழ்வில் கருமாந்திரம், கெரகம் என்ற இரண்டு சொற்களும் அடிக்கடி உபயோகிக்கப் படும். (கருமாந்திரம் புடிச்சது)

37. பொசுக்குனு - சடக்கென்று (இவனுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்)

38. பொக்குன்னு - வருத்தமாக (முட்டாய் தரன்னு சொல்லிட்டு தராம இருந்தா குழந்தை
பொக்குன்னு போயிடும்)

39. பவுடு- கீழ் அன்னம் (லோலாயம் பேசாதடா. பவுட பேத்துடுவேன்)

40. தாவாக்கட்டை- கீழ் அன்னம்.

41. சீவக்கட்டை- விளக்குமாறு

42. கூமாச்சி- கூர்மையாக

43. தொறப்பு - பூட்டு

44. தொறப்புக் குச்சி - சாவி

45. மண்டு விடுதல்- சிறுநீர் கழித்தல்

நன்றி: ஆர்குட்- கொங்கு வெள்ளாளர் குழுமம்.

39 எதிர் சப்தங்கள்:

SP.VR. SUBBIAH said...

முக்கியமான வார்த்தையை விட்டு விட்டீர்களே மணிகண்டன்
மொடக்கடி - மொடக்கடி பண்ணாதே - இடக்காகச் செய்யாதே!
ரவுசு - ரகளை என்று பொருள் படும் சொல்

மங்கை said...

கண்ணூ

//கொங்கு நாட்டில்,'ழ'கர உச்சரிப்பை கண்டுபிடிப்பது மிகக் கடினம்//

இப்பதாங்கண்ணு நானே கவனிக்கிறேன்

//கெரகம் //

இத அடிக்கடி பயன் படுத்துவாங்க.. நான் பயன் படுத்துவேன்..

கெரகம் புடிச்சவன்(ள்)..

வடக்கால

தெக்கால

நம்மூர்ல சொல்ற சில பழமொழிகள போடனும்னு ஆசை...உங்களுக்கு தெரிஞ்சா நீங்க போடுங்க

மங்கை

வெற்றி said...

மணிகண்டன்,
நல்ல பதிவு. வட்டாரச் சொற்களை அழிய விடாது பாதுகாக்க வேண்டும் எனும் எண்ணம் உள்ளவன் நான். நான் கூட யாழ்ப்பாணத்தில் , குறிப்பாக எனது ஊரில் புழங்கும் சில சொற்களைப் பற்றிப் பதிவிட வேண்டும் என்றிருந்தேன். யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஊர் பல சொற் புழக்கங்கள் வேறுபடும். காரணம், யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து வந்து மக்கள் குடியேறியமையால் அந்தந்த வட்டாரச்சொற்கள் அவர்கள் வந்து குடியேறிய ஊர்களில் இன்றும் புழக்கத்திலுள்ளது. குறிப்பாக எனது ஊரில் அதிகமானோர் காஞ்சியில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது வாய்மொழி வரலாறு.
நீங்கள் பட்டியலிட்ட சொற்களில் சில எனது ஊரிலும் புழக்கத்தில் உண்டு.

எடுத்துக்காட்டாக,

பொழுதோட என்பதை என் ஊரில் பொழுதுபட என்பார்கள்.

பொறகால என்பதை புறகால என்பார்கள்.

வெடுக்குனு = வெடுக்கெண்டு
என்றது = என்ர
உன்றது = உன்ர
அப்பச்சி = அப்பு அல்லது அம்மப்பா
அப்பாரு = அப்பு அல்லது அப்பப்பா
அமத்தா = ஆச்சி அல்லது அம்மம்மா

அப்பாத்தா = ஆச்சி அல்லது அப்பாச்சி
ஸோலி = சோலி
விசுக்குன்னு = விறுக்கெண்டு
பொசுக்குனு = பொசுக்கெண்டு
பொறவு = பிறகு, பேந்து
தொறப்பு = திறப்பு
வெசனம் = விசனம்

கார்திக்வேலு said...

வெடுக்குனு -- சுகமாக இருக்கிறது என்பதை விட Refreshing / புத்துணர்வாய் இருக்கிறது என்பது பொருத்தமாய் இருக்குமென்று நினைக்கிறேன்.

//16. நருவசா- முழுவதுமாக//
கேள்விப்பட்டதில்லை :-(
---------------------------------
நினைவில் உள்ள சில வார்த்தைகள் ..பிழையாக இருப்பின் திருத்துங்கள்

பண்ணாடி -- கணவர்
பண்ணாட்டு -- ruling , power / வெட்டிப் பண்ணாட்டு -- useless show of power
பானக்கம் -- sweet drink with fruits / jaggery etc
வெருசா -- சீக்கிரமாய்
பாப்பாத்தி/பாப்பா -- refer a girl ???
சாளை (லை) --- farmhouse usually in the middle of the farm
சின்னக் கண்ணு/கண்ணா -- Younger brother
பெரிய கண்ணு/கண்ணா --Elder brother
நடுவலவன் -- brother in between


---------------------------------
கொங்கு மொழியில் ஒரு இடத்துக்குப் போகும் வழியைச்சுட்ட திசைகளை பயன்படுத்துவது (எ.கா. கிழக்க போயி வடக்க திரும்பி ) வெகு சாதாரணம். எனக்குத் தெரிந்து இதே மற்ற பகுதிகளில் வலது / இடது என்று தான் பயன்படுத்துவார்கள்.இதை யாராது உறுதிப்படுத்த முடியுமா ?

வெளிநாடுகளில் பல முறை "எது கிழக்கு/Which is East" என்று கேட்டால் பெரும்பாலானோருக்கு தெரிந்திருப்பதில்லை.பேச்சு மொழியில்
திசைகள் எவ்வளவு முக்கியம் / முக்கியமில்லை என்ற பார்த்தால் சுவாரசியமாக இருக்கிறது.
----------------------------------

ramachandranusha(உஷா) said...

வா.ம! பல வார்த்தைகளில் கன்னடத்தின் தாக்கம் தெரியும். உண்டுட்டு போ- சாப்பிட்டுவிட்டு போ
இது தூறல் நின்னுப்ப்போச்சு படத்தில் வந்த வசனம்.
வேறு ஞாபகம் வந்தால் எழுதிகிறேன்

பெத்தராயுடு said...

பண்ணாமை (பண்ணாம) - நிலத்தில் பயிரிட்டிருப்பது.

நாள மத்தனா - நாளை மறுநாள் or பிறிதொரு நாள்.

மறுக்கா - மறுபடியும்.

கோவையின் மாநகராட்சி எல்லைக்குள் ஒரு தெருவின் பெயர் 'தயிர் இட்டேரி'.

எங்க பாட்டி (ஆத்தா) சொல்லும் ஒரு பழமொழி(?) 'சேடனுக்கு எதுக்கு ஓந்திபில்லக்கா'. இது 'உன்னால முடியலன்னா ஏன் செய்யுற' எனும் அர்த்தத்தில். இதன் அர்த்தம் இன்னியவரைக்கும் எனக்கு பிடிபட்டதில்ல.

தேவமகள் said...

மலக்காகிதம்

மலகாயிதம் இல்லீங்க நாம சொல்றது!

கூமாச்சி

இந்த 'கூமாச்சி'யால் ஒரு முறை நான் என் தோழ தோழியர் மத்தியில் என் கல்லூரிப் பருவத்தில் எப்படி கேலி செய்யப் பட்டேன் என்பதை இப்போது நினைத்தாலும் சிரிப்பும் துக்கமுமாக வருகிறது.
நல்ல சேகரிப்புங்க!

aathirai said...

விசாழக்கெழம - வியாழக்கிழமை
ஒறம்பற - இது உறவின் முறை என்று ராகவன் பதிவில் இருந்து தெரிந்தது
சீசா - பாட்டில்
எத்தாசோடு - எவ்வளவு பெரிசு
தடம் -வழி
நங்கையா - நாத்தனார்
கொழுந்தனார் - மச்சினர்
பங்காளி - சகோதரர்
செருப்பு தொட்டுகிட்டு -


(ரொம்ப நாளா ஏன் செருப்பு போடாம தொட்டுகிட்டு
போக சொல்றாங்கன்னு சந்தேகம் இருந்தது.)

aathirai said...

கெழவரம் - கிழக்கு புறம்
மேவரம் - மேற்கு புரம்
சீமாறு- விளக்குமாறு
ரவுசு - தொந்தரவு?
-

Anonymous said...

கன்னடத்தின் தாக்கமா? என்ன வெளையாடுறீங்களா? "சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்" அப்படின்னு அவ்வையார் கன்னட தாக்கத்துல எழுதினாங்களா? ஒண்ணும் தெரியாம ஓவரா அளப்பற பண்ணக்கூடாது.

Anitha(Nikki's mom) said...

நல்ல பதிவு... ஊரை நினைவுபடுத்துகிறது...
கார்த்திக்வேலு அவர்கள் கூறுவது சரி. வழி சொல்ல திசைகள் தான் பெரிதும் பயன்படும்.

விடுபட்டதாக நான் கருதும் சில வார்த்தைகள்:
தொலாவறது - தேடுவது
அங்கலாப்பு - அங்கலாய்த்தல் எனும் பொருள்படும்.
ஒருக்கா - ஒரு முறை

- அனிதா

பெருசு said...

அப்படியே ஊருக்குள்ள ஒரு சுத்து
போயிட்டு வந்தாப்புல இருக்குது.
இதுவும் கொங்கு வட்டார வழக்குதான்னு நெனக்கிறேன்.

வந்தாப்புல - வந்த மாதிரி அல்லது வந்தான்.
போனாப்புல - போனான்.
தண்ணிவண்டி- மப்புப்பார்ட்டி
கண்ணாலம் - கல்யாணம்
மேஜோடு - காலணி உறை (சாக்ஸ்)
பொடனி - பின்கழுத்து
பகலை அல்லது பகல - பலகை
மலண் - மணல்.

பொழுதன்னிக்கும் - தினமும்

அஞ்சிசா - ஐந்து பைசா.

Chellamuthu Kuppusamy said...

Good job Mani

Vaa.Manikandan said...

நண்ப‌ர்கள் தொகுத்திருக்கும் சொற்களைக் கொண்டு இன்னொரு தொகுப்பு வெளியிட்டிருக்கலாம். நன்றி. மகிழ்ச்சியாக இருக்கிறது.

ராமசந்திரன் உஷா அவ‌ர்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
கன்னட தேசம் கொங்கு நாட்டிற்கு அருகினில் வ‌ருவதனால் நீங்கள் சொல்லும் க‌ருத்து ச‌ரியாக இருக்கலாமோ என்ற ஐயம் எழுந்தது.(எனக்குக் கன்னடம் தெரியாது). எனக்குத் தெரிந்த எங்கள் ஊர் தமிழாசிரிய‌ர்களை தொட‌ர்பு கொண்டு விசாரித்தேன். கொங்கு வழக்கில் மலையாளம், கன்னடம், தெலுங்குச் சொற்கள்( சில இந்திச் சொற்களும் கூட) விரவிக் கிடந்தாலும், எந்த மொழியின் தாக்கமும் அதில் இல்லை. அந்த வழக்குத் தனித்தன்மை வாய்ந்தது என்றார்கள். மிகச் ச‌ரியானதாகத் தோன்ற்கிறது.

உண்ணுதல் என்பது தமிழில் இருந்து கன்னடத்திற்குச் சென்றிருக்கலாம் என்பதை நினைவில் நிறுத்துக.

ரவுசு என்பது சத்தமிடலைக் குறிக்கும். ஆங்கிலம் Rouse. :) எதிலிருந்து எதற்குச் சென்றது என்பதை யாராவது சொல்லலாம்.

பெத்தராயுடு said...

நோம்பி (நோன்பு என்பதன் மருஉ) - பண்டிகை

Muthu said...

ஊருக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு...நல்ல பதிவு மணி

ஈழநாதன்(Eelanathan) said...

மணிகண்டன் மற்றும் வெற்றி ஈழத்தமிழுக்கு(மொத்தமாக யாழ்ப்பாணத்தமிழ் இல்லை.பல்வேறு வட்டாரங்களின் வேறுபாட்டுடனான ஈழத்தமிழ்)இப்படி ஒரு வட்டார வழக்குச் சொல்லகராதி தயாரிக்கவேண்டுமென்று முயன்று வருகிறேன்.இப்போது பார்த்தால் ஈழத்துக்கு மட்டுமல்ல வலைப்பதிவு அன்பர்கள் சேர்ந்தால் மொத்தமாக தமிழில் வழங்கும் அத்தனை வட்டார வழக்குகளுக்கும் இணையத்தில் அகராதி ஒன்று செய்துவிடலாம் என்று கருதுகிறேன்.நண்பர் ரவிசங்கர் முன்மொழிந்த விக்சனரியை நாங்கள் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ன சொல்கிறீர்கள் தொடர விருப்பமா?

Thirumozhian said...

நான் இளங்கலை படித்துக்கொண்டிருக்கையில் பாடத்திட்டத்தில் 'ஈரம் கசிந்த நிலம்' என்றொரு கதையும் இருந்தது. அதில் எசகடம் என்றொரு வார்த்தைக்குத் தமிழாசிரியைக்குப் பொருள் தெரியவில்லை. அந்தக் கதையும் கொங்கு வட்டார வழக்கிலேயே இருந்தது. உங்களுக்கு/யாருக்காவது எசகடம் என்றால் என்ன என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.

திருமொழியான்.

பொன்ஸ்~~Poorna said...

கார்த்திக்,
//கொங்கு மொழியில் ஒரு இடத்துக்குப் போகும் வழியைச்சுட்ட திசைகளை பயன்படுத்துவது (எ.கா. கிழக்க போயி வடக்க திரும்பி ) வெகு சாதாரணம். எனக்குத் தெரிந்து இதே மற்ற பகுதிகளில் வலது / இடது என்று தான் பயன்படுத்துவார்கள்.இதை யாராது உறுதிப்படுத்த முடியுமா ?
//
எங்க ஊரிலும்(மன்னார்குடி பக்கம்) இப்படி திசை சொல்லிச் சுட்டுவதைப் பார்த்திருக்கிறேன். கெழக்கால,தெக்க, என்றெல்லாம் வழி சொல்லிக் கேட்டிருக்கிறேன்..

Vaa.Manikandan said...

மின் மடல் தெளிவுபடுத்தி விட்டார்.

எசகடன் = இசைவு+கடன்.

இறைவனின் ஒத்துழைப்பு கிடைக்குமிடத்து த‌ர வேண்டிய கடன்.

எசவு என்ற சொல்லும் இருக்கிறது. இசைவாக என்பது மாறி.
ஒத்துழைப்பு என்னுமிடத்தில் உபயோகப்படுத்தப்படும்.

மொட்டை அடிக்கீல புள்ள எசவா உக்காந்திருந்துச்சு.

பொட்டாட்டம் : அமைதியாக இருத்தல்.

நல்ல பையனா பொட்டாட்டம் ஒரு எடத்துல உட்காருடா.

கதிர் said...

கொலவாரி - குழந்தைகள், சிறுவர்கள்
பொசாய - பொழுது சாய

இந்த மாதிரி எங்க ஊருப்பக்கம் நிறைய பேரு சொல்வாங்க!

கார்திக்வேலு said...

சீசா -- கண்ணாடி வடமொழி மூலமா ??
அக்கப்போர் -- தொந்தரவு / pestering
திருவாத்தான் -- கோமாளி / Jocker
கவலை -- கவலை ஓட்டுதல் ??
அட்டாரி -- attic

எசக்கடன்-- எசப்பாட்டு இரண்டும் ஒரே பொருளில் (திருப்பிச் செய்யப்படுவது) வருமோ என்று
தோன்றுகிறது

aathirai said...

இன்னொரு சந்தேகம். பாண்டி நாடு முத்துடைத்து, சோழ நாடு
சோறுடைத்து என்பது போல கொங்கு நாடு ஏதோ உடைத்து என்று
வரும். அது என்ன வென்று மறந்து விட்டது. உதவுங்கள்

செந்தமிழ் உடைத்து?

Thirumozhian said...

மின்மடலுக்கும் மணிகண்டனுக்கும் நன்றி

Gopalan Ramasubbu said...

சீக்கடி(கொசு) கடிக்குது,

அட பொடி சுட போகுது செருப்ப தொட்டுக்கோ.

தண்ணிவாத்துட்டு வர்ரேன்( குளித்து விட்டு வருகிரேன்)

மொச புடிக்கர நாய் மூஞ்சிய பாத்தா தெரியாதா?

மொட்டு சாப்பிடு( முட்டை சாப்பிடு)

நடைய கட்டு( இங்கிருந்து போ)

நடைய சாத்து( கதவை மூடு)

மறுக்க பாரு( திரும்பிப் பார்)

பெத்தராயுடு said...

சீசா-வின் மூலம் போர்த்கீசிய மொழி.

SVenkat said...

குரவளை - தொண்டை

G.Ragavan said...

நல்ல அறிமுகம். இதில் வெகுசிலவே எங்களூர்ப் பக்கத்துப் பேச்சோடு ஒத்திருக்கிறது.

வெடுக்குன்னு...பிடிங்கீட்டான்..இதே பொருளில் சொல்வார்கள். ஆனால் வெக்குன்னு பிடிங்கீட்டான் என்பதே தெக்கத்திப் புழக்கம். வெக்குவெக்குன்னு கையப் பிடிச்சி இழுத்தாம்ல என்று சொல்வார்கள்.

ஸோலி என்று உங்கள் பக்கம் சொல்வது தெற்கில் சோலி (choli)ஆகி விடும்.

இவத்த அவத்த என்பது இங்குட்டு அங்குட்டு

கரூரில் சிறுவயதில் மூன்று வருடங்கள் இருந்தோம். இத்தகைய பேச்சுகளைத்தான் கேட்டிருக்கிறோம். கரூர் மார்க்கெட்டில் அம்மாவும் நானும் அந்த ஊருக்குப் போன முதல் வாரம் காய்கறி வாங்கப் போனோம். பட்டர்பீன்ஸ் கேட்டால் "நீங்க மதுரப் பக்கத்துக் காரங்களா"ன்னு கேட்டாங்க.

என்னுடைய உச்சரிப்பில் தெளிவாக வரும் சகரம் cha பலமுறை அங்கு கிண்டல் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒரு சினிமாவுல வாராங்க வாரங்க பண்ணாடி வாராங்கன்னு பாட்டு வரும். அது என்னன்னு இப்பத்தான் புரியுது.

அதே போல இன்னொரு படத்துல செம்மறி ஆடேங்குற பாட்டுல செவத்த பொண்ணு இவத்த நின்னுங்குற வரிக்கும் இப்பத்தான் புரியுது.

இன்னொரு பிரச்சனை அந்தப் பக்கம் ல, ள, ழ எல்லாம் கெடையாது. எல்லாம் ல-தான்.

(நடுவுல யாருங்க கொங்குநாடு செந்தமிழுடைத்துன்னு சொல்றது :-) )

உண்டு என்பது தமிழ்ச் சொல்லே. கன்னடமும் பாதிக்கு மேல் தமிழே! அதனால் பிரச்சனையில்லை.

Sivabalan said...

//போச்சாது- "பரவாயில்லை விடு" //


போச்சாது போ -- என் தாத்தா என்னிடம் அதிகம் சொல்லிய வார்த்தை..

Machi said...

எச்ச விடலாமா?
எச்சு - அதிகம்

முக்கு - முனை.

சொல்வழக்கு.
புது வட்டிய கண்டா நாய் எட்டு வட்டி தண்ணி குடிக்குமாம்.

வட்டி என்பது இங்கு தட்டு. தட்டு என்பது plate.

முரட்டுக்காளை said...

"ங்" பயன்பாட்டையும் குறிப்பிட்டுவிடுவது நன்று. பொதுவாகவே 'ங்' கில் பல வார்த்தைகள் முடிப்பார்கள்..

"இல்லீங்.. இப்பத்தானுங்க வந்தேனுங்ங்.. போயிட்டு வரட்டுங்களாங்ங்.. "

"இல்லீங்கோவ்.."

"இல்லீங்..", "உள்ளார" (உள்ளே), "ஒட்டுக்கா" போன்ற வார்த்தைகளின் பிரயோகத்தால் நண்பர்கள் மத்தியில் கிண்டலுக்கு ஆளானது நினைக்க இப்பவும் சிரிப்புதான்.. ("கூமாச்சி" போலவே..)

பெத்தராயுடு said...

//இன்னொரு பிரச்சனை அந்தப் பக்கம் ல, ள, ழ எல்லாம் கெடையாது. எல்லாம் ல-தான்.//

எந்தப் பக்கமுங்கோ? :)

//ஒரு சினிமாவுல வாராங்க வாரங்க பண்ணாடி வாராங்கன்னு பாட்டு வரும். அது என்னன்னு இப்பத்தான் புரியுது//

//அதே போல இன்னொரு படத்துல செம்மறி ஆடேங்குற பாட்டுல செவத்த பொண்ணு இவத்த நின்னுங்குற வரிக்கும் இப்பத்தான் புரியுது.//

ராகவன், ஆபாவாணன் பட ரசிகரோ? அவரும் கொங்கு நாட்டுக்காரர்தான்.

G.Ragavan said...

//இன்னொரு பிரச்சனை அந்தப் பக்கம் ல, ள, ழ எல்லாம் கெடையாது. எல்லாம் ல-தான்.//

எந்தப் பக்கமுங்கோ? :) //

கொங்கு பக்கந்தான்..வேறெந்த பக்கம்!! மத்த பக்கமெல்லாம் ளகரந்தான். கன்னியாகுமரி, நாகர்கோயில் பக்கந்தான் ழ கேக்கலாம்.

Anonymous said...

//பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்]//

'புழக்கடை' எனும் சொல்தான் 'பொடக்காலி' என மருவி விட்டது என்பது எனது தாழ்மையான கருத்து.

ராசுக்குட்டி said...

நன்றி நன்பரே!.
தங்கள் பதிவு மிகவும் கவனத்திற்குரியது.
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல வார்த்தைகள் இன்று கோவையிலேயே அரிதாகிவிட்டது.
இன்று உலகமயமாக்கலின் விளைவாகவும், ஊடகங்களின் தாக்கத்தாலும் நம் மொழியின் தனித்துவத்தை இழந்து வருகிறோம். கிராமங்களெல்லாம் நகர(நரக)மய மாகிவரும் இன்றைய சூழலில் இது போன்ற பதிவுகள் ஆறுதல் அளிக்கின்றன.
தொடரட்டும் வாழ்த்துக்கள்.
வணக்கங்னோவ்...

Nithya.... said...

நல்ல தொகுப்பு....

ஊருக்கு போனாப்ல இருந்துச்சு பா...

Marimuthu Murugan said...

எதேச்சையாக நினைவுக்கு வந்தது.

"தாட்டு" -- அனுப்பு.

எ.கா. சீக்கிரம் அவனை ஊட்டுலர்ந்து வெளிய தாட்டு

ஏர் முனை said...

கொங்குநாடு ஆவுடைத்து... ஆகெழு கொங்கு.. கொங்கர் ஆபரந்தன்ன...

Anonymous said...

அப்பா சாமி கண்டுபிடுச்சுடேன் ஒரு வழியா ...
எச்சா , வட்டல் , போச்சாது , பொக்குன்னு இதெல்லாம் பேச்சு வழக்குல பேசிடுவேன் .
சென்ன கார பசங்க சிரிக்கறாங்க என்ன பேசற ன்னு ..
Extra வ தான் இங்கிலீஷ் பேச தெரியாம எச்சா ங்கரியான்னு வேற கேலிப்பேச்சு ...
இதெல்லாம் எங்க ஊரு பாஷை ன்னு சொன்னாலும் நம்பல .
அனுப்பறேன் இத எல்லா அறிவு ஜீவிகளுக்கும் ..
Thanks Boss ! (இது சென்னை பாசைங்க .. தொதிக்குச்சு இங்க வந்து !)