Jul 17, 2006

நான் Famous'U' ஆகிறேன்.

நேற்று நண்பனொருவனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவசரப்பட்டு "நான் பேமஸூ ஆகிறேன்" என்று சொல்லி விட்டேன். பெரிதாக ஒன்றுமில்லை.

(டிஸ்கெளய்மர்: இறுதியில் போடும் 'டிஸ்கி'களுக்கு மரியாதை குறைந்து விட்ட காரணத்தினால் இங்கு இடப்படுகிறது. ஆந்திர வாசம் பெரும்பாலான சொற்களின் இறுதியில் "உ" சேர்க்க வைத்து விட்டது. அதுதான் அந்த "பேமஸூ")

யதேட்சையாக "மச்சா! பிலாக் ல கலக்குற போல இருக்கு" என்றான். உசுப்பேத்திவிட்டது போல் ஆனதால் நான் "ஆமாண்டா நான் பேமஸூ ஆகிறேன்" என்றேன்.

"எப்படிடா சொல்லுறே?"
"நிறைய கமெண்ட்ஸ் வருதுடா. பிலாக் ஆர்டிக்கிள்ஸ்க்கு"
"அப்படியா! நிறையன்னா?....1000 ஆ?"
"சே....சே......20, 30ன்னு"

அவன் கடுப்படைந்திருக்க வேண்டும். இதை நாம பேசி முடிக்கும் போது 'டீல்' பண்ணிக்கலாம் என்று சொல்லி விட்டு கடலை, பிக் அப், கம்பெனி பெண்கள் போன்ற வயதிற்கு முக்கியமான விஷயங்கள் குறித்து பேசினோம்.

இறுதியாக புகழ் மேட்டருக்கு வந்தோம்.விஜயகாந்த் ரசிகன் பேச ஆரம்பித்தான்.

"அப்பு! பேமஸ்ன்னு சொன்னியே....சில கேள்விகள் கேக்குறேன். பதில் சொல்லுறியா?"
"என்னடா? பதிலா? சொந்த செலவுல சூனியம் வைக்க சொல்லுறியா?" (நன்றி பதிவாளர்களே. அவனுக்கு இது புரிந்திருக்க வாய்ப்பில்லை)
"தண்ணியடுச்சிருக்கியா?உளறாத. பதில் மட்டும் சொல்லு"

அவன் தருமி(திருவிளையாடல் தருமி) ஆகிவிட்டான்.

"உலகத்தின் மக்கள் தொகை?"
"600 கோடி"
"இந்தியாவில் மட்டும்?"
"100 கோடி"
"தமிழ்நாட்டில்?"
"6 கோடி"
"அதுல எத்தனை பேருக்கு படிக்க தெரியும்?"
"டேய்....ஏண்டா சாகடிக்குற?..சரியா தெரியாது" என புலம்பினேன்.
"சரியா வேண்டாம். எசகு பிசகா சொல்லு" என்றான்.
"3.5 கோடி பேருக்கு படிக்கத் தெரியலாம்"
"கதை, நாவல் எல்லாம் எதனை பேரு படிப்பாங்க?"
"1 கோடி பேருடா. எங்கப்பா அம்மா எல்லாம் படிக்கத் தெரிஞ்சவங்க. ஆனா இதெல்லாம் படிக்க மாட்டங்க. ஸோ....குறைவாதான் இருக்கும்"

விடமாட்டான் போல தெரிகிறது. கணைகள் தொடர ஆரம்பித்தன்.

"குங்குமம், விகடன், குமுதம்,தந்தி.....இது எல்லாம் சேர்த்து எத்தனை பேரு மொத்த வாசகர்கள் இருப்பாங்க. இலங்கைத் தமிழர்கள், வெளிநாடு வாழ்த் தமிழர்கள் எல்லோரையும் சேர்த்துக்க"
"ஒரு 40 இலட்சம்?" சந்தேகத்தோடு சொன்னேன்.
"அதுவே அதிகம். சரி வெச்சுக்க. உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்?"
"இணைய வசதி இருக்கிற, இந்த மாதிரி பொழுது போக்கு சம்பந்தமா படிக்கிறவங்க எண்ணிகை தெரியுமா?"
"அடப்பாவி....விடுடா டேய்......சுமார் 1 இலட்சம் பேருடா"
"சரி...நீ சொல்ற தமிழ் பிலாக் எல்லாம் படிக்கிறவங்க?"
"1000?"
"அடேயப்பா...அவ்ளோ பேரா?. ம்ம்ம் கிரேட்" அந்த 'கிரேட்'ல் கொஞ்சம் நக்கல் கலந்திருந்தது.
"இல்லைடா ஒரு 600 வேண்டாம். 500"
"ஏண்டா குறைச்சுட்ட?"
"இல்லைடா ஒருத்தரே பல பேருல கலாசுறாங்க. அதனால பாதி பிலாக்தான் கணக்குல வரும்"
"ஏதோ புரிஞ்சிருக்கியே. சந்தோஷம்"

சரி சரி மேட்டருக்கு வருவோம் என்றான்.
"உன் பிலாக் எத்தனை பேரு படிப்பாங்க?"
"120 பேரு"
"கமெண்ட் போடுறவங்க?"
"20 25 பேரு" (இதுவே அதிகம் என்றாலும், கொஞ்சம் வெட்கத்தை மறைக்க பொய் சொல்ல வேண்டியதாக் இருக்கிறது)

"ஆக 600 கோடியில், 25. அப்படிதானே?" இதைவிட எப்படி ஒருவன் மாட்டிக்கொள்ள முடியும்.

கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. முடிவுரை வாசிக்க ஆரம்பித்தான்.

"நீ பதிவெழுதுற இந்த ஒன்றரை வருஷம் ஆர்குட் அல்லது வேற எதாவது சாட் ல உட்கார்ந்திருந்தா 25 என்ன? 200 பொண்ணுகளை தேத்தி இருக்கலாம். அதுவும் பக்கா பிகர்ஸ். 25 பேர படிக்க வெச்சுட்டு பேமஸ் ஆகிட்டேன்னு பீலா விடுறியா?. பையன் எதோ எழுதறான், சரி! எழுதி பழகட்டும்னு இவ்வளோ நாள் பேசாம இருந்தேன். நீ என்னடான்னா ஏதோ 'டாஸ்டாயோவ்ஸ்கி' நெனப்புல சுத்துற. இனி இப்படி பேசினே...அவ்வளோதான். ஊருக்குள்ள வாயைத் தவிர மத்ததுல......வேண்டாம். அசிங்க அசிங்கமா வருது. சிரிப்பாங்க"

அப்புறம் நான் 'பீலிங்ஸூ '(இங்கும் 'உ') ஆகி விடக் கூடாது என வேறு செய்திகளைப் பேசினான் அந்த 'குட்டி கேப்டன்'.

மாலை 'டேன்க் பண்ட்' சாலையில் நிறைய இளைஞர்கள், யுவதிகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்க, தனியாக கோயில் மாடு போல அலைந்து கொண்டிருந்தேன். ஆர்குட், சாட் பக்கங்கள் கண்களில் தோன்றி மறைந்தன.

"யோசிக்க வெச்சுட்டியேடா ராசா" என்று நான் நினைத்துக் கொண்டேன்.

1 எதிர் சப்தங்கள்:

Muthu said...

புரியுது சாமி புரியுது...